தமிழ் மக்களுக்குத் தேவையானது எது?
1 ஆடி 2018 ஞாயிறு 16:23 | பார்வைகள் : 9722
கடந்த 24ஆம் திகதி யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரனால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நூல் வெளியீடும், அங்கு இடம்பெற்ற உரைகளும் தமிழ் தேசிய அரசியல் அரங்கில் அதிக கவனிப்பை பெற்றிருந்தது. வழக்கத்துக்கு மாறாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து தலைவர்களும் இந்த நூல் வெளியீட்டில் பங்குகொண்டிருந்தனர்.
இதில் கூட்டமைப்பின் தலைவராக அறியப்படும் இரா.சம்பந்தன் சிறப்பு விருந்தினராக பங்குபற்றியிருந்தார். சம்பந்தன் நிகழ்வில் பங்கு பற்றியது அத்துடன், விக்கினேஸ்வரனை எவ்வாறாயினும் அரசியலிலிருந்து ஓரங்கட்ட வேண்டுமென்னும் நோக்கில் செயற்பட்டு வருபவராக கருதப்படும் எம்.ஏ.சுமந்திரன், அடுத்த வடக்கு முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று கருதப்படும் மாவை சேனாதிராஜா ஆகியோரும் நிகழ்வில் பங்குபற்றியிருந்தமை, நிகழ்வை ஆச்சரியக் கண்கொண்டு பார்க்க வைத்தது.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட கூட்டமைப்பின் தலைவர்கள் அனைவரும் ஒரு நிகழ்வில் பங்குபற்றுவதைக் கூட ஆச்சரியக் கண்கொண்டு பார்க்குமளவிற்குத்தான் தமிழர் அரசியல் இருக்கிறது. விக்கினேஸ்வரன் தனதுரையில் குறிப்பிட்டது போல, தமிழர் அரசியல் மிகவும் பிரிதாபகரமான நிலையில் இருக்கின்றது என்பதில் சந்தேகமில்லை.
மேற்படி நூல் வெளியீட்டின் போது சம்பந்தன் ஆற்றிய உரையும் அதற்கு விக்கினேஸ்வரன் வழங்கிய பதிலும் அரசியல் அரங்கில் பேசு பொருளாகியிருக்கிறது. விக்கினேஸ்வரன் தனுதுரையில் குறிப்பிட்ட ஒரு சில விடயங்களை வைத்துக் கொண்டு அவர் இறங்கி வந்துவிட்டார், சம்பந்தன் தனது சாணக்கியத்தை மீண்டும் நிருபித்திருக்கிறார் என்றவாறான கருத்துக்கள் சிலரிடம் இருப்பதை காணமுடிகிறது.
கொடுத்த கையை கடிக்கும் பழக்கம் எனக்கு கிடையாது. நான் எனது கட்சிக்கு எப்போதும் விசுவாசகமாக இருந்து வந்திருக்கிறேன். அதே போன்று இப்போதும் அப்படித்தான் இருக்கிறேன் – என்று விக்கி, தெரிவித்ததை தமிழரசு கட்சியினர் தங்களுக்கு சாதகமாக பிரச்சாரப்படுத்துவதையும் காண முடிகிறது. அதே வேளை விக்கினேஸ்வரன் எப்போதுமே ஒரு உறுதியான முடிவு எடுக்க முடியாதவர். அவரால் ஒரு புதிய அணிக்கு தலைமை தாங்க முடியாது என்றெல்லாம் சிலர் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
விக்கினேஸ்வரன் கொடுத்த கையை கடிக்கும் பழக்கம் எனக்கும் கிடையாது என்று சொல்லியதிலும், நான் எப்போதும் கட்சிக்கு விசுவாசமாக இருந்து வந்திருக்கிறேன் என்று சொல்லியதிலும் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? இதனை அவர் நீண்டகாலமாகவே கூறி வருகிறார். அவர் இதற்கு மாறாக எதனையும் கூறியிருந்தால்தான் நாம் ஆச்சிரியப்பட வேண்டும். ஏனெனில் விக்கினேஸ்வரனை பலர் சந்தித்து வருகின்றனர். கட்சிகள் தொடக்கம் சிவில் சமூகப் பிரதிநிதிகள் வரையில் அதில் அடக்கம். அவ்வாறு சந்திப்பவர்கள் அனைவருமே, ஜயா நீங்கள் தலைமை தாங்க வேண்டும் – நாங்கள் உங்களுடன் நிற்போம் என்றுதான் கூறிச் செல்கின்றனர். ஆனால் விக்கினேஸ்வரனோ இன்றுவரை அதற்கு எங்குமே சாதகமாக பதிலளிக்கவில்லை. அவ்வாறிருக்கின்ற போது மேற்படி விக்கியின் கூற்றுக்கள் தொடர்பில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?
ஆனால் சம்பந்தனின் வழக்கத்து மாறான நடவடிக்கைகளில் ஏராளமான ஆச்சரியக் குறிகள் உண்டு. சம்பந்தன் இதனை ஒரு முக்கியமான நிகழ்வாக கருதி வந்ததாகத் தெரியவில்லை மாறாக சில கருத்துக்களை ஆணித்தரமாக முன்வைக்க வேண்டுமென்னும் நோக்கிலேயே சென்றிருக்கிறார்.
வடக்கு கிழக்கில் சம்பந்தன் பங்குகொள்ளும் தமிழர் நிகழ்வுகளில் சம்பந்தன் எப்போதுமே இறுதியில்தான் பேசுவது வழக்கம். ஆனால் இந்த நிகழ்வில் அப்படியான வழக்கம் பின்பற்றப்பட்டிருக்கவில்லை. சம்பந்தனோடு ஒப்பிட்டால் பேராசியர் சொர்ணராஜா ஒரு முக்கிய நபரல்ல. ஆனால் அவர்தான் நிகழ்வின் பிரதம விருந்தினராக இருந்தார். விக்கினேஸ்வரனும் சம்பந்தனும் அருகில் இருந்த போதிலும் கூட, மேடையில் தங்களுக்கிடையில் நெருக்கத்தை காண்பிக்கும் வகையில் போலியாகவும் நடிக்கவில்லை. ஒரு இடைவெளியையே பேணிக் கொண்டனர். இருவருக்குமிடையில் நிலவிவரும் அரசியல் இடைவெளி மேடையில் தெளிவாகத் தெரிந்தது.
சம்பந்தன் தனதுரையில் புதிதாக எதையும் பேசவில்லை ஆனால் ஒற்றுமை தொடர்பில் பேசுகின்றபோது சற்று குரலை உயர்த்தி பேசினார். அவர் விக்கினேஸ்வரனை முன்னிறுத்தியே ஒற்றுமை தொடர்பில் பேசியிருந்தார் என்பதை புரிந்து கொள்ள சிரமமப்பட வேண்டியதில்லை. நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். எங்களுக்கிடையில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் அதற்காக நாம் ஒற்றுமையை சீர்குலைக்க முடியாது.
ஒற்றுமையாக இல்லாவிட்டால் நாம் அழிவைத்தான் சந்திப்போம். கஜேந்திரகுமார் கூட்டமைப்பிலிருந்து விலகிச் சென்ற போது சம்பந்தன் ஒற்றுமையின் முக்கியத்துவம் தொடர்பில் இப்படிப் பேசியிருக்கவில்லை. சுரேஸ் பிரேமச்சந்திரன் தனித்து சென்ற போது சம்பந்தன் இப்போது பேசியது போன்று பேசவில்லை. கூட்டமைப்பிலிருந்து போக விரும்புவர்கள் போகலாம் என்று எதேச்சாதிகாரமாக பேசியிருந்தார். ஆனால் விக்கினேஸ்வரனின் மேடையில் ஏன் தடுமாறுகின்றார். கூட்டமைப்பிலிருந்து வெளியேற விரும்புவர்கள் போகலாம். அவர்கள் விரும்பினால் தனித்து வடக்கு மாகாண சபையை எதிர்கொள்ளலாம் – என்று ஏன் சம்பந்தனால் கூறமுடியாமல் இருக்கிறது?
சம்பந்தனின் உரைக்கு விக்கினேஸ்வரன் அதே மேடையிலேயே பதலளித்திருந்தார். ஒற்றுமை கொள்கை அடிப்படையிலானதாக இருக்க வேண்டும். ஒரு ஏற்கப்பட்ட கொள்கையின் அடிப்படையில் பிரிந்து போன எல்லா கட்சிகளையுஞ் சேர்த்து கூட்டி ஒரு வலுவுடைய கூட்டமைப்பை உருவாக்குவது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. உண்மையில் இது சம்பந்தனுக்கான பதில் அல்ல மாறாக அதுவே விக்கினேஸ்வரனின் நிலைப்பாடு. ஏனெனில் விக்கினேஸ்வரனின் எழுதி வாசிக்கும் பழக்கமுள்ளவர். சம்பந்தன் தேர்தல் ஒற்றுமை பற்றித்தான் பேசுவார் என்பதை முன்கூட்டியே உணர்ந்து தனதுரையை விக்கி தயார் செய்திருக்கிறார்.
கூட்டமைப்பை அனைவரும் ஒன்றுபட்டு பலப்படுத்த வேண்டும் என்று கூறிய போது அதனை உதாசீனம் செய்தவர் சம்பந்தன். வீட்டுச் சின்னத்தை ஒரு பொதுச் சின்னமாக்கி, கூட்டமைப்பை ஒரு தனியான கட்சியாக பதிவு செய்ய வேண்டும். அதன் மூலம்தான் கட்சிகளுக்கிடையலான ஒற்றுமையை நிரந்தரமாக பேணிப் பாதுக்காக்க முடியுமென்று பலர் சம்பந்தனுக்கு அலோசனை கூறினர்.
தமிழ் தேசிய நிலைப்பாட்டை பேணிப் பாதுகாக்கும் நோக்கில் காலில் விழாக் குறையாக சம்பந்தன் முன்னால் மன்றாடினர் ஆனால் அவை எவற்றையும் சம்பந்தன் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. முக்கியமாக கூட்டமைப்பின் ஆரம்பகால பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூட்டமைப்பின் பதிவுக்காக உள்ளுக்குள்ளும் வெளியிலும் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்தார். இதன் காரணமாகவே அவர் கூட்டமைப்பிலிருந்து ஓரங்கட்டப்பட்டார்.
அன்று ஒற்றுமை பற்றி பேசிய அனைவரையும் ஏளனமாகப் பார்த்த சம்பந்தன்தான், இன்று ஒற்றுமையாக இல்லாவிட்டால் அழிந்து போய் விடுவோம் என்கிறார். உண்மையில் ஒற்றுமை அவசியம் என்பதில் எவருக்கும் மாற்று கருத்துக்கள் இருக்கப் போவதில்லை ஆனால் அது எந்த அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும் என்பதில்தான் மாற்று அபிப்பிராயங்கள் உண்டு. ஆனால் விக்கினேஸ்வரன் கூறுவது போன்றதொரு ஒற்றுமைதான் இன்றைய சூழலுக்கு தேவை.
அந்த வகையில் சம்பந்தனுக்கு உண்மையிலேயே ஒற்றுமை மீது நம்பிக்கையிருப்பின் விக்கினேஸ்வரனின் ஆலோசனைகளை உள்வாங்கி ஒரு வலுவான கூட்டமைப்பை நோக்கி பயணிப்பதுதான் அவர் தமிழ் மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணி. ஒரு அரசியல் தலைமையின் தகுதி என்பது, அது தன்னை நம்பும் மக்கள் கூட்டத்தின் அடுத்த தலைமுறைக்கு எதை விட்டுச் செல்கின்றது என்தில்தான் தங்கியிருக்கிறது. சம்பந்தன் எதை விட்டுச் செல்லப் போகின்றார் என்பதை அவர்தான் தீர்மானிக்க வேண்டும். சம்பந்தன் சுயநலம் களைய மறுத்தால் மற்றவர்கள் அந்தப் பணியை பொறுப்பேற்பதுதான் அவர்கள் தங்களை நம்பும் மக்களுக்கு செய்ய வேண்டிய பணியாகும்.
நன்றி - சமகளம்