சிங்களப் படையினரைக் கொழும்பு தண்டிக்கப் போவதேயில்லை!
20 வைகாசி 2018 ஞாயிறு 12:28 | பார்வைகள் : 9534
ஈழத் தமிழினத்தின் மீது இழைக்கப்பட்ட வரலாற்றுக் கொடூரம் தொடர்பில் தமது எதிர்ப்புணர்வை கட்சிகள், அணிகள், தரப்புகள், குழுக்கள் என்ற மனநிலைக்கு அப்பால் ஒன்றுபட்டு ஒரு தேசமாக – தேசியமாக – ஐக்கியப்பட்டுக் காட்டி யிருக்கின்றார்கள் தமிழர்கள்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை தமிழ் மக் களின் சார்பில் – வடக்கு மாகாண சபையின் பிரதிநிதியாக – முன்னின்று நடத்தியிருக்கின்றார் வடக்கு மாகாண முதல மைச்சர் நீதியரசர் சி.வீ.விக்னேஸ்வரன்.
இறுதி யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த எமது உறவுகளை நினைவு கூரும் சோக நினைவை ஒட்டி அவர் ஆற்றிய உரை இன்றைய கட்டத்தில் மிக முக்கியத்துவம் பெறுகின்றது.
எவ்வாறு தமிழ் மக்கள் அணி, கட்சி, தரப்புகள் கடந்து இந்த நினைவேந்தலை நடத்தினார்களோ அதேபோன்று அங்கு தமிழ் மக்கள் சார்பில் உரையாற்றிய வடக்கு முதல்வர் கூட அணி, கட்சி, தரப்பு சாராமல் நடுநிலை நின்று அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சை வழங்கியிருக் கின்றார்.
யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் தமிழ் மக்களுக்கு இழைக் கப்பட்ட கொடூரங்களுக்கு நீதி கிட்டாமல் இருப்பதற்கு பிரதான காரணங்களை அவர் வெளிப்படையாகவும், தெளிவாகவும், அப்பட்டமாகவும் வெளிப்படுத்தியிருக்கின்றார்.
மேலோட்டமாக அந்த உரையை நோக்கினால் தமிழர்களுக்கு நீதி வழங்கப்படாமைக்கு தென்னிலங்கைச் சிங்கள அரசுத் தரப்பை மட்டும் குற்றம் சுமத்துவது போலவே தோன்றும். ஆனால், ஆழமாக ஊடுருவி நோக்கினால், இலங்கை ஆட்சிப் பீடத்தின் ஏமாற்றுதல்களுக்கு இடமளித்து, ஏமாந்து பார்த்திருந்தமை மூலம் இந்த விடயத்தில் சர்வதேசமும் கூட பெருந் தவறிழைத்திருக்கின்றது என்பது முதல்வரின் உரையின் வரிகளுக்கு இடையில் தொக்கி நிற்பதைக் காணமுடியும்.
நடந்து முடிந்த இறுதிக் கட்ட யுத்தத்தின் போது அரங்கேறிய சம்பவங்களை நடுநிலை நோக்கோடு பார்க்கத் தயாரில்லாத தென்னிலங்கையின் பெளத்த,சிங்கள ஆட்சிப் பீடத்தினால், இந்தக் கொடூரங்கள் தொடர்பில் தமிழ் மக்களுக்கு நீதி வழங்க முடியாது என்பதைப் புட்டு புட்டு வைத்திருக்கின்றார் முதல்வர் விக்னேஸ்வரன். அதற்கான காரணத்தை மிக வெளிப்படையாகக் கூறியிருக்கின்றார்.
“”இன்று இந்த நாட்டில் கொலைக் குற்றம் புரிந்தவர்கள் கூடக் குற்றவாளிகளாகப் பார்க்கப்படுவதில்லை. அவர்களின் இனத்தைப் பொறுத்து வீரர்களாக்கப்படுகின்றார்கள். “எங் களின் சிங்களப் போர் வீரர் ஒருவரையேனும் சிறை செல்ல விடமாட்டேன்’ என்று சமுதாயத்தின் உயரிய மட்டத்தில் இருப் போர் கூறும்போது ஒருவரின் குற்றம் அவரின் இனத்தைப் பொறுத்துத்தான் தீர்மானிக்கப்படுகின்றதா என்ற கேள்வி எழுகின்றது.
“”இன்னமும் மகாவம்ச சிந்தனையில் திளைத்திருக்கும் சிங்கள அரசியல்வாதிகள், முள்ளிவாய்க்கால் இன அழிப்பை தமிழ் – சிங்களப் போராகவே கருதி, தமது இனத்தின் வெற்றி என்ற மனோபாவத்தில்தான் இருந்து வருகின்றார்கள். ஒரு சிங்களப் போர் வீரன் தமிழ் மக்களுக்கு எதிராக எந்தக் குற்றத்தைப் புரிந்திருந்தாலும் அது குற்றமே அல்ல என்று வாதாடும் சிங்கள அரசியல் தலைமைகளே இன்று இந்த நாட்டில் காணப்படுகின்றனர்.”
– இப்படி முதலமைச்சர் விக்னேஸ்வரன் வெளிப்படையாகப் போட்டுடைத்திருக்கும் விடயம்தான் இன்றைய சிக்கல் நிலைக் குப் பிரதான காரணமாகும்.
நடந்து முடிந்த யுத்தத்தை சிங்களவர் -தமிழர் இடையே யான இனயுத்தம் என்ற யதார்த்தத்தின் அடிப்படையில் தான் விடயங்களைக் கையாள்கின்றது தென்னிலங்கை அரசு.
தன்னை சிங்கள இனத்தின் அரசு என்றும், தமிழினம் தனது எதிரி இனம், அது தனக்கு அடிமைப்பட்டுக் கிடக்க வேண்டிய இனம் என்றும் கருதித்தான் ஆட்சி மமதையோடும், அதிகாரச் செருக்கோடும் தென்னிலங்கை அரசு நடந்து கொள்கின்றது.
அப்படிக் கருதுவதனால் தமிழர்களுக்கு எதிராக – தமிழினத்துக்கு எதிராக – எந்தச் சிங்களப் போர் வீரன்
இழைத்த தவறுகளுக்கு எதிராகவும் தென்னிலங்கை ஆட்சிப் பீடம் நடவடிக்கை எடுக்கவே எடுக்காது.
இந்த மூன்று உண்மைகளையும் அண்மைக்காலத்தில் இவ்வளவு வெளிப்படையாகவும், தெளிவாகவும், அப்பட்ட
மாகவும், பகிரங்கமாகவும் எடுத்துரைத்து அறிவித்த ஒரே தலைவர் வடக்கு மாகாண முதல்வர் நீதியரசர் சி.வீ.விக் னேஸ்வரன் தான்.
இன்று தென்னிலங்கை அரசோடு சமரசம் பேசி, சமா தானம் காண முயலும் தமிழ்த் தலைவர்கள் எவரும் இந்த உண்மை யதார்த்தத்தை இவ்வளவு வெளிப்படையாகப் பேசினார்களா என்றால் இல்லை என்று தான் கூறவேண்டும்.
நடந்து முடிந்த யுத்தத்தையும் அதன் விளைவுகளையும் தமிழ் – சிங்களப் போராகவும் இன ரீதியான யுத்த முரண்பாடா கவும் நோக்கும் இலங்கையினால் தமிழர்களுக்கு நீதி செய்யப்பட முடியாது என்பது தெளிவானது.
இதனை இனவாத யுத்தமாகக் கருதி, தமிழரைத் தோற் கடித்த தனது சிங்களப் போர் வீரர்களைத் தமிழர்களுக்கு எதிராக அவர்கள் புரிந்த எத்தகைய கொடூரத்துக்காகவும் தண்டிக்கவே மாட்டோம் என்ற மனநிலையில் இருக்கும்
கொழும்பு அரசுடன் நல்லிணக்கம் ஏற்படுவது என்பது அசாத் தியமே.
நன்றி - சமகளம்