Paristamil Navigation Paristamil advert login

விக்கினேஸ்வரனுக்கு எதிரான விவகாரத்தை ஒரு பெரும் அரசியல் பிரச்சினையாக உருமாற்ற முடியுமா?

விக்கினேஸ்வரனுக்கு எதிரான விவகாரத்தை ஒரு பெரும் அரசியல் பிரச்சினையாக உருமாற்ற முடியுமா?

23 புரட்டாசி 2018 ஞாயிறு 11:23 | பார்வைகள் : 8660


சம்பந்தன் தமிழ் மக்கள் மத்தியில் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பேசிவருகின்றார் ஆனால் இன்னொரு புறமாக 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பிலும் புதுடில்லியில் பேசியிருக்கிறார். புதிய அரசியல் யாப்பொன்று வரும் என்பதில் சம்பந்தனுக்கு நம்பிக்கையிருப்பின் பின்னர் எதற்காக 13வது திருத்தச் சட்டம் தொடர்பில் பேச வேண்டும்? சபாநாயகர் கருஜெயசூரியவின் தலைமையில் புதுடில்லி சென்ற குழுவில் சம்பந்தன் மட்டுமல்ல ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவும் இடம்பெற்றிருந்தார்.
 
நீண்ட காலத்திற்கு பின்னர் டக்ளஸ் தேவானந்தா புதுடில்லிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார். இராஜதந்திரரீதியில் நோக்கினால் இது சம்பந்தனை பொறுத்தவரையில் ஒரு இராஜதந்திர பின்னடைவே. இதே வேளை, சம்பந்தன் புதுடில்லியில் தங்கியிருக்கின்ற போதே, மகிந்த ராஜபக்சவிற்கும் இந்தியா பெரும் வரவேற்பை வழங்கியிருக்கிறது. இதன் ராஜதந்திர பரிமாணம் தனியாக நோக்கப்பட வேண்டிய ஒன்று. அதனை பிறிதொரு பத்தியில் பார்ப்போம்.
 
ராஜபக்ச தனது ஆட்சிக் காலத்தில் ‘13 பிளஸ்’ தொடர்பில் பேசிய ஒருவர் அப்போது அது தொடர்பில் ராஜபக்சவுடன் பேசுவதற்கு சம்பந்தன் தயாராக இருக்கவில்லை ஆனால் ராஜபக்ச புதுடில்லியில் மோடியின் வரவேற்பில் திழைத்துக் கொண்டிருக்கும் போது, சம்பந்தனோ மோடியிடம் 13வதின் முழுமையான அமுலாக்கம் பற்றி பேசியிருக்கின்றார்.
 
உண்மையில் சம்பந்தன் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை அவரது ஆதரவாளர்கள்தான் கூற வேண்டும். ஆனால் சம்பந்தன் இவ்வாறு, 13வது தொடர்பில் பேசிக் கொண்டிருக்கின்ற போதுதான், வடக்கு மாகாண முதலமைச்சர், ஒய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதியரசர் விக்கினேஸ்வரன் மீது நீதிமன்றத்தை அவமதித்துவிட்டார் என்னும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கிறது.
 
இதனை ஆழமாக பார்த்தால் உண்மையில் இந்த விடயம் 13வது திருத்தச் சட்டத்தின் கீழ், ஒரு மாகாண முதலமைச்சருக்கு உள்ள அதிகாரங்கள் தொடர்பானது. தன்னை பணிநீக்கம் செய்தது தவறு என்னும் அடிப்படையில் ஒரு மாகாண சபை அமைச்சரே இந்த விவகாரத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார். 
 
ஒட்டுமொத்தத்தில் நோக்கினால் இது மாகாண சபை முறைமையிலான அதிகாரப்பகிர்விலுள்ள பலவீனங்களின் விளைவு. இதிலுள்ள சீரழிவு என்னவென்றால், மாகாண சபை முறைமையிலுள்ள பலவீனத்தை பயன்படுத்தியே, அதன் முதலமைச்சரான விக்கினேஸ்வரன் பழிவாங்கப்படுகிறார். 
 
மாகாண சபை முறைமையை மேலும் பலப்படுத்துவதன் ஊடாக, ஒரு முழுமையான அதிகாரப்பகிர்வு முறைமையை நோக்கிப் பயணிக்க வேண்டிய சம்பந்தன் தரப்போ, தற்போது தங்களின் முழு ஆற்றலையும் விக்கினேஸ்வரனுக்கு எதிராக குவித்திருக்கிறது. இது தொடர்பில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான புளொட் மற்றும் டெலோவும் ஆழ்ந்த மௌனத்தை கடைப்பிடித்துவருகிறது.
 
இதற்கிடையில் சம்பந்தன் புதுடில்லியில் வைத்து, இந்திய பிரதமர் நரேந்திரமோடியிடம், இலங்கை ஒரு பவுத்தநாடாக இருப்பது தொடர்பில் பிரச்சினையில்லை என்று கூறியதாக, டெக்கான் குரனிக்கல் என்னும் ஆங்கில பத்திரிகையொன்று எழுப்பிய கேள்விக்கு, மோடியுடனான சந்திப்பின் போது, உடன் இருந்த டக்களஸ் தேவானந்தா, அதனை ஆம் என்று உறுதிப்படுத்தியிருக்கின்றார். சம்பந்தனது கருத்துடன், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான புளொட்டும், டெலோவும் உடன்படுகின்றனவா? இது தொடர்பில் புளொட்டோ அல்லது டெலோவோ இதுவரை எந்தவொரு உத்தியோகபூர்வ கருத்தையும் வெளிப்படுத்தியிருக்கவில்லை. ஏன்?
 
சம்பந்தன் – சுமந்திரன் கூட்டு கூறிவருகின்ற புதிய அரசியல் யாப்பிற்கும், தற்போது விக்கினேஸ்வரனை அரசியல் அரங்கிலிருந்து அகற்றுவதற்கான முயற்சிகளுக்கும் இடையில், ஒரு பிரிவிக்கவியலாத தொடர்புண்டு. அதாவது. விக்கினேஸ்வரன் அடுத்த தடவையும் முதலமைச்சராக இருப்பாராயின் அல்லது அரசியலில் தொடர்ந்தும் இருப்பாராயின், சம்பந்தனின் நடவடிக்கைக்கு விக்கினேஸ்வரன் ஒரு பலமான தடையாக இருப்பார். இந்த பின்னணியில்தான் எவ்வாறாவது விக்கினேஸ்வரனை அரசியல் அரங்கிலிருந்து தற்காலிகமாகவேனும் அகற்ற வேண்டும் என்பதில் ஒரு குழுவினர் தீவிரமாக செயற்பட்டுவருகின்றனர்.
 
விக்கினேஸ்வரன் அன்மையில் தனக்கு முன்னாலுள்ள நான்கு தெரிவுகள் தொடர்பில் பேசியிருந்தார். ஆனால் அவ்வாறான தெரிவுகள் தொடர்பில் அவர் பேசியது பொருத்தமற்றது என்னும் அபிப்பிராயமும் உண்டு. இங்கு கவனிக்க வேண்டிய விடயம், விக்கினேஸ்வரனது நான்காவது தெரிவை சுமந்திரன் வரவேற்றிருந்தார். விக்கியின் நான்கு தெரிவுகளில் அமைதியாக வீட்டுக்குச் செல்வதும் கூட ஒரு தெரிவுதான் ஆனால் உண்மையில் விக்கியின் வீட்டுக்குச் செல்லுதல் என்னும் தெரிவைத்தானே சுமந்திரன் ஆதரித்திருக்க வேண்டும் ஆனால் சுமந்திரனோ அப்படிச் செய்யவில்லை – ஏன்? அதற்கு மாறாக விக்கியின் நான்காவது தெரிவான ஒரு மக்கள் இயக்கத்திற்கு தலைமை தாங்கும் முடிவை சுமந்திரன் வரவேற்கிறார். விக்கினேஸ்வரன் அவ்வாறு செய்தால் அதனுடன் தானும் இணைந்துகொள்வதாக கூறுகின்றார். ஏன்? ஏனெனில் சம்பந்தன் தரப்பின் உண்மையான விருப்பம் விக்கினேஸ்வரன் வடக்கின் முதலமைச்சராக இருக்கக் கூடாது என்பது மட்டும்தான். ஏனெனில் விக்கினேஸ்வரன் வடக்கு முதலமைச்சராக இருக்கும் போதுதான் அவரது கருத்துக்கள் தனித்து தெரிகின்றன. அனைத்துலக மட்டத்தில் கவனத்தை பெறுகிறது. 
 
அதற்கு மாறாக, அவர் வேறு எந்தவொரு கட்சியினதோ அல்லது பேரவை போன்ற ஒரு அமைப்பின் பெயரிலோ இயங்குவது சுமந்திரனை பொறுத்தவரையில் ஒரு பிரச்சினையல்ல, எனவே விக்கினேஸ்வரன் எங்கு வந்து அமர்ந்தால் தங்களுக்கு பிரச்சினை என்று கருதுகின்றார்களோ, அதுதான் விக்கினேஸ்வரனின் பலம். அதுவே இன்றைய சூழலில், புதிய கூட்டு ஒன்று தொடர்பில் சிந்திப்பவர்களின் பலமுமாகும். இந்த வகையில் நோக்கினால் விக்கினேஸ்வரனை ஓரங்கட்டுதல் என்பது வெறுமனே விக்கினேஸ்வரன் என்னும் தனிநபர் ஒருவரின் பிரச்சினையல்ல மாறாக தமிழ் மக்களின் பிரச்சினை. இந்தப் பிரச்சினையை ஒரு பெரும் அரசியல் சக்தியாக எவ்வாறு உருத்திரட்டிக் கொள்ள முடியும் என்று சிந்திப்பதும் அதற்கு செயல்வடிவம் கொடுப்பதும்தான், புதிய தலைமை ஒன்றை தேடுவோர் செய்ய வேண்டிய பணி.
 
புதிய தலைமை ஒன்றை தேடுவோர் முதலில் தங்களுக்குள் ஒரு ஜக்கிய வேலைத்திட்டத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அந்த Nலைத்திட்டம் இரண்டு பிரதான இலக்குகளை கொண்டிருக்க வேண்டும். ஒன்று, சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு கூறிவரும் அரசியல் தீர்வு பொய்யானது, அது சொந்த மக்களை ஏமாற்றும் போலிப் பிரச்சார நோக்கம் கொண்டது என்பதை அம்பலப்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த வேலைத்திட்டமொன்று தேவை. இரண்டு, அந்த போலி பிரச்சாரங்களை முறியடிக்கும் ஒருவராக விக்கினேஸ்வரன் இருப்பதால்தான் அவர் இந்தளவு தொந்தரவுகளை எதிர்கொள்ள நேரிடுகிறது, அவரை திட்டமிட்டு தமிழ் தேசிய அரசியல் அரங்கிலிருந்து அகற்ற முனைகின்றனர்.
 
வடக்கின் அனைத்து மாவட்டங்கள் தோறும் எழுச்சியுரைகள் இடம்பெற வேண்டும். அதன் மூலம் முதலில் ஒரு சமூகமட்ட கருத்துருவாக்கம் நிகழ வேண்டும். அதன் பின்னர் வடக்கு தழுவிய வகையில் மக்கள் விக்கினேஸ்வரனுக்கு ஆதரவாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும். இதன் மூலம் இந்த விவகாரத்தை ஒரு பெரும் அரசியல் விவகாரமாக உருமாற்றலாம். இதில் கட்சி பேதங்கள், முந்தநாள் நடந்த சங்கதிகள் தொடர்பான விவாதங்கள் அனைத்தும் பயனற்றவை இன்றைக்கு தேவையான அரசியல் கோசம் – இன்றைய சூழலில் தமிழ் அரசியலில் மேலாதிக்கம் செய்துவரும் பிழையான சக்திகளை அகற்றுவதாக மட்டுமே இருக்க வேண்டும். இதில் தன்கு ஆர்வமில்லை என்று விக்கினேஸ்வரனே ஒதுங்கிக்கொள்வாராக இருந்தால், இது பற்றி விவாதிக்க ஒன்றுமிருக்காது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்