Paristamil Navigation Paristamil advert login

தமிழ் தேசியத்தில் இருந்து விலகியுள்ள தமிழரசுக் கட்சி…?

தமிழ் தேசியத்தில் இருந்து விலகியுள்ள தமிழரசுக் கட்சி…?

8 சித்திரை 2018 ஞாயிறு 15:25 | பார்வைகள் : 8816


 அரசியல் அரங்கில் புதியதும், நூதனமானதுமான ஒரு தேர்தல் முறையை உருவாக்குவதற்கான சட்டத்தை நிறைவேற்றி அதனூடாக 60 வீத வட்டார முறையையும், 40 வீத விகிதாசார அடிப்படையிலும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தி இலங்கை அரசாங்கம் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது. 

 
இதில் மற்றொரு சிறப்பம்சமாக நடைமுறை சாத்தியமற்ற வகையில் 25 வீதம் பெண்கள் அவைகளில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்ற அம்சமும் உள்ளடங்கும். சட்டத்தரணிகளின் வல்லமையுடன் உருவாக்கப்பட்ட இந்த நூதன சட்டமானது அதிக ஆசனங்களைப் பெற்றுக் கொண்ட கட்சிகள் கூட உள்ளூராட்சி சபைகளில் ஆட்சிப் பொறுப்பை ஏற்க முடியாமல் போனமை மேலும் ஒரு சாதனை. 
 
இந்த சட்டத்தை உருவாக்குவதற்கும், அதனை நிறைவேற்றுவதற்கும் தமிழ் தலைமைகளும் குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தனது பங்களிப்பை சிறப்பாக செய்திருந்தது. நடந்தைவைகளைப் பார்க்கின்ற போது ஒரு குறைநத்தபட்ச பொது அறிவு கூட இல்லாமல் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதோ என்ற கேள்வி பலரது மத்தியிலும் தற்போது எழுந்திருப்பதை உணரமுடிகிறது. தமிழரசுக் கட்சியின் தலைவரும் கூட இந்த சட்டத்தை உருவாக்கியவர்களுக்கே இது சாதமாக அமையவில்லை என்று தெரிவித்திருப்பதன் மூலம் மேற்சொன்ன கருத்து நிரூபணமாகிறது.
 
பல்வேறு பத்தி எழுத்தாளர்களும், அரசியல் விமர்சகர்களும் இந்தச் சட்டத்தின் சாதக, பாதகங்களை எடுத்துக் கூறி தேர்தல் பிரச்சார மேடைகளில் அவதானமாக செயற்படுமாறு விடுத்த கோரிக்கைகள் அனைத்தும் காற்றில் பறக்கவிட்டு, அவரவரர் தாம் தாம் நாட்டு பற்றாளர் போலவும், தமிழ் தேசிய இனத்தின் விடுதலையை வென்றெடுப்பவர் போலவும் கருதிக் கொண்டு கடந்தகால செயற்பாடுகளை வாய்க்கு வந்தபடி விமர்சனம் செய்து வந்தனர். 
 
இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு நிறைவேறிய கையோடு இந்த சட்டமூலமும் நிறைவேற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. உள்ளூராட்சி சபைகளில் 60 இற்கு 40 அதேபோன்று மாகாண சபைக்கும் 60 இற்கு 40 என்று இருந்த சட்ட மூலத்தில் உள்ளூராட்சி சபைகளை அப்படியே ஏற்றுக் கொண்ட மனோகணேசன், ஹக்கீம், றிசாட் போன்றவர்கள் மாகாணசபைக்கு 50 இற்கு 50 வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அதில் வெற்றியும் ஈட்டி அதனை சட்டமாக மாற்றியிருந்தனர். அதனுடைய பலாபலன்கள் இன்று அனைத்து கட்சிகளாலும் உணரப்படுகிறது.
 
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை நோக்குகின்ற போது தமிழ், சிங்கள ஆளும் வர்க்கங்கள் ஏற்கனவே திட்மிட்டு ஒரு நிகழ்ச்சி நிரலை உருவாக்கி அதன் அடிப்படையிலேயே இந்த தேர்தல் சட்டத்தை இயற்றி அதன் மூலம் தமிழ் தேசிய இனத்தின் அடையாளத்தையும், அதன் இருப்பையும் சவாலுக்கு உட்படுத்துவதை நோக்கமாக கொண்டிருந்தனவா என்ற கேள்வி இயல்பாகவே எழுகின்றது. 
 
வடக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் இடம்பெற்று வரும் சிங்கள குடியேற்றங்கள், பாதுகாப்பு தரப்பினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வரும் பௌத்த விகாரை நிர்மாணிப்புக்கள் வடக்கு மாகாண சபையினராலும், ஈபிஆர்எல்எப் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னனி ஆகியோரினாலும் காட்டப்பட்டு வரும் எதிர்ப்புக்களை தமிழரசுக் கட்சி சரியாக கையாளாமலும், பாராளுமன்றத்தில் தனக்குரிய எதிர்கட்சித் தலைவர் பதவியை முறையாக பயன்படுத்தி அதனை தடுக்காமலும் விட்டதுடன், ஜனாதிபதி வடக்கிற்கு வந்திருந்த போது அவரால் வழங்கி வைக்கப்பட்ட குடியேற்ற காணிகளுக்கான உறுதிகளை அவர்களும் இணைந்து வழங்கியதில் இருந்து அந்த நிகழ்ச்சி நிரலில் தமிழரசுக் கட்சிக்கும் தொடர்பு இருக்கிறதோ என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது.
 
தற்போது வடக்கில் தமிழ் தேசிய உணர்வுடன் உள்ள அரசியல் சக்திகளின் துணையுடன் உள்ளூராட்சி சபைகளை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருந்த போதிலும், பொறுப்பற்ற தன்மையில் ஒரு பொதுவான விளக்கத்தை கொடுத்துவிட்டு தென்னிலங்கை அரசியல் சக்திகளின் துணையுடனும், அதனுடன் ஒத்திசைந்து செயற்படும் சக்திகளுடனும் இணைந்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி இருப்பதில் இருந்து அந்த நிகழ்ச்சி நிரலுக்காக தமிழரசுக் கட்சியின் ஈடுபாடும் இருந்திருக்குமா என்ற சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது.
 
தென்னிலங்கை அரசியல் சக்திகளுடன் இணைந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள தமிழரசுக் கட்சியினருக்கு தென்னிலங்கையின் நிகழ்சி நிரலை மீறி தீர்மானங்களை மேற்கொள்ள முடியுமா என்ற கேள்வி எழுகிறது. மேலும் அரசியல் தீர்வு, மற்றும் நாளாந்த பிரச்சனைகள் தொடர்பில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கத் தவறினால் சாத்வீக போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக சொல்லியிருக்கும் தமிழரசுக் கட்சியுடன் இந்தக் கட்சிகள் கைகோர்க்குமா என்ற கேள்வியும் எழுகிறது.
 
குறைந்தபட்ச ஆசனங்களை கொண்டுள்ள போதிலும் அந்தக் கட்சியினர் முன்வைக்கின்ற அபிவிருத்தி திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்காமல் தமிழரசுக் கட்சி தான் நினைத்தவாறு பணிகளை மேற்கொள்ள முடியுமா..? தேசிய சுயநிர்ணய உரிமை விடயத்தில் உள்ளூராட்சி அமைப்புக்கள், அதன் உறுப்பினர்கள் எத்தகைய தாக்கமான ஈடுபாட்டையும், செயற்பாடுகளையும் தமிழரசுக் கட்சியின் கீழ் முன்னெடுக்கப் போகின்றனர். அதற்கு உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைக்க முண்டு கொடுத்துள்ள தென்னிலங்கை கட்சிகளும், அதனுடன் இணைந்து செயற்படும் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்குவார்களா என்ற கேள்வியும் இயல்பாகவே எழுகிறது.
 
பாராளுமன்றத்தில் அரசியல் ரீதியான விடயங்களை முன்வைத்து தேசிய இனப்பிரச்சனையை தீர்க்கமான முறையிலும், தமிழ் மக்களின் அபிலாசைகளையும், உரிமைகளையும் நிறைவேற்றக் கூடிய வகையிலும் செயற்படுவதற்காகவே விடுதலைப் புலிகளின் ஆதரவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியாக பலம் பெற்று தேசிய இனப்பிரச்சனையை கையில் எடுத்து செயற்பட்டு இருந்தவரை, தமிழ் தேசியக் கூட்டமைப்பினுடைய பணியானது பாராளுமன்றத்திற்குள் மட்டும் முடங்கியிருந்தது. 
 
2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் தமிழ் தேசிய இனப்பிரச்சனையை பாராளுமன்றத்திற்குள்ளும், அதற்கு வெளியிலும், சர்வதேச மட்டத்திலும் எடுத்துச் சென்று அனைத்து தரப்பினருக்கும் தமிழ் தேசிய இனத்தின் உரிமையை வென்றெடுப்பதற்கான நியாயத்தை எடுத்துச் சொல்லி, அவர்களை இணங்க வைத்து, அந்த கோரிக்கையை வெற்றியடையச் செய்ய வேண்டிய பாரிய பொறுப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் தானாகவே வந்து சேர்ந்திருந்தது. இதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாகிய காலத்தில் இருந்து தமிழ் மக்கள் வழங்கி வந்த ஆதரவே காரணமாகும்.
 
2010 ஆம் ஆண்டு தேர்தலுக்கு பின்னர் இந்த பாரிய பொறுப்பை நிறைவேற்றுவதில் இருந்து தமிழரசுக் கட்சி மெல்ல மெல்ல நழுவி கூட்டமைப்பை பலப்படுத்துவது என்ற பெயரில் தமிழ் தேசியத்தை சிதைத்து தனது கட்சியை பலப்படுத்திக் கொள்வதிலும், அங்கத்துவக்கட்சிகளை ஒவ்வொன்றாக வெளியேற வைப்பதிலுமே கவனம் செலுத்தி வருகின்றது. ஒரு புறம் தமிழரசுக் கட்சி தன்னிச்சையான முடிவுகளை எடுத்து விட்டு அதனையே கூட்டமைப்பின் முடிவாக அறிவித்து தவறுகளை ஒட்டுமொத்த கூட்டமைப்பின் மீது பழிபோடுவதில் இன்று வரை அந்தக் கட்சி வெற்றியடைந்துள்ளது என்றே சொல்ல வேண்டும். 
 
நான்கு கட்சிகளைக் கொண்டிருந்த கூட்டமைப்பில் ஒரு கட்சியினர் மட்டுமே தமிழரசுக் கட்சியினுடைய தன்னிச்சையான செயற்பாடுகளையும், தவறான கொள்கைகளையும் விமர்சித்து வந்தனர். ஈற்றில் அந்தக் கட்சியும் கடுமையான கொள்கை முரண்பாட்டின் காரணமாக வெளியேறி விட்டது. இப்பொழுது தமிழரசுக் கட்சியின் தலைமையில் உள்ள சிலரது தான்தோன்றித்தனமான செயல்பாடுகளினால் தேசியம் சிதைக்கப்படுவதை உணர்ந்து கொண்ட அந்தக் கட்சியை சேர்ந்த உண்மையான சக்திகள் தலைமைக்கு எதிராக தமது குரலை மெல்ல உயர்த்தத் தொடங்கியுள்ளனர்.
 
கட்சித் தலைமைக்குள்ளேயும் ஒரு புரிந்துணர்வு அற்ற, ஒருங்கிணைந்த செயற்பாடற்ற தன்மையும், அண்மைக்கால அறிக்கைகள் மற்றும் சம்பவங்கள் மூலம் தெரியவருகிறது. இது தமிழரசுக் கட்சியின் தலைமை தனது கட்சியையே வழிநடத்த முடியாமல் இருப்பதை புலப்படுத்துகிறது. இந்த நிலையில் தேர்தலை மையமாக வைத்து புதிதாக உள்ளூராட்சி சபை தேர்தலின் ஊடாக கட்சிக்குள் உள்வாங்கப்பட்டவர்கள் எப்படி கட்சியுடன் இணைந்து செய்பட போகிறார்கள் என்ற கேள்வியையும் எழுப்புகிறது. இதுவரை காலமும் அரசியலில் நேரடி தொடர்பு அற்றவர்கவே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் என்பதனால் அந்தக் கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது.
 
தற்போதுள்ள உள்ளூராட்சி சபை தேர்தல் சட்ட விதிகளின் படி அரசாங்கத்திற்கு மாதம் தோறும் முன்பு இருந்ததை விட இரண்டு மடங்கு செலவுகள் அதிகரித்துள்ளது. ஏறத்தாழ அங்கத்தவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்திருப்பதே இதற்கு காரணம். அத்துடன் ஜனாதிபதி ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் 5 மில்லியன் ரூபாய் நிதியை அபிவிருத்திக்காக வழங்குவதாகவும் தெரிவித்து இருக்கிறார். நாடு இன்று எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியில் இவைகள் எந்தளவிற்கு சாத்தியமாகும் என்பது தெரியவில்லை. 
 
ஒரு புறம் இது சாத்தியமானலும் கூட உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் தேவையற்ற மனக்கசப்புக்களையும், முரண்பாடுகளையும் ஏற்படுத்துவதுடன் கிராமங்களில் உள்ள பொது அமைப்புக்கள் அவர்களை தவறாக கையாள்வதற்கும் வழிவகுத்து பொது அமைப்புக்களின் தத்தமது செல்வாக்கை அதிகரித்துக் கொள்வதற்கும் முறைகேடுகளில் ஈடுபடுவதற்கும் வழிவகுக்கும்.
 
ஒட்டுமொதத்தத்தில் நடைபெற்று முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலானது நாட்டிற்கு செலவுகளை அதிகரித்து இருப்பதுடன், கட்சிகள் தமது கொள்கைகளில் இருந்து விலகுவதற்கும் ஆட்சியை கைப்பற்றிக் கொள்வதற்காக தவறான அணுகுமுறைகளை மேற்கொள்வதற்குமே வித்திட்டுள்ளது. 
 
தமிழ் தேசிய இனத்தைப் பொறுத்தவரையில் அவர்கள் பெரிதும் நம்பியிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பானது தமிழரசுக் கட்சியின் ஒரு சிலரினால் முன்னெடுக்கப்படும் தவறான கொள்கை முடிவுகள் மற்றும் அணுகுமுறைகளின் காரணமாக அதன் அபிலாசைகளும் இதுவரை காலமும் அது போராடி வந்திருக்கின்ற உரிமைக் கோரிக்கையும் கைவிடப்பட்டு விடுமோ என்ற அச்சம் வெகுவாக எழுந்துள்ளது. தற்போது இந்தக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற ஏனைய இரண்டு கட்சிகளையும் தமிழ் தேசிய இனம் கொள்கை சார்ந்து முடிவு எடுக்கப் போகிறார்களா அல்லது தற்காப்பு அரசியலில் ஈடுபட்டு தமிழரசுக் கட்சியின் தயவில் தொங்கி இருக்கப் போகிறார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பொறுத்திருந்து பார்போம்.
 
நன்றி - சமகளம்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்