Paristamil Navigation Paristamil advert login

பரந்துபட்ட கூட்டு முன்னணி இல்லையேல் தமிழ் மக்களுக்கென்று எதுவும் இல்லை!

பரந்துபட்ட கூட்டு முன்னணி இல்லையேல் தமிழ் மக்களுக்கென்று எதுவும் இல்லை!

26 மாசி 2019 செவ்வாய் 17:30 | பார்வைகள் : 9048


தமிழ் மக்களின் அரசியற் தலைவிதியை நிர்ணயிப்பதற்கான பணியை தமிழ்த் தலைமையைச் சீர் செய்வதிலிருந்து தொடங்க வேண்டும். தமிழீழக் கோரிக்கை ஜனநாயக ரீதியில் தந்தை செல்வா, தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலம், தளபதி அமிர்தலிங்கம், சிம்மக்குரல் மு.சிவசிதம்பரம் போன்ற மூத்த தலைவர்களால் முன்வைக்கப்பட்டது.
 
தமிழீழக் கோரிக்கை ஆரம்பிக்கப்பட்ட காலத்தைவிடவும், அதற்கான தேவையும், பரப்பும், நியாயமும் மிகப்பெரிதாய் வளர்ந்திருக்கும் காலம் இது. மேற்படி மூத்த தலைவர்களினால் உருவாக்கப்பட்ட இக்கோரிக்கையும், போராட்டமும் பின்பு அவர்களால் முன்னெடுக்கப்படாத நிலையில் இளைஞர்கள் முன்னெடுத்துப் போராடும் நிலை உருவானது.
 
இளைமைத் துடிப்பும், இலட்சிய வேட்கையும், தூய சிந்தனையும், அர்ப்பணிப்பு உணர்வும் கொண்ட இளைஞர்கள் சட்டத்தாலான அரச ஒடுக்குமுறைகளையும், இராணுவ பொலீஸ் அட்டூழியங்களையும் எதிர்த்து தியாக உணர்வுடன் போராடத் தொடங்கினர். ஒடுக்குமுறையின் பொருட்டு யுத்தத்தை அரசு திணித்தது. தமிழ் மக்கள் யுத்தத்தை எதிர்கொண்டனர்.
 
தமிழீழப் போராட்டத்தை முன்வைத்த தந்தை செல்வாவாலோ அல்லது மூத்த தலைவர்களோ அதற்கான வழிமுறைகளை முன்னிறுத்தத் தவறினர். இங்கு விசுவாசப் பிரமாணங்களைக் கடந்து ஒரு சரியான மதிப்பீட்டை மேற்கொள்ளும் அரசியல் பண்பாட்டிற்கு தமிழ் மக்கள் தம்மை ஆளாக்கிக் கொள்ள வேண்டும்.
 
எப்படியோ ஒரு நூற்றாண்டு காலத் தோல்விகளின் வரலாறு தொடர்கதையானது. இறுதி அர்த்தத்தில் தமிழ் மக்கள் எதிரியின் காலடியில் சிக்குண்டு கிடக்கின்றனர். தமிழ் மண் சிதைவுற்றுள்ளது. தமிழரின் குடித்தொகை வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளது. வடக்கில் இருந்து கிழக்கு பிரித்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. தோற்கடிக்கப்பட்ட மக்கள் என்ற மனநிலையுடனும், வெற்றி கொண்ட இராணுவம் என்ற மமதையுடனும் தமிழ் மண் அரசியற் சகதிக்குள் மூழ்கியுள்ளது. மேய்ப்பர் அற்ற மந்தைகளாய், நம்பிக்கையற்ற நடைபிணங்களாய் ஈழத் தமிழ் மக்கள் அரசியற் பாலைவனத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.
 
20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் 1914ஆம் ஆண்டு 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட ஆர்மீனியர்களை துருக்கியப் பேரரசு கொன்று குவித்தது. 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் 60 இலட்சம் யூதர்களை ஹிட்லரின் நாஸிச ஜெர்மனி கொன்று குவித்தது. இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின் 1968ஆம் ஆண்டு 11 இலட்சம் மக்களை பியஃப்ராவில் நைஜீரிய இராணுவம் கொன்று குவித்ததுடன் மேலும் 20 இலட்சம் மக்களைப் பட்டினிச் சாவிற்கு உள்ளாக்கியது. அரச இயந்திரம் ஆடை அணிவதில்லை. எனவே அதற்கு வெட்கமும் இல்லை, துக்கமும் இல்லை. கூடவே அதற்கு இதயமும் இல்லாததால் அதனிடம் இரக்கமும் இல்லை என்ற உண்மைதான் இந்த வரலாற்றைப் படிக்கும் போது ஏற்படுகிறது.
 
21ஆம் நூற்றாண்டில் ஒன்றரை இலட்சம் அப்பாவித் தமிழ் மக்கள் கேட்பாரின்றி, பார்ப்பாரின்றி, நியாயம் கேட்பாரின்றி முள்ளிவாய்க்காலில் 2009ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டனர். இதன் மூலம் ஒரு நூற்றாண்டுகால உலகளாவிய இனப்படுகொலை வரலாற்றில் ஈழத் தமிழரின் வரலாறும் ஓர் அத்தியாயமாய் பதிந்துள்ளது. ஜப்பானில் அணுகுண்டு வீச்சுக்களால் கொல்லப்பட்ட மக்களின் தொகை 1,40,000. ஆனால் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை அதையும் விஞ்சியுள்ளது.
 
உதைத்து வீழ்த்தியவனின் கால்களைத் தழுவுமாறு உதைக்கப்பட்டு வீழ்ந்து கிடப்பவனை கோருவதற்குப் பெயர்தான் நல்லிணக்கம். அவ்வாறு கோருபவர்களுக்குப் பெயர்தான் நல்லாட்சி. இவர்களுக்குத் துணைபோவதற்குப் பெயர்தான் தற்போதைய தமிழ்த் தலைமை.
 
படுகொலைக்கு உள்ளான, அநீதி இழைக்கப்படும் அநாதரவான அப்பாவித் தமிழ் மக்களை பாதுகாக்கவல்ல தலைவர்கள் யார்? தமிழ் மக்களுக்கான நீதிக்கும், விடிவிற்கும், வாழ்விற்கும் வழிகாட்டவல்ல திறமையை, ஆற்றலை, வல்லமையை, ஆளுமையைக் கொண்ட தலைவர்கள் யார்? வெற்றிக்கு வழிகாட்டவல்ல சீரிய பண்புகொண்ட தலைவர்கள் யார்? இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய பாதையில் கடந்த பத்தாண்டுகளாய் தோல்வியடைந்தவர்கள் தோல்விக்குப் பொறுப்பேற்பதும், அவர்களைத் தாண்டி மாற்றுத் தலைவர்கள் உருவாக வேண்டியதும் வரலாற்றின் கட்டளையாக உள்ளது.
 
மாற்றுத் தலைமைப் பற்றி முதல் முறையாக அரசியல் ரீதியில் குரலெழுப்பி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி அதற்கான முதலடியை எடுத்து வைத்தவர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலமாவார்.
 
அதைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து திரு.சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப்இம் வெளியேறியது. இவர்கள் இணைந்து மாற்றுத் தலைமைக்கான ஓர் அமைப்பை தமிழ் மக்கள் பேரவை என்ற பெயரில் ஆரம்பித்தனர். அதற்கு வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஷ்வரனைத் தலைவராகவும், மருத்துவர் லஷ்மனை இணைத் தலைவராகவும் ஆக்கினர். மாற்றுத் தலைமைக்கான புதுவரவை மக்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கும் நிலை உருவானது.
 
தாம் அனைவரும் பலம்பொருந்திய மாற்றுத் தலைமையை உருவாக்க வல்லவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு இவர்கள் அனைவருக்கும் உண்டு. தூக்கிய காவடியை ஆடியாக வேண்டும். துயரப்படும் தமிழ் மக்களுக்கு விடிவைக் காட்ட வேண்டும். அதற்கான ஆளுமையை, ஆற்றலை வெளிப்படுத்த முடியாதுவிட்டால் வரலாறு நிச்சயம் அனைவரையும் பழிகூறும்.
 
” உடைந்து போவதற்குக் காரணங்களைத் தேடாமல் இணைந்து பலமான மாற்றுத் தலைமையை உருவாக்குவதற்கு காரணங்கள் தேடவேண்டும். 1984ஆம் ஆண்டு யாழ் கைலாசபதி கலையரங்கில் நிகழ்ந்த ஒரு கருத்தரங்கில் பின்வருமாறு நான் கூறிய கருத்தை இங்கு நினைவுபடுத்துவது நல்லது.
 
எங்களுக்குள் நாங்கள் விட்டுக்கொடுத்து ஐக்கியப்படத் தவறினால் எதிரிகளிடம் அனைவரும் சரணடையவேண்டி நேரும். நாம் அனைவரும் தற்போது எதிரிகளின் காலடியில் வீழ்ந்துகிடக்கிறோம் என்பதைக் கணக்கில் எடுக்கத் தவறக்கூடாது. வரலாற்றில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளத் தவறக்கூடாது.
 
இப்போது மாற்றுத் தலைமைக்கான ஒரு குறியீடாய் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் திரு.விக்னேஷ்வரன் காணப்படுகிறார். அவரது கடந்த ஐந்தாண்டுகால அரசியல் நடைமுறைகள் அவரை நம்புமாறு ஆணையிடுகின்றன.
 
அன்றைய ஜனாதிபதி ராஜபக்ஷவின் முன்னிலையில் திரு.விக்னேஷ்வரன் வடமாகாண முதலமைச்சராய் பதவிப்பிரமாணம் செய்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு.ஆர். சம்பந்தனுக்கு விசுவாசமாய் தன் அரசியலை ஆரம்பித்தார்.
 
இலங்கையில் தலைசிறந்த நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றிய சேர். பொன். அருணாசலம் ஓய்வு பெற்றபின் அரசியலில் ஈடுபட்டார். சிங்களத் தலைவர்களுடன் இணைந்து ஒரு புதிய நவீன இலங்கையை உருவாக்க முற்பட்டார். அதற்காகத் தானே முன்னின்று தலைமைப் பதவியைப் பொறுப்பேற்று இலங்கைத் தேசியக் காங்கிரஸ் என்னும் அமைப்பை 1919ஆம் ஆண்டு உருவாக்கி சிங்களத் தலைவர்களுடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் அடியெடுத்து வைத்தார். ஆனால் சிங்களத் தலைவர்களுடனான அனுபவம் கசப்பான இனவாதத்தை வெளிப்படுத்தியதால் அதிலிருந்து விலகி 1921ஆம் ஆண்டு தமிழர் மகாசபை என்னும் ஓர் அமைப்பை உருவாக்கினார்.
 
இது முற்றிலும் திரு.விக்னேஷ்வரனுக்கும் பொருந்தும். அவர் சிங்களத் தலைவர்களுடன் இணைந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைபின் தலைவர்களுடன் இணைந்து நீதியான வரலாற்றை முன்னெடுக்கலாம் என நம்பியிருக்க வேண்டும். ஆனால் அனுபவம் எதிர்பக்கமாக அமைந்த நிலையில் அவர் தமிழ் மக்களின் நீதிக்கான குரலாய் தன்னை நிலைநிறுத்தினார். அவர் வசதிகருதி அரசாங்கத்தின் பக்கமோ, திரு.ஆர்.சம்பந்தன் தலைமையிலானோர் பக்கமோ செல்லவில்லை.
 
மலையில் இருந்து தரைக்குப் பாயும் நதி மீண்டும் மலையேறாது என்பது போல அவர் தான் தொடங்கிய இடத்தில் இருந்து நீதியையும், தமிழ் மக்களின் உரிமையையும் நோக்கிய பாதையில் திடமாகப் பயணிக்கலானார். சேர். பொன். அருணாசலம் ஆத்மீக நாட்டங்கொண்டு பின்னர் அரசியலைக் கைவிட்டது போல, தன்னை நம்பிய மக்களை விக்னேஷ்வரன் கைவிட்டுவிடக்கூடாது என்பதை அருணாசலத்திடமிருந்து கற்கத் தவறியிருக்க மாட்டார்.
 
ஓடும் நதி சுத்தமாகிவிடும். பாயும் நீர் புனிதப்பட்டுவிடும். ஆதலால் அனைவரும் கூட்டுச் சேர்ந்து இலக்கை நோக்கி ஓடும் போது பாதையில் இருக்கக்கூடிய அழுக்கக்களையும் கடந்து அது சுத்தமாகிவிடும். குப்பைகள் குறுக்கே கிடந்தாலும் ஆறுகள் ஒடும்போது குப்பைகள் ஒதுங்கும் அல்லது அந்த குப்பைகள் ஆற்றோடு கரைந்து வண்டல் மணலாக மாறும். இது நடைமுறை சார்ந்த இயல்பு. மக்களுக்குப் பொறுப்பாக இருப்பதன் மூலம் மக்களுக்கான விடுதலையை முன்னெடுக்க முடியும்.
 
இப்போது வெளிப்படையாகத் தெரியும் நடைமுறைக்குப் பொருத்தமான விடயம் என்னவெனில் தன் ஐந்துவருட அரசியல் நடைமுறையால் தன்னை நிரூபித்திருக்கும் விக்னேஷ்வரனை முன்னிறுத்தி ஏனைய தலைவர்கள் கூட்டிணைந்து ஒரு பொறுப்பான கூட்டுத் தலைமைத்துவத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். விக்னேஷ்வரன் தமிழ் மக்களின் உரிமைக்கான குறியீடாக உள்ளார். மக்கள் மத்தியில் அவருக்கு அங்கீகாரமும், மதிப்பும் உண்டு. அவர் ஒரு முதிய தலைவர் என்ற வகையில் அவருக்கான சமூக அங்கீகாரம் உண்டு. அவர் தமிழ்த் தேசியத்திற்கான கௌரவத்தை நிச்சயம் பிரதிபலிப்பார் எனத் தெரிகிறது. அவரது குரல் சர்வதேச அரங்கில் மதிப்பார்ந்த வகையில் எடுபடக்கூடியது. இது தமிழ் மக்கள் முன் தற்போது காணப்படும் ஒரு முக்கிய வளம். அவரைப் பலப்படுத்தி தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியது ஏனைய அனைத்துத் தலைவர்களினதும் பொறுப்பு.
 
தமிழ் மக்களின் உரிமையின் பொருட்டு இரத்தத் தியாகம் செய்த திரு. குமார் பொன்னம்பலத்தின் பெயரால் அவரது மகனான திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு இதயசுத்தியுடன் செயற்படுவதற்கான பின்புலம் உண்டு. அவர் விலைபோக மாட்டார் என்பதற்கு அவரது வரலாறும் சாட்சியாக உள்ளது. இப்போது வேறுபாடுகளைக் கடந்து பலதரப்பினரையும் அரவணைத்து விக்னேஷ்வரனோடு கைகோர்த்து செயற்பட வேண்டிய வரலாற்றுக் கட்டாயம் இளந்தலைவரான அவருக்கு உண்டு.
 
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும், ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பிற்கும் இடையே கசப்பான வகையில் முரண்பாடுகள் முற்றியுள்ளன. விடுதலைப் புலிகளும், ஈபிஆர்எல்எப் அமைப்பினரும் பரஸ்பரம் துப்பாக்கிகளால் பேசிய கடந்தகாலம் உண்டு. அதனைக் கடந்து ஈபிஆர்எல்எப் தலைவரும், விடுதலைப் புலிகள் தலைவரும் வன்னியில் கைகோர்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒன்று கலந்தார்கள். அப்போது அவர்களது துப்பாக்கியால் பேசப்பட்ட பழைய அரசியலின் கசப்புக்கள் கடக்கப்பட்டன. மீண்டும் அந்த இடத்திற்கு திரும்புவது தமிழ் மக்களுக்கு நல்லதல்ல. பழைய இரும்புப் பூட்டுக்களினால் எதிர்காலத்திற்கான பயணத்தை பூட்டிட்டு பூட்டிவிடக்கூடாது. தற்போது ஏற்பட்டிருக்கும் கசப்பான விடயங்களை தமிழ் மக்களுக்கான நன்மையின் பேரால் இருதரப்பினரும் பேசித் தீர்த்து ஒரு புள்ளியில் ஐக்கியப்பட வேண்டும். இருதரப்பினரும் ஒரு கட்சியினர் அல்லர். வேறுபாடுகள் நிச்சயம் இருக்கும். ஆனால் ஓர் இலக்கைக் குறித்து அந்த குறித்த இலக்கின் பேரால் அனைவரும் ஐக்கியப்பட்டு ஒரு பலமான மாற்றுத் தலைமையை உருவாக்கத் தவறினால் போர்க்குற்ற விசாரணை என்பது சர்வதேச அரங்கில் இருந்து விலகி எதிரியின் காலடியில் வீழ்ந்துவிடும். இது உடனடிப் பிரச்சினை.
 
ஆதலால் போர்க்குற்ற விசாரணை, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் என்னும் இந்த இரண்டையும் ஒரு புள்ளியில் நிறுத்தி அதன்போரால் ஐக்கியப்படக்கூடிய அனைவரையும் ஒன்றிணையுங்கள். ஜெனிவாவில் மீண்டும் இலங்கைக்குக் காலஅவகாசம் வழங்க டெலோ மறுப்பு என்றும் இதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வெளியில் இருக்கும் தமிழ்க் கட்சிகளையும் ஒன்றிணைத்து போராடத் தயார் என்றும் திருகோணமலையில் 17ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
 
இவ்வாறு நிலைப்பாடு எடுக்கக்கூடிய கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிவரத் தயார் என்றால் அவற்றையும் மாற்றுத் தலைமை உள்வாங்கி முன்னெடுக்கக்கூடிய தகுதியையும், ஆற்றலையும் வெளிப்படுத்த வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து மேற்படி கொள்கையின் அடிப்படையில் வெளியேறி மாற்றுத் தலைமையில் இணையத் தயாராக இருப்பவர்களையும் உள்வாங்க வேண்டும். இப்போதைய உடனடித் தேவை காற்றில் கற்பூரம் கரைவது போல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவோடு போர்க்குற்ற விசாரணை சர்வதேச அரங்கில் கரைந்து போகக்கூடிய ஆபத்தைக் கொண்டுள்ளது. முதலில் அதைக் காப்பாற்றுங்கள்.
 
கடவுளைக் கும்பிடுங்கள். ஆனால் வெடிமருந்தை நனையவிட்டுவிடாதீர்கள் என்று நெப்போலியன் கூறியது போல எல்லாவித இலட்சிய விசுவாசங்களுக்கும் அப்பால் அதற்கான அடிப்படையை பறிபோகவிடாது முதலில் பாதுகாக்க வேண்டும்.
 
போர்க்குற்ற விசாரணை என்பதுதான் தற்போது போராட்டத்தை முன்னெடுப்பதற்கான ஈட்டிமுனை. சரியும் தமிழ் மக்களின் குடித்தொகையையும், அதன் அடிப்படையில் பறிபோகும் அரசியல் பலங்களையும் கருத்திற் கொண்டு உள்முரண்பாடுகளை இரண்டாம் பட்சமாக்கி தமிழரின் அடிப்படைப் பலத்தைப் பேணவல்ல மாற்றுத் தலைமையை கெட்டியாக வடிவமைக்க வேண்டும்.
 
ஒரு பரந்த கூட்டணியை உருவாக்க முற்படும் போது பிரச்சினைகள் எழுவது இயல்பு. இவற்றைத் தீர்ப்பதற்கான வழிவகைகளைக் கண்டறிய வேண்டும். முதலில் பரந்த கூட்டணியை உருவாக்குவதற்கு தேவையான அடிப்படை கொள்கை வரைவை உருவாக்க வேண்டும். அதன் அடிப்படையில் கூட்டுக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
 
ஒரு பரந்த கூட்டணியை உருவாக்குவதற்கு ஏதுவாக தமிழீழ மண்ணில் காணப்படுகின்ற அறிஞர்கள், மதத் தலைவர்கள், பெண் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என்போரை உள்ளடக்கிய ஒரு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். இந்தக் குழு வடக்குகிழக்கு இரு மாகாணங்களைச் சேர்ந்தவர்களையும், கூடவே இரண்டு பெண்களையும் உறுப்பினர்களாகக் கொண்டு அமைவது நல்லது.
 
மதத் தலைவர்கள், ஓய்வு பெற்ற கல்லூரி அதிபர்கள், பல்கலைக்கழக அறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், வழக்குரைஞர்கள் எனப் பலதரப்பட்ட மட்டங்களில் இருந்தும் இக்குழுவிற்குப் பொருத்தமானோரை நியமிக்கலாம். மாற்றுத் தலைமையை விரும்புவோர் இக்குழுவின் அறிக்கைக்கு மதிப்பளித்து நடப்பதன் மூலம் ஒரு தொடக்கப் புள்ளியை உருவாக்கிவிடலாம். பின்பு தவறுகள் காணப்படின் இந்த அறிக்கையின் அடிப்படையில் தவறிழைப்போரை சரிசெய்து கொள்ளலாம். எல்லாவற்றிற்கும் மாற்றுவழியுண்டு. எனவே பிரச்சினைகளுக்கு மாற்றுவழிகளுக்கு ஊடாக தீர்வுகாண முனைய வேண்டுமே தவிர எதிரிகள் பலமடையக் காரணமாகிவிடவும் கூடாது, அதற்கு இடமளிக்கவும் கூடாது.
 
அரசியல் முன்னெடுப்பு என்பது மனவிருப்பங்களைத் திணிப்பதல்ல. மாறாக காணப்படும் சாத்தியக் கூறுகளைப் பொருத்தமான வகையில் ஒருங்கிணைத்து முன்னெடுப்பதாகும்.
 
உள்ளும் புறமும் எதிரிகள் பலமானவர்கள். பலமான எதிரிகளைக் கையாளப் பலமான தலைமைத்துவம் வேண்டும். கூடவே அது புத்திசாலித்தனமான தலைமைத்துவமாகவும் இருக்க வேண்டும். எனவே ஒரு நாணயத்தின் இருபக்கங்களென பலமும் புத்திசாலித்தனமும் ஒருங்கிணைந்த தலைமைத்துவம் இல்லாமல் தமிழ் மக்கள் எதனையும் அடைய முடியாது.
 
தோல்விகளில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ள தமிழ்த் தலைவர்கள் இதுவரை தயாராக இல்லை. ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக தொடர்ந்து தோல்விகளை அடைவதற்கான காரணத்தைக் கண்டு புத்திபூர்வமாக எதிர்காலத்தை முன்னெடுக்கத் தேவையான மனப்பாங்கு தமிழ் மக்கள் மத்தியில் இன்னும் உருவாக மறுக்கின்றது.
 
தமிழ் மக்களுக்கு ஏற்படும் தொடர் தோல்விகளுக்கு முதலில் தமிழ்த் தலைவர்கள் பொறுப்பேற்க வேண்டும்.
 
காலில் கல்லடித்துவிட்டது என்று கூறும்போது, கல்லுடன் கால் மோதுண்டுவிட்டதை கணக்கில் எடுக்கத் தவறுகிறோம்.
 
மலையேறும் ஒருவன் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டியது அவனது பொறுப்பு.
 
பொருட்களை மூழ்கடிப்பது கடலின் இயல்பு. கடலில் கப்பலை மூழ்கிடாமல் செலுத்த வேண்டியது மாலுமியின் பொறுப்பு அப்படியென்றால் தடம்புரண்ட தலைமைக்குப் பதிலாக மாற்றுத் தலைமையை உருவாக்குவது பற்றிய விடயத்தை பின்வருமாறு பார்க்கலாம்.
 
இரண்டு கோட்பாட்டுப் பதங்கள் உண்டு. இதில் முதலாவது பதம் இடதுசாரிகளால் முன்வைக்கப்பட்டது. இரண்டாவது பதம் வலதுசாரிகளால் முன்வைக்கப்ட்டது. அடிப்படையில் இரண்டும் ஒருகுடும்பப் பதங்களானாலும் இரண்டிற்கும் இடையே விசித்திரமான வேறுபாடுண்டு. முதலாவது பதத்தில் இருக்கின்ற பழையதை இடைவிடாது உடைத்து இன்னொரு புதியதை இடைவிடாது ஆக்கிக்கொள் என்பதாகும். உதாரணமாக பாழடைந்த கட்டடத்தை அழித்து புதிய அழகிய கட்டடத்தை உருவாக்கு என்பது. இங்கு பழய பொருள் முற்றிலும் அழித்துக் கைவிடப்படுகிறது.
 
இரண்டாவது பதத்தின் பொருள் பயனற்றுப் போன பழயதில் இருந்து புதியதை ஆக்குவதாகும். உதாரணமாக உடைந்து போன கண்ணாடிப் பொருளை உருக்கி புதிய அழகிய கண்ணாடிப் பொம்மையை உருவாக்கு என்பது. இங்கு உடைந்து போன பழய கண்ணாடி கைவிடப்படாமல் அதிலிருந்து புது வடிவம் உருவாகிறது.
 
மேற்படி இரு கோட்பாடுகளையும் கருத்தில் எடுத்து ஒரு மாற்றுத் தலைமையை உருவாக்க வேண்டும். அது போர்க்குற்ற விசாரணை என்ற ஒரு திட்டவட்டமான புள்ளியில் ஆரம்பித்து அறிஞர்கள், கலைஞர்கள், பண்பாட்டு செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என்போரை அரவணைத்து ஒரு தமிழ்த் தேசிய பேரியக்கத்திற்கு வழி ஏற்படுத்த வேண்டும். இந்தப் பெரும் பணியை செய்யவல்லத் தலைவர்களை வரலாற்று அன்னை தலைதடவத் தவறமாட்டாள்.
 
 நன்றி - தினக்குரல்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்