தவிர்க்க முடியாத சிக்கலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு…!
6 வைகாசி 2018 ஞாயிறு 14:30 | பார்வைகள் : 9448
வடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் முடிவடைய இன்னும் 4 மாதங்களே உள்ளது. உடனடியாகவே வடக்கு மாகாண சபை மற்றும் ஏற்கனவே பதவிக் காலம் முடிவடைந்துள்ள ஏனைய மாகாண சபைகளுக்குமான தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்திருக்கின்றது.
மைத்திரி – ரணில் கூட்டரசாங்கத்தினால் தேர்தல் திருத்தச் சட்ட மூலம் கொண்டு வரப்பட்டு அதன் அடிப்படையில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல் முறை நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளையும் ஆட்டம் காண வைத்துள்ளதுடன், பல்வேறு குழப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
ஊழலை ஒழிப்பதாக கூறும் நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட தேர்தல் திருத்தம் ஆட்சி அமைப்பதற்கு கூட பேரம் பேசல்களை தோற்றிவித்துள்ளது. இந்தநிலையில் புதிய தேர்தல் முறையின் கீழ் மாகாண சபை தேர்தல் நடைபெறுமா…? அல்லது பழைய முறைப்படி தேர்தல் நடைபெறுமா என்பது குழப்பமாகவே உள்ளது.
தென்னிலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை மாகாணசபைத் தேர்தல் தொடர்பான சட்ட மூலத்தை உடனடியாக நிறைவேற்றி தேர்தலை நடத்த வழிவிடுமா என்ற கேள்வியும் உள்ளது.
வடக்கு மாகாண சபைத் தேர்தல் எப்போது நடைபெறும் என்ற முடிவு இல்லாத நிலையிலேயே அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்கின்ற கேள்வி பரவலாக எழத் தொடங்கியுள்ளது. அரசியலில் அடிக்கடி சச்சைகளை ஏற்படுத்தும் ஒருவராக இருந்து வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் அண்மையில் ஊடக சந்திப்பு ஒன்றில் தெரிவித்த கருத்தே அந்த கேள்வியை அதிகப்படுத்தியுள்ளது.
விக்னேஸ்வரனுக்கு முதலமைச்சர் வேட்பாளர் நியமனத்தை இனிமேல் கூட்டமைப்பு வழங்காது என்று தெரிவித்திருந்த கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் ‘இவரை நாங்களே அரசியலுக்கு அழைத்து வந்தோம். இரண்டு வருடங்கள் மட்டுமே இருப்பதாகக் கூறி வந்தவர் முழுமையாக இருந்துவிட்டார். ஆகையால் அவரை மேலும் வருந்தி வைத்திருப்பது நல்லதல்ல’ என கூறியிருந்தார்.
சுமந்திரனின் இந்த கருத்து தொடர்பில் வடக்கு முதலமைச்சர் பத்திரிகை ஒன்றுக்கு அனுப்பும் வாராந்த கேள்வி பதிலில் விளக்கம் அளித்திருந்தார். அடுத்த மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் பதவிக்கு தான் போட்டியிடப் போவதை விக்னேஸ்வரன் அதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
தான் செல்லுமிடமெங்கும் மக்கள் அதனை விரும்பிக் கேட்பதால் தாம் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவித்த அவர், மக்கள் நலன் கருதி, கொள்கை ரீதியாக தம்முடன் சேர்ந்தியங்கக்கூடிய வேறொரு கட்சியூடாக தாம் வேட்பாளராக நிற்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார். புதிய கட்சி ஆரம்பிக்கையில், கொள்கை ரீதியில் உடன்படுவோரோடு கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ள தமது விருப்பத்தையும் இவர் வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதற்காக, யாரால் உருவாக்கப்பட்டதென்பது எல்லோருக்கும் தெரியும். அதன் அடிப்படை நோக்கங்களான தாயகம், தேசியம், இறைமை, சுயநிர்ணயம் ஆகிய அடிப்படைக் கூறுகளை இன்றைய கூட்டமைப்பு கடைப்பிடிக்கிறதா? இதில் எத்தனை ஸ்தாபகக் கட்சிகள் இன்றுள்ளன என்ற நியாயமான கேள்விகளையும் முதலமைச்சர் எழுப்பியுள்ளார். கூட்டமைப்பு என்பது இன்று இல்லாதவிடத்தில் எங்கிருந்து தமக்கு அழைப்பு வரும் என்று கேட்டிருக்கும் முதலமைச்ச் விக்னேஸ்வரன், தமிழரசுக் கட்சியிடமிருந்து தமக்கு அழைப்பு வராமாட்டாது என்பதையும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
ஆக, வடக்கு முதலமைச்சர் தேர்தலில் களம் இறங்கப் போவது உறுதியாகியுள்ள நிலையில் அவது கட்சி அல்லது கூட்டனி தொடர்பில் கவனம் எழுந்துள்ளது. 2009 ஆம் ஆண்டு தமிழ் மக்களது உரிமைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர், மக்களது உரிமையைக் கோரிக்கையை தொடர்ந்தும் ஜனநாயக வழியில் முன்னகர்த்தி பாதிக்கப்பட்ட தமிழ் தேசிய இனத்தின் அபிலாசைகளையும், உரிமைகளையும் பெற்றுக் கொடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தோள்களில் தானாகவே விழுந்தது. ஆனால் அந்த கடமையை தனக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை பயன்படுத்தி இராஜதந்திர ரீதியாகவும், வினைத்திறனுடனும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமை செய்ய தவறியிருக்கின்றது.
இதன் விளைவாகவே மக்கள் தாமாகவே வீதிகளில் இறங்கி இன்று ஒரு வருடத்திற்கும் மேலாக நீதி கேட்டும், உரிமைக்காகவும் போராடி வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் தேசிய இனத்தின் அபிலாசைகளையும், அவர்களது நியாயபூர்வமான கோரிக்கைகளையும், சர்வதேச சமூகத்திற்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் வெளிப்படுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் வழிக்கு கொண்டு வரும் வகையில் தமிழ் மக்கள் பேரவை என்கின்ற ஒரு மக்கள் இயக்கம் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களின் இணைத் தலைமையில் உருவாகியது. அதில் கல்வியலாளர்கள், சட்டவாளர்கள், புத்திஜீவிகள், வைத்தியர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், தொழிற் சங்கங்கள் என பல்வேறு தரப்புக்களும் அங்கத்துவம் வகிக்கும் நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னனி, ஈபிஆர்எல்எப், பேராசிரியர் சிற்றம்பலம் தலைமையிலான தமிழரசுக் கட்சி அணி, புளொட் ஆகிய கட்சிகளும் அங்கத்துவம் வகிக்கின்றன.
தமிழ் மக்கள் பேரவை ஒரு அரசியல் கட்சியல்ல. அது மக்கள் இயக்கம் என குறிப்பிட்டு வரும் முதலமைச்சர் தற்போது அந்த அமைப்புக்குள் தனக்கு நெருக்கான ஐங்கரநேசன், அனந்தி சசிதரன், அருந்தவபாலன் உள்ளிட்ட சிலரையும் உள்வாங்கி தன்னை பலப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் வடக்கு முதலமைச்சர் உருவாக்கும் புதிய கட்சியில் குறித்த உறுப்பினர்களையும் உள்வாங்கி அதனை பலப்படுத்த முயல்வதாக தெரிகிறது. பேரவை அரசியல் கட்சியாக தொழிற்படாவிட்டாலும் அதன் ஆதரவுடன் அதில் உள்ளவர்களையும், தனிக்கட்சி என்பதற்கு அப்பால் கொள்கை ரீதியில் ஒன்றுபட்டு செயற்படுபவர்களையும் உள்வாங்கி ஒரு கூட்டனி அமைக்கும் இடத்தில் அது வலுவானதாக அமையும். குறிப்பாக முதலமைச்சர் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னனி, ஈபிஆர்எல்எப், பேராசிரியர் சிற்றம்பலம் தலைமையிலான தமிழரசுக் கட்சியின் விரக்தி அணி என்பன இணையும் பட்சத்தில் அது ஒரு வலுவான கூட்டனியாக அமையும்.
தமிழ் தேசிய இனத்தைப் பொறுத்தவரை அவர்களது அரசியல் அபிலாசைகளையும், உரிமைக் கோரிக்கைகளையும் தொடர்ந்தும் விட்டுக் கொடுப்பின்றி முன்னகர்த்தி அதனை அடைவதற்கு உதவக் கூடிய ஒரு வலுவான கட்சியே தேவையாகவுள்ளது. அது கொள்கை சார் கூட்டாக அமைய வேண்டும். வெறும் தேர்தல் கூட்டுக்களால் எதனையும் பெற முடியாது. குறிப்பாக கடந்த உள்ளூராட்சி தேர்தலின் போது தமிழர் விடுதலைக் கூட்டனி, ஈபிஆர்எல்எப், ஜனநாயக தமிழரசுக் கட்சி, முன்னாள் போராளிகளின் ஒரு பகுதியினர், ஈரோஸ் என்பன இணைந்து உருவாக்கிய கூட்டு தேர்தல் முடிந்து 3 மாதங்களுக்குள்ளேயே உடைந்து சென்றுள்ளது. அவ்வாறானதொரு தேர்தல் கூட்டு ஆபத்தானது. அது வாக்கு சிதறலுக்கு மட்டுமே உதவக் கூடியது. இதனை வடக்கு முதல்வர் உணர்ந்து கொள்கை சார்ந்த ஒரு கூட்டை உருவாக்க முன்வர வேண்டும். அதுவே வலுவானதாகவும் இருக்கும். அதுவே இணக்க அரசியல் செய்யும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான வலுவான சக்தியாகவும் அமையும். அத்தகையதொரு கூட்டையே தமிழர் தரப்பு விரும்புகின்றது. இதனை உணர்ந்து வடக்கு முதல்வர் செயற்படுவாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.