சம்பந்தனின் ராஜதந்திரம்!?
22 ஆடி 2018 ஞாயிறு 14:39 | பார்வைகள் : 9450
சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவின் புதிய வெளிவிவகாரச் செயலர் வியஜ் கோகலே இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருந்தார். இதன் போது வழமைபோல் கூட்டமைப்பையும் சந்தித்து பேசியிருந்தார்.
பொதுவாக இந்தியாவின் ராஜதந்திரிகள் இலங்கைக்கு விஜயம் செய்கின்ற போது, கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்திப்பது வழக்கம். எனவே இதற்கு அதிக அரசியல் முக்கியத்துவம் இருப்பதாக கூற முடியாது. ஆனால் தமிழர் தரப்பின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாக இவ்வாறான சந்திப்புக்களை கூட்டமைப்பினர் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் பொதுவாக இந்திய தரப்பினரிடம் ஒரு அபிப்பிராயம் உண்டு என்று அறிந்திருக்கிறேன்.
2011 வரையில் கூட்டமைப்பின் பிரதிநிதிகளைப் போன்றே, அப்போது கூட்டமைப்புக்கு வெளியில் இருந்த கட்சிகள் சிலவற்றையும், இந்திய ராஜதந்திரிகள் சந்தித்து வந்தனர். அப்போது கூட்டமைப்புக்கு மாற்றான தரப்பாக இயங்கிவந்த, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்னும் அமைப்பின் பிரதிநிதிகளையும் அவர்கள் சந்திப்பதுண்டு. தற்போது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றான சித்தார்த்தன் தலைமையிலான புளொட் அமைப்பும் மேற்படி மாற்று அணியில் அங்கம் வகித்தது.
ஆனந்த சங்கரியும் அதில் அங்கம் வகித்திருந்தார். இவர்கள் சந்திக்கச் செல்கின்ற போது, சம்பந்தனுடனான சந்திப்பு தொடர்பில் நகைச்சுவையாக பேசுவார்களாம். உங்களுடைய தலைவர்கள் தேர்தல் மேடையில் பேசுவது போலல்லவா எங்களுடனும் பேசுகின்றனர். சொல்ல வேண்டிய விடயங்களை விட்டுவிட்டு, வரலாறு தொடர்பில் வகுப்பெடுக்க முற்படுகின்றனர் – என்று கூறி சிரிப்பார்களாம்.
பொதுவாக ராஜதந்திரிகளுடனான சந்திப்பு சொற்ப நேரமே இடம்பெறும். அந்த நேரத்திற்குள்தான் இரண்டு தரப்பினர்களும் பேச வேண்டும், எனவே சொல்ல வேண்டிய விடயத்தை மிகவும் சுருக்கமாகவும் ஆழமாகவும் சொல்ல வேண்டியது அவசியம். ஆனால் சம்பந்தனோ, அரைத்த மாவை அரைப்பது போன்று ஒரே விடயத்தையே சொல்வதுண்டு. இதன் காரணமாகத்தான் ராஜதந்திரி ஒருவர் அவ்வாறு நகைச்சுவையாக கூறியிருக்கிறார்.
எவ்வாறு தமிழ் மக்களுக்கு ஒரே விடயத்தையே மீண்டும் மீண்டும் சம்பந்தன் கூறி வருகின்றாரோ, அதே போன்றுதான் ராஜதந்திரிகளுக்கும் கதை சொல்ல முற்படுகின்றார் போலும். 1984ஆம் ஆண்டு இந்தியாவின் மூத்த ராஜந்திரி ஒருவர், தமிழ் மிதவாத தலைவர்கள் தொடர்பில் (தமிழர் விடுதலைக் கூட்டணி) இவ்வாறு கூறியிருக்கிறார். உங்களுடைய தலைவர்கள் என்பவர்கள் கையாலாகாத அசடுகள் (inapt and stupid).
இவ்வாறு கூறிய அந்த ராஜதந்திரி, அதற்காக கூறிய காரணம்தான் முக்கியமானது. உங்களுடைய தலைவர்கள், எங்களிடம் வந்து ஏதாவது பார்த்து செய்யுங்கள் (Do someth) என்கின்றனர். எங்களிடமிருந்து நீங்கள் எதிர்பார்ப்பது என்ன – என்று நாங்கள் கேட்டால், திரும்பவும், ஏதாவது பார்த்து செய்யுங்களேன் என்கின்றனர். தலைவர்கள் என்பவர்கள் இப்படி இருக்கக் கூடாது.
இந்த சம்பவம் இடம்பெற்று 25 வருடங்கள் கடந்துவிட்டன. இப்போதும் மிதவாதிகளின் சொற்கள் மாறியிருக்கிறதே தவிர விடயம் என்னவோ பழைய குறுடி கதவைத் திறடி என்பதாகவே நகர்கிறது. அன்று ‘ஏதாவது பாத்துச் செய்யுங்கள்’ என்னும் நிலையிலிருந்த தமிழ் மிதவாதிகளின் ராஜதந்திரம் தற்போது, ‘சர்வதேச சமூகத்திற்கு ஒரு பொறுப்புண்டு’. ‘சர்வதேச சமூகம் இந்த விடயத்தில் அமைதியாக இருக்க முடியாது’ என்றவாறு மாற்றமடைந்திருக்கிறது. இதனை பிறிதொரு வகையில் சொல்வதானால் ‘ஏதாவது பார்த்துச் செய்யுங்கள்’ என்னும் முன்னைய மிதவாத அனுகுமுறைதான், தற்போது (சர்வதேச சமூகம்) ‘ஏதாவது நீங்கள் செய்யத்தானே வேண்டும்’ என்றவாறு உருமாறியிருக்கிறது.
சம்பந்தன் மீது விசுவாசம் கொண்டவர்கள் இப்படிச் சொல்வதை கேட்டிருக்கிறேன். சம்பந்தன் ஜயா ஒரு பழுத்த அரசியல் மண்டை. ஆள் ஒரு சாணக்கியன். உண்மையில் சாணக்கியம் என்பது ஒருவர் எந்தளவு ஆங்கிலத்தில் பேசுகின்றார் என்பதல்ல மாறாக ஒரு தலைவர் என்பவர், தான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் கூட்டத்தின் தேவைகளை நிறைவு செய்வதற்கு, குறிப்பிட்;ட சூழலை எவ்வாறு கையாண்டு வெற்றிபெறுகின்றார் என்பதில்தான் ஒரு தலைவரது சாணக்கியம் தங்கியிருக்கிறது. இந்த வகையில் நோக்கினால் சம்பந்தன் ஒரு சாணக்கியர்தானா என்பதை நீங்களே இலகுவாக புரிந்து கொள்ள முடியும்.
நான் மேலே குறிப்பட்ட இந்திய வெளிவிவகாரச் செயலாளருடனான சந்திப்பின் போது சம்பந்தன் தெரிவித்திருந்த கருத்துக்கள் பத்திரிகைகளில் வெளியாகியிருந்தது. அதாவது, இந்தியா கிடைத்திருக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று சம்பந்தன், இந்திய வெளிவிவகாரச் செயலருக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறாராம். ராஜதந்திரிகள் பொதுவாக எவ்வளவு முட்டாள்தனமான கருத்தென்றாலும் அது தொடர்பில் நேரடியாக எதிர்வினையாற்ற மாட்டார்கள். சம்பந்தனின் நகைச்சுவை தொடர்பில் இந்திய ராஜதந்திரிகள் தங்களுக்குள் நிச்சயம் புன்னகைத்திருக்கக் கூடும்.
சம்பந்தன் தன்னைப் பற்றி எவ்வாறு கருதுகின்றார் என்பது தொடர்பில் இந்தப் பத்தியாளரிடம் எந்தவொரு கருத்தும் இல்லை. ஒரு வேளை வயது முதிர்வின் காரணமாக தான் உளறுகிறேன் என்பதை அறியாமலேயே அவர் உளறியிருக்கவும் கூடும்.
இந்தியா ஒரு பிராந்திய சக்தி. அதன் சனத்தொகை 134 கோடியை தாண்டுகிறது. உலக அதிகாரம் தொடர்பான விவாதங்களில் அமெரிக்கா, சீனா, ரஸ்யா என்பவற்றின் வரிசையில் வைத்து நோக்கப்படும் ஒரு நாடு. இந்து சமூத்திர பிராந்தியத்தில் எழுச்சியடைந்துவரும் சீனாவை ஒரு எல்லைக்குள் முடக்க முனையும் அமெரிக்க மூலோபாயத்தின் இன்றியமையாப் பங்காளி (indispensable partner). அப்படிப்பட்ட இந்தியாவிற்கு, வாய்ப்;புக்களை சரியாக பயன்படுத்திக் கொள்ளுவது எப்படியென்று, சம்பந்தன் ஆலோசனை வழங்கியிருக்கிறாராம். இதனை வாசிக்கும் போதே ஒரு நகைச்சுவை உணர்வு அரும்பவில்லையா? தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். பேச்சு பல்லக்கு தம்பி பொடிநடை. சம்பந்தனின் இந்தக் கருத்தும் அப்படியான ஒன்றுதான்.
ஆட்சி மாற்றத்தை பயன்படுத்தி தமிழ் மக்களுக்குத் தேவையான பல விடயங்களை சாதகமாக கையாளத் தெரியாத சம்பந்தன், இந்தியாவிற்கான வாய்ப்புக்கள் தொடர்பில், ஆலோசனை வழங்கியிருக்கிறார். 2015 ஜனவரியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. எந்தவொரு நிபந்தனையும் இன்றி, சம்பந்தன் பொது எதிரணி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்கியிருந்தார். அது நடப்பதற்கு முன்னர், அன்றைய சூழலை கையாளுவது தொடர்பில் சிலர் சம்பந்தனுடன் உரையாடியிருந்தனர். இந்த பத்தியாளரும் அவர்களில் ஒருவர்.
நடக்கவுள்ள ஆட்சி மாற்றம், உண்மையில் இலங்கை மக்களுக்கான நன்மைகளை அடிப்படையாகக் கொண்டு நிகழவில்லை மாறாக பல்பொருந்திய நாடுகளின் நலன்களை இலக்காகக் கொண்டே முன்னெடுக்கப்படுகிறது. எனவே ஆட்சி மாற்றத்திற்கு பின்னரான புதிய சூழலில், அதிகம் தலையிடுவதற்கான வாய்ப்புக்கள் தமிழர் தரப்பிற்கு கிடைக்காது, எனவே அதற்கான அடித்தளத்தை ஆட்சி மாற்றத்திற்கு முன்பதாகவே சரியாக போட்டுக் கொள்ள வேண்டும். ஆட்சி மாற்றத்தை உந்தித்தள்ளும் பலம்பொருந்திய நாடு ஒன்றின் மேற்பார்வையில் ஒரு எழுத்து மூல உடன்பாட்டுக்குச் செல்வது மிகவும் முக்கியமானது என்னும் கருத்தை அவ்வாறனவர்கள், சம்பந்தனுக்கு எடுத்துரைத்தனர். ஆனால் அனைத்துமே விழலுக்கு இறைத்த நீரானது.
இறுதியில் சம்பந்தன் தனது மகளுக்கு திருமணம் செய்யும் முடிவை எடுப்பது போன்று சர்வ சாதாணரமாக ஒரு தேசிய இனத்தின் எதிர்காலத்தை தனது தனிப்பட்ட விருப்பின் பேரில் எடுத்திருந்தார். ஆனால் நாம் எதிர்பார்த்தது போன்றே, ஆற்றைக் கடக்கும் வரையில் தமிழ் மக்களின் கோரிக்கைகளில் ஒரு நியாயம் உண்டு என்பது போல் காண்பித்துக் கொண்ட சிங்கள ஆளும் வர்க்கம் (ஆட்சி மாற்றம்) ஆற்றை கடந்ததும், நீ யாரே நான் யாரே என்பது போல் நடந்து கொண்டது. ஆனால் இன்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மூன்று வருடங்கள் கடந்து விட்ட பின்னரும் கூட, தமிழ் மக்களின் ஆதரவுடன் மாற்றப்பட்ட ஆட்சி, தமிழ் மக்களுக்கு எந்தவொரு நன்மையும் வழங்கியிருக்கவில்லை. இதுதானா சம்பந்தனின் ராஜதந்திரம்? தனக்கு கிடைத்த வாய்ப்புக்களை மக்களின் நலனை முன்னிறுத்தி சரியாக கையாளத் தெரியாத சம்பந்தன், பிராந்திய சக்தியான இந்தியாவிற்கு ஆலோசனை வழங்கியிருப்பதை என்னவென்பது? இதனைத்தான் இந்தப் பத்தி சம்பந்தனின் நகைச்சுவை ராஜதந்திரம் என்று வரையறுக்கிறது.
நன்றி - சமகளம்