புதிய கூட்டு முன்னணி ஒன்றிற்கான விக்கினேஸ்வரனின் அழைப்பு!
2 மார்கழி 2018 ஞாயிறு 13:29 | பார்வைகள் : 9243
நாடு ஒரு அவசரமான தேர்தலை எதிர்கொள்ளலாம் என்னும் நிலையில், புதிய கூட்டு தொடர்பில் பலவாறான அபிப்பிராயங்கள் ஆங்காங்கே எட்டிப்பார்க்கும் ஒரு நிலைமை இருந்தது. இது தொடர்பில் ஆதரவு – எதிர்ப்பு என்னும் நிலையில் கருத்துக்களும் வெளிவந்து கொண்டிருந்தன.
ஆனால், தேர்தல் சற்று தள்ளிப் போகலாம் என்னும் நிலையில் அவ்வாறான வாதப்பிரதிவாதங்களும் ஓய்வுநிலைக்கு சென்றன. இவ்வாறானதொரு சூழலில்தான் அனைத்து வாதப்பிரதிவாதங்களுக்கும் ஜயப்பாடுகளுக்கும் ஊகங்களுக்கும் முற்றுப்புள்ளியிடும் வகையில், விக்கினேஸ்வரன் அவர்களின் உரை வெளிவந்திருக்கிறது. கடந்த 18ம் திகதி இடம்பெற்ற பேரவையின் கூட்டத்தி;ன் போதே விக்கினேஸ்வரன் அந்த உரையை ஆற்றியிருந்தார்.
இதன் போது, ஒரு புதிய பொதுச் சின்னத்தின் கீழ், தமிழ் தேசியத்தின்பால் பற்றுறுதி உள்ள எல்லோரையும் ஒன்றிணைக்கும் வகையில் தமிழ் மக்கள் கூட்டணியின் கீழ் போட்டியிட, தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வெளியில் நிற்கும், ஈ.பி.டி.பி தவிர்ந்த மற்றைய கட்சிகளை அழைக்கின்றேன். மீண்டும் மீண்டும் எமக்குள்ளேயே குரோதங்களையும் விரோதங்களையும் வளர்த்துக்கொண்டு தொடர்ந்தும் எமக்குள் முரண்பட்டுக் கொண்டிருக்கும் நிலைமைகளுக்கு இடம்கொடாமல் எம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கையின் அடிப்படையில் திட்டமிட்ட செயற்பாடுகளுக்கு ஊடாக தேர்தல் அரசியலை பயன்படுத்திக் கொள்வதற்கு என்னுடன் கைகோர்க்குமாறு அழைக்கின்றேன். இதற்கு மேலும் விடயங்களை தெளிவுபடுத்த முடியாது.
‘எமக்குள்ளேயே குரோதங்களையும் விரோதங்களையும் வளர்த்துக்கொண்டு தொடர்ந்தும் எமக்குள் முரண்பட்டுக் கொண்டிருக்கும் நிலைமைகளுக்கு இடம்கொடுக்க வேண்டாம். உண்மையில் இந்தக் கூற்றை விக்கினேஸ்வரன் யாரை நோக்கி குறிப்பிட்டிருக்கிறார்?
விக்கினேஸ்வரன் தனது கட்சியை பகிரங்கமாக மக்கள் முன்வைத்தது மிக அண்மையில் என்றாலும் கூட, அவர் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவராக எப்போது பொறுப்பை ஏற்றாரோ அப்போதே, விக்கினேஸ்வரன் தலைமையில் ஒரு புதிய அணி உருவாகத் தொடங்கிவிட்டது. அந்த அடிப்படையில் பார்த்தால் விக்கினேஸ்வரன் கடந்த மூன்று வருடத்திற்கும் மேலாக தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றான ஒரு தலைமைத்துவத்தை வழங்கிவந்திருக்கிறார்.
அவரது தலைமைத்துவத்தின் கீழ்தான் பேரவையின் அரசியல் தீர்வாலோசனை முன்வைக்கப்பட்டது. அவரது தலைமையின் கீழ்தான் வடக்கிலும் கிழக்கிலும் எழுக தமிழ் நிகழ்வுகள் இடம்பெற்றன. ஆனால் இந்த நிகழ்வுகள் இடம்பெற்ற காலத்தில் எங்குமே விக்கினேஸ்வரன் ஒரு புதிய அரசியல் தலைமைத்துவம் தொடர்பில் வெளிப்படையாக பேசியிருக்கவில்லை. அவரை நோக்கி பலர் அந்த அழைப்பை விடுத்த போதிலும் கூட, மிகுந்த நிதானத்துடன் அந்த அழைப்புக்களை புறக்கணித்து வந்திருக்கிறார். அவர் இந்த விடயத்தில் மிகுந்த நேர்மையை கடைப்பிடித்தார்.
தான் கூட்டமைப்பின் சார்பில் வடக்கு முதலமைச்சராக இருக்கின்ற போது, அவ்வாறான அறிவிப்பை விடுப்பதானது தன்னை ஒரு அரசியல் ஒழுக்கவீனனாக காண்பித்து விடலாம் என்னும் எச்சரிக்கையுடன்தான், தனக்கான காலம் கனியும் வரையில் காத்திருந்தார். தனது பதவிக்காலம் முடியும் நாளில்தான் தனது புதிய அரசியல் பிரவேசம் தொடர்பான அறிவிப்பை செய்தார்.
இதன் மூலம் கூட்டமைப்பின் அரசியல் அனுகுமுறைகளை ஏற்றுக் கொள்ளாது விட்டாலும் கூட, கூட்டமைப்பை உடைத்து, கூட்டமைப்புக்கு மாற்றான ஒரு அரசியல் கூட்டணியை உருவாக்க அவர் முயற்சிக்கவில்லை. இதன் காரணமாகவே, கூட்டமைப்புக்கு வெளியில் நிற்கும் கொள்கை அடிப்படையில் இணையக் கூடியவர்களை நோக்கி அவர் கைநீட்டியிருக்கிறார். கூட்டமைப்பில் இருக்கும் கட்சிகள் தாங்களாகவே விலகி, அவருடன் இணைய முன்வந்தால் அது வேறு விடயம்.
தற்போது நாடு எதிர்கொண்டிருக்கின்ற அரசியல் நெருக்கடி ஒரு விடயத்தை தெளிவாக பதிவு செய்திருக்கிறது. அதாவது, தமிழர் தரப்பு, என்னதான் அரசாங்கத்துடன் தேனிலவு கொண்டாடினாலும் கூட, சிங்கள ஆளும் வர்க்கத்தின் அடிமனதில் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கடந்த மூன்று வருட கால தேனிலவு அரசியல் இதனைத் தெளிவாக நிரூபித்திருக்கின்றது.
எனவே தமிழர் தரப்பு அரசாங்கத்தை கையாளும் வகையில் தனது செயற்பாடுகளை முன்னெடுக்க N;வண்டுமே அன்றி, அரசாங்கத்தை நம்பி, தமிழ் மக்களின் அடிப்படையான அரசியல் நிலைப்பாடுகளை கைவிடக் கூடாது. ஏனெனில் அரசாங்கங்கள் குறிப்பிட்ட அரசியல் நெருக்கடிகளால் மாற்றங்களுக்கு உள்ளாகலாம் அவ்வாறான சூழலில், தமிழர் தரப்பு தனது பேரம் பேசும் ஆற்றலையும் இழக்க நேரிடும்.
தற்போது கூட்டமைப்பிற்கு அவ்வாறானதொரு நிலைமைதான் ஏற்பட்டிருக்கிறது. ரணில் – மைத்திரி – சந்திரிக்கா ஆகிய நபர்களை நம்பி அவர்களின் பின்னால் இழுபட்டுக்கொண்டிருந்த, கூட்டமைப்பு இன்று அவர்களின் முரண்பாடுகளுக்குள் அகப்பட்டு சீரழிந்து கொண்டிருக்கிறது. தனிநபர்களை நம்பி அரசயலை கையாள முற்படுவர்களுக்கு இவ்வாறானதொரு நிலைமைதான் ஏற்படும். இந்த பின்புலத்தில் பார்த்தால், கூட்டமைப்பு தமிழ் மக்களின் தலைமை என்னும் தகுதியை முற்றிலுமாக இழந்து நிற்கும் ஒரு சூழலில்தான் விக்கினேஸ்வரனின அழைப்பும் வெளிவந்திருக்கிறது.
இதில் தமிழ் மக்கள் பேரவைக்கும் ஒரு முக்கிய பங்குண்டு. தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாடுகளோடு ஆரம்பத்திலிருந்தே மூன்று கட்சிகள் இணைந்து செயற்பட்டு வந்திருக்கின்றன. அவ்வாறான கட்சிகளையும் உள்ளடக்கித்தான் விக்கினேஸ்வரன் பேரவையின் இணைத் தலைவராக இருந்தார். அந்த பின்புலத்தில் நோக்கினால், பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஒவ்வொன்றும் விக்கினேஸ்வரனின் தலைமைத்துவத்தை ஏற்கனவே அங்கீகரித்துவிட்டன. எனவே, விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியுடன் கொள்கை அடிப்படையில் இணைவதில் அவர்கள் மத்தியில் பெரிய முரண்பாடுகள் இருக்க வாய்ப்பில்லை. ஒரு வேளை சிறிய முரண்பாடுகள் இருந்தால் அதனை சரிசெய்து, அவற்றை தமிழ் மக்கள் கூட்டணியுடன் இணைக்க வேண்டிய பொறுப்பை இனியும் தமிழ் மக்கள் பேரவை பிற்போட முடியாது. பேரவை இனியும் கட்சிகளுக்கிடையிலான முரண்பாடுகளில் பார்வையாளராக இருக்க முடியாது.
பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் உத்தியோகபூர்வமான கருத்துக்களை அறிய வேண்டும். விக்கினேஸ்வரன் தலைமையில் அனைவரும் மற்றவர்களால் சமமாக நடத்தப்படக் கூடியவாறான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். கூட்டமைப்பின் மீது எவ்வாறான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதோ அவ்வாறான விமர்சனங்களை தமிழ் மக்கள் கூட்டணியின் மீது முன்வைக்க முடியாதளவிற்கான ஏற்பாடுகளை பேரவை உறுதிப்படுத்த வேண்டும். ஒரு வேளை, பேரவையில் அங்கம் வகித்த கட்சிகளில் ஒன்று, விக்கினேஸ்வரனின் தலைமையில் ஒன்றிணைய பின்நிற்குமாயின் அவர்களை விட்டுவிட்டு, இணையக் கூடியவர்களை முன்னிறுத்தி தமிழ் மக்கள் கூட்டணியை பலப்படுத்த வேண்டும். இந்த விடயம் தொடர்ந்தும் ஒரு இழுபறி நிலையில் இருக்குமாயின், இதன் மூலம் மறைமுகமாக விக்கினேஸ்வரனே பலவீனப்படுத்தப்படுகிறார் என்பது உணரப்பட வேண்டும்.
விக்கினேஸ்வரனை பலவீனப்படுத்தப்படுதல் என்பது, ஒரு வலுவான தமிழ் தேசியத் தளத்தை பாதுகாப்பதற்கான முயற்சி பலவீனப்படுத்தப்படுகிறது என்பதே பொருளாகும். இது உறுதியான அரசியல் முடிவுகளை எடுப்பதற்கான காலமாகும். ஏனெனில் இது ஒவ்வொருவரது கட்சி நலன் தொடர்பான விடயமல்ல. தமிழ் தேசியத்தின் எதிர்காலத்திற்கு முன்னால் எவரது கட்சிகளும் முக்கியமானது அல்ல. தூய்மைவாதங்கள் ஆரம்பத்தில் கவர்ச்சிகரமானதாக தெரிந்தாலும் கூட, ஒரு கட்டத்திற்கு மேல் அதுவே தமிழ் தேசிய அரசியலை புதிய சூழலுக்கு ஏற்ப முன்கொண்டு செல்வதற்கு பெரும் சவாலாக மாறும். அரசியலில் தங்களை தூய்மைவாதிகளாக காண்பிப்பவர்கள், தாங்கள் அதுவரை எவரை எதிரிகள் கூறிவந்தார்களோ, இறுதியில் அவர்களுக்கே பணிவிடை செய்கின்றனர். இந்த விடயங்கள் தொடர்பில் விக்கினேஸ்வரன் சிந்திப்பதாகவும் தெரிகிறது. இதன் காரணமாகவே கொள்கை அடிப்படையில் இணைந்து பயணிக்கக் கூடியவர்களை நோக்கி அவர் பகிரங்க அழைப்பை விடுத்திருக்கிறார்.
கடந்த உள்ளுராட்சி தேர்தல் முடிவுகள் ஒரு விடயத்தை தெளிவாக காண்பித்தது. அதாவது, கூட்டமைப்பின் வாக்கு வங்கியின் வீழ்சியென்பது, சிங்கள கட்சிகளுக்கும் அரசாங்கத்துடன் இணந்து செயற்படுதை ஒரு அரசியல் நிலைப்பாடாக கொண்டிருக்கும் கட்சிகளை நோக்கியும் நமது மக்கள் சென்றிருக்கின்றனர். அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 35 வீதமான வாக்குகளே கூட்டமைப்புக்கு சென்றிருக்கின்றன. இது ஒரு ஆபத்தை முன்னுனர்த்துகிறது. வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் வாக்குகள் தமிழ் தேசிய தளத்திற்கு வெளியில் செல்லுமாயின், அது தமிழ் தேசியத்தின் பக்கமாக மக்கள் இல்லை என்பதாகவே புரிந்துகொள்ளப்படும். அதன் பின்னர் கட்சித் தனித்துவங்கள், கொள்கைகள் தொடர்பில் உரத்துப் பேசி, அறிக்கைகளைவிட்டு பயனில்லை. மக்கள் தளத்தை இழந்தவர்கள் சொல்வது சர்வதேச அரங்குகளில் எடுபடாது. கூட்டமைப்பின் தேர்தல் வெற்றிதான் அவர்களுக்கான சர்வதேச அங்கீகாரம்.
ஆனால் கூட்டமைப்போ அதனை பிழையாக கையாண்டு வருகிறது. இவ்வாறானதொரு சூழலில் விக்கினேஸ்வரன் கூறும் விடயங்கள் சர்வதேச அரங்குகளில் உணரப்பட வேண்டுமாயின் அதற்கு தமிழ் மக்கள் கூடடணியின் பக்கமாக மக்கள் திரண்டிருக்கி;ன்றனர் என்பதை நிரூபிக்க வேண்டும். அதற்கு ஒரு தேர்தல் வெற்றி கட்டாயமானது. விக்கினேஸ்வரன் அவரது முன்னைய உரையொன்றில் தேர்தல் அரசியல் தொடர்பில் கூறிய விடயங்களை சிலர் விமர்சிக்க முற்பட்டனர். விக்கினேஸ்வரன் மக்கள் இயக்கத்தை பலவீனப்படுத்துவதான பொருளில் விவாதிக்க முற்பட்டனர். அது தவறான கருத்து.
ஏனெனில் கடந்த அறுபது வருடங்களுக்கும் மேலான தமிழர் அரசியல் வரலாற்றில் அப்படியான மக்கள் இயக்க அரசியல் வடக்கு கிழக்கில் இருந்ததில்லை. எனவே அதனை விக்கினேஸ்வரன் செய்ய வேண்டுமென்பதும் தவறான ஒரு பார்வைதான். இன்று மட்டுமல்ல முன்னரும் கூட, தேர்லில் ஒரு கட்சி பெறும் மக்கள் ஆதரவைக் கொண்டுதான் அதற்கான அங்கீகாரம் தீர்மானிக்கப்பட்டது.
எனவே முதலில் தேர்தல் அரசியல் ஊடாக தமிழ் தேசிய தளத்தை உறுதிப்படுத்த வேண்டும். அதனைக் கொண்டுதான் ஏனைய விடயங்களை கையாள முடியும். விக்கினேஸ்வரனின் அழைப்பு அதற்கான வாய்ப்பை வழங்கியிருக்கிறது. இந்த அழைப்பை சரியாக கையாண்டால் தேர்தல் அரசியலில் ஒரு வெற்றியை உறுதிப்படுத்த முடியும். அவ்வாறானதொரு வெற்றியை உறுதிப்படுத்தினால்தான் விக்கினேஸ்வரன் இதுவரை கூறிவந்த விடயங்களை மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் மற்றவர்களுக்கு உணர்த்த முடியும்.
எனவே இதில் ஒரு கடினமான சவாலும் உண்டு. ஒரு வேளை இதில் சறுக்கினால் அதாவது விக்கினேஸ்வரன் பலவீனப்பட்டால், அவர் இதுவரை கூறிவந்த விடயங்களுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இல்லை என்று மிகவும் இலகுவாக புரிந்துகொள்ளப்படும். எனவே இப்போதைய தேவை ஒன்றே, அது விக்கினேஸ்வரனின் அழைப்புக்கு செவிசாய்த்து, அனைவரும் அவரது தலைமையின் கீழ் செல்வது மட்டும்தான். இதில் கடந்தகால முரண்பாடுகள், குரோதங்கள், பிழையான புரிதல்கள் எவையும் பயனற்றவை.
நன்றி - சமகளம்