Paristamil Navigation Paristamil advert login

விக்கினேஸ்வரனின் முடிவும் சம்மந்தரின் எதிர்காலமும்….?

விக்கினேஸ்வரனின் முடிவும் சம்மந்தரின் எதிர்காலமும்….?

15 ஆடி 2018 ஞாயிறு 11:41 | பார்வைகள் : 9075


இலங்கைத் தீவு பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே தமிழ் தேசிய இனம் தமது உரிமைக்காகவும், நீதிக்காவும் போராடி வருகிறது. 
 
அந்தப் போராட்டம் ஒரு ஜனநாயகப் போராட்டமாக உருவெடுத்த நிலையில் அந்த மக்களின் ஜனநாயக கோரிக்கைகளை தென்னிலங்கை கண்டு கொள்ளாததன் விளைவாக அது ஆயுதம் தாங்கிய ஒரு தற்காப்பு யுத்தமாக மாற்றமடைந்தது. அந்த ஆயுதப் போராட்டம் 2009 ஆம் ஆண்டு மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ் மக்களின் உரிமை அரசியல், சலுகை அரசியலாக திரிபடைந்து உள்ளது என்று அரசியல் அவதானிகள் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். ஒரு தீர்வுக்காக, இலட்சியத்திற்காக, கொள்கைக்காக, நீதிக்காக தமிழ் தேசிய இனம் சுமார் ஒரு தசாப்த காலமாக போராடி வருகிறது.
 
இந்தப் போராட்டங்கள் அகிம்சை ரீதியிலும், ஆயுத ரீதியிலும் இடம்பெற்ற போது தமிழ் மக்கள் சலுகைகளுக்காக சோரம் போகாது உரிமைகளைப் பெற்றுக் கொள்வதில் உறுதியுடன் இருந்தனர். அன்றைய மிதவாத தலைமை தமிழ் ஈழத்தை தேர்தலுக்கான கோசமாக வைத்த போதிலும் மக்கள் தமது நிலைப்பாட்டில் தேர்தலுக்கு அப்பால் சென்றும் ஏற்றுக் கொண்டனர். இதன் விளைவாகவே ஆயுதப் போராட்ட அமைப்புக்கள் தோன்றின. இளைஞர்களின் அரசியல் அறிவைப் பற்றியோ அல்லது அவர்களது தலைமைத்துவத்தின் திறமை பற்றியோ சிந்திக்காமல் தங்களுடைய இலட்சியத்திற்காக குரல் கொடுக்கும் அமைப்புக்களின் பின்னால் சென்றிருந்தனர். 
 
ஆனால் 2009 இற்கு பின்னரான கடந்த 9 ஆண்டுகளின் தமிழ் அரசியல் தன்மையை அவதானிக்கின்ற போது அந்த பேரம் பேசும் சக்தி குறைவடைந்து, கிடைப்பதைப் பெறுவோம் என்கின்ற நிலையில் கூட இல்லாமல் அரசாங்கத்துடன் ஒட்டியிருந்து தமது பதவிகளை தக்க வைத்துக் கொள்ளும் குறுகிய நிலைக்கு தலைமைகள் தரம் தாழ்ந்து விட்டனர் என்றே தெரிகிறது. அதனை வெளிப்படுத்தும் விதமாகவே கூட்டமைப்பு தலைமையினதும் தமிழரசுக் கட்சியினதும் செயற்பாடுகளும் அமைந்திருக்கின்றன.
 
அவர்களது இந்தச் செயல், ஆட்சி மாற்றத்தின் பின்னரான அரசாங்கத்தின் சர்வதேச நகர்வுகள் தமிழ் மக்களுக்கு சர்வதேச ரீதியில் இருந்த உதவிக் கரத்தை கூட வலுவிழக்கச் செய்திருக்கிறது. இந்த நிலையிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கு எதிராக மக்களது அபிலாசைகளையும், தமிழ் தேசியத் இனத்தின் கோரிக்கைகளையும் தொடர்ந்தும் வலியுறுத்தி அதற்காக உழைக்கக் கூடிய மாற்றுத் தலைமை பற்றிய சிந்தனைகள் வலுவாக எழுந்திருக்கிறது. 
 
இந்த நிலையை அவதானிக்கின்ற போது, 1976 ஆம் நிறைவேற்றப்பட்ட வட்டுக் கோட்டை தீர்மானத்தின் பின்னர் அன்றைய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னனி அரசாங்கத்துடன் ஒரு இரகசிய உடன்படிக்கையைச் செய்து கொண்டு மாவட்ட அபிவிருத்திச் சபை தேர்தலில் போட்டியிட முனைந்ததையும் அதற்கு அன்றைய இளைஞர் சமுதாயம் எதிர்ப்பு தெரிவித்தமையையும், அதன் பின்னர் ஆயுதப் போராட்ட அமைப்புக்கள் உருவாகுவதற்கு வழிவகுத்ததையும் நினைவுபடுத்துகிறது. அன்றைய சூழலில் மிதவாத தலைமைகள் செய்த தவறை தட்டிக் கேட்பதற்கு ஒரு இளைஞர் சமுதாயம் தயாராக இருந்தது. ஆனால் இன்று இருக்கின்ற தமிழ் தலைமையை சவால்களுக்கு உட்படுத்தும் காத்திரமான மாற்றுத் தலைமைக்கான தேவை இருக்கின்ற போதிலும் அந்த இடம் இன்னதும் வெற்றிடமாகவே இருக்கிறது.
 
2015 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற போது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு சவாலான ஒரு மாற்றுத் அணியாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியையும் (தமிழ் தேசிய மக்கள் முன்னனி) அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களையும் சிலர் கருதினர். குறிப்பாக புலம்பெயர் வாழ் தமிழ் அமைப்புக்கள் அவ்வாறு கருதி செயற்பட்டும் இருந்தன. ஆனால் அவ்வாறான ஒரு மாற்று அணியாக வருவதற்கு கஜேந்திரகுமார் அவர்களுக்கு சந்தர்ப்பங்கள் கிட்டியிருந்தும் அவர் அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. 
 
தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேல் அதிருப்தி கொண்ட மக்களையும், புலம் பெயர் அமைக்களையும் ஒன்று திரட்டி தனது கட்சியை மக்கள் மட்டத்தில் கொண்டு செல்வதற்கு கஜேந்திரகுமாரும் அவரது கட்சியும் தவறியிருந்தது. அதனால் அவரால் ஒரு ஆசனத்தைக் கூட பெற முடியாத நிலமை ஏற்பட்டிருந்தது. 2010 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலைக் காட்டிலும் 2015 இல் அவர் பெற்ற வாக்குகள் அதிகரித்திருந்தாலும் அவரது கட்சி செயற்பாடுகளின் பலவீனமே அவர்களின் தோல்விக்கு காரணமாக அமைந்திருந்தது. வெறும் அறிக்கைகள் உடன் நில்லாது கட்சி அரசியலை மக்கள் மயப்படுத்த வேண்டிய அவசியத்தை அது உணர்த்தியிருக்கிறது. 
 
மறுபுறம் சர்வதேச விசாரணை, தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு ஆகியவற்றை தேர்தல் அறிக்கையாக முன்வைத்து இதற்கு தமிழ் மக்கள் ஒற்றுமையாக உள்ள தலைமைக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்கவும், மக்களின் ஆணை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்தால் மட்டுமே இதனை செய்ய முடியும் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் மேடைகளில் வலியுறுத்தி வந்தது. இதனை மக்களும் ஏற்றுக் கொண்டு ஏனையவர்களை ஒதுக்கித் தள்ளி கூட்டமைப்புக்கு அமோக ஆதரவளித்திருந்தனர். இதன் பயனாக கூட்டமைப்பிற்கு 16 ஆசனங்கள் கிடைத்திருக்கிறது. ஆனால் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் இந்த நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கூட்டமைப்புக்கு சரிவைக் கொடுத்துள்ள அதேவேளை, தமிழ் தேசிய மக்கள் முன்னனி, ஈபிடிபி என்பவற்றுக்கு ஏறுமுகத்தை காட்டியிருக்கிறது. ஈபிஆர்எல்எப் கட்சியும் கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய போதும் குறிப்பிட்டளவு ஆசனங்களை தம்வசப்படுத்தி இருந்ததையும் சுட்டிக்காட்டத்தக்கது.
 
பாராளுமன்றத்தில் உள்ள 16 ஆசனங்களையும், மாகாண சபை உறுப்பினர்களையும், வடக்கு – கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களையும் வைத்துக் கொண்டு ஒரு காத்திரமான பேரம் பேசும் சக்தியாக திகழ வேண்டிய கூட்டமைப்பு சலுகைகளை தக்க வைத்துக் கொள்வதற்காக அனைத்து அரசியல் உரிமைகளையும் விட்டுக் கொடுக்கும் நிலைக்கு சென்றுள்ளது.
 
இத்தகைய பின்னனியில் தான் வடமாகாண முதலமைச்சர் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை கையில் எடுத்துக் கொண்டுள்ளார். அவர் கையில் எடுத்துக் கொண்டார் என்று சொல்வதை விட அவர் ஒரு நீதவானாக இருந்ததன் விளைவாக அந்த தேர்தல் விஞ்ஞாபனத்திற்குகாக உழைக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் என்பதே உண்மை. இவர் 2013 ஆம் ஆண்டு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர் இருந்த நிலைப்பாட்டிற்கும் 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் இருக்கின்ற நிலைப்பாட்டுக்கும் இடையில் நிறைய வேறுபாடுகளை அவதானிக்க முடிகிறது. முன்னாள் நீதியரசர் என்ற பெயரோடு அரசியலுக்கு வந்த இவர் ஆரம்பத்தில் அரசாங்கத்திற்கு நல்லெண்ண சமிக்ஞைகளை காட்டியிருந்தார். 
 
சம்மந்தன் – சுமந்திரன் தரப்போடு ஒட்டிப்போகக் கூடிய ஒருவராக தென்பட்டிருந்தார். ஆனால், 2015 இற்கு பிறகு நிலமை மாறியது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையின் செயற்பாடுகளுக்கும் இவரது செயற்பாடுகளுக்கும் இடையில் அதிக வேறுபாட்டையே காணமுடிகிறது. வடமாகாண சபையில் இனப்படுகொலை தீர்மானத்தை நிறைவேற்றி இவரும் தீவிர தமிழ் தேசிய அரசியல்வாதியாக மாற்றம் பெற்று இன்று வரை அவ்வாறனதொருவராகவே மக்களாளும் பார்க்கப்பட்டு வருகிறார். சம்மந்தன் தரப்பை சரி எனக் கூறுபவர்கள் இவரது செயற்பாட்டை பிழை என வாதிடுகின்றனர். 
 
இது அவரவர் சார்ந்திருக்கும் கருத்தியல் நிலைப்பாட்டின் அடிப்படையில் சரியானதே. ஆனாலும் தமிழ் மக்களைப் பொறுத்தவரை தற்போது சம்மந்தன் மீதான ஈர்ப்பு என்பது குறைந்து வருவதையும், முதலமைச்சர் மீதான ஈர்ப்பு அதிகரித்து வருவதையும் அவதானிக்க முடிகிறது. தமிழ் மக்களின் அபிலாசைகளையும், கோரிக்கைகளையும் அவர் தன்னை சந்திக்க வருகின்ற இராஜதந்திரிகளுக்கும், பிரதிநிதிகளுக்கும் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றார்.
 
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மீதான அதிருப்திகள் அதிகரித்த நிலையிலேயே தமிழ் மக்கள் பேரவை உருவாகியிருந்தது. அதன் இணைத்தலைவராக வடமாகாண முதலமைச்சர் இணைந்து கொண்டமை ஒரு மாற்றுத் தலைமை பற்றிய சிந்தனையை வலுப்படுத்தியது. ஆனால் அரசியலுக்கு அப்பால் ஒரு மக்கள் இயக்கமாக தன்னை காண்பித்த தமிழ் மக்கள் பேரவை தமிழ் மக்களின் அபிலாசைகளை முன்னுறுத்திய ஒரு அழுத்தக் குழுவாக செயற்பட முனைந்தது. 
 
அரசியல் யாப்பு சீர்திருத்த சட்ட வரைபு ஒன்றை தயாரித்து கையளித்ததுடன், வடக்கிலும், கிழக்கிலும் ஆக இரண்டு எழுகத் தமிழ் பேரணியுடனும் பேரவை அமைதியாகிவிட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமையின் எதிர்ப்பையும் மீறி தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாடுகளுக்கு ஆதரவு கொடுத்த மக்கள் இன்று மீண்டும் கையறுந்த நிலையில் மேய்ப்பார் அற்ற மந்தைக் கூட்டங்கள் போல் இருக்கின்றார்கள். கூட்டமைப்பு தலைமை மீதான வெறுப்பையுடையவர்கள் பேரவைக்கு அதிக ஆதவை வழங்கியிருந்தனர். ஒரு மக்கள் அமைப்பு எனக் காண்பித்த பேரவை தம்மை நம்பிய மக்களுக்கு சரியான ஒரு அரசியல் தலைமையை காட்ட தவறியிருக்கிறது.
 
பாதிக்கப்பட்ட மக்கள் தமது பிரச்சனைகளுக்கு தீர்வைப் பெறுவதற்கு தாமாகவே வீதியில் இறங்கி 450 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். அத்தகைய மக்கள் போராட்டங்களை ஒன்றுபடுத்தி அந்த மக்கள் போராட்டங்களை வலுப்படுத்தி அந்த மக்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்த கூட்டமைப்பு மட்டுமல்ல பேரவையும் தவறியிருக்கின்றது. மக்கள் இயக்கமாக தன்னை காட்டும் பேரவை அந்த மக்கள் போராட்டங்களுக்கு கூட தார்மீக ரீதியில் தலைமை கொடுக்க தவறியிருக்கிறது. இந்த நிலையிலேயே தமிழ் தேசிய அரசியல் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதனாலேயே புதிய தமிழ் தேசியத் தலைமை ஒன்றுக்கான தேவை உணரப்பட்டிருக்கிறது.
 
பேரவையின் இணைத்தலைவரான முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கூட மக்களின் அபிமானத்தை பெற்றிருக்கின்ற போதும் தன்னை நம்பிய மக்களுக்கான தலைமையை வழங்குவது தொடர்பில் நிதானமாக முடிவெடுக்க முடியாது தடுமாறுவதாகவே தெரிகிறது. பேரவையின் ஆதரவுடன் முதலமைச்சர் புதிய கட்சி அல்லது கூட்டு ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சிகள் இடம்பெறும் நிலையில், அத்தகைய கூட்டு ஏற்பட்டால் கூட்டமைப்புக்கு பின்னடைவு ஏற்படும் என்பதை உணர்ந்து முதலமைச்சரை மீள கூட்டமைப்பின் வேட்பாளராக களமிறக்கவும் முயற்சிகள் இடம்பெறுகிறது.
 
தமிழ் மக்களுக்கு தேவையானது முதலமைச்சர் பதவி அல்ல. தமது அபிலாசைகளையும் உரிமைக் கோரிக்கைகளையும் சோரம் போகாது கொண்டு செல்லக் கூடியதும், அதனை அடைவதற்கு மக்களை வழிநடத்தக் கூடியதுமான ஓரு தலைமையே. அதனை முதலமைச்சர் உணரவேண்டும். பதவி என்பதற்கு அப்பால் கொள்கை ரீதியாக மக்களது அபிலாசைகளை முன்னெடுக்க கூடிய ஓரு கட்டமைப்பை உருவாக்க அவர் முன்வரவேண்டும். அதுவே மக்களின் எதிர்பார்ப்பும்.
 
இதனை அரசியல் அவதானிகளும் பத்தி எழுத்தாளர்களும் தொடர்ச்சியாக முன்வைத்தும் வருகின்றனர். ஆனால் அத்தகையதொரு தலைமையை வழங்கக் கூடிய நிலையிலோ அல்லது மக்களால் எற்றுக் கொள்ளக் கூடிய நிலையிலோ எவரும் தயாராகவில்லை. இந்த நிலை நீடிக்கும் வரையில் விமர்சனங்களுக்கு மத்தியிலும் தமிழ் மக்களின் தலைமையாக சம்மந்தனே தொடர்ந்தும் நீடிக்கப் போகிறார்.
 
நன்றி - சமகளம்

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்