Paristamil Navigation Paristamil advert login

சவேந்திரசில்வாவின் நியமனம் எதனை உணர்த்துகிறது?

சவேந்திரசில்வாவின் நியமனம் எதனை உணர்த்துகிறது?

10 மாசி 2019 ஞாயிறு 13:48 | பார்வைகள் : 9165


அண்மையில் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இலங்கையின் புதிய இராணுவத் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார். சவேந்திரசில்வா சர்ச்சைக்குரிய 58வது படைப்பிரிவின் தளபதியாக இருந்தவர். இவரது கட்டளையின் கீழ் இயங்கிய படையினரே, இறுதி யுத்தத்தின் போது, பாரியளவிலான மனித உரிமை மீறல்களிலும் போர்க் குற்றங்களிலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இவர் மீது போர்க்குற்றசாட்டுக்களின் கீழ் வழக்குத் தொடர்வதற்கு, போதுமான ஆதாரங்கள் இருப்பதாக தென்னாபிரிக்காவை தளமாகக் கொண்டியங்கிவரும் அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான செயல்திட்டம் என்னும் அமைப்பு குறிப்பிட்டிருக்கிறது. 
 
இந்த நிறுவனம் யஸ்மின் சூக்காவின் தலைமையில் இயங்கிவருகிறது. இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்களை ஆராய்வதற்கென ஜ.நா செயலாளர் நாயகம் பன்கிமூனால் நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய நிபுனர் குழுவில் சூக்காவும் ஒருவர். இந்த பத்தி ஆராய முற்படும் விடயம் வேறு. அதாவது, இவ்வாறான பல்வேறு விமர்சனங்கள் மற்றும் அழுத்தங்கள் இருக்கின்ற போதும் அரசாங்கம் ஏன் அவற்றை கருத்தில் கொள்ளவில்லை? ஒரு வேளை மகிந்த ராஜபக்ச இவ்வாறானதொரு விடயத்தை செய்திருந்தால் அதற்கு இலகுவாக பதலளிக்க முடியும் ஆனால் ஜெனிவா பிரேரணையை முழுமையா அமுல்படுத்துவதாக வாக்குறுதியளித்திருக்கும் புதிய அரசாங்கம் இவ்வாறு நடந்துகொள்வதை எவ்வாறு விளங்கிக்கொள்வது?
 
யுத்தம் நிறைவுற்றதைத் தொடர்ந்து மகிந்த ராஜபக்ச அரசின் மீது சர்வதேசளவில் கடுமையான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இவ்வாறானதொரு சூழலில்தான், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஜக்கிய நாடுகள் சபையின் பிரதி நிரந்தரவதிவிடப் பிரதிநிதியாக (னுநிரவல Pநசஅயநெவெ சுநிசநளநவெயவiஎந) நியமிக்கப்பட்டிருந்தார். சில்வா இந்தப் பொறுப்பில் 2015 வரையில் இருந்தார். சிறிலங்கா இராணுவத்தின் மீது பாரிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட சூழலில்தான், சில்வா ஜ.நாவில் இலங்கைக்கான ராஜதந்திரியாக நியமிப்பட்டிருந்தார். 
 
இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர்கள் பலர் ராஜதந்திர பதவிகளில் அமர்த்தப்பட்டிருக்கின்றனர். ஆனால் ஒருவர் இராணுவ சேவையிலிருக்கும் போதே, ஜ.நாவின் ராஜதந்திர பதவிக்கு நியமிக்கப்பட்டவர் சவேந்திர சில்வா ஒருவர்தான். இராணுவத்தின் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்தான் மகிந்த அவ்வாறானதொரு நியமனத்தை செய்திருந்தார். ஆனால் மகிந்த அவ்வாறு நடந்துகொள்வது ஆச்சரியமான ஒன்றல்ல ஏனெனில், அவர் சர்வதேச கடப்பாடுகளுக்கு பதிலளிக்கும் பொறுப்பை உதாசீனம் செய்திருந்தார். ஆனால் புதிய அரசாங்கத்திலும் அது எவ்வாறு தொடர முடியும்? ஏன் தொடர்கிறது?
 
அடுத்த மாதம் ஜெனிவா அமர்க்களம் ஆரம்பமாகவுள்ளது. மாதம் முழுவதும் ஜ.நா மனித உரிமைகள் பேரவை தொடர்பிலும், சர்வதேச அழுத்தங்கள் தொடர்பிலும் விவாதங்கள் இடம்பெறலாம். ஆனால் இங்கு கேட்க வேண்டிய கேள்வி – இவ்வாறான அழுத்தங்கள் தொடர்பில் சிங்கள ஆளும் வர்க்கம் அச்சமடைந்திருக்கிறதா? அவ்வாறு அச்சமடைந்திருந்தால் போர்க் குற்றங்கள் புரிந்ததாக குற்றச்சாட்டுக்கள் உள்ள சவேந்திர சில்வாவை இராணுவ தலைமை அதிகாரியாக நியமித்திருக்குமா? இங்கு பிறிதொரு விடயத்தையும் நோக்க வேண்டும். இராணுவ தலைமை அதிகாரியை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம்தான் இருக்கிறது. எனவே மைத்திரிபால சிறிசேனதான் அவ்வாறானதொரு நியமனத்தை செய்திருக்கிறார். அவ்வாறாயின் அதனை ஏன் ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கவில்லை?
 
சர்வதேச அழுத்தங்களை தமிழர் தரப்புக்கள் பெரிதாக எடுத்துக் கொள்வது போல் சிங்கள அளும் தரப்பு எடுத்துக் கொள்ளவில்லை. மிகவும் வலுவான ராஜதந்திர பாரம்பரியம் உள்ள சிங்கள ஆளும் வர்க்கம் அவ்வாறான அழுத்தங்களை கையாளுவதில் போதுமான அனுபவங்களையும் ஆற்றலையும் கொண்டிருக்கிறது. இதன் காரணமாகவே அவ்வாறான அழுத்தங்களை பொருட்படுத்ததாமல் தங்களது வழியில் அவர்களால் செல்ல முடிகிறது. இந்த பின்புலத்தில் நோக்கினால் சவேந்திர சில்வாவின் நியமனம் மேற்குலக அழுத்தங்களை, சிறிலங்கா ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பதையே காண்பிக்கிறது.
 
பல்துருவ உலக ஒழுங்கில் (அமெரிக்கா, சீனா, ரஸ்யா மற்றும் இந்தியா போன்ற வல்லரசுகளுக்கிடையிலான போட்டிகள்) ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட வல்லரசுகளை கையாளுவதன் மூலம் மனித உரிமைகள் விவகாரத்தை கையாள முடியும் என்னும் உண்மையை கொழும்பு துல்லியமா அறிந்து வைத்திருக்கிறது. இதன் காரணமாகவே இந்தியா, அமெரிக்கா, சீனா மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகளுடன் கொழும்பு நெருக்கமான உறவை பேணிவருகிறது. மனித உரிமைகள் தொடர்பான அழுத்தங்கள் என்பதே மேற்குலக அழுத்தங்கள்தான். ஆனால் அந்த மேற்குலகின் மனித உரிமை வாதத்தை சீனாவோ ரஸ்யாவோ ஏற்றுக் கொள்வதில்லை. 
 
உண்மையில் மனித உரிமைகள் என்பது ஒரு உலகளாவிய சிந்தனைமுறை என்று கூறிக்கொண்டாலும் கூட, உண்மையில் யதார்த்தில் அது ஒரு பொய். இதனை மனித உரிமைகளை மீறும் நாடுகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன. இதனை சிறிலங்கா துல்லியமாக அறிந்து வைத்திருக்கிறது. அந்த வகையில், மேற்குலகம் மனித உரிமைகள் என்னும் அடிப்படையில் அழுத்தங்களை பிரயோகிக்க முற்பட்டால், அதனை எதிர்கொள்வதற்கு கொழும்பு அதிகம் சீனாவை நோக்கி சாயும். கொழும்பு அதிகம் சீனாவை நோக்கி சாய்வதை இந்தியா விரும்பாது. இந்த முரண்பட்ட நலன்களை கொழும்பு மிகவும் வெற்றிகரமாக கையாள முடியுமென்று நம்புகிறது. இந்த நிலையில் சர்வதேச அழுத்தங்கள் என்பது சிங்கள ஆளும் வர்க்கத்தை பொறுத்தவரையில் ஒரு பிரச்சினையில்லை. அது ஒரு பிரச்சினையாக இருக்குமென்று அவர்கள் கருதினால் இவ்வாறு உதாசீனப் போக்குடன் செயற்பட்டிருக்க மாட்டார்கள்.
 
இந்த இடத்தில் எழும் கேள்வி – அவ்வாறாயின் இதுவரை தமிழர் தரப்பு மேற்கொண்டுவந்த செயற்பாடுகளின் ஒட்டுமொத்த விளைவு என்ன? கூட்டமைப்பு சில விடயங்களுக்கு உரிமை கோருகிறது. கூட்டமைப்பு இந்த விடயங்களை சரியாக செய்யவில்லை என்று பிறிதொரு தரப்பு கூறிவருகிறது. புலம்பெயர் அரசியல் செயற்பாட்டார்களோ தாம் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டிருப்பதாக கூறுகின்றனர். இவ்வளவு செயற்பாடுகளுக்கு மத்தியிலும் ஏன் கொழும்பு மேற்குலக அழுத்தங்களுக்கு அடிபணியவில்லை. புலம்பெயர் அமைப்பை சேர்ந்த ஒருவர் இவ்வாறு கூறியதாக எனது நண்பர் வழியாக அறிந்தேன். சுமந்திரன், ஜக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துடன் நிற்பதுதான் சரியானது. அதனைத்தான் மேற்குலக ராஜதந்திரிகள் விரும்புகின்றனர். 
 
அப்போதுதான் போர்க்குற்ற விவகாரத்தில் இலங்கைக்கு எதிராக மேற்குலகம் செயற்படுமாம். எவ்வளவு அப்பாவித்தனமான நம்பிக்கை. இந்த அப்பாவித்தனமான நம்பிக்கையுடன் கிட்டத்தட்ட ஒரு தசாப்தம் கழிந்துவிட்டது. எனவே இப்போது கடந்த ஒரு தசாப்தகால தமிழ் அரசியல் நடவடிக்கைளை மதிப்பீடு செய்வதற்கு ஒவ்வொருவரும் தயாராக வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. இன்றைய நிலையில் சர்வதேச அழுத்தத்தை சிங்கள ஆளும் வர்க்கம் ஒரு பாரதூரமான விவகாரமாக பார்ப்பதாகத் தெரியவில்லை. அவ்வாறு பார்த்திருந்தால் போர்க்குற்றச்சாட்டுக்குள்ளாகியிருக்கும் சவேந்திர சில்வாவை இராணுவ தலைமை அதிகாரியாக நியமித்திருக்கமாட்டார்கள். சவேந்திரசில்வாவின் நியமனம் சர்வதேச அழுத்தங்கள் தொடர்பில் அபரிமிதமான நம்பிக்கையுள்ளவர்களுக்கு ஒரு தெளிவான செய்தியாகும்.
 
நன்றி - சமகளம்
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்