முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்?
11 பங்குனி 2018 ஞாயிறு 12:42 | பார்வைகள் : 9299
“தனது மக்களுக்கு இலவசக் கல்வி, இலவச சுகாதார சேவை போன்ற பல்வேறு சமூக நலத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்திய இலங்கைக்கு சமாதானம் இலகுவாகக் கிட்டியிருந்திருக்க வேண்டும். ஆனால் பௌத்தத்துக்கும், சிங்கள பெரும்பான்மையினருக்கும் உயர்நிலை வழங்கும் நிலையை அந்நாடு எடுத்ததால், ஏனைய மக்கள் சமூகத்தை தேசிய ரீதியாக அடையாளப்படுத்தும் உணர்வில் அதைத் தனிமைப்படுத்தி விட்டது.அந்த நிலைப்பாட்டிலிருந்து தன்னை விடுவித்துத் திருந்தும் போக்கு இலங்கையில் தென்படுவதாக இல்லை. பன்மைத்துவத்தில் உள்ள சிறப்பை இலங்கை உணர்ந்துகொள்ளவேயில்லை.” -அமர்தியா சென்
அம்பாறையிலும் கண்டியிலும் நிகழ்ந்த சில தனிப்பட்ட சம்பவங்கள் அல்லது குழுக்களுக்கிடையிலான மோதல்கள் சமூகங்களுக்கிடையிலான வன்முறைகளாக அவற்றின் விகார வடிவத்தை அடைந்ததாக பொதுவாகக் கூறப்படுகின்றது. ஆனால் அம்பாறையிலிருந்து கண்டி வரையிலான நெடுஞ்சாலையில் அமைத்திருக்கும் பலகொல்ல, ஜெங்கல்ல,ரஜவெல்ல,திகன,மெதமகானுவர, உனஸ்கிரிய, தெல்தெனிய, ஜிங்கிராபுர ஆகிய நகரங்களில் முஸ்லிம் கடைகள் தாக்கப்படுள்ளன.குறிப்பாக திகணவில் மேல் நகரம் கீழ் நகரம் ஆகிய இருநகரங்களிலும் கிட்டத்தட்ட எழுபது வீதமான கடைகள் முஸ்லிம்;களுக்குரியவை. இக்கடைகளை முதல் நாளே வந்து அடையாள கண்டிருக்கிறார்கள்.இக்கடைகளில் கணிசமானவை திட்டமிட்டு இலக்கு வைக்கப்பட்;;டிருக்கின்றன.மேலும், அம்பாறை கண்டி நெடுஞ்சாலையில் ஆங்காங்கே காணப்பட்ட குட்டிக் குட்டிப் பெட்டிக் கடைகள்கூடத் தப்பவில்லை என்று கூறப்படுகிறது. இது எதைக்காட்டுகிறது?
இத் தாக்குதல்களின் பின்னணியில் ஒரு பொருளாதாரத் திட்டம் இருப்பதைத்தான் காட்டுகிறது. சில ஆண்டுகளுக்க முன் அழுத்கம உள்ளிட்ட தென்னிலங்கையின் ஏனைய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் பின்னாலும் இதே பொருளாதாரத் திட்டம்தான் இருந்தது. அது போலவே கடந்த நூற்றாண்டில் தமிழ் மக்களுக்கு எதிராக தென்னிலங்கையி;ல் மேற்கொள்ளப்பட்ட எல்லாத் தாக்குதல்களுக்குப் பின்னாலும் இதே பொருளாதாரத் திட்டம்தான் இருந்தது. பொதுபலசேனா தனது முதலாவது பத்திரிகையாளர் மாநாட்டை நடத்திய போது அதில் ஒரு கருத்து முன்வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பௌத்த பொருளாதார இராட்சியம் ஒன்றைக் கட்டியெழுப்புவது என்பதே அதுவாகும். எனவே அம்பாறையிலும் கண்டியிலும் நடந்தவற்றை நன்கு திட்டமிடப்பட்ட நிறுவனமயப்பட்ட தாக்குதல்களாகவே பார்க்க வேண்டும. அவை வெற்றிடத்திலிருந்து தோன்றவில்லை. தனது கால்களை மடக்கிக்கொண்டு படுத்த கெமுனு குமாரனின் அச்சங்களிலிருந்தும் முற்கற்பிதங்களிலிருந்தும் ஏனைய சிறிய இனங்களின் மீதான சந்தேகங்களிலிருந்தும் அது தொடங்குகிறது.
கண்டி மாநகரம் எனப்படுவது சிங்கள – பௌத்த நாகரிகத்தின் பண்பாட்டுத் தலைநகரமாகும். முஸ்லிம்களின் இரண்டாவது பலம் மிகுந்த ஒரு நகரம் அது. மூவின மக்களும் ஒன்றாக வாழும் ஒரு பண்பாட்டு மையம். அப்படியொரு பண்பாட்டு மையத்தில் அதன் வர்த்தகத்தின் கணிசமான பகுதியைக் கட்டியெழுப்பிய ஒரு சமூகத்திற்கு எதிராக வன்முறைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. கடந்த நூற்றாண்டில் 1915ல் நாட்டில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக வன்முறைகள் வெடித்தன. இப்பொழுது கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்குப் பின்னரும் அதே வன்முறைச் சூழல் மாறாது காணப்படுகிறது. ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து எட்டாண்டுகள் ஆகின்றன. ஆனால் இலங்கைத் தீவின் சமூகங்களுக்கிடையிலான உறவில் நல்லிணக்கத்தை அதன் மெய்யான பொருளில் கட்டியெழுப்ப முடியவில்லை என்பதைத்தான் மேற்படி சம்பவங்கள் காட்டி நிற்கின்றன. ஐ.நாவின் சிறப்புத் தூதுவர் ஒருவர் நாட்டிற்கு வருகை தந்திருக்கும் ஒரு கால கட்டத்திலேயே இவ்வாறு நடந்திருக்கிறது.
அதைக் கலவரம் என்றோ வன்முறை, இனமோதல் என்றோ கூறக்கூடாது. ஏனெனில் பெருமளவிற்குத் தாக்கப்பட்டது முஸ்லீம்கள்தான் இதில் முஸ்லீம்கள் திருப்பித்தாக்கிய சந்தர்ப்பங்கள் மிகக் குறைவு. ஒரு விகாரை தாக்கப்பட்டதும் உட்பட எண்ணிக்கையில் குறைவான சம்பவங்களே பதிவாகியுள்ளன. பெருமளவுக்கு அடிவாங்கியது முஸ்லீம்கள் தான் எனவே இதனை முஸ்லீம்களுக்கு எதிரான கடும்போக்குச் சிங்கள பௌத்த வாதிகளின் தாக்குதல் என்றே கூறவேண்டும்.
“தெரியாத ஒரு சக்தி கிராம இளைஞர்களைத் தூண்டி விட்டு குளிர்காய்கிறது” என்று அரசுத்தலைவர் கூறியுள்ளார். அது ஒன்றும் தெரியாத சக்தி அல்ல. அது மகிந்தவுக்கு நெருக்கமான ஒரு சக்தி மட்டுமல்ல. மைத்திரிக்குள்ளும் ரணிலுக்குள்ளும் அந்த சக்தி ஒளிந்திருக்கிறது. மகிந்தவிடம் இருப்பதை விட குறைவான விகிதத்தில் அது இவர்களிடம் இருக்கிறது. அதை தங்களுக்குப் புறத்தியான சக்தியாக கூட்டரசாங்கம் காட்டப்பாக்கின்றது. ஆனால் இச்சக்தியை முகத்துக்கு நேரே எதிர்ப்பதற்கு கூட்டரசாங்கமும் தயாரில்லை. அச் சக்தியின் கவசம் போலக் காணப்படுவதே ஸ்ரீலங்காவின் படைக்கட்டமைப்பாகும். என்பதனால்தான் ஓர் அதிரடிப்படை வீரன் ஒரு வறிய முஸ்லீம் தாக்கப்படும் இடத்தில் வேடிக்கை பார்ப்பதோடு அதை ரசித்துச் சிரிக்கவும் செய்கிறார். இக்காட்சி அடங்கிய காணொளித் துண்டினை கொழும்பு ரெலிகிராப் அண்மையில் பிரசுரித்திருந்தது.
அதைப் போன்றதே படைகளின் பிரதானி விஜய குணவர்த்தன தெரிவித்திருக்கும் கருத்துக்களும். முஸ்லீம் மக்கள் தமிழ் மக்களுக்கு எதிராக வழங்கிய உளவுத்துறை சார்ந்த பங்களிப்பே போரில் பெற்ற வெற்றிகளுக்குக் காரணம் என்று அவர் கூறியுள்ளார். இது முஸ்லீம்களை பெருமைப்படுத்துவது போலத் தோன்றலாம் ஆனால் இதன் தர்க்க பூர்வ இறுதி விளைவென்பது முஸ்லீம்களை தமிழர்களோடு மோத விடக் கூடியது. வன்முறைகளின் பின்ணணியில் முஸ்லீம் மக்கள் தமிழ் மக்களை நோக்கி போகக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வேடு இவ்வாறு கூறப்பட்டதா? முதலாவது சிறுபான்மைக்கு எதிராக இரண்டாவது சிறுபான்மையை திருப்பிவிடக் கூடிய உத்தி இது. இரண்டு சிறுபான்மைகளுக்கும் எதிரான ஒரு பொது எதிரிக்கு எதிராக சிறுபான்மையினர் ஒற்றுமைப்படக் கூடாது என்று திட்டமிடும் ஒருவரால் தான் இப்படிக் கூற முடியும். தாக்குதல்களின் பின்னணியில் தமிழ் மக்களை நோக்கி முஸ்லீம் மக்களோ அல்லது முஸ்லிம்களை நோக்கி தமிழ மக்களோ போகக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு இக் கூற்றில் உள்ளது.
எனவே சிங்கள பௌத்த அடிப்படை வாதம் எனப்படுவது மிகத்தெளிவான இராணுவத்திட்டங்களோடும் பொருளாதாரத் திட்டங்களும் காணப்படுகிறது. மைத்திரி கூறுவது போல அது ஒரு தெரியாத சக்தி அல்ல.
ஆனால் அதற்காக முஸ்லீம் தலைவர்கள் எதிர்ப்பு அரசியலைக் கையில் எடுக்கப் போவதில்லை. ஒரு முஸ்லிம் தலைவர் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால் தான் தீக்குளிக்கப் போவதாக அறிவித்திருந்தார். மற்றொருவர் முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்த வேண்டி வரும் என்று எச்சரித்திருந்தார். ஆனால் இவை இரண்டுமே நடக்கப் போவதில்லை. ஏனெனில் இணக்க அரசியலைத் தவிர முஸ்லிம் தலைவர்களுக்கு வேறு எந்த தெரிவையும் இலங்கை அரசியல் விட்டு வைக்கவில்லை. தமது வாக்காளர்களை அமைதிப்படுத்துவதற்காக முஸ்லிம் தலைவர்கள் வீர வசனங்களைப் பேசலாம். ஆனால் யதார்த்தத்தில் அரசாங்கத்தோடு குறிப்பாக ரணில் – மைத்திரி அரசாங்கத்தோடு உறவைப் பேணுவதைத் தவிர அவர்களுக்கு வேறு தெரிவுகளே இல்லை. ஏனெனில் இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்ததில் முஸ்லிம்களுடைய வாக்குகளுக்கும் அதிகம் பங்குண்டு. இனிமேலும் ரணில் – மைத்திரி கூட்டாட்சியை பாதுகாக்க வேண்டிய தேவைதான் முஸ்லிம் தலைவர்களுக்கு உண்டு.
பொதுபல சேனா எனப்படுவது ராஜபக்சக்களின் கள்ளக் குழந்தை என்றே பெரும்பாலான முஸ்லீம் மக்கள் நம்புகிறார்கள். தாமரை மொட்டின் மலர்ச்சியின் பின்னணியிலுள்ள ஒரு கூட்டு உளவியலே தாக்குதல்களுக்கான ஊக்கத்தை வழங்கியது என்பது ஒரு பொதுவான கருத்து. ரணில் விக்கிரமசிங்க சட்டம் ஒழுங்கு என்பவற்றுக்குப் பொறுப்பான அமைச்சராக இருந்த ஒரு காலகட்டத்தில் மேற்படி தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. எனவே முஸ்லீம்களுக்குப் பொறுப்புக் கூற வேண்டியவர் அவர் தான். ஆனால் அதற்காக முஸ்லீம் மக்கள் அவருக்கு எதிராக திரும்பப் போவதில்லை. ரணிலை சங்கடப் படுத்துவதற்காக கடும்போக்குச் சிங்களப் பௌத்தர்கள் மேற்கொண்ட தாக்குதல்களாகவே அவர்கள் இதைப் பார்ப்பார்கள். ரணிலைப் பாதுகாக்கா விட்டால் கடும்போக்குச் சிங்களப் பௌத்தர்கள் மறுபடியும் அதிகாரத்தைக் கைப்பற்றி விடுவார்கள் என்றே அவர்கள் சிந்திப்பார்கள். சிங்கள பௌத்த தலைவர்களில் யாரோடு கூடுதலாக இணங்கிப் போகலாம் என்ற ஒரு தெரிவு மட்டுமே முஸ்லீம் தலைவர்களுக்கு உண்டு.
எதிர்ப்பு அரசியலை முன்னெடுப்பது என்றால் அவர்கள் தமிழ் மக்களோடு தான் கூட்டுச் சேர வேண்டும். ஆனால் அவர்கள் தமிழ் மக்களையும் முழுமையாக நம்பத் தயாரில்லை. சிங்கள மக்களையும் முழுமையாக நம்பத் தயாரில்லை. இந்நிலையில் தமிழ் மக்களோடு சேர்ந்து எதிர்ப்பு அரசியலை முன்னெடுத்தால் சிங்களக் கடும்போக்காளர்கள் மட்டுமல்ல மென்போக்காளர்களும் தமக்கு எதிராகத் திரும்புவர் என்ற அச்சம் அவர்களுக்கு உண்டு. அதோடு இரண்டு சிறுபான்மைகளும் ஒன்று படுவதை சிங்களத் தலைவர்களும் விரும்ப மாட்டார்கள். ஒரு புறம் முஸ்லீம் தலைவர்களால் தமிழ் தேசிய வாதிகளோடு முழுமனதோடு இணைய முடியவில்லை. இன்னொரு புறம் சிங்கள பௌத்தர்களை முழுப்பகை நிலைக்கு தள்ளவும் அவர்கள் விரும்பவில்லை. எனவே முழுப்பகை நிலைக்கும் முழுச் சரணாகதிக்கும்; இடையே ஏதோ ஓர் இணக்கப் புள்ளியில் சுதாகரித்துக் கொண்டு போகவே அவர்கள் முற்படுவர். இவ்விணக்க அரசியல் மூலம் அவர்கள் தமது சமூகத்தை கணிசமான அளவுக்குக் கட்டியெழுப்பி விட்டார்கள். ஆனால் அதே இணக்க அரசியல் மூலம் சிங்கள பௌத்த கடும் போக்கு உளவியலை திருப்திப்படுத்தவோ அல்லது அதன் சந்தேகங்களையும் முற்கற்பிதங்களையும் போக்கவோ அவர்களால் முடியவில்லை. எனவே சிங்கள பௌத்த மென்போக்கு வாதிகளுடன் சுதாகரித்துக் கொள்வதைத் தவிர அவர்களுக்கு வேறு தெரிவு இல்லை.
இது ரணிலுக்கே அதிகம் வாய்ப்பானது. அவர் சட்டம் ஒழுங்கிற்கு பொறுப்பாக இருந்த காலகட்டத்தில் நிகழ்ந்;த சம்பவங்கள் அவரைப் பலவீனப்படுத்துவதற்குப் பதிலாக பலப்படுத்தியிருக்கின்றன. தாமரை மொட்டின் மலர்ச்சியோடு கூட்டரசாங்கம் ஈடாடத் தொடங்கியது. இதைச் சரி செய்வதற்காக ரணில் அமைச்சரவையை மாற்றினார். அதன் பின்னரும் அவருடைய சொந்தக் கட்சிக்குள்ளேயே எதிர்ப்புப் பலமாகியது. அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படலாம் என்ற செய்திகள் வெளிவந்தன. உட்கட்சிக் கலகத்தை அடக்குவதற்காக அவர் தனது கட்சித் தலமைப் பொறுப்பைக் கைவிடக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஒரு காலகட்டத்தில் அம்பாறையிலும் கண்டியிலும் நடைபெற்ற சம்பவங்கள் அவரை தற்காலிகமாகக் காப்பாற்றியிருக்கின்றன. அவருடைய உட்கட்சி எதிரிகள் அவருக்கு எதிரான நடவடிக்கைகளை சற்று பிற்போட்டிருக்கிறார்கள். மேலும் மகிந்த அணி அவருக்கு எதிரான நடவடிக்கைகளை சற்றுத் தணித்திருக்கிறது. இப்படி ஒரு காலகட்டத்தில் ரணிலைக் கவிழ்க்க எத்தனித்தால் அது முஸ்லீம் வாக்குகளை மேலும் இழக்க வைத்துவிடும் என்று மகிந்த கணக்குப் போடுகிறார். எனவே ரணிலுக்கு எதிரான வியூகங்களை சற்று ஒத்தி வைத்திருக்கிறார். இவையெல்லாம் சேர்ந்து ரணிலுக்கு சுதாகரித்துக் கொள்ளுவதற்கு தேவையான சிறு கால அவகாசத்தை வழங்கியிருக்கின்றன.
kandy 3
உள்நாட்டில் மட்டுமல்ல வெளியரங்கிலும் குறிப்பாக ஐ.நா.வில் கூட்டரசாங்கத்திற்கு வரக்கூடிய நெருக்கடிகளைக் கடப்பதற்கு கண்டி மற்றும் அம்பாறைத் தாக்குதல்கள் உதவியிருக்கின்றன. மிக நெருக்கடியான காலகட்டத்தில் அரசாங்கம் சர்ச்சைக்குரிய ஒரு சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருக்கிறது. காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் அனைத்துலக சமவாயச் சட்டவரைபு கடந்த புதன்கிழமை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது ஐ.நா. வில் அரசாங்கம் ஒப்புக்கொண்ட வீட்டு வேலைகளில் ஒன்றாகும். ஐ.நா. கூட்டத்தொடர் நடந்துகொண்டிருக்கும் ஒரு பின்னணியில் கலவரமான ஓர் அரசியற் சூழலில் அரசாங்கம் மேற்படி சட்ட வரைபை நிறைவேற்றியிருக்கிறது.
முஸ்லீம் மக்கள் தாக்கப்படமை தொடர்பில் ஐ.நாவும் மேற்கு நாடுகளும் கவனம் செலுத்தியுளளன. ஐ.நா. வின் சிறப்புத் தூதுவர் ஒருவர் நாட்டில் இருக்கும் பொழுதே முஸ்லீம்கள் தாக்கப்பட்டார்கள. ஆனால் அதற்காக ஐ.நா வும் மேற்கு நாடுகளும் இந்த அரசாங்கத்தை கைவிடப் போவதில்லை. அறிக்கைகளில் கண்டிப்பார்கள் ஆனால் செயலில் அழுத்தங்களைப் பிரயோகிக்க மாட்டார்கள். ஏனெனில் எல்லாருடைய பிரச்சினைகளும் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன. அது என்னவெனில் தாமரை மொட்டின் மலர்ச்சிதான். ஆட்சி மாற்றத்தின் பின் இச்சிறிய தீவில் மேற்கு நாடுகளும் இந்தியாவும் சேர்ந்து ஸ்தாபித்து வரும் வலுச்சமநிலையானது உள்ளுராட்சி மன்ற தேர்தலோடு தளம்பத் தொடங்கிவிட்டது. இவ் வலுச் சமநிலையை எப்படி ஸ்திரப்படுத்துவது என்பதே மேற்கு நாடுகள், ஐ.நா மற்றம் இந்தியாவின் கவலையாகும். வலுச்சமநிலையை ஸ்திரப் படுத்துவது என்றால் கூட்டரசாங்கத்தைப் பாதுகாக்க வேண்டும். கூட்டரசாங்கத்தோடு தமிழ்த் தலைவர்களும் முஸ்லிம் தலைவர்களும் பக்கபலமாக இருப்பதைப் பாதுகாக்க வேண்டும். சிறிலங்கா சுதந்திரக்கட்சி பிளவுண்டிருப்பதை தொடர்ந்தும் பாதுகாக்க வேண்டும். எனவே பாதுகாக்கப்பட வேண்டிய கூட்டரசாங்கத்தின் மீது ஐ.நா பெரியளவில் அழுத்தங்கள் பிரயோகிக்கப் போவதில்லை. அதாவது நறுக்காகச் சொன்னால் மகிந்த என்ற பூச்சாண்டியைக் காட்டி ரணில் முஸ்லீம்களையும் சமாளிப்பார். ஐ.நா வையும் சமாளிப்பார் அதோடு தன் தலைமைக்கு வந்த சவால்களையும் தற்காலிகமாக ஒத்திவைக்கலாம். எனவே கூட்டிக் கழித்துப்பார்த்தால் முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதலால் இலங்கைத்தீவில் உடனடிக்கு அதிகம் நன்மை பெற்ற ஒரு தலைவர் ரணில் விக்கிரமசிங்கதான்.
நன்றி - சமகளம்