Paristamil Navigation Paristamil advert login

விக்கினேஸ்வரன் தலைமையில் ஓர் ஜக்கிய முன்னணி?

விக்கினேஸ்வரன் தலைமையில் ஓர் ஜக்கிய முன்னணி?

3 ஆனி 2018 ஞாயிறு 13:33 | பார்வைகள் : 8815


தமிழ் அரசியல் என்பது ஒரு உள்நாட்டு யுத்தத்திற்கு பி;ன்னரான அரசியல் என்பதை முதலில் குறித்துக் கொள்ள வேண்டும். உண்மையில் இது தெடர்பில் தமிழ்ச் சூழலில் ஆரம்பத்திலிருந்தே ஒரு சரியான புரிதல் இருந்திருக்கவில்லை. அவ்வாறானதொரு புரிதல் இருந்திருக்குமாக இருந்திருந்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் தேவையற்ற உள் குத்துக்கள் ஏற்பட்டிருக்காது. பகிரங்க தளங்களில் உள் முரண்பாடுகளை விவாதிக்க வேண்டிய நிலைமையும் ஏற்பட்டிருக்காது.

 
2009இல் தமிழீழ விடுதலைப் புலிகள் நிர்மூலமாக்கப்பட்ட சூழலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றே தமிழர்களுக்கு முன்னால் இருந்தது. அதுவரை விடுதலைப் புலிகளின் பூரணமான கட்டுப்பாட்டுக்குள் இருந்தவர்கள் அரசியலை தீர்மானிக்கவல்ல சக்தியாக மாறினர். ஆனால் இந்த சந்தர்ப்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இலங்கை தமிழரசு கட்சி கூட்டமைப்பை தமிழரசு கட்சியாக முடக்குவதில் வெற்றிபெற்றது. 
 
தமிழரசு கட்சியின் சின்னமே கூட்டமைப்பின் சின்னமாக இருந்ததாலும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் ஒற்றுமையில்லாமையும், தமிழரசு கட்சிக்கே சாதகமாக அமைந்தது. தமிழரசு கட்சியின் இந்த கட்சி மேனியாவே கூட்டமைப்புக்குள் பின்னர் உருவாகிய அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்தது. இதனை தமிழ்த் தேசிய நோக்கர்கள் அனைவரும் நன்கறிவர். இது தொடர்பில் இந்தப் பத்தியாளர் பல முறை எழுதியுமிருக்கிறார்.
 
கூட்டமைப்பின் உள் முரண்பாடுகளை சரிவரக் கையாள முடியாமையின் காரணமாகவே, முதலில் அகில இலங்கை தமிழ் காங்கிரசும் பின்னர், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் தனி வழியில் செல்ல நேர்ந்தது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான், அன்மைக்காலமாக ஒரு மாற்று தமிழ்த் தேசிய அணி ஒன்றிற்கான வாய்ப்புக்கள் தொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது. 
 
அவ்வாறு சிந்திப்பவர்கள் அனைவரும் தற்போது வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரனையே திரும்பி பார்க்கின்றனர். இது தொடர்பில் சில அரசியல் கட்சிகள் மட்டுமல்ல மாறாக சிவில் சமூக அமைப்புக்களை சேர்ந்தவர்கள், தமிழ்த் தேசிய அபிமானிகள் என பலரும் தற்போது விக்கினேஸ்வரனை சுற்றியிருக்கின்றனர். 
 
விக்கினேஸ்வரன் இது தொடர்பில் அறிவிக்க வேண்டுமென்பதே அவர்களது எதிர்பார்ப்பு. சில தினங்களுக்கு முன்னரும் கூட கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுகளைச் சேர்ந்த பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் அவரது தலைமையை நாடி சென்றிருக்கின்றனர். ஆனால் இந்த நிமிடம் வரை விக்கினேஸ்வரன் தனித்து இயங்குவது தொடர்பில் உறுதியான நிலைப்பாடு எதனையும் வெளிப்படுத்தவில்லை ஆனால் அவ்வாறானதொரு முன்னெடுப்பில் இணைந்து கொள்வதற்கான ஆர்வம் அவரிடம் இருப்பதான ஒரு காட்சி தெரியாமலும் இல்லை.
 
சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்திலும் விக்கினேஸ்வரன் அவ்வாறான தொனியில் பேசியதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் விக்கினேஸ்வரன் இதுவரை பகிரங்கமாக – நான் இப்படித்தான் இயங்கப் போகின்றேன். எனது கட்சி இதுதான் அல்லது இவ்வாறானதொரு அரசியல் கூட்டணியைத்தான் நான் உருவாக்க விரும்புகிறேன் – எனது அணியின் கொள்கை நிலைப்பாடோடு, இணைந்து கொள்ளக் கூடியவர்களை அழைக்கின்றேன் – என்றவாறு அவர் இதுவரை எதனையும் கூறவில்லை. 
 
ஆனால் அவர், சம்பந்தன் – சுமந்திரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுவரும் அரசியல் நகர்வுகளை தொடர்ந்தும் விமர்சித்து வருகிறார். கூட்டமைப்பின் அரசியல் நகர்வுகளோடு தொடர்ந்தும் முரண்பட்டு நிற்கிறார். இப்படியான விடயங்கள் அவர் தனித்து இயங்குவதைத் தவிர அவருக்கு முன்னால் வேறு தெரிவுகள் எதனையும் விட்டுவைக்கவில்லை என்பது சிலரது அபிப்பிராயம் ஆனால் அரசியலில் எண்ணுவது போல் அனைத்தும் நடந்துவிடுவதில்லை அதே வேளை அரசியலில் எதுவும் நிகழலாம் என்பதும் உண்மை. எதுவும் என்பது முக்கியமானது.
 
ஆனால் இன்றைய நிலையில் தமிழர்களுக்கு நிச்சயம் ஒரு ஜக்கிய முன்னணி தந்திரோபாயம் அவசியப்படுகிறது என்பதுதான் உண்மை. ஆனால் அதனை சாத்தியப்படுத்துவதற்கு உணச்சிவசப்படுதலுக்கு அப்பாலான அரசியல் பார்வை அவசியம். 2009இல் தமிழர்கள் ஒரு பெரும் தோல்வியை சந்தித்தனர். 
 
அதன் பின்னர் அந்தத் தோல்வியிலிருந்து கற்றுக் கொள்வதே தமிழர்களின் முதலாவது அரசியல் நகர்வாக இருந்திருக்க வேண்டும். ஆனால் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவாறான கற்றல்கள் எதுவும் தமிழ்ச் சூழலில் இதுவரை நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. இது ஒரு கவலை தரும் விடயம். இதனுடைய தொடர்ச்சியாகத்தான் ஒரு ஜக்கிய முன்னணி தொடர்பிலும் தமிழர் தரப்புக்களால் இன்னும் ஆக்கபூர்வமாக சிந்திக்க முடியாமல் இருக்கிறது.
 
அவ்வாறானதொரு ஜக்கிய முன்னணி தமிழ்ச் சூழலில் தோன்றாமல் இருப்பதற்கு இரண்டு காரணங்கள் செல்வாக்குச் செலுத்துகின்றன. ஒன்று, சிலர் இன்னும் கடந்த கால முரண்பாடுகளில் சீவித்துக் கொண்டிருக்கின்றனர். இரண்டு, சிலர் எப்போதும் தாங்கள் மட்டுமே தூய்மைவான்கள் என்னும் கற்பனையில் இருக்கின்றனர். 
 
இந்த இரண்டு காரணங்களால்தான் இந்தளவு அனுபவங்களுக்கு பின்னரும் கூட, தமிழர் தரப்பால் ஒரு பரந்தளவான ஜக்கிய முன்னணியை உருவாக்கிக் கொள்ள முடியாமல் இருக்கிறது. தற்போது விக்கினேஸ்வரன் தலைமையில் ஒரு பரந்தளவிலான அரசியல் கூட்டை உருவாக்கலாம் என்று எண்ணுகின்ற போது கூட, மேற்படி இரண்டு காரணங்களும் நிச்சயம் குறுக்கிடும். நாம் ஒரு இலக்கை நோக்கிப் பயணிக்க முற்படுகின்றோம். அதற்கு சில கூட்டாளிகள் தேவைப்படுகின்றனர். 
 
அந்தக் கூட்டாளிகளை உள்வாங்கிக் கொண்டு நகர்வதுதான் ஜக்கிய முன்னணி தந்திரோபாயம் ஆகும். ஒடுக்கு முறைக்கு எதிராக போராடுகின்ற இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் ஒரு ஜக்கிய முன்னணியாக தங்களை தயார்படுத்திக் கொள்வது அல்லது குறிப்பிட்ட சூழ்நிலை கருதி, தங்களை ஒரு கட்டமைப்பாக உருமாற்றிக் கொள்வது வரலாற்றுக்கு புதிதல்ல.
 
ஈழத் தமிழர் போராட்டதிலும் கூட ஈழ தேசிய விடுதலை முன்னணி என்னும் அமைப்பு திம்பு பேச்சுவார்த்தையின் போது அன்றைய தேவை கருதி உருவாகியது. அன்று விடுதலைப் புலிகள் உள்ளடங்கலாக, அன்றிருந்த பிரதான நான்கு இயக்கங்களும் அதில் இணைந்து கொண்டன. அவ்வாறு இணைந்து கொண்ட இயக்கங்களுக்கடையில் அரசியல் பார்வைகளிலும் சரி, சமூகத்தை விளங்கிக் கொள்வதிலும் சரி, பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தன. 
 
ஆனாலும் அவற்றையும் மீறி அன்றைய சூழல் அவர்களுக்கிடையில் ஜக்கிய முன்னணி ஒன்றை சாத்தியமாக்கியது. அதே போன்றுதான் மேற்குலக தலையீட்டின் கீழ் ஒரு பேச்சுவார்த்தைக்குச் செல்கின்ற போது, தேர்தல் அரசியலையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டிய தேவை விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஏற்பட்டது. அவ்வாறில்லா விட்டால் விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தி, அவர்களை தனியாக பேச்சு வார்த்தையில் ஈடுபடுத்தும் தந்திரோபாயம் ஒன்றை சிங்களம் வகுத்திருக்கும். 
 
இவ்வாறானதொரு சூழலில்தான் விடுதலைப் புலிகளின் தலைமை அதுவரை தங்களின் எதிரிகளாக கணிக்கப்பட்டிருந்த சம்பந்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரை உள்ளடக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அங்கீகரித்து, தங்களின் கட்டுப்பாட்டு;க்குள் வைத்துக் கொண்டது. விடுதலைப் புலிகள் தன்னை போட்டுத் தள்ளும் பட்டியலில் வைத்திருந்ததாக சம்பந்தனே ஒப்புக் கொண்டிருக்கிறார்.
 
அன்று புலிகள் கூட்டமைப்பிற்குள் இருந்தவர்களின் கடந்த காலம் தொடர்பில் சிந்தித்திருக்கவில்லை மாறாக அன்றைய சூழலை கையாளுவது தொடர்பில் மட்டுமே சிந்தித்தனர். ஆனால் புலிகளின் தலைமையே கடைப்பிடிக்காத தூய்மை வாதத்தை தற்போது சிலர் கடைப்பிடிக்க முற்படுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது. விடுதலைப் புலிகளின் தலைமை தூய்மை வாதங்களில் எப்போதுமே உடும்புப் பிடியாக இருந்ததில்லை. 
 
அவ்வாறு இருந்திருந்தால், இந்தியாவிடம் ஆயுதங்கள் வாங்கியிருக்க முடியாது, பின்னர் அந்த இந்தியாவை வெளியேற்ற அதுவரை எதிரியாகக் கருதியிருந்த பிரேமதாசவுடன் திரைமறைவில் இணைந்திருக்க முடியாது. இந்த நடவடிக்கைகளின் போது விடுதலைப் புலிகளின் தலைமை எங்கும் தன்னுடைய கொள்கை நிலைப்பாட்டை கைவிட்டிருக்கவில்லை. அவை ஒரு தந்திரோபாய நடவடிக்கையாகவே அனுகப்பட்டது. விடுதலைப் புலிகளைப் பொருத்தவரையில் அன்றைய நிலையில் அவர்களது தந்திரோபாயம் வெற்றியையும் பெற்றுக் கொடுத்தது. 
 
கொள்கை என்பது வேறு, ஒரு குறிப்பிட்ட சூழலை எதிர்கொள்ளுவதற்கான தந்திரோபாயம் என்பது வேறு. தமிழ் சூழலில் கொள்கைக்கும் தந்திரோபாயத்திற்கும் இடையிலான வேறுபாடு தொடர்பிலும் சரியான புரிதல் இல்லாமல் இருப்பதும் ஒரு கவலை தரும் விடயம்தான். மேலும் கொள்கை என்பது கருங்கற் பாறையல்ல, அசையாமல் இருப்பதற்கு. மொத்தத்தில் தமிழ் அரசியல் சூழலில் ஏராளமான அரைகுறைப் புரிதல்கள் இருக்கின்றன. உண்மையில் இவைகள் விளக்கிமின்மையால் ஏற்படுவதல்ல மாறாக விளங்கிக் கொள்ளும் விருப்பமின்மையால் ஏற்படுவது.
 
இவ்வாறானதொரு சூழலில்தான் விக்கினேஸ்வரன் தலைமையில் ஒரு ஜக்கிய முன்னணி தொடர்பில் இந்தப் பத்தி கேள்வி எழுப்புகிறது. தற்போதைய சூழலில் சம்பந்தனது தலைமைக்கு மாற்றாக ஒரு புதிய கூட்டணியை உருவாக்க வேண்டுமாயின் அது விக்கினேஸ்வரன் தலைமையில்தான் நிகழ முடியும். அதற்கான கவர்சிநிலை விக்கினேஸ்வரன் ஒருவருக்குத்தான் உண்டு. இந்த நிலையில் விக்கினேஸ்வரன் ஒரு அணிக்கு தலைமை தாங்க வேண்டுமாயின், அவருக்கு முன்னால் இரண்டு தெரிவுகள்தான் உண்டு.
 
ஒன்றில், அவர் ஒரு தனிக்கட்சியை உருவாக்கி அதன் கீழ் கொள்கை அடிப்படையில் இணையக் கூடியவர்களை ஒன்றிணைக்க வேண்டும். அவ்வாறில்லாது போனால், உடன்படக் கூடிய கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து அதில் ஒரு கட்சியின் சின்னத்தை பொதுச் சின்னமாக தெரிவு செய்து, அதில் பயணிக்க வேண்டும். தற்போது விக்கினேஸ்வரன் தலைமையில் இருக்கின்ற, தமிழ் மக்கள் பேரவையி;ல் அங்கம் வகித்துவரும் கட்சிகளோடு, மேலும் இணையக் கூடிய சிவில் அமைப்புக்கள் தனிநபர்கள் ஆகியோரை ஒன்றிணைத்து ஒரு வலுவான அணியை ஸ்தாபிக்க முடியும்.
 
கூட்டமைப்புக்குள் நிலவும் தமிழரசு கட்சியின் எல்லை மீறிய ஆதிக்கம். இதன் விளைவாக, தமிழரசு கட்சி முற்றிலுமாக சுமந்திரனின் பிடிக்குள் இருப்பது – இப்படியான விடயங்கள் அனைத்தும் நிச்சயாக தமிழ்த் தேசிய அரசியலை கூட்டமைப்பால் வலுவாக பேணிப் பாதுகாக்க முடியாத நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறது. 
 
உண்மையில் கூட்டமைப்பு என்னும் பெயரில் இயங்கிவரும் தமிழரசு கட்சி ஏற்கனவே அரசாங்கத்தின் நிகழ்சிநிரலுக்குள் அகப்பட்டுவிட்டது. இந்த நிலையில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை வலுவாகவும், அதே வேளை விடயங்களை சூழ்நிலை கருதி நெகிழ்வாக கையாளுவததற்கும் ஏற்றவாறான ஒரு புதிய தமிழ்த் தேசிய ஜக்கிய முன்னணி கட்டாயமான ஒன்றாக இருக்கிறது. அவ்வாறான ஒன்று விக்கினேஸ்வரன் தலைமையில் உருவாக வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது.
 
நன்றி - சமகளம்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்