தமிழரசின் வீழ்ச்சியும் பெரமுனவின் எழுச்சியும்...!
18 மாசி 2018 ஞாயிறு 14:14 | பார்வைகள் : 9725
கடந்த உள்ளூராட்சிச் சபைத்தேர்தலில் 38 சபைகளில் அறுதி பெரும்பான்மை பெற்ற கூட்டமைப்பு, இன்று பூநகரி வெருகல் தவிர்ந்த 36 சபைகளில், பெரும்பான்மையை இழந்து பெரும் சரிவினை நோக்கியுள்ளது.
தெற்கிலோ…மகிந்தாவைத் தலைவராகக் கொண்ட, ஜி.எல்.பீரிஸின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பெரும் வெற்றியீட்டியுள்ளது.
மறுவளமாகப் பார்த்தால் கஜேந்திரகுமாரின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது பூச்சியத்திற்கு முன்னால் எண்களைப் போடுமளவுக்கு வளர்ச்சி கண்டுள்ள அதேவேளை, நல்லாட்சி கண்ட இரணிலும் மைத்திரியும் வரலாறுகாணாத தோல்வியைச் சந்தித்துள்ளனர்.
இந்த தேர்தல் முடிவுகள் அரசியல் மைய நீரோட்ட பெருங்கட்சிகள் மீது செலுத்தியுள்ள அதிர்வானது, புதிய அணி உருவாக்கத்திற்கான தேவையை ஏற்படுத்தியுள்ளதெனலாம்.
வட -கிழக்கிலோ ‘பொதுக்கொள்கை’,’பொதுச்சின்னம்’ என்கிற முன்மொழிவுகள் மீது உரையாடல்கள் நிகழ்த்தப்படுகின்றன. ஆனால் காத்திரமான நகர்வுகள் எதுவும் மேற்கொள்ளப்படுவது போல் தெரியவில்லை.
இதனை முன்னெடுக்கும், தமிழ்த்தேசிய அரசியலின் மீது பெருவிருப்புக் கொண்டோரின் அக்கறையை சந்தேகக்கண் கொண்டு பார்க்க முடியாது.
ஆனாலும் வாக்குவங்கிச் சரிவினை குறைநிரப்ப, அதிகார பதவிகளுக்காக அலையும் அரசியல் கட்சிப் பிரமுகர்களின் உள்நோக்கம் குறித்தே, மக்கள் சந்தேகப்பட வேண்டும்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில், கொள்கை மற்றும் அரசியல் நடைமுறை சார்ந்த விவகாரங்களில் முரண்பட்டு நின்ற கட்சிகள், அதிகார சபைகளில் ஆட்சி அமைப்பதற்காக, இணக்க அரசியல் செய்ய எத்தனிப்பது வேடிக்கையாகவிருக்கிறது.
சுயேட்சைக்கு குழு அமைத்துப் போட்டியிட்ட, முன்னாள் எம்பி சந்திரகுமாரின்( அசோக்) அணியோடு இணைந்து சபை அமைக்க, முதன்மைக் கட்சிக்கூட்டமைப்பினர் முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது.
தமிழரசுக் கட்சியின் ஆதிக்கத்துள் இயங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் தளம் ஆட்டங்காணும் இவ்வேளையில், சபைத் தலைவர் தெரிவிலும் ஆங்காங்கே மோதல்கள் ஏற்பட்டுள்ளது.
உதாரணமாக யாழ்.மாநகரசபை, மன்னார் மற்றும் வவுனியா போன்றவற்றை மோதல் களங்களாகப் பார்க்கலாம்.
முன்னணியைப் (சைக்கிள்) பொறுத்தவரை, எந்தக் கூட்டும் கொள்கை சார்ந்ததாக இருக்க வேண்டுமென்பதை வலியுறுத்துகிறது. அரசியல் தீர்வுத்திட்ட இடைக்கால வரைப்பிற்குள், தமிழ் இறைமையும் கிடையாது, சமஸ்டியும் இல்லை என்பதுதான் அந்த அணியினர் முன்வைக்கும் அரசியல் விமர்சனமாக இருக்கிறது.
கூட்டமைப்பின் பேச்சாளர் ( முன்பு சுரேஷ் பிரேமச்சந்திரன்) சுமந்திரன் முன்வைக்கும் அரசியல் கருத்தியலை மிகவும் காரசாரமாகவும் உறுதியாகவும் எதிர்க்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர், கூட்டமைப்பிற்கு வாக்களித்தால் ‘சமஸ்டி வரும்’ என்கிற பரப்புரையினையும் அடியோடு நிராகரித்தார்கள்.
சைக்கிளின் ஊர்வலத்தால், தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பங்குதாரர்களாக இருக்கும் டெலோவிற்கும் புளொட்டிற்கும் பதவிப்பேரம் பேசும் மென்வலு (!) அதிகரித்திருப்பது போல் தெரிகிறது. இவர்களின் அடுத்த தேர்தல் இலக்கான மாகாணசபையின் வேட்பாளர் தெரிவிலும் இந்த மென்வலு பிரயோகிக்கப்படலாம்.
அநேகமாக கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் பின்னரே, தமிழ் அரசியல் பரப்பில் புதிய அணிகள் உருவாகும் வாய்ப்புகள் ஏற்படுமென எதிர்பார்க்கலாம். தற்போதுள்ள சூழ்நிலையில், தெற்கில் நாற்காலி மாற்றங்கள் ஏற்படும் அதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் பதவி பறிபோனால் புதிய அணி உருவாக்கத்திற்கான பேச்சுவார்த்தைகள் ஏற்படலாம்.
தெற்கை நோக்கினால், மக்கள் மீது சுமத்தப்படும் பொருளாதார அழுத்தங்களும், நிர்வாகச்சீர்கேடுகளும், பிணைமுறி மோசடிகளும் ஆட்சிமாற்றம் ஒன்றிற்கான சமிக்ஞையை வெளிப்படுத்தியுள்ளதெனலாம்.
அத்தோடு சுமந்திரன் கூறுவது போன்று, ‘உள்ளீட்டில் சமஸ்டி மறைந்திருக்கிறது’ என்கிற போலிக்கருத்தியலை, உண்மைபோல் சித்தரித்திருக்கிறார்கள் மகிந்த அணியினர்.
இந்த இடைக்கால தீர்வு வரைபானது பிரிவினைக்கு இட்டுச் செல்லும் என்பதான பரப்புரை பெரமுனவினரால் பரவலாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் பந்தயத்தில் தற்போது கரு.ஜெயசூர்யாவும் நிமாலும் இறக்கப்பட்டுள்ளார்கள்.
ரணிலுக்கு கட்சிக்குள்ளே எதிர்ப்பு பலமடைகிறது.
‘இணைந்த, நல்லாட்சியில்லாத தனியாட்சி அமைந்தால் தான் ஆதரிப்பேன்’ என்கிற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளார் மஹிந்த இராஜபக்ச. பிரதமராவது அவரது இலக்கல்ல.
மறுபடியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியையும் அதன் ஆதரவு அணிகளையும் ஒன்றிணைத்து, எதிர்காலத்தில் நாமல் இராஜபக்சவை அரசியல் உயர்பீடத்தில் அமரவைப்பதே மஹிந்தவின் இலக்கு. அதற்காக சில விட்டுக்கொடுப்புகளை மைத்திரியோடு செய்வதற்கும் அவர் தயாராவார்.
இதுதவிர, இந்த தேர்தல் முடிவுகளும் அதிகார முரண்களும், ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்திய இந்துசமுத்திரப்பிராந்திய நலன் பேணும் மேற்குலக -இந்திய வல்லரசுகளுக்கும் அதிருப்தியைக் கொடுத்திருக்கிறது என்பதனை நோக்க வேண்டும்.
அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீனக் கம்பனி ஒன்றிற்கு 99 வருட குத்தகைக்கு தாரைவார்த்த ரணில்- மைத்திரி நல்லாட்சிக்கு கிடைத்த தோல்வியென்றும் கூற வேண்டும்.
தென்னிலங்கையில் எவர் ஆட்சிபீடமேறினாலும் , அவர்கள் சீன உறவில் விரிசலை ஏற்படுத்தமாட்டார்கள் என்பதனை இந்த அம்பாந்தோட்டை விவகாரமே எடுத்தியம்புகிறது.
சீனாவின் பட்டுப்பாதைத் திட்டத்தில், அதிலும் இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் முக்கிய முத்தாக விளங்கும் இலங்கையில், மேற்குலகின் ஆதிக்கம் தணிவடைவதை சீனா வரவேற்கும்.
இனியென்ன…தீர்வுக்கதை விலக, மாகாணசபை நாடாளுமன்ற தேர்தலை நோக்கிய வியூகங்கள் அரசியல் மண்டலத்தை இட்டு நிரப்பும். கூட்டமைப்பின் சமஸ்டி நோக்கிய பயணம் முடிவின்றித் தொடரும்.
இரண்டுவருட விடுமுறையில் இருக்கும் ஐ.நா.தீர்மானங்கள் மீண்டும் புதுப்பிக்கப்படலாம்.
அதுவும் இன்னுமொரு ஆட்சிமாற்றத்திற்கானதாகவே இருக்கும்.
ஒரு விடுதலைக்கான மக்கள்திரள் அரசியல் இயக்கம் உருவாகும்வரை, புதிய அணிகளும் அவர்களுக்கு வாக்களித்து, ‘காத்திருப்பு’ வாழ்க்கை வாழும் சோகமும் நிகழும்