Paristamil Navigation Paristamil advert login

இந்திய இலங்கை ஒப்பந்தம் வேறு 13வது திருத்தச் சட்டம் வேறு...!

இந்திய இலங்கை ஒப்பந்தம் வேறு 13வது திருத்தச் சட்டம் வேறு...!

13 வைகாசி 2018 ஞாயிறு 12:22 | பார்வைகள் : 9003


ஈழத்தமிழர்களிற்கான அரசியல் அபிலாசைகளுக்கான விடுதலைப் போராட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களுக்கும் அன்றைய இலங்கை சனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனா அவர்களுக்கும் இடையில் 1987ஆம் ஆண்டு ஆடி மாதம் 29ம் நாள் கைச்சாத்திடப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தமாகும். இவ் ஒப்பந்தத்தினை அடுத்தே இலங்கைப் பாராளுமன்றில் உருவாக்கப்பட்டதே 13வது திருத்தச் சட்டமாகும். 
 
இந்திய இலங்கை ஒப்பந்தம் இரு நாடுகளுக்கிடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம். இவ் ஒப்பந்தத்தை இரு நாடுகளும் தன்னிச்சையாக மீறக்கூடாது. ஆனால் 13ம் திருத்தச்சட்டத்தை இலங்கை அரசு தனது சிங்களப் பெரும்பான்மை சனநாயகபலத்தால் முறியடித்துள்ளது.
 
இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பகுதி 1.4 இல் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழ்பேசும் மக்களின் வரலாற்று வாழ்விடமாக உறுதிப்படுத்துகின்றது. இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பகுதி 2.1 இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒரு நிர்வாக அலகாக இணைக்கின்றது. மேலும் வடகிழக்கு மாகாண நிர்வாக அலகில் இருந்து கிழக்கு மாகாணம் பிரிந்து செல்வதாயின் கிழக்கு மாகாணத்தில் வாழும் அனைத்து மக்களுக்கு இடையே பொதுவாக்கெடுப்பு நிகழ்த்தப்படல் வேண்டும். 
 
இதன்போது கிழக்கு மாகாணத்தில் இருந்து புலம்பெயர்ந்த மக்களும் மீளக்குடியேறிய சூழல் அவசியம் என (இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பகுதி 2.4) வலியுறுத்துகின்றது. மேலும் கிழக்கு மாகாணப் பொதுவாக்கெடுப்பினைக் கண்காணிக்க பிரதம நீதியரசர் தலைமையில் கண்காணிப்புக்குழு அமைய வேண்டும் என இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பகுதி 2.7இல் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 
இலங்கை அரசியல் வாதிகள் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் சட்டத்தன்மையையும், அதன் பிரயோக உண்மையையும் மறந்து செயற்படுகின்றனர். வடகிழக்கில் இருந்து புலம்பெயாந்து இந்தியாவில் ஏதிலிகளாக உள்ள மக்கள் இன்னமும் மீளக்குடியேறவில்லை. 
 
இதனை நிறைவேற்ற வேண்டிய தார்மீகக் கடப்பாடு இந்திய அரசுக்கு உள்ளது. அதாவது இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பகுதி 2.14இல் இந்திய அரசு தமிழர்களுக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான உத்தரவாதத்தினைக் கொடுக்கின்றது. ஆனால் அரசியல் தீர்வு விடயம் 21 வருடங்கள் கடந்தும் தீர்க்கப்படவில்லை. மேலும் வடகிழக்கில் வாழும் மக்களின் பாதுகாப்பிற்கான ஒத்துழைப்பினையும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பகுதி 2.16இன் பிரகாரம் இந்தியாவின் பங்களிப்பு இலங்கைக்கு உள்ளது.
 
இந்தியாவில் இருந்து ஏதிலிகள் இலங்கைக்கு படகில் வரும்போது கைது செய்யப்படல் தவறானது. இது இந்தியாவில் உள்ள ஈழ ஏதிலிகளின் மீள்வருகையைத் தடுக்கும் செயலாகவே கருதப்படல் வேண்டும். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் இந்தியாவில் உள்ள ஈழ ஏதிலிகள் இலங்கையில் பாதுகாப்பாக மீளக்குடியேற இந்திய இலங்கை அரசுகள் காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டும். அது நடைபெறவில்லை. இவ்வாறு ஏதிலிகளை மீளவருதலுக்கு மறைமுகமான தடைகள் ஏற்படுத்தி உள்ளமை இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு முரணானது.
 
இந்திய இலங்கை ஒப்பந்தமூலம் ஒரு நிர்வாக அலகாக இணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களைத் தனித்தனி மாகாணங்களாக இலங்கை பிரதம நீதியரசர் தலைமையிலான நீதிபதிகள் 2006ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 16ம் நாள் பிரித்தனர். இது இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பகுதி 1.4, பகுதி 2.1, பகுதி 2.4, பகுதி 2.7 இனை மீறும் செயலாகும். மேலும் இலங்கை உயர் நீதிமன்ற நீதியரசர்கள், பிரதம நீதியரசர் சரத் N. சில்வா, மற்றும் நீதியரசர்கள் நிகால் ஜெயசிங்கா, N. மு. உடலவிஸ்மா, ராஜ பெர்னாண்டோ, N. பு. அமரதுங்கா வடக்கு கிழக்கு இணைப்பு சட்டவிரோதமானது எனத் தீர்ப்பை வழங்கினார்கள். இதன்மூலம் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளுக்கான கோரிக்கைகளும், சட்டவிரோதமாக்கப்பட்டது.
 
அடுத்து இந்திய இலங்கை ஒப்பந்தம் வறிதாக்கப்பட்டது. தமிழர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டது. இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நிராகரித்த இலங்கை உயர் நீதிமன்றத்தின் இச் செயற்பாடும் பின்னாளில் வடகிழக்கில் பாரிய மனித அவலம் ஏற்பட ஏதுவாயிற்று. இதனை தமிழ் அரசியல்வாதிகளும் சட்ட அறிஞர்களும் புரிந்து கொள்ளல் நலம்.
 
அடுத்து இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பகுதி 2.14, 2.16இன் பிரகாரம் இந்திய அரசு இலங்கை அரசுடன் இணைந்து தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வினை உறுதிப்படுத்துவதுடன் தமிழ்மக்களின் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்தல் வேண்டும். தமிழர்களின் வரலாற்று முக்கியத்துவமான வடக்கு கிழக்கு மாகாண நிலங்கள் ஆக்கிரமிக்கப்படல் நேரடியாகவும், இராணுவமயமாக்கல் மூலமும், பௌத்தமயமாக்கல் மூலமும் நிகழ்கின்றது. இவற்றைத் தடுத்து நிறுத்தி வடகிழக்கில் சுமுகநிலையை ஏற்படுத்த இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் சட்டத்தன்மையினை இந்தியாவிலும், சர்வதேச அளவிலும் ஆராய வேண்டிய தேவை ஈழத்தமிழர்களுக்கு உள்ளது. இந்திய இலங்கை ஒப்பந்தத்தை இலங்கை அரசு மறுதலித்தலானது தமிழரின் உரிமைக்கான போராட்டத்தை இந்தியா மீளவும் அங்கீகரிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளியள்ளது. இதன் மூலமே இந்தியா தனது வரலாற்று ராஜதந்திரத் தோல்வியிலிருந்து மீள முடியும்.
 
இந்திய இலங்கை ஒப்பந்தத்தின்படி இந்தியா தமிழகத்தில் ஈழவிடுதலைப் போராட்டங்களுக்கு எதிராக மேற்கொண்ட அழுத்தங்களை தவிர்க்க வேண்டிய சட்டச்சூழல் இந்தியாவிற்கு இதனால் ஏற்படும். அதாவது இந்திய இலங்கை ஒப்பந்தம் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை கையகப்படுத்திய நிகழ்வாகும். எனவே அதனை இலங்கை அரசு நிராகரிக்கும் நிலையில் இந்தியா தமிழர்களை நடுக்கடலில் தள்ளும் நிலையில் இருந்து மாற வேண்டும். இந்தியாவில் இருந்து படகுகளில் ஏதிலிகளின் வருகையின் தற்போதைய நிலைமை ஈழத்தமிழரின் கையறுநிலையினையே நிஜமாகவே எடுத்துக் காட்டுகின்றது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்