சீனாவின் இறுக்கமான பிடியில் சிக்கியுள்ள சிறிலங்காவின் துறைமுகம்!
26 பங்குனி 2018 திங்கள் 13:54 | பார்வைகள் : 9314
சிறிலங்காவின் தெற்கிலுள்ள அம்பாந்தோட்டைத் துறைமுகமானது ஆட்கள் நடமாட்டமில்லாத பாலைவனமாகக் காட்சியளிக்கின்றது. கடந்த மாத நடுப்பகுதியில் ஒரு நாள் பிற்பகல் இதன் வாயிலுள்ள தேநீர்ச் சாலையில் நின்ற போது ஒரு சில வாகனங்களை மட்டுமே காணமுடிந்தது.
‘முன்னர் பிற்பகலில் 10-15 வரையானவர்கள் தேநீர் அருந்துவதற்காக இங்கு வருவது வழக்கம். ஆனால் கடந்த டிசம்பர் மாதம் சிறிலங்கா அரசாங்கத்தால் இத்துறைமுகம் சீனாவிற்கு விற்கப்பட்டதை அடுத்து இங்கு எவரும் வருவதில்லை’ என தேநீர்ச்சாலையின் உரிமையாளரான வில்சன் தெரிவித்தார்.
இத்தேநீர்ச்சாலையானது சிறிலங்கா, அதாவது சிலோன், பிரித்தானிய கொலனித்துவத்திலிருந்து சுதந்திரமடைவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் 1946ல் நிறுவப்பட்டது.
‘எனது தந்தையார் இத்தேநீர்ச் சாலையை 1946ல் திறந்தார். ஆனால் தற்போது இத்துறைமுகத்தை சிறிலங்கா அரசாங்கம் சீனாவிற்கு விற்பதற்குத் தீர்மானித்ததன் பின்னர் நாங்களும் எமது தேநீர்ச்சாலையை விற்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளது’ என தேநீர்ச்சாலையின் உரிமையாளர் தெரிவித்தார்.
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியின் கீழ் சீனாவிடமிருந்து நிதியைப் பெற்று அமைக்கப்பட்ட அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் எதிர்பார்த்தளவு செயற்பாடுகள் இடம்பெறவில்லை. இதனால் இதனைப் பராமரிப்பதென்பது மிகவும் கடினமாக உள்ளது.
99 ஆண்டுகால குத்தகையின் கீழ் சீன அரசின் China Merchants Port Holdings நிறுவனத்திடம் இத்துறைமுகம் ஒப்படைக்கப்பட்ட பின்னரும் கூட தற்போதும் மிகச் சொற்பமான சரக்குகளே இத்துறைமுகத்தின் ஊடாக கொண்டு செல்லப்படுவதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.
சீனாவின் நோக்கம் என்ன? கடந்த கோடை காலப்பகுதியில் தென் ஆபிரிக்க நாடான டிஜிபோட்டியில் சீனா தனது முதலாவது வெளிநாட்டு கடற்படைத் தளத்தை நிறுவிய பின்னர், அம்பாந்தோட்டையிலும் பிறிதொரு கடற்படைத் தளத்தை நிறுவுவது தொடர்பாக சீனா ஆராய்கிறதா?
நிக்கி ஊடக செய்தியாளர் ஒருவர் அம்பாந்தோட்டை துறைமுக முகாமைத்துவ அலுவலகத்திற்கு நேரில் சென்று நேர்காணலை மேற்கொள்வதற்கான அனுமதியைக் கோரியிருந்தார். சீன அதிகாரிகளின் பெயர்ப் பட்டியலை வைத்திருந்த அந்த அலுவலகத்தின் வரவேற்பாளர் தொலைபேசி மூலம் தனது மேலதிகாரி ஒருவருடன் தொடர்பை ஏற்படுத்தி நேர்காணல் விடயம் தொடர்பாக கதைத்த பின்னர் வெறும் 10 செக்கனில் இக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இந்த அலுவலகத்தின் மேலதிகாரி விரைந்து அங்கு வந்தததுடன் முன்வாயிலின் ஊடாக எவ்வாறு இந்த ஊடகவியலாளர் உள்நுழைந்தார் என்பதையும் அறிந்து கொண்டார்.
‘உள்ளூர் மக்களோ அல்லது ராஜபக்ச கூட உள்ளே வருவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை’ என குறித்த மேலதிகாரி தெரிவித்திருந்தார்.
அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீனாவிடம் கையளித்ததன் பின்னர் இந்தியா இது தொடர்பில் மிகவும் எச்சரிக்கையுடன் உள்ளது. ‘இந்த விடயமானது இப்பிராந்தியத்தின் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்குவதாகவே நாங்கள் நோக்குகிறோம். எமது சிறிலங்கா நண்பர்கள் எமது பாதுகாப்பு மற்றும் எமது உணர்வுகள் தொடர்பாக நினைவில் வைத்துக் கொள்வார்கள் என நாம் எதிர்பார்க்கிறோம்’ என இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரவீஸ் குமார் தெரிவித்தார்.
ஆனால் சிறிலங்கா மீதான சீனாவின் கடன் சுமையானது சீனா தனது விருப்பம் போல் சிறிலங்காவில் செயற்படும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் இத்துறைமுகம் மீதான மேலதிக பிராந்திய உரிமையை சீனா தனதாக்கிக் கொள்வதற்கும் வழிவகுத்துள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்தின் கடன் சுமையானது இதன் மொத்தத் தேசிய உற்பத்தியின் 81.6 சதவீதமாகும் என கடந்த ஜனவரியில் வெளியிடப்பட்ட அனைத்துலக நாணய நிதியத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2017இன் இறுதியில் சிறிலங்காவின் வெளிநாட்டுக் கடனானது மொத்தத் தேசிய உற்பத்தியின் 58.2 சதவீதமாகும்.
சிறிலங்காவால் சீனாவிற்கு 8 பில்லியன் டொலர் நிதி கடனாக வழங்கப்பட வேண்டும். 2015ல் அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது, சீனாவிற்கு ஆதரவான ராஜபக்சவிடமிருந்து பெரும் கடன் சுமையைப் பொறுப்பேற்றனர்.
அதற்கு அடுத்த ஆண்டு அதாவது 2016ல், விரிவுபடுத்தப்பட்ட நிதி வசதியின் கீழ் அனைத்துலக நாணய நிதியத்தால் நிதியுதவியாக மூன்று ஆண்டுகால சீர்திருத்த நிகழ்ச்சித் திட்டத்திற்காக 1.5 பில்லியன் நிதியுதவியை சிறிலங்கா பெற்றிருந்தது.
வருமானம் குறைவாக இருப்பினும், சிறிலங்கா அரசாங்கம் நிதி விடயத்தில் சிறந்த நடைமுறையைக் கடைப்பிடிக்க முற்பட்ட போதிலும் அனைத்துலக நாணய நிதியத்தின் நிதியுதவியானது சீனாவின் கையை மட்டுமே பலப்படுத்துவதாகத் தோன்றுகிறது.
‘இவ்வாறானதொரு சூழலில், சீனாவிடம் 1.1 பில்லியன் டொலருக்கு அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை விற்பதைத் தவிர வேறு வழியில்லை என பொருளாதார அமைச்சுடன் தொடர்புபட்ட மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ‘நாங்கள் எங்கிருந்தாவது நிதியைப் பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. சீனாவைத் தவிர எந்தவொரு நாடோ அல்லது நிறுவகமோ உடனடியாக நிதியைத் தரும் நிலையில் இருக்கவில்லை’ என குறித்த அதிகாரி தெரிவித்தார்.
அனைத்துலக நாணய நிதியமும் அம்பாந்தோட்டை துறைமுக விவகாரத்தை வரவேற்றுள்ளனர். ‘பொதுச் சொத்தை அதாவது அம்பாந்தோட்டை துறைமுகத்தை எதிர்கால கடன் சேவைக்காக வர்த்தகமயப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதியளித்தமை மற்றும் இந்த நாட்டின் கடன்சுமையை முகாமைத்துவம் செய்வதற்கான முயற்சிகளை அனைத்துலக நாணய நிதியம் வரவேற்றுள்ளது’ என இதன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராஜபக்ச ஆட்சியின் கீழ் உருவாக்கப்பட்ட பயனற்ற பிறிதொரு திட்டமான மத்தல ராஜபக்ச அனைத்துலக விமானநிலையத்தை விற்பது தொடர்பாகவும் பேச்சுக்கள் நடாத்தப்படுகின்றன. ஏனெனில் இந்த விமான நிலையத்தைப் பராமரிப்பது சிறிலங்கா அரசாங்கத்திற்கு சுமையாக உள்ளது.
‘2018 தொடக்கம் சிறிலங்கா அரசாங்கமானது தான் பெற்ற கடனை மீளச் செலுத்துவதற்கு சிரமப்படுகிறது. 2019ல் அனைத்துலக நாணய நிதியத்திடம் பெற்ற 1.5 பில்லியன் டொலர் இறையாண்மைப் பத்திரத்தை சிறிலங்கா அரசாங்கம் மீளச்செலுத்துவதற்கான தயார்ப்படுத்தலை மேற்கொள்ள வேண்டும்’ என அனைத்துலக நாணய நிதியத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விமான நிலையத்தைப் பொறுப்பேற்பதில் இந்தியா ஆர்வம் காண்பிப்பதாகவும் இதற்காக கடந்த ஆண்டு இந்தியப் பிரதிநிதிகள் இங்கு வருகை தந்ததாகவும் ஆனால் சமரசம் எட்டப்படவில்லை எனவும் விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சீனா இத்துறைமுகத்தை வாங்கினால், இது ஒரு விமானப் படைத் தளமாக மாறும் எனக் கூறப்படுகின்றது. ‘தற்போதைய அரசாங்கம் எதனையும் செய்யவில்லை’ என காலியைச் சேர்ந்த ரக்சி ஓட்டுநர் ஒருவர் தெரிவித்தார்.
அரசாங்கத்திற்கு நிதிப் பிரச்சினை உள்ளது. ஆனால் நாட்டு மக்கள் இதனை எப்போதும் பார்க்க முடியாது. ‘துறைமுகங்கள், விமான நிலையம், நெடுஞ்சாலைகள் போன்ற பல பாரிய அபிவிருத்தித் திட்டங்களை ராஜபக்ச மேற்கொண்டிருந்தார்’ என ரக்சி ஓட்டுநர் குறிப்பிட்டார்.
இந்த அரசாங்கத்தின் மீது அதிருப்தியடைந்த வாக்காளர்கள், கடந்த மாதம் இடம்பெற்ற உள்ளுராட்சித் தேர்தலில் ராஜபக்சவின் புதிய கட்சிக்கு தமது வாக்குகளை வழங்கினர். இப்புதிய கட்சியானது இத்தேர்தலில் 70 சதவீத வாக்குகளைப் பெற்று 340 உள்ளுராட்சி சபைகளைத் தனதாக்கியுள்ளது.
கல்விமான்கள் மத்தியில் முன்னாள் அதிபர் ராஜபக்சவிற்கான ஆதரவு அதிகம் காணப்படுகிறது. கொழும்பில் ராஜபக்சவால் ஆரம்பிக்கப்பட்ட சீனாவின் நிதியுதவியுடன் அமைக்கப்படும் துறைமுக நகரத் திட்டமானது ‘எமது சுற்றுலாத்துறையை மேம்படுத்த உதவும்’ என பொருளாதார அமைச்சை சேர்ந்த அதிகாரி குறிப்பிட்டார். இத்திட்டமானது 1.5 பில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா, யப்பான், அமெரிக்கா போன்ற அதிகாரத்துவ நாடுகள், சிறிலங்கா சீனாவிடம் நெருக்கமான உறவைப் பேணுவதைத் தடுப்பதற்கு விரும்பினால், எவ்வாறான நடவடிக்கையை முன்னெடுக்க முடியும்? சிறிலங்கா, சீனாவிடமிருந்து பெற்ற அனைத்து கடனையும் இந்த நாடுகள் மீளச்செலுத்துவதற்கு உதவ முடியாதா? நாட்டின் நிதிக் கொள்கைக்கு மாறான பெரிய கட்டுமானத் திட்டங்களை சிறிலங்கா நிறுத்துவதற்கு இந்த நாடுகள் உதவமுடியாதா?
இப்பிராந்திய அதிகாரத்துவ நாடுகள் சிறிலங்கா விடயத்தில் மாற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதை தாமாகவே உணர்ந்து கொள்ளும் நிலை ஏற்படலாம்.
நன்றி - புதினப்பலகை