Paristamil Navigation Paristamil advert login

போர்க்குற்ற விசாரணையில் சிறிலங்கா குத்துக்கரணம்!

போர்க்குற்ற விசாரணையில் சிறிலங்கா குத்துக்கரணம்!

8 பங்குனி 2019 வெள்ளி 17:20 | பார்வைகள் : 9619


போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பாக சிறிலங்கா குத்துக்கரணம் அடித்துள்ளதாக, அனைத்துலக செய்தி நிறுவனமான ஏஎவ்பி தெரிவித்துள்ளது.

 
பழைய காயங்களைக் கிளற விரும்பவில்லை என்று சிறிலங்கா அதிபர் நேற்று தெரிவித்துள்ள கருத்து தொடர்பாக ஏஎவ்பி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
 
2009 மே மாதம் முடிவுக்கு வந்த, சிறிலங்காவின் 37 ஆண்டுகால கரந்தடிப் போரின் இறுதி மாதங்களில் குறைந்தது 40 ஆயிரம் தமிழ் பொதுமக்கள் சிறிலங்கா அரச படைகளால் கொல்லப்பட்டதாக  குற்றம்சாட்டப்படுகிறது.
 
இந்த நிலையில், போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக நம்பகமான விசாரணைகளை நடத்தக் கோரி, 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மீளாய்வு செய்யுமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் முறைப்படி கோரவுள்ளதாக  சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
 
போர் முடிந்து பத்தாண்டுகளாகி விட்டன.  நாங்கள் நாட்டில் அமைதியை ஏற்படுத்தியிருக்கிறோம் என்று கொழும்பில் நேற்று தமது வதிவிடத்தில்  செய்தியாளர்களிடம் அதிபர் சிறிசேன கூறினார்.
 
எமக்கு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டாம் என்று அவர்களிடம் ( ஐ.நா)  நான் கூறவுள்ளேன் எனவும் சிறிலங்கா அதிபர் தெரிவித்துள்ளார்.
 
“கடந்த காலத்தை தோண்டியெடுத்து பழைய காயங்களை மீண்டும்  கிளற வேண்டாம்.  கடந்த காலத்தை மறந்து நாம் சமாதானத்தில் வாழ்கிறோம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வோம் என்று நான் அவர்களிடம் கூற விரும்புகிறேன்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
2015இல் அதிகாரத்துக்கு வந்ததும், சிறிலங்கா போர்க்கால மீறல்களுக்கு பொறுப்புக்கூறுவதை உறுதிப்படுத்துவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.
 
சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், போர்க்குற்றவாளிகள் நீதியின் முன்கொண்டு வரப்படுவதில் எந்த முன்னேற்றமும் எட்டப்படாத நிலையில் சிறிலங்கா அரசுக்கு வழங்கப்பட்ட முன்னைய கால அவகாசம் முடிவுக்கு வந்திருந்தது.
 
2015இல், நம்பகமான விசாரணைகளை நடத்த 18 மாத கால அவகாசத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவை அளித்திருந்தது.
 
எனினும், எந்த விளைவுகளும் இல்லாத நிலையில், இரண்டு ஆண்டு கால அவகாசம் இந்த மாதத்துடன் நிறைவடைகிறது.
 
இந்த நிலையில், தமது சார்பில், கோரிக்கைகளை முன்வைப்பதற்காக ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கட்சியின் மூன்று மூத்த உறுப்பினர்களை ஜெனிவாவுக்கு அனுப்பவுள்ளதாக, அதிபர் சிறிசேன தெரிவித்துள்ளார்.
 
அவர்கள், (ஐ.நா) சாதகமான பதிலைத் தருவார்கள் என்றும் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
ஐ.நாவுக்கு முன்னர் வாக்குறுதிகளை அளித்திருந்த போதும், அதிபர் சிறிசேன  எந்த விசாரணைகளையும் ஆரம்பிக்கவில்லை.
 
இந்த நிலையில், கொழும்பு மெதுவாகவே செயற்படுகிறது என்று ஐ.நாவின் உயர்மட்ட இராஜதந்திரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.” என்றும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
நன்றி - புதினப்பலகை

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்