Paristamil Navigation Paristamil advert login

சிறிலங்காவுக்கு சோதனை....!

சிறிலங்காவுக்கு சோதனை....!

14 மாசி 2018 புதன் 15:08 | பார்வைகள் : 10266


கடந்த சனிக்கிழமை சிறிலங்கா பூராவும் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலானது வீதி விளக்குகளைப் பொருத்துதல் மற்றும் குப்பைகளை அகற்றும் நடவடிக்கைகளை மேம்படுத்துதல் போன்ற  சிறிய விடயங்களுடன் தொடர்புபட்டுள்ளது.

 
ஆயினும், போருக்குப் பின்னான சிறிலங்காவின் முதலாவது தேசிய அரசாங்கத்தை அமைத்துக் கொண்ட கூட்டணிக் கட்சிகள் தமக்குள் பிளவுபட்டதால் வினைத்திறனுடன் செயற்படவில்லை. இதனால் திடீரென  உள்ளூராட்சித் தேர்தலானது தேசிய அரசாங்கத்தின் செயற்பாடு தொடர்பான கருத்து வாக்கெடுப்பாக மாறியது.
 
இவ்வாறானதொரு சூழலில் இடம்பெற்று முடிந்த தேர்தலில் மக்கள் அளித்த வாக்குகளின் பெறுபேறானது, 100,000 வரையான உயிர்களைக் காவு கொண்ட பல பத்தாண்டுகால உள்நாட்டு யுத்த காலப்பகுதியின் பின்னர், நாடு எத்திசை நோக்கிச் செல்கின்றது என்பதற்கான ஒரு சமிக்கையாக நோக்கலாம்.
 
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான எதிர்க்கட்சி வேட்பாளர்கள் பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளைத் தம்வசப்படுத்தியுள்ளனர் என்பதை கடந்த ஞாயிறு அன்று வெளியிடப்பட்ட தேர்தல் பெறுபேறுகள் தெளிவுபடுத்தியுள்ளன.
 
இத்தேர்தல் பெறுபேறானது, உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட பல்வேறு உரிமை மீறல்கள் மற்றும் ஊழல் மோசடிக் குற்றங்கள் சுமத்தப்பட்ட முன்னாள் அதிபரான மகிந்த ராஜபக்ச இந்த நாட்டின் அரசியல் எதிர்காலத்தின் மையத்தில் உள்ளார் என்பதை மீண்டுமொரு தடவை உறுதிப்படுத்தியுள்ளது.
 
திரு.ராஜபக்ச தனது சொந்த ஊரான தங்காலையில் உரையாற்றும் போது தனக்கு ஆதரவளித்தவர்களை வாழ்த்தியதுடன் தாம் பெற்ற வெற்றியை அமைதியான முறையில் கொண்டாடுமாறும் கேட்டுக்கொண்டார். ‘மக்கள் தேசிய அரசாங்கத்தின் ஆணையை நிராகரித்துள்ளனர். ஆதலால் அரசாங்கத்தை மீளவும் தெரிவு செய்ய வேண்டும்’ என மகிந்த ராஜபக்சவின் கட்சி உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
‘இலங்கையர்கள் கையறு நிலையிலுள்ளனர். அவர்கள் சிறிலங்காவை மீளக்கட்டியெழுப்ப விரும்புகிறார்கள் என்பதை உள்ளூராட்சித் தேர்தல் வெற்றி தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றது’ என திரு.ராஜபக்ச தனது முகப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
திரு.ராஜபக்சவின் கட்சியின் பெருவெற்றியானது இன்னமும் இரண்டு ஆண்டு கால ஆட்சியைக் கொண்டுள்ள அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தை மிகச் சாதாரணமாகப் பலவீனப்படுத்தும் என்பதை விட இதனால் பல்வேறு விளைவுகள் ஏற்படும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
 
நாட்டின் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும் மற்றும் இராணுவமயமாக்கல் மற்றும் ஊழல் மோசடி போன்றன ஒழிக்கப்படும் மற்றும் நீண்ட கால யுத்தத்தால் ஏற்பட்ட வடுக்கள் ஆற்றுப்படுத்தப்படும் என இலங்கையர்கள் நம்பிக்கை கொண்டதன் மூலமே 2015ல் சிறிய கட்சிகளின் கூட்டணியுடன் திரு.சிறிசேன அதிபரானார்.
 
ஆனால் சிறிசேன தான் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தற்போது இடம்பெற்ற தேர்தலில் சிறிசேனவின் கட்சி குறைந்த வாக்குகளைப் பெற்றதானது, இவர் நாட்டில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக வழங்கப்பட்ட வாய்ப்பைத் தவறவிட்டு விட்டார் என்பதையே சுட்டிக்காட்டுகிறது.
 
‘இத்தேர்தல் பெறுபேறானது, சீர்திருத்தத்தை நாட்டில் ஏற்படுத்துவதற்காக சிறிசேனவிற்கு வழங்கப்பட்ட வாய்ப்பிற்கான கதவு மூடப்பட்டு விட்டது என்பதையே தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது. இதனை மீண்டும் திறப்பதென்பது மிகவும் கடினமானதாகும்’ என கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத் திணைக்களத்தின் முன்னாள் தலைவர் ஜெயதேவ உயங்கொட தெரிவித்துள்ளார்.
 
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து 2015ல் சிறிசேன கூட்டணி அரசாங்கத்தை அமைத்துக் கொண்டார். உள்ளூராட்சித் தேர்தல் அண்மித்த போது, இவ்விரு தலைவர்களுக்கும் இடையில் முறுகல்நிலை தொடங்கியது. தனது நிகழ்ச்சி நிரலை ஐக்கிய தேசியக் கட்சி பின்பற்றுவதாக சிறிசேன குற்றம் சுமத்தினார்.
 
இவ்விரு தலைவர்களுக்கும் இடையிலான வாதப் பிரதிவாதங்கள் மகிந்த ராஜபக்சவின் கட்சி தேர்தலில் அமோக ஆதரவைப் பெறுவதற்கு வழிவகுத்தது.
 
‘கடந்த இரண்டு ஆண்டுகளாக, கூட்டணி அரசாங்கம் குறிப்பிடத்தக்க வகையில் எதையும் புதிதாகச் செய்யவில்லை’ என திரு.உயங்கொட தெரிவித்தார்.
 
‘தேசிய அரசாங்கமானது ஒற்றுமையற்றுச் செயற்படுகின்றது. குறிப்பாக கடந்த மாதம் இடம்பெற்ற தேர்தல் பரப்புரையின் போது கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருந்தது. இது குழப்பம் நிறைந்த அரசாங்கம் என்கின்ற சமிக்கையை இவர்கள் தமது ஒற்றுமையின்மை மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். இதனால் மக்கள் மிகப் பலமான ஒரு அரசாங்கத்தை விரும்புகிறார்கள் என்பதை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளனர். ராஜபக்ச ஒரு பலமான ஆட்சியாளருக்கான மற்றும் உறுதியான அரசாங்கத்திற்கான வேட்பாளராக உள்ளார்’ என திரு.உயங்கொட குறிப்பிட்டுள்ளார்.
 
வன்முறைகள் நிரம்பிய தேர்தல்கள் இடம்பெறும் இந்த நாட்டில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் மக்கள் மிகவும் அமைதியாக வாக்களித்த அதேவேளையில், பல்வேறு உள்ளூராட்சி சபைகளில் கட்சிகளால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக வாக்குகள் மீள எண்ணப்பட்டதால் தேர்தல் ஆணையம் தாமதமாகவே பெறுபேறுகளை அறிவிக்க வேண்டியேற்பட்டது. 
 
ராஜபக்சவின் சிறிலங்கா பொதுஜன முன்னணி 341 உள்ளூராட்சி சபைகளில் 225 சபைகளில் வெற்றியீட்டியதுடன், ஐக்கிய தேசியக் கட்சி 41 சபைகளையும், சிறிசேனவின் சிறிலங்கா சுதந்திரக் கட்சி சிறிய கட்சிகளுடன் இணைந்து 14 சபைகளிலும் வெற்றியீட்டியுள்ளது.
 
சிறிலங்காவின் வரலாற்றில் முதற்தடவையாக, தேர்தலில் குறைந்தது 25 சதவீத பெண் வேட்பாளர்கள் போட்டியிட வேண்டும் என கட்சிகளிடம் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது உள்ளூராட்சி சபைகளில் 2 சதவீத பெண் பிரதிநிதித்துவம் காணப்படும் நிலையில் தற்போது அமைக்கப்படவுள்ள புதிய உள்ளூராட்சி சபைகளில் மேலும் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படும் என நம்பப்படுகிறது.
 
பிரதமர் அலுவலகத்தின் தற்போதைய பிரதித் தலைவரும் Mrs. World Pageant பட்டத்தை வென்றவருமான றோசி சேனநாயக்க கொழும்பு மாநகர முதல்வராகத் தெரிவு செய்யப்படுமிடத்து இவரே முதலாவது பெண்  மாநகர முதல்வராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
‘உண்மையில் 50 சதவீதம் பெண் பிரதிநிதித்துவம் காணப்பட வேண்டும். ஆனால் இதனைக் கற்பனை செய்வதற்கே கடினமாக உள்ளது’ என முதன் முதலாக வாக்களித்த 20 வயதான டுலானி பரவிதான தெரிவித்தார்.
 
தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இரண்டு ஆளும் கட்சிகளும்  2019ல் இடம்பெறவுள்ள அதிபர் தேர்தலில் ராஜபக்சவின் கட்சி போட்டியிடாது என்பதை உறுதி செய்வதற்கான மாற்றங்களை முன்னெடுக்க வேண்டும்.
 
சிறிசேன தனது அமைச்சரவையை மாற்றியமைப்பார் என அவரது கட்சி உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். ‘இத்தேர்தலானது ஒரு பின்னடைவாகும், ஆனால் பெரும்பாலான இலங்கையர்கள் ராஜபக்சவிற்கு எதிரானவர்களாவர்’ என சிறிசேனவின் சுகாதார அமைச்சரான ராஜித சேனரட்ன தெரிவித்தார்.
 
நீண்ட காலமாக அரசியலில் நிலைத்திருக்கும் சிறிசேன, தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியிலிருந்து மீண்டெழ வேண்டும். பல பத்தாண்டுகளாக சிறிசேனவும் ராஜபக்சவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் விசுவாசிகளாக இருந்துள்ளனர். சிறிசேன இக்கட்சியின் பொதுச் செயலராக 13 ஆண்டுகள் செயலாற்றியுள்ளார்.
 
2015ல், மகிந்தவை எதிர்த்து சிறிசேன போட்டியிட்டு அதிபரானார். இதன் பின்னர் இவர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பை எடுத்துக்கொண்டார். இதனைத் தொடர்ந்து ராஜபக்ச புதிய கட்சியை ஆரம்பித்தார். நாட்டில் இடம்பெறும் ஊழல் மோசடிகளை முடிவிற்குக் கொண்டு வருவதாகவும் இராணுவத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதாகவும் சிறிசேன வாக்குறுதி வழங்கியிருந்தார்.
 
ராஜபக்சவிற்கு ஆதரவான வாக்கு வங்கியைக் குறைப்பதற்கான நடவடிக்கையை சிறிசேன முன்னெடுக்காதது மட்டுமன்றி இவரது குழப்பகரமான சமிக்கைகள் இவருக்கான ஆதரவைப் பெறுவதிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதையே சனிக்கிழமை இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களின் பெறுபேறுகள் சுட்டிக்காட்டுவதாக அவதானிகள் பலரும் கூறுகின்றனர்.
 
நன்றி - புதினப்பலகை

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்