Paristamil Navigation Paristamil advert login

சிறிலங்கா எப்படி இந்திய, சீன உறவுகளை சமநிலைப்படுத்தப் போகிறது?

சிறிலங்கா எப்படி இந்திய, சீன உறவுகளை சமநிலைப்படுத்தப் போகிறது?

4 மாசி 2018 ஞாயிறு 13:20 | பார்வைகள் : 9200


‘ஆசிய விவகாரங்களைக் கையாள்வதும், ஆசிய விவகாரங்களைத் தீர்ப்பதும் அதன் பாதுகாப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டியதும் ஆசிய மக்களாவர்’ என 2014ல் இடம்பெற்ற ஆசியாவில் ஒத்துழைப்பு மற்றும் நம்பிக்கை கட்டுமான அளவீடுகள் தொடர்பான மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய சீன அதிபர் ஷி ஜின்பிங் கருத்து வெளியிட்டிருந்தார்.
 
ஆனால் ஆசியாவில் துரித கதியில் வளர்ந்து வரும் இரண்டு நாடுகள் தமக்குள் ஒத்துழைப்பு மற்றும் ஒன்றிணைவு ஆகியவற்றைக் கட்டியெழுப்பி தத்தமது நாடுகளின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களைப் பாதுகாப்பதன் மூலம் ஆசியாவின் விவகாரங்களைக் கையாளுவதற்கான ஆளுமையைக் கொண்டுள்ளார்களா?
 
பல ஆண்டுகளாக, சீனா பன்முகத் தளங்களின் ஊடாக ஆசியாவில் தனது தலைமைத்துவத்தைப் பிரயோகிப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. சீனாவினால் ஆசியப் பிராந்தியத்தில் பிராந்திய விரிவான பொருளாதாரப் பங்களிப்பு, (பிறிக்ஸ்) BRICS, அணை மற்றும் பாதைத் திட்டம், ஆசியக் கட்டுமான முதலீட்டு வங்கி, சங்காய் ஒத்துழைப்பு நிறுவனம் போன்றவற்றின் ஊடாக பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
 
ஆசியக் கட்டுமான முதலீட்டு வங்கியின் உறுப்பு நாடாக சிறிலங்கா விளங்குவதுடன்  BRI,  சங்காய் ஒத்துழைப்பு நிறுவனத்தின் ஆலோசக அமைப்பாகவும் விளங்குகிறது. இவ்வாறான முயற்சிகளின் மத்தியில், BRI என்பது சீனத் திட்டங்களின் சிகரமாக உள்ளதாகவும் இதன் மூலம் சீனாவானது புதிய அனைத்துலக ஒழுங்கொன்றை நிலைநாட்டுவதுடன் இது பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் அனைத்துலக பொருளாதார ஒருங்கிணைப்பிற்கான முன்மாதிரியாக உள்ளதாகவும் சீன அறிஞர்கள் நோக்குகின்றனர்.
 
BRI என்பது சீன-இந்திய உறவுநிலையை மீளவரையறுக்கின்றது என்பதை மறுக்கமுடியாது. சீனாவின் மென் மற்றும் வன்சக்தி மூலோபாயங்களின் கீழ் செயற்படும் BRI என்பது ஆசியா தொடக்கம் ஐரோப்பா வரை பல்வேறு திட்டங்களைச் செயற்படுத்துகிறது. இது அமெரிக்காவின் அனைத்துலக அதிகாரத்துவ நிலைப்பாட்டை மாற்றுவதற்கு அல்லது மறுசீரமைப்பதன் மூலம் சீனா தனக்கான உலக ஒழுங்கைக் கட்டியெழுப்ப முனைகிறது. சீனாவின் இந்த நிலைப்பாடானது ‘சீனாவின் அச்சுறுத்தல்’ என்கின்ற இந்தியாவின் கவலையை மேலும் அதிகரிக்கின்றது.
 
அமெரிக்காவின் செல்வாக்கிற்கு உட்பட்டிருந்த ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் மிகவும் முக்கியமான பாதுகாப்புப் பொறிமுறையாக சீனாவால் உருவாக்கப்படும் உட்கட்டுமான வீதிகள் காணப்படுகின்றன. சீனா தற்போது ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் நான்கு முக்கிய துணைப் பிராந்தியங்களான வடகிழக்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா, தென்னாசியா மற்றும் மத்திய ஆசியாவின் பாதுகாப்பைப் பலப்படுத்துவதில் முனைப்புக் காட்டுகின்றது.
 
‘சீனாவும் இந்தியாவும் அபிவிருத்தி செய்வதற்கு உலகில் போதியளவு இடவசதி காணப்படுகிறது’ என சீனாவின் முன்னாள் பிரதமர் வென் ஜியாபோ தெரிவித்திருந்தார். நீண்டகாலமாக இந்தியா தக்கவைத்துள்ள பிராந்திய அதிகாரத்துவ சக்தி என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை முறியடிப்பதற்காகவே தென்னாசியாவில் சீனா தனது ஊடுருவல்களை நிகழ்த்துவதாக பெரும்பாலான இந்திய அறிஞர்களும் வல்லுனர்களும் கருதுகின்றனர்.
 
கடந்த சில ஆண்டுகளாக, சீனா மற்றும் இந்தியாவிற்கு இடையிலான முறுகல் நிலையானது மேலும் அதிகரித்துள்ளது. அணுசக்தி விநியோகக் குழுவின் உறுப்பு நாடாக இந்தியா இணைவதற்கு சீனா தடை விதித்தது. மசூட் அசாரை ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு பயங்கரவாதி எனப் பட்டியிலிடுவதற்கான இந்தியாவின் முயற்சிகளுக்கு சீனா தடையாக இருந்தது.
 
சர்ச்சைக்குரிய காஷ்மீர் பிரதேசத்தின் ஊடாக சீனா தனது எரிசக்திக் குழாய்களைப் பொருத்துவதற்கு மாற்றீடாக வேறு பகுதியைத் தெரிவு செய்யுமாறு இந்தியா அழைப்பு விடுத்த போதும் இந்தியாவின் அழைப்பை சீனா நிராகரித்தது. சீனாவிற்குச் சார்பான இந்திய மக்களின் நிலைப்பாடானது 2013ல் 35 சதவீதமாக இருந்த போதிலும் 2017ல் இது 26 சதவீதமாகக் குறைவடைந்துள்ளது.
 
2017ல், மாலைதீவுடன் சீனா சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மேற்கொண்டது. சீன-பாகிஸ்தான் பொருளாதார நடைபாதைத் திட்டமானது வெற்றி கண்டுள்ளது. இதேபோன்று நேபாளத்துடனான சீனாவின் உறவுநிலையும் அதிகரித்துள்ளது.
 
இந்திய மாக்கடலில் இரண்டாவது சீன இராணுவத் தளத்தை உருவாக்குவதற்கான திட்டங்கள் ஏற்கனவே வரையப்பட்டுள்ளன. இந்தத் தடவை பாகிஸ்தானிற்கு அருகிலுள்ள ஈரானிலுள்ள சபஹார் துறைமுகத்தில் இராணுவத் தளத்தை அமைப்பதற்கான நடவடிக்கையில் சீனா இறங்கியுள்ளது.
 
இந்தியாவின் அயல்நாடுகளில் சீனாவின் அதிகாரத்துவமும் செல்வாக்கும் அதிகரித்து வரும் நிலையில், சீனாவின் இந்த வளர்ச்சியை இந்தியா மிகவும் அச்சத்துடன் நோக்குகின்றது. இவ்வாறான காலமாற்றம் மற்றும் சவால்மிக்க நிலையில் சிறிலங்காவின் மூலோபாயம் எவ்வாறானதாக இருக்க வேண்டும்?
 
ஒவ்வொரு நாடும் தத்தமது வெளிநாட்டுக் கொள்கையை வகுக்கும்போது பல்வேறு அணுகுமுறைகளைக் கடைப்பிடிக்கின்றன. சிறிய நாடுகளின் வெளியுறவுக் கோட்பாடானது பிராந்தியத்திலிருந்து எழும் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு வெளியக பங்காளிகளுடன் நட்புறவைக் கட்டியெழுப்புதல், உள்நாட்டுப் பாதுகாப்புப் படைகளைப் பலப்படுத்துவதன் ஊடாக உள்ளக சமவலுவைப் பேணுதல், அதிகாரத்துவ நாட்டுடன் நட்பைப் பேணுதல் மற்றும் இடர்மேலாண்மை போன்றவற்றை உள்ளடக்குகின்றது.
 
சிறிலங்காவைப் பொறுத்தளவில் வெளியுறவுச் சக்தி சமப்படுத்துதல் என்பது  பயனற்றதாகும். ஏனெனில் இலங்கைத் தீவிற்கு உள்ளேயே அல்லது வெளியேயோ இராணுவ அச்சுறுத்தல் காணப்படவில்லை.
 
சிறிலங்காவுடன் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளும் பொருளாதார ரீதியான உறவைப் பேணிவருகின்றன. இவ்விரு நாடுகளில் எந்த நாட்டுடன் கூடிய உறவைப் பேணுவது என்கின்ற தீர்மானத்தை எடுக்கக் கூடிய நிலையில் சிறிலங்கா காணப்படவில்லை.
 
2017ல் சிறிலங்காவின் வெளிநாட்டு முதலீடானது பெருமளவில் சீனாவிடமிருந்தும் இராண்டாவதாக இந்தியாவிடமிருந்தும் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு மாறாக கடந்த ஆண்டு சிறிலங்காவிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் 13 சதவீதத்தினர் சீனர்களாவர். இதில் இந்தியாவே முதன்மை இடத்தைப் பிடித்துள்ளது.
 
சிறிலங்காவின் பலவீனமான பாதுகாப்பு திறன் காரணமாக இதன் உள்ளக சமவலுவானது தொடர்ந்தும் சாத்தியமற்றதாகவே காணப்படுகிறது. உள்ளக சமவலுவானது மேலும் உறுதியான பொருளாதார மற்றும் அரசியல் மூலோபாயத்துடன் இணைக்கப்பட வேண்டும். இதன் மூலம் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு சமவலு நாடுகளுடனும் சமமான அணுகுமுறையைக் கையாள முடியும். சமவலுவான வெளிநாட்டுக் கோட்பாடானது சீனா மற்றும் இந்தியா ஆகிய இருநாடுகளுடனும் நட்புறவை வளர்த்துக் கொள்ளக் கூடிய, இரு நாடுகளில் எந்தவொரு நாட்டின் மீதும் பாரபட்சம் காண்பிக்காதவாறு வரையறுக்கப்பட வேண்டும்.
 
இதன்மூலம் சிறிலங்காவானது இவ்விரு சக்தி மிக்க நாடுகளுடனும் முரண்பாடற்ற அணுகுமுறையைக் கடைப்பிடிக்க முடியும். மேலும், நடுநிலையைக் கடைப்பிடிப்பதன் மூலம் இவ்விரு நாடுகளிடமிருந்தும் சிறிலங்காவானது பொருளாதார உதவியைப் பெறுவதற்கும் சீனா மற்றும் இந்தியாவிற்கு இடையில் முரண்பாடு ஏற்படும் போது அதிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் சிறிலங்காவின் சமவலு வெளியுறவுக் கோட்பாடு உதவும்.
 
முன்னாள் அதிபர் ராஜபக்சவின் ஆட்சியைப் போலல்லாது, தற்போது சிறிலங்காவின் ஆட்சியானது தனது வெளியுறவுக் கோட்பாட்டில் சமவலு அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளது போல் தோன்றுகிறது.
 
இது அதிபர் சிறிசேனவின் 2015 கொள்கை விளக்கவுரையின் மூலம் சாட்சியமாகின்றது. இவரது இந்தக் கொள்கை விளக்கவுரையானது சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுடனும் ‘சமஉறவைப்’ பலப்படுத்துவதை வலியுறுத்தியுள்ளது.
 
இந்தியாவின் பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படக்கூடிய விடயங்களில் சிறிலங்கா ஈடுபடவில்லை. குறிப்பாக இந்தியப் பிரதமர் சிறிலங்காவிற்கு அரசுப் பயணம் மேற்கொண்ட வேளையில் சீனாவின் அணுவாயுத நீர்மூழ்கிக்கப்பல் சிறிலங்காத் துறைமுகத்தில் தரித்து நிற்பதற்கு சிறிசேன அனுமதியளிக்கவில்லை.
 
மத்தல விமான நிலையத்தில் இந்தியாவுடன் இணைந்து நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கு அதிபர் சிறிசேன, பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்திருந்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதுடில்லிக்குப் பயணம் செய்திருந்ததுடன் இந்தியப் பிரதமர் மோடியையும் சந்தித்திருந்தார்.
 
இந்தியா மற்றும் சிறிலங்கா ஆகிய இரு நாடுகளும் இணைந்து கடந்தமாதம் சைபர் பாதுகாப்பு மற்றும் இணைய அரசு ஆகிய துறைகளை விரிவுபடுத்துவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தன.
 
மூலோபாயப் போட்டி மற்றும் வளர்ந்து வரும் அதிகாரத்துவம் ஆகியவற்றுக்கிடையில் சமவலுவைப் பேணுவதற்கு இலங்கைத் தீவானது இந்தியா மற்றும் சீனா ஆகிய இருநாடுகளுடனும் தனது தேசிய நலன்களைச் சமவலுப்படுத்த வேண்டும். இதன்மூலம் சிறிலங்காவில் ஆரோக்கியமான முதலீடு மேற்கொள்ளப்படுவதோடு மட்டுமன்றி இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் ஒருவருடன் ஒருவர் நேரடித் தொடர்பை ஏற்படுத்த விரும்பாவிட்டாலும் இவ்விரு நாடுகளுடனும் இணக்கமான உறவை சிறிலங்காவால் ஏற்படுத்த முடியும்.
 
எவ்வாறெனினும், சிறிலங்காவானது சீனாவிடமிருந்து 8 பில்லியன் டொலரைக் கடனாகப் பெற்றுள்ள நிலையில்இலங்கைத் தீவு மீதான இந்தியா மற்றும் சீனா ஆகிய இருநாடுகளினும் மூலோபாயப் போட்டியானது மிகவும் சிக்கலான நிலையில் உள்ளது. கடனைச் சமப்படுத்துவதற்காக சொத்துக்களை குத்தகைக்கு வழங்கும் நடைமுறையைப் பின்பற்றுவது தொடர்பாக சிறிசேன அரசாங்கம் தீர்மானித்து வருகிறது.
 
குறிப்பாக சீனாவிடமிருந்து பெறப்பட்ட கடனை ஈடுசெய்வதற்காக அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை 99 ஆண்டுகாலக் குத்தகைக்கு சீன வணிகத் துறைமுக அதிகார சபையிடம் 1.1 பில்லியன் டொலர் பெறுமதிக்கு கையளிப்பது தொடர்பான சிறிசேனவின் தீர்மானமானது, தேசிய அரசாங்கத்தின் வெளியுறவுக் கோட்பாட்டிற்கான ஒரு குறியீடாகக் காணப்படுமா அல்லது இது ஒரு சாதாரணதொரு சம்பவமாகக் கருதப்படுமா?
 
கடந்த காலத்தில் சிறிலங்காவில் நடைமுறையிலிருந்து தரம் குறைந்த பொருளாதாரக் கோட்பாடுகள், சிறிலங்காவின் நிதி சுயாட்சி மற்றும் கொள்கைச் சுதந்திரத்தை ஆபத்தில் தள்ளியுள்ளன. இதனை மாற்றியமைப்பதாக சிறிசேன அரசாங்கம் வாக்குறுதி வழங்கியுள்ள போதிலும், கடனை அடைப்பதற்கான நாட்டின் சொத்துக்களை அடமானம் வைப்பதானது உள்நாட்டு மக்கள் மத்தியில் பாரிய முரண்பாடுகளை ஏற்படுத்துவதற்கே வழிவகுக்கும்.
 
நன்றி - புதினப்பலகை

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்