மகிந்தவுக்காக திறக்கப்படும் கதவுகள்..!!
15 சித்திரை 2018 ஞாயிறு 15:21 | பார்வைகள் : 9607
சிறிலங்காவிலுள்ள மதில்களில் பரிச்சயமான ஒருவரின் சுவரொட்டிகள் மீண்டும் காணப்படுகின்றன. சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் உருவப்படங்களைக் கொண்ட பல ஆயிரக்கணக்கான சுவரொட்டிகள் மற்றும் விளம்பரப் பலகைகள் மீண்டும் நாட்டில் தென்படுகின்றன.
ராஜபக்ச அரசாங்கத்தால் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா விசாரணை மற்றும் வெள்ளை வான் கடத்தல்கள் போன்றவற்றைக் கருத்திற் கொண்டு சிறிலங்காவின் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளதாக எச்சரிக்கப்பட்டிருந்தது. அந்த நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற தேர்தலில் ராஜபக்ச அரசாங்கத்திற்கு மக்கள் தமது வாக்குகளை வழங்காதமை, அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
எனினும், கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பௌத்த தேசியவாதத் தலைவரான மகிந்தவின் புதிய கட்சிக்கு ஆதரவாக மக்கள் தமது வாக்குகளை வழங்கியதன் மூலம் எதிர்பாராத வெற்றியைப் பெற்றுக் கொடுத்தனர்.
நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் அதிபர் தேர்தல்கள் இரண்டு ஆண்டுகளில் இடம்பெறவுள்ள நிலையில், மகிந்த ராஜபக்சவின் புதிய கட்சிக்கு மக்கள் அளித்த வாக்கானது, இவர் சிறிலங்காவின் மிகவும் பிரபலமான ஒரு அரசியல்வாதி என்பதை உறுதிப்படுத்தியுள்ளதுடன், இவரது ஆதரவாளர்கள் மத்தியில் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் அதேவேளையில் மகிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சிக்கு வந்து விடுவாரோ என்கின்ற அச்சம் இவரது எதிர்ப்பாளர்கள் மத்தியில் நிலவுகிறது.
ராஜபக்ச தலைமையிலான எதிர்க்கட்சியினரால் அண்மையில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் முன்வைக்கப்பட்டது. இது தோல்வியில் முடிவடைந்தது. இந்த விவாதத்தின் போது ரணில் விக்கிரமசிங்கவின் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் கூட இவருக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.
‘இடைத்தேர்தல் ஒன்று நடத்தப்பட வேண்டும் என நாம் விரும்புகிறோம். கூட்டு அரசாங்கத்தின் எதிர்காலமானது மிகவும் உறுதியற்றதாக அமையப் போகிறது. நாட்டின் அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோர் இடைத்தேர்தலை நடத்துவதைத் தவிர வேறெந்தத் தெரிவையும் கொண்டிருக்கவில்லை’ என நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அதிபரின் வாரிசுமான நாமல் ராஜபக்ச தெரிவித்திருந்தார்.
பெப்ரவரியில் இடம்பெற்ற தேர்தல்களுக்கான பரப்புரை விளம்பரங்கள் அச்சுறுத்தும் விதமாக அமைந்திருந்தன. ‘ரக்பி விளையாட்டில் வெற்றி பெற்றது மரண தண்டனைக்கு உட்பட்டதை நினைவுபடுத்த வேண்டும்’ என ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பரப்புரை பதாகை ஒன்றில் வினவப்பட்டிருந்தது. அதாவது படுகொலைகளை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்ட ராஜபக்ச குடும்பத்தைச் சாடியே இந்தப் பதாகை இவ்வாறு வடிவமைக்கப்பட்டிருந்தது.
இதேபோன்று ‘பயங்கரவாதத்தினதும் அடக்குமுறையினதும் குறியீடாக வெள்ளை வான்கள் காணப்பட்டதை நினைவுபடுத்த வேண்டும்’ என்கின்ற விதத்தில் பதாகைகள் காணப்பட்டன.
இவ்வாறான பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமதப்பட்ட ஒரு தலைவர் மீண்டும் எழுச்சியுறுவதானது அரசியல் அவதானிகள் மத்தியில் பெரியளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை.
‘ராஜபக்ச ஒருபோதும் அரசியலை விட்டுச் செல்லமாட்டார். இவர் தற்போதைய அரசாங்கம் பதவியேற்ற நாளிலிருந்து அரசியல் நகர்வுகளை மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருகிறார்’ என அனைத்துலக நெருக்கடிகள் குழுவின் மூத்த ஆய்வாளர் அலன் கீனன் தெரிவித்தார்.
2015ல் இடம்பெற்ற தேர்தலில் ராஜபக்ச தோற்கடிக்கப்பட்டார். இவரது அரசாங்கம் மீது முன்வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கள் காரணமாக இவரது சொந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் இவரிடமிருந்து விலகி கூட்டு அரசாங்கம் ஒன்றை உருவாக்கினர். ஊழலை முடிவிற்குக் கொண்டு வருவதாக பரப்புரை செய்ததன் மூலம் மக்களின் ஆதரவைப் பெற்று ஆட்சியமைத்தனர்.
எனினும் நீண்டகாலமாக அரசியல் எதிரிகளாக இருந்த இருவர் ஒன்றாக ஆட்சியை மேற்கொள்வதில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. ‘சிறிலங்காவின் தற்போதைய அதிபர் மற்றும் பிரதமருக்கு இடையிலான உறவானது மிகவும் மோசமாக காணப்படுகிறது’ என கீனன் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் போன்ற நாட்டின் சிறுபான்மை சமூகங்களின் மனங்களை வெல்வதற்காக மைத்திரிபால சிறிசேனவால் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. அதாவது பிராந்தியங்களுக்கான அதிகாரப் பகிர்வு, ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்குகளை ஆராய்தல், அரசியல் சாசனத்தில் மாற்றத்தை ஏற்படுத்துதல் உட்பட பல உறுதிமொழிகளை சிறிலங்காவின் தற்போதைய அதிபர் முன்வைத்திருந்தார்.
நாட்டில் நிலவும் பௌத்த தேசியவாத உணர்வலைக்கு முகங்கொடுக்க முடியாததாலேயே சிறிசேன தனது நிகழ்ச்சி நிரலை அமுல்படுத்த முடியாத நிலை காணப்படுவதை விமர்சகர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். பௌத்த தேசியவாத உணர்வலையை எதிர்ப்பதன் மூலம் மீண்டும் ராஜபக்சவும் அவரது குடும்பத்தினரும் ஆட்சிக்கு வருவதைத் தடுப்பதற்காக மைத்திரிபால சிறிசேன தனது வாக்குறுதிகளை முற்று முழுதாக நிறைவேற்ற முடியாத நிலை காணப்படுவதாக அவதானிகள் கூறுகின்றனர்.
தற்போதைய அரசாங்கத்தால் வெங்காயம், மீன் மற்றும் தேங்காய் போன்றவற்றுக்கான விலை அதிகரிப்பதைக் கூடக் கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது. அத்துடன் உரமானியத்தை அகற்றுவது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட தீர்மானமானது விவசாயத்துறையை வெகுவாகப் பாதித்துள்ளது.
‘மகிந்த எங்களது நலனில் அக்கறை காண்பித்தார்’ என சிறிலங்காவின் தென் கரையோரக் கிராமமான மடிலாவைச் சேர்ந்த நெல் மற்றும் வாழை பயிரிடும் விவசாயி ஒருவர் தெரிவித்தார். ‘அவரது ஆட்சிக்காலத்தில் விவசாய உரங்கள் தற்போதைய விலையை விட எட்டு மடங்கு குறைவாகக் காணப்படுகிறது.
தற்போது விவசாயப் பொருட்களின் விலை அதிகரித்ததால் எனது வருடாந்த இலாபமானது அரைவாசியாகக் குறைந்துள்ளது. தற்போது உரமானியங்களைப் பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது. சிலவேளைகளில் இவற்றைப் பெறமுடியாத நிலையும் காணப்படுகிறது’ என குறித்த விவசாயி தெரிவித்தார்.
இப்பிரதேசத்தில் சீனர்களின் செல்வாக்கு அதிகரித்து வருவதாக பிறிதொரு தென்னிலங்கை விவசாயி கருணானப்பால கவலை தெரிவித்தார். சீன அரசிற்குச் சொந்தமான நிறுவனத்திடம் அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டுகால குத்தகைக்கு வழங்குவதாக சிறிசேன அரசாங்கம் கடந்த டிசம்பரில் தீர்மானித்தது. ராஜபக்ச அரசாங்கத்தால் சீனாவிடமிருந்து கடனாகப் பெறப்பட்ட 8 பில்லியன் டொலரைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையிலேயே இத்தீர்மானத்தை சிறிசேன அரசாங்கம் எடுத்தது.
‘சிறிசேன எமது சொத்துக்களை விற்பதற்காக வெளிநாடுகளுக்குச் செல்வதை விட எமக்காக என்ன செய்துள்ளார்?’ என கருணானப்பால வினவினார்.
2015 தொடக்கம் சில மாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக கொழும்பிலுள்ள சிவில் அமைப்புக்கள் கூறுகின்றனர். அதாவது ஊடகத் தணிக்கை நீக்கப்பட்டுள்ளமை மற்றும் ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இரவு வேளைகளில் ஊடகவியலாளர்களின் வீடுகளுக்கு வெளியே நிறுத்தப்பட்ட இராணுவ வாகனங்கள் தற்போது காணப்படாமை, தற்போது ஊடகங்களால் அரசாங்கத்தைக் கூட விமர்சிப்பதற்கான ஊடக சுதந்திரம் உள்ளமை போன்ற பல்வேறு மாற்றங்கள் சிறிசேன அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்டுள்ளதாக சிவில் அமைப்புக்கள் குறிப்பிட்டுள்ளன. அத்துடன் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் விரட்டியடிக்கப்பட்ட மனித உரிமை அமைப்புக்கள் தற்போது மீண்டும் தமது அலுவலகங்களை சிறிலங்காவில் திறந்துள்ளதையும் காணலாம்.
மக்கள் தற்போது இயல்பு வாழ்வை வாழ்வதாக வழக்கறிஞரும், Transparency International என்கின்ற அமைப்பின் சிறிலங்காவிற்கான இயக்குநருமான அசோக ஒபயசேகர தெரிவித்தார். ‘பொதுமக்கள் தற்போது அச்சமின்றி வாழ்கின்றனர்’ என அவர் குறிப்பிட்டார்.
ராஜபக்ச மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் வன்முறைக் குற்றச்சாட்டுக்கள் போன்றன நன்கு திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்பட்ட பரப்புரை என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
‘நாங்கள் புதியதொரு ஆரம்பத்திற்காக காத்திருக்கிறோம். நாங்கள் எமது தவறுகளைத் திருத்திக் கொள்வோம். எமது அயல் நாடுகளுடன் பரந்ததொரு நட்புறவை வளர்த்துக்கொள்வோம்’ என நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
தனது கட்சியானது மேற்குலக நாடுகளுடன் தூய்மையான உறவை ஏற்படுத்தும் எனவும் ஆனால் இறுதிக்கட்ட யுத்தத்தில் 40,000 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான ஐ.நா பாதுகாப்புச் சபையின் விசாரணையின் பங்கெடுப்பது தொடர்பாக ஆழமாக ஆராயப்பட வேண்டிய தேவையுள்ளதாகவும் நாமல் ராஜபக்ச மேலும் குறிப்பிட்டார்.
‘எந்தவொரு யுத்தமும் இழப்புக்களைக் கொண்டதாகவே இருக்கும். நாங்கள் அதனை மறுக்கவில்லை ஆனால் இதன் முடிவானது எதிர்காலத்திற்கு தேவையானதாகும்’ என நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.
ராஜபக்சவின் குடும்பத்தின் எதிர்காலமானது தற்போதும் கேள்விக்குறியாகவே உள்ளது. இவர்களது கட்சியானது உள்ளுராட்சித் தேர்தலில் 45 சதவீத வாக்குகளைப் பெற்றுக்கொண்டது. ஆனால் இத்தேர்தல் பெறுபேறானது நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையையோ அல்லது அதிபர் பதவிக்கான வெற்றியைப் பெற்றுக்கொடுக்கப் போதுமானதாக இல்லை.
எதிர்க்கட்சிகள் தமக்குள் உள்ள பேதங்களைக் களைந்து 2015ல் ஒன்றுசேர்ந்தது போன்று தற்போதும் ஒன்று சேர்ந்தால் ராஜபக்சாக்களை அரசியலிலிருந்து ஓரங்கட்ட முடியும். ‘உள்ளுராட்சித் தேர்தல் பெறுபேறானது இந்த நாட்டில் எந்தவொரு அரசியல் கட்சியும் தனித்து பெரும்பான்மை ஆதரவைப் பெற்றுக்கொள்ள முடியாது என்பதை வெளிப்படுத்துகிறது. ஆகவே இக்கட்சிகள் ஒன்றுசேர்ந்து ஒரு கூட்டணியின் கீழ் போட்டியிடும் போது பெரும்பான்மை வெற்றியைப் பெற்றுக் கொள்ள முடியும்’ என வழக்கறிஞரான அசோக ஒபயசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
நன்றி - புதினப்பலகை