Paristamil Navigation Paristamil advert login

வடிவேலின் புதிய அரசியல் யாப்பு?

வடிவேலின் புதிய அரசியல் யாப்பு?

20 தை 2019 ஞாயிறு 11:59 | பார்வைகள் : 8787


கடந்த வருடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடக்கிய தூதுக் குழுவொன்று சீனாவிற்கு பயணம் மேற்கொண்டிருந்தது. இதன்போது கூட்டமைப்பின் தலைவராக அறியப்படும் இரா.சம்பந்தனும் அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தார். 
 
அதே போன்று கூட்டமைப்பிற்கு எதிர்நிலைப்பாடுள்ள பிறிதொரு தமிழ் கட்சியின் தலைவரும் அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தார். இவர்கள் அங்கு தங்கியிருந்த வேளையில் ஆசுவாசமாக மாலை நேரங்களில் பேசிக் கொள்வதுண்டாம். பொதுவாக மக்களுக்கு முன்னால் முரண்பாடுள்ளவர்களாக காண்பித்துக் கொள்ளும் அரசியல்வாதிகள், தனியறையில் மதுக் கோப்பைகளுடன் இருப்பது அரசியலை பொறுத்தவரையில் சர்வசாதாரணமான ஒன்று. சம்பந்தனும் அப்படியான மதுக் கோப்பைகள் உரசிக் கொள்ளும் இரவுகளை விரும்பும் ஒருவர்தான். ஆனால் இப்படியான ஒரு மாலை நேர சந்தோசத்தின் போது, சம்பந்தன், குறித்த கட்சியின் தலைவரிடம் – தீர்வு தொடர்பில் என்ன நினைக்கின்றீர்கள்? – என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்தத் அரசியல் தலைவர் – எந்தத் தீர்வை கேட்கின்றீர்கள் என்று பதிலுக்கு கேட்டிருக்கிறார். புதிய அரசியல் யாப்பின் ஊடான அரசியல் தீர்வு முயற்சிகளைத்தான் கேட்கிறேன் என்று சம்பந்தன் கூறியிருக்கிறார். அதையா கேட்கின்றீகள் – வரும் ஆனால் வராது – என்று அந்தத் தலைவர் சிரித்துக் கொண்டே கூறியிருக்கிறார். அந்தத் தலைவர் மது அருந்துவதில்லை. வரும் ஆனால் வராது என்பது – கோடாம்பாக்க தமிழ் திரைப்படம் ஒன்றில் நகைச்சுவை நடிகர் வடிவேலு பேசிய வார்த்தைகள்.
 
கூட்டமைப்பு கடந்த மூன்று வருடங்களாக மேற்கொண்டுவந்த அரசியல் தீர்வு முயற்சிகள், கிட்டத்தட்ட அந்தக் கட்டத்தைதான் தற்போது அடைந்திருக்கிறது. ஆனாலும் இப்போதும் கூட விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று விவாதம் செய்வதைப் போல் – சுமந்திரனும் சம்பந்தனும் பேசிக் கொள்வதுதான் இன்னும் வேடிக்கையாக இருக்கிறது. சுமந்திரனோ அல்லது சம்பந்தனோ அல்லது கூட்டமைப்போ – ஒரு விடயத்தை நம்புவதும் அதற்காக உழைப்பதும் தவறான காரியமல்ல ஆனால் அந்த விடயத்தை சாத்தியப்படுத்துவதற்கான வாய்புக்கள் எந்தளவு சாதகமாக இருக்கிறது – சாதாகமாக இருக்குமா என்னும் முன்னெச்சரிக்கையுடன் விடயங்கள் கையாளப்பட்டிருக்க வேண்டும். கிடைத்த சந்தர்ப்பத்தை சாதகமாக பயன்படுத்தி, யுத்தத்தால் உருக்குலைந்து போயுள்ள மக்களின் வாழ்வை மீளவும் கட்டியெழுப்பியிருக்க வேண்டும். ஆட்சி மாற்றம் தேவைபட்ட உலகளாவிய சக்திகளின் உதவிகளை வடக்கு கிழக்கு நோக்கி கொண்டுவந்திருக்க வேண்டும். ஆனால் அவை எதுவும் இங்கு நடைபெறவில்லை. இதுதான் கூட்டமைப்பின் பக்கத்திலுள்ள மிகப்பெரிய தவறு. இந்தத் தவறை சரி செய்வதற்கு – நாங்கள் நம்பினோம், அவர்கள் எமாற்றி விட்டார்கள் அல்லது மகிந்த ராஜபக்ச வந்து குழப்பிவிட்டார் – என்றவாறு மிகவும் இலகுவான பதில்களை கூற முடியாது. மகிந்த, இயல்பான ஆட்சி மாற்றமொன்றின் ஊடாக அதிகாரத்திலிருந்து அகற்றப்படவில்லை. எனவே அவர் மீண்டும் தனது அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொள்ள கடுமையாக முயற்சிப்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆனால் இவற்றை விளங்கிக்கொண்டு, அரசியலை கையாள வேண்டியது எவருடைய பொறுப்பு? இவற்றையெல்லாம் விளங்கிக்கொண்டு அரசியலை கையாளுவதற்குத்தானே தலைமை தேவை! வெறும் அறிக்கைகளை விடுவதற்கு அரசியல் தலைவர்கள் தேவையில்லை.
 
;புதிய அரசியல் யாப்பு தொடர்பில் கடந்த மூன்று வருடங்களாக பல்வேறு விவாதங்கள் இடம்பெற்றிருக்கின்றன. லேபில் முக்கியமல்ல உள்ளடக்கம்தான் முக்கியம் என்றவாறு பல விவாதங்கள் இடம்பெற்றன. இன்று அனைத்தும் தொடங்கிய இடத்திலேயே முடிந்திருக்கிறது. கூட்டமைப்பின் சகல வியாக்கியாணங்களுக்கும் ரணிலின் அண்மைய பாராளுமன்ற பேச்சு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.
புதிய அரசியல் யாப்பை மகிந்த தரப்பு எதிர்க்கிறது. அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ரணிலின் முயற்சியில் ஒரு புதிய அரசியல் யாப்பு வருவதை மகிந்த ஒரு போதுமே அனுமதிக்கப் போவதில்லை. விடுதலைப் புலிகளை அழித்து இலங்கை அரசியலுக்கு ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியது நானே என்று எண்ணிக் கொண்டிருக்கும் மகிந்த, அந்த வெற்றிக்கு பின்னரான வரலாற்று நிகழ்வொன்று, ஜக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் இடம்பெறுவதை ஒரு போதுமே ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இது சாதாரணமாக விளங்கிக் கொள்ளக் கூடிய ஒன்று. எனவே புதிய அரசியல் யாப்பு ஒன்றை கொண்டுவருவதற்கான பெரும்பாண்மை இல்லாத போது, தென்னிலங்கையில் அதற்கு சாதகமான சூழல் இல்லாதபோது எவ்வாறு புதிய அரசியல் யாப்பு வரும்?
 
கூட்டரசாங்கம் அடிப்படையிலேயே ஒரு பலவீனமான அரசாங்கமாகவே இருந்தது. அதன் பலவீனம்தான் இன்று அந்த அரசாங்கம் வீழ்ச்சியடைவதற்கும் காரணமாகியது. உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகள் கூட்டரசாங்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தேர்தல் முடிவுகள், தென்னிலங்கையை பொறுத்தவரையில் மகிந்த ஒரு தவிர்க்க முடியாத சக்தி என்பதை தெளிவாக காண்பித்தது. உண்மையில் உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகியதைத் தொடர்ந்தே, புதிய அரசியல் யாப்பு முயற்சிகள் பிசுபிசுத்துவிட்டது. இதனை பிறிதொரு வகையில் சொல்வதானால் மகிந்தவின் வெற்றி கூட்டரசாங்கத்தின் வீழ்சியையும் தீர்மானித்துவிட்டது. இந்த பின்புலத்தில் நோக்கினால், அடுத்த தேர்தலின் மூலம் அதிகாரத்தை கைப்பற்றுவது எவ்வாறு என்பதுதான் ஜக்கிய தேசியக் கட்சியின் முதன்மையான இலக்கு. இதன் காரணமாகவே தற்போது ரணில் விக்கிரமசிங்கவும் ஜக்கிய தேசியக் கட்சியை சேர்ந்தவர்களும் ஒற்றையாட்சியை வலியுறுத்தி பேசிவருகின்றனர். ஒருமித்தநாடு என்பது ஒற்றையாட்சிதான் என்றும் கூறுகின்றனர். இது தொடர்பில் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன?
 
சில தினங்களுக்கு முன்னர் பாராளுமன்ற விவாதத்தின் போது புதிய அரசியல் யாப்பை மகிந்த எதிர்த்து பேசியிருந்தார். தாம் அதனை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றும் மகிந்த தெரிவித்திருந்தார். இது எதிர்பார்க்கக் கூடிய ஒன்றே! ஆனால் இதற்கு ரணில் வழங்கியிருக்கும் பதில்தான் இங்கு ஊன்றி கவனிக்க வேண்டியது. ‘ஒற்றையாட்சியை உறுதிப்படுத்துதல், பவுத்தத்திற்கு முன்னுரிமை, சமஸ்டி இல்லை, வடக்கு கிழக்கு இணைப்பு இல்லை – பின்னர் எதற்காக இந்த புதிய அரசியல் யாப்பை எதிர்க்கின்றீர்கள்?’ ஆனால் நாம் இங்கு கேட்க வேண்டிய கேள்வி – இதுதான் ரணில் – சம்பந்தன் கூட்டின், புதிய அரசியல் யாப்பு என்றால் – பின்னர் எதற்காக அந்த புதிய அரசியல் யாப்பு? இருக்கின்ற யாப்பையே பின்தொடராலாமே! இதற்கு பின்னரும் கூட்டமைப்பினர் புதிய அரசியல் யாப்பில் சமஸ்டி ஒழிந்திருக்கிறது என்று கூறப்போகின்றனரா?
 
ஆனால் இதில் பிறிதொரு விடயத்தையும் கவனிக்கலாம் – அதாவது, ரணிலின் கருத்து தொடர்பில் சுமந்திரனோ அல்லது சம்பந்தனோ ஏன் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களோ இதுவரை வாய்திறக்கவில்லை. அவ்வாறானதொரு அரசியல் யாப்பிற்கு நாம் ஆதரவளிக்கவில்லை – இனியும் இந்த அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க முடியாது – என்று ஏன் கூட்டமைப்பினால் கூற முடியாமல் இருக்கிறது? கடந்த மூன்று வருடங்களாக புதிய அரசியல் யாப்பு கதைகளின் கதாநாயகனாக தன்னை காண்பித்துவந்த சுமந்திரனால் ஏன் ரணிலை எதிர்த்து பேச முடியாமல் இருக்கிறது? இந்த விடயங்களை தொகுத்து பார்த்தால் புதிய அரசியல் யாப்பு என்னும் பெயரில், கடந்த மூன்று வருடங்கள் ஒரு பயனுமில்லாமல் வீணாக்கப்பட்டிருக்கிறது. இந்த காலத்தை ஆக்கபூர்வமாக கையாள்வதற்கான அனைத்து வாய்ப்புக்களையும் கூட்டமைப்பு வீணாக்கியிருக்கிறது. இதனை தமிழ் மக்கள் உணர்வார்களா? ஆபிரகாம் லிங்கனின் ஒரு கூற்றுண்டு : ‘சிலரை சில காலங்களில் ஏமாற்றலாம். சிலரை எல்லா காலங்களிலும் ஏமாற்றலாம் ஆனால் எல்லா மக்களையும் எல்லா காலங்களிலும் ஏமாற்ற முடியாது’ – இதற்கு உலகில் எந்த மக்களும் விதிவிலக்கா இருக்க மாட்டார்கள் ஆனால் ஒரு வேளை விதிவிலக்கான ஒரு மக்கள் கூட்டம் இருக்கிறதென்றால் – அது நிச்சயமாக தமிழ் மக்களாகத்தான் இருக்கும். இதில் அரசியல்வாதிகள் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கும் வரையில், அவர்கள் ஒரு போதும் தோற்கப்போவதில்லை. ஆனால் மக்கள்? எங்களுக்கு தோல்விகள்தான் வேண்டுமென்று அடம்பிடிக்கும் ஒரு மக்கள் கூட்டத்தை எந்த இறை தூதராலும் மாற்ற முடியாது
 
நன்றி - சமகளம்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்