Paristamil Navigation Paristamil advert login

மாலைதீவும் சிறிலங்காவும்...!!

மாலைதீவும் சிறிலங்காவும்...!!

2 பங்குனி 2018 வெள்ளி 14:36 | பார்வைகள் : 10150


 மாலைதீவு அரசியலில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு நிலை- பிராந்திய வல்லரசுகளுக்கிடையிலான நேரடி சொற்போர் என்பதற்கு அப்பால்,   சிறிலங்காவில் நடந்த உள்ளுராட்சி சபை தேர்தலின் முடிவுகளைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள நிலைமைகள், அரசியல் மாற்றத்துக்கு இட்டுச் செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 
சிறிலங்கா அரசியலில், முன்னைநாள் அதிபரும்,  தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தினால் பிரிந்து போய்விடும் என்று எதிர்பார்த்திருந்த வேளை நாட்டை, சிங்கள மக்களுக்கு மீட்டுக்கொடுத்தவரான மகிந்த ராஜபக்ச . தெற்கில் மீண்டும் எழுச்சி கண்டிருக்கிறார்.
 
இந்த எழுச்சியை பல்வேறு இராஜதந்திரிகளும் சிந்தனையாளர்களும் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். ராஜபக்சவின் மீள்வருகை என்பது சீன வேதாள நடனம் சிறிலங்காவில் மீண்டும் ஆரம்பம் என்ற பார்வை எல்லோரிடமும் உள்ளது.
 
கொள்கையளவில் இந்திய மேலைத்தேய சார்புடையது என்று பார்க்கப்படும் ஐக்கிய தேசிய கட்சியும் அதனுடன் கூட்டு சேர்ந்த சிறிலங்கா சுதந்திர கட்சியும் இணைந்து அமைத்துக்கொண்ட  கூட்டு அரசாங்கம் பல்வேறு பிழைகளை தனது மூன்று வருடகால ஆட்சியில் விட்டிருக்கிறது.
 
வாழ்க்கைச் செலவு அதீதமாக அதிகரித்திருந்தது, அபிவிருத்தி நடவடிக்கைகள் முடக்கம் கண்டிருந்தன, மத்திய வங்கி பிணைமுறி மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள், தேர்தல் வாக்குறுதிகளில் சொன்ன சொல்லைக் காப்பாற்ற முடியாமல்போன தன்மை ஆகியன அந்தப் பிழைகளாகும்.
 
தற்போதைய அரசாங்கம் முன்னைய அரசாங்கத்திடம் இருந்து எந்தெந்த குற்றச்சாட்டுகளைக் கூறி ஆட்சியைக் கைப்பற்றியதோ அதே பிழைகளைத் தானும் கொண்டிருந்த நிலை, இந்த தோல்விக்கு காரணம் என்ற பார்வை சர்வதேச ஆய்வாளர்கள் மத்தியிலே உள்ளது.
 
மகிந்த ராஜபக்சவின் ஆட்சிகாலத்தில் ராஜபக்ச குடும்பம் பல்வேறு நிதி மோசடிகளில் ஈடுபட்டிருந்தது என்ற குற்றசாட்டு எதையும் நடைமுறை அரசாங்கத்தினால் தகுதியான ஆதாரங்கள் இருந்தும், ராஜபக்ச குடும்பத்தில் எவரையும் சட்ட நடவடிக்கைக்குள் கொண்டு வர முடியாது போன நிலை மகிந்த ராஜபக்சவின் மீள் எழுச்சிக்கு பெரும் ஆதரவாக அமைந்துள்ளது.
 
கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் தனது பத்திரிகைப் பேட்டியில் ஐக்கிய தேசிய கட்சியின் வாக்காளர் தொகை தொடர்ச்சியாக கடந்த முப்பதுவ ருடங்களாக படிப்படியாக வீழ்ச்சி கண்டு வருவதாவும். சிங்கள பௌத்தவாதம் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் முடிந்த பின்னரும் எழுச்சி கண்டு வருவதாகவும் கணக்கிட்டுள்ளார்.
 
இதனால் மகிந்த ராஜபக்ச பதவிக்கு வருவது தவிர்க்க முடியாது என குறிப்பிடும் அப்பேராசிரியர் இனிவரும் காலங்களில் இலங்கை குறித்து இனவாதம், ஜனநாயகம், மனித உரிமை, சமூகங்களுடனான இணைந்த வாழ்வு என்ற பதங்கள் நாட்டின் ஒற்றுமைக்கு ஒவ்வாத வகையில் சர்வதேச நாடுகளின் பேசுபொருளாக மாறும் நிலை ஏற்பட உள்ளதாகவும் எதிர்வு கூறியுள்ளார்.
 
இனவாதத்தை தமது வாக்கு பெறுவதற்குரிய கருவியாக பயன்படுத்திய அரசியல் கட்சிகளும் மதத்தலைவர்களும் இன்று இனவாதத்தின் எழுச்சியைக் கண்டு பயந்துபோய் கருத்துகள் வெளியிடுவதும் கவனிக்கக் கூடியதாகும்.
 
இருந்தபோதிலும் சிங்கள பெளத்தத்தின் எழுச்சியை உள்நாட்டு ஆய்வாளர்களுடன் மேலைத்தேய இந்திய ஆய்வாளர்களும் கூட தவிர்க்க முடியாதது என்று எதிர்வு கூறி உள்ளனர்.
 
இந்தநிலையில் தன்னை ஒரு சிங்கள இன விடுதலை போர்வீரனாக காட்டிக்கொள்ளும் மகிந்த ராஜபக்சவும் அவரது குடும்பத்தினரும்- வாக்கு வங்கியை உறுதிப்படுத்துவதற்காக உலகம் தமக்கு எதிராக நிற்பதாகவே காட்ட முற்படுவர்.
 
அது ஐக்கிய தேசியக் கட்சி ஆயினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாயினும், புலம்பெயர் தமிழர்களாயினும், மேலைத்தேய இராஜதந்திரிகள் ஆயினும், எல்லோருமே சிங்கள மக்களின் நலனுக்கு எதிராக செயற்படுவதாகவே காட்ட முற்படுவர்.
 
அதேவேளை சிறிலங்காவின் 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு அமைய, நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிபரின் அதிகாரம் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், நான்கரை ஆண்டு காலத்திற்கு நாடாளுமன்றம் செயற்பட வேண்டிய நிலையில், 2020 ஆம் ஆண்டு வரையில் அரசாங்கத்துக்கு அவகாசம் உள்ளது.
 
சிறிலங்காவில் எத்தகைய நிலை எழுந்தாலும், எந்த அரசு பதவியில் இருந்தாலும் அந்த அரசு சட்ட அங்கீகாரம் பெற்றதாகவும் சர்வதேச அரசியல் நீரோட்டத்துடன் சேர்த்து கொள்ளக் கூடியதாகவுமான சூழலை பெற்றுத் தருவதில் மேலை நாடுகளும் சீனத் தரப்பும் கவனமாக இருந்தன.
 
mahinda
 
2009 ஆம் ஆண்டு போர் முடிந்தவுடன் சிறிலங்காவை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளும் விவகாரத்தை சீன – ரஷ்ய கூட்டு தடுத்து நிறுத்தி இருந்தது.
 
அதேபோல போர் முடிந்த சில நாட்களுக்குள், மென்மைப்படுத்தப்பட்ட தீர்மானம் ஒன்றை சிறிலங்காவுக்கு எதிராக  ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுவர முற்பட்ட போது, சீன- பாகிஸ்தானிய கூட்டு தவிர்த்திருந்தது.
 
அதன்பின்பு மேலும் கழுவி மென்மைப்படுத்தப்பட்ட தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்த போது, இந்தியா அதற்கு ஆதரவளித்து சிறிலங்காவை அமெரிக்க கண்காணிப்பிலிருந்து சர்வதேச ஒட்டத்திற்கு அப்பால் செல்லாது பாதுகாத்து வைத்திருப்பதை காணக்கூடியதாக இருந்தது .
 
இனஅழிப்பு என்ற பேச்சிற்கு உட்படாது, மனித உரிமை மீறல்கள் என்ற வகையில் சிறிலங்கா பொதுப்படையான குற்றங்களில் சம்பந்தப்பட்டதாக மாற்றப்பட்டு, இனஅழிப்பு என்ற பதமோ தமிழர்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் என்றோ இல்லாத வகையில், சர்வதேச புவிசார் அரசியல் நகர்வுகளுக்கு ஏற்றவகையில் மிதப்படுத்தப்பட்டு விடப்பட்டது.
 
ஆனால் வடக்கு-கிழக்கில்,கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் மிதவாத தலைமை மீது மக்கள் நம்பிக்கை இழந்தநிலை ஏற்பட்டிருப்பதை தமிழ் மிதவாத தலைமை உணரத் தலைப்பட்டிருக்கிறது.
 
வடக்கு- கிழக்கில் மிதவாத தலைமைத்துவத்திற்கு பதிலீடாக தமது தெரிவுகளை பரவலாக காட்டி இருப்பதானது, மிதவாத தலைமைத்துவத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமை விவகாரத்தில் அதிக கவனம் செலுத்தும் வகையில் திருப்பி உள்ளது.
 
மாலைதீவு விவகாரத்தில் அதிபருக்கெதிராக ஊழல் குற்றச்சாட்டுகள், மனித உரிமை குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டாலும் நேரடியான எதிர்க்கட்சி அரசியலை கொண்டு நகர்த்தக் கூடிய தன்மையே உள்ளது.
 
ஆனால் இனிமேல் சிறிலங்கா விடயத்தில் மேலைத்தேய இந்திய தரப்புகள் சிறிலங்காவை சர்வதேச இராஜதந்திர நீரோட்டத்தில் இருந்து வழுவாது வைத்திருப்பதானது, சீனாவின் கடன்பளு இராஜதந்திரத்தையும் சிறிலங்கா ஏற்றுக்கொள்ள வைப்பதற்கும் வசதி செய்வதாக அமைந்து விடுகிறது
 
சீனத் தரப்பு கூறுவது போல, சிறிலங்கா, மாலைதீவு பிரச்சினைகள் சாதாரண உள்நாட்டு பிரச்சினையாக சித்தரிக்க முடியாதுள்ளது. இவை ஆழமான சர்வதேச வல்லரசுகளின் மூலோபாயங்களை நோக்கமாக கொண்டதாக பார்க்கப்படுகிறது என்ற மேலைத்தேய பார்வை உள்ளது.
 
உள்நாட்டு விவகார பொறிமுறைகளில் நம்பிக்கை அதிகம் கொண்ட மேலைத்தேய நோக்கினுாடாக பார்ப்போமானால், சிறிலங்கா அரசியல் கட்டமைப்பை சீர்குலைப்பதன் ஊடாகவே சீனக் கடன்பளுவிலிருந்து சிறிலங்காவை மாற்ற முடியும்.
 
மாலைதீவு, சிறிலங்கா ஆகிய இரண்டு நாடுகளுக்குமான நெருக்கமான ஒப்பீட்டை அடுத்தவாரம் தொடர்ந்து பார்க்கலாம்.
 
நன்றி - புதினப்பலகை

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்