இலங்கையில் உச்சம் பெற்றிருக்கும் இனப்பிரச்சனையும் நிதி மோசடிகளும்!
21 தை 2018 ஞாயிறு 14:28 | பார்வைகள் : 9344
ஜனாதிபதி தனது கையில் உள்ள வாளை காற்றில் வீசிய வீச்சானது யார் கழுத்திலாவது பட்டுவிடுமோ, யார் தலையாவது உருண்டு விடுமோ என்று பலரும் சிந்தித்து இருந்த வேளையில் அது அவரை நோக்கியே திரும்பியிருப்பதை உணரமுடிகிறது.
நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்றதில் இருந்து 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் பிணைமுறி விற்பனை தொடர்பில் மோசடி இடம்பெற்றிருப்பதாக தெரிவித்து அது முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் பல தரப்பாலும் முன்வைக்கப்பட்டது.
இதற்காக முன்னர் கோப் குழுவின் ஊடாக விசாரணை நடத்தப்பட்டு அதன் அறிக்கையும் பாராளுமன்றத்திற்கு கையளிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து மத்திய வங்கியின் ஆளுனர் பதவி நீக்கம் செய்யப்பட்டு ஜனாதிபதி தனியான ஒரு ஆணைக்குழுவை நியமித்து சுமார் 1200 பக்கங்கள் கொண்ட அறிக்கையையும் பெற்றுக் கொண்டுள்ளார்.
இந்த அறிக்கையின் மீது உரை ஒன்றை நிகழ்த்திய ஜனாதிபதி தனது தூய்மையை நிலைநாட்டுவதற்காக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் தயாராகி வருகிறார். இதனைப் போன்றே கடந்த ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற பாரிய நிதிமோசடி மற்றும் அதிகார துஸ்பிரயோகம் குறித்தும் விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவை நியமித்து அந்த ஆணைக்குழுவின் மூலம் 34 அறிக்கைகளையும் பெற்றுக் கொண்டுள்ளார்.
இந்த அறிக்கைகள் தொடர்பில் அவர் கருத்து எதனையும் தெரிவிக்காமல் இருப்பது கூட்டரசாங்கத்தின் ஒரு தரப்பினரான ஐக்கிய தேசியக் கட்சியினரை அதிருப்திக்குள்ளாக்கியிருக்கிறது. இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க மற்றும் அந்தக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நிதி அமைச்சரான ரவி கருணாநாயக்க மீது ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை விமர்சனங்களை முன்வைத்துள்ளது.
இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக கூட வரக்கூடாது என்று சிந்தித்து இருந்த நிலையில் வேறு ஒரு நாட்டின் குடியுரிமையைக் கொண்ட ஒருவரை நாட்டின் பொருளாதார வளத்தையும், நாணய பரிமாற்று விதிகளையும், அரசாங்கத்தின் பிணைமுறிகள்- நிதி முகாமைத்துவம்- அன்னியசெலாவனி கையிருப்பு- வங்கிகளையும் நிதிநிறுவனங்களையும் நிர்வகித்தல்- நாணயங்கள் அச்சிடல் போன்ற முக்கியமான விடயங்களையும் கையாள்வதற்கு பொறுப்பு வாய்ந்த மத்திய வங்கியினுடைய ஆளுனராக நியமித்து இருந்தமை பலராலும் சுட்டிக்காட்டப்பட்டு விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டிருந்தன.
இதற்கு விளக்கமளிக்கும் வகையில் தன்னால் நியமிக்கப்பட்டுள்ள மத்திய வங்கியின் ஆளுனர் குறித்து தனக்கு நம்பிக்கையிருப்பதாகவும், இந்த விடயத்தில் தன்னை நம்புமாறும் பிரதமர் ரணில் பாராளுமன்றத்தில் தெரிவித்ததன் விளைவாகவே பிரதமர் மீதான விமர்சனங்கள் இடம்பெற்றிருந்தமை கவனிக்கத்தக்கது.
கடந்தவாரம் இந்தப் பத்தி சுட்டிக் காட்டியதைப் போன்றே பிரதமரும் 1973 ஆம் ஆண்டில் இருந்து பிணைமுறி கொடுக்கல் வாங்கலில் பாரிய ஊழல் நடைபெற்று இருப்பதாகவும், கிட்டத்தட்ட 10 இலட்சம் கோடி ரூபாய் மோசடி இடம்பெற்று இருப்பதாகவும் கருத்து தெரிவித்திருக்கின்றார்.
இது உட்பட பிணைமுறி கொடுக்கல் வாங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும், கடந்த ஆட்சிக்காலத்தில் மட்டும் நான்காயிரத்து 702 பில்லியன் ரூபாய் நிதிச்சபை அனுமதியின்றி தனி நேரடி முறைமை மூலமாக விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளதுடன், இதற்கு முன்னாள் நிதி அமைச்சராகவிருந்த மஹிந்த ராஜபக்ஸ பொறுப்பு கூற வேண்டும் என்றும் பாராளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார். இதன்போது பாராளுமன்றத்தில் கைகலப்பும் நடைபெற்று சபை சமர்களமாகி இருந்தது.
இந்நிலையில், அனைத்து வங்கிகளையும் கட்டுப்படுத்தும் மத்திய வங்கியின் கணக்கு அறிக்கையை பெற்றுக் கொள்ள முடியாமல் இருப்பதாக சில அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. மத்திய வங்கியின் நிதி நிலை குறித்து தணிக்கை செய்வதற்கும் பிரதமர் முடிவெடுத்துள்ளதாகவும் தெரியவருகிறது. பிணைமுறி விற்பனை தொடர்பில் ஆராய்ந்து அறிவதற்கு போதிய நிபுணர்கள் உள்நாட்டில் இல்லை என்றும் அந்த நிபுணத்துவ உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கு சர்வதேச உதவியை நாட இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மிகப்பெரிய ஊழல் விடயங்கள் குறித்து விசேட சட்டத்தின் கீழ் நகர்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால் அதற்கு முன்னர் இதில் இடம்பெற்றுள்ள ஊழல் என்ன என்பது குறித்து கண்டறிய வேண்டும். ஆகவே, நிதி விசாரணை ஒன்றினை நடத்த வேண்டும் என ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மத்திய வங்கி பிணை முறி ஆணைக்குழு தொடர்பில் சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் என்ன இடம்பெற்றுள்ளது என சில பொருளாதார நிபுணர்களிடம் நான் வினவினேன். எனினும் அவர்களுக்கு கூட தெளிவான நிலைபாடு ஒன்றினை எடுக்க முடியாதுள்ளதாக தெரிவித்தனர்.
ஆகவே இதற்கு பிரத்தியேக நிபுணர் குழு ஒன்று அமைத்து ஆழமான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான ஆணைக்குழு முதலில் குறித்த நிபுணர்கள் மூலமாக ஆலோசனைகளைப் பெற்று அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்க வேண்டும். இலங்கையின் நிபுணர்கள் மற்றும் சர்வதேச பொருளாதார நிபுணர்களை இணைத்துக் கொண்டு முதல் கட்ட நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என்று அமைச்சரவை இணைப்பேச்சாளர் ராஜித கடந்த புதன்கிழமை ஊடக சந்திப்பு ஒன்றில் தெரிவித்திருக்கின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
1977 ஆம் ஆண்டில் இருந்து 2009 ஆம் ஆண்டு வரை இனப்பிரச்சனையை ஒரு பயங்கரவாத பிரச்சனையாக சித்தரித்து பாதுகாப்பிற்கான செலவீனங்கள் அதிகரிக்கப்பட்டு நாட்டின் பொருளாதார அபிவிருத்தி பின்தளப்பட்டு, இராணுவ பலப்படுத்தல் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்ததில் இருந்து பாதுகாப்பு செலவிற்காக வாங்கிய கடன்களை மீளச் செலுத்துவதற்காகவும், இராணுவத்திற்கு புனர்வாழ்வு அளிப்பதற்காகவும், அங்கவீனராக்கப்பட்ட இராணுவத்திற்கு மறுவாழ்வளிப்பதற்காகவும், இராணுவத்தின் சமூகநலத் திட்டங்களுக்காகவும் மீண்டும் பாதுகாப்புத் துறைக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் 3 ஆவது வரவு செலவுத் திட்டம் உட்பட அனைத்து வரவு செலவுத் திட்டங்களிலும் முன்னுரிமையளிக்கப்பட்டிருந்தது.
ஒருபுறம், பாதுகாப்பு தரப்பிற்கான அதிக நிதி ஒதுக்கீட்டின் மூலமாக நாட்டின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையை இழந்திருந்த அதேவேளையில், மறுபுறம் இத்தகைய ஊழல்களினாலும், மோசடிகளினாலும் நாட்டின் பொருளாதாரம் இன்று அதளபாதாளத்திற்கு சென்றுள்ளது. இதைக் கட்டியெழுப்புதவதற்கு பலரிடமும் யாசிக்க வேண்டிய நிலைக்கு இன்றைய அரசாங்கம் சென்றுள்ளது.
தேசிய இனப்பிரச்சனையை சரியாக கையாளாமல் அதனை மேலும் மேலும் சிக்கலுக்குள்ளாக்கி, தங்களது அரசியல் இருப்பு என்பது தமிழ் தேசிய இனத்திற்கு விரோதமான போக்கை கடைப்பிடிப்பதிலேயே தங்கியிருக்கின்றது என்று இந்த நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வருபவர்கள் எண்ணியிருந்ததன் விளைவை இன்றைய இளம் சந்ததியினர் உட்பட பிறக்கப் போகும் குழந்தைகள் ஈறாக அனைவரும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.
ஒரு பொறுப்பு வாய்ந்த எதிர்கட்சியாக செயற்பட வேண்டிய இலங்கை தமிழரசுக் கட்சி இந்த விடயத்தில் நாட்டின் நலன் கருதி தனது கடமையை சரியாக செய்ததா என்ற கேள்வி இங்கு இயல்பாகவே எழுகிறது. இந்த விடயத்தை மிகவும் சாதுரியமாகவும், தமிழ் தேசிய இனத்தின் பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டிய அவசியத்தை மிகவும் இலகுவாகவும், எளிமையாகவும் முன்னெடுத்துச் செல்லக் கூடிய வாய்ப்பிருந்தும் அந்த வாய்ப்பை எதிர்கட்சித் தலைவர் சரியாக பயன்படுத்தவில்லையோ என்ற சந்தேகமும் எழுகிறது.
நிதித்துறை சார்ந்த, நாட்டின் வங்கிகளை முகாமைத்துவம் செய்கின்ற மத்திய வங்கியின் நடைமுறைகள் சார்ந்த விடயங்களில் இடம்பெற்றுள்ளதாக கருதப்படுகின்ற ஊழல் மோசடிகள் குறித்து விசாரிப்பதற்கே நிபுணர்கள் இல்லை என்று அரசாங்கம் சொல்கிறது.
ஆனால், மறுபுறத்தில் 1977 ஆம் ஆண்டில் இருந்து இந்த ஊழல் நடைபெற்று இருப்பதாகவும் ஏற்றுக் கொள்ளுகிறது. இதே காலப்பகுதியில் தான் தமிழ் தேசிய இனத்தின் பிரச்சனையும் தீவிரம் அடைந்திருந்தது. 2009 ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர் சர்வதேச சமூகம் அந்த இறுதியுத்தத்தில் நடைபெற்ற போர்க்குற்றங்கள், மனிதவுரிமை மீறல்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான விடயங்கள் தொடர்பில் விசாரிப்பதற்கு இலங்கையிடம் போதிய கட்டமைப்பு இல்லை என்றும், சர்வதேச தரங்களுக்கு ஏற்ப ஒரு சர்வதேச விசாரணை நடத்தப்படுவது அவசியம் என்றும் குறிப்பிட்டு இருந்தது. யுத்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரிப்பதற்கு உள்நாட்டு பொறிமுறையே போதுமானது என்று கூறிவருகின்ற அரசாங்கம், நிதி மோசடி தொடர்பில் விசாரிப்பதற்கு சர்வதேசத்தை அணுக முயல்வது பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.
இந்த நாட்டில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை உருவாகிய காலம் முதல் இராணுவ விடயங்களுடன் தொடர்புடைய பாதுகாப்பு அமைச்சும் ஜனாதிபதியிடமும், அவருக்கு மிக நெருக்கமானவர்களிடமுமே இருந்து வருகின்றமையும் இங்கு கவனிக்கத்தக்கது.
இந்தவிடயத்தில் தமிழ் தரப்பு போர்க்குற்றங்கள் தொடர்பாகவும், சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உறுதியான கோரிக்கையை பலமாக முன்வைக்க முன்வரவேண்டும். எதிர்கட்சித்தலைவராகவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும் இருக்கின்ற இரா.சம்மந்தருக்கு இதுவொரு அரியவாய்பாகும். முதலமைச்சரும் இதனை அடியொற்றியே ஐ.நா மனிதவுரிமைகள் பேரவையின் தீர்மானத்தை பற்றிப் பிடித்து அரசாங்கத்திற்கு உரிய வகையில் அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் சலுகைகளுக்காக அரசாங்கத்திடம் கையேந்தும் நிலை மாற வேண்டும் என்றும் கூறியிருகிறார்.
தமிழ் மக்களின் ஆதரவுடன் அரியணை ஏறிய இந்த அரசாங்கத்தை தமிழ் மக்களின் நலன்சார்ந்து சிந்தித்து இனப்பிரச்சனையை தமிழ் மக்களுக்கு அச்சம் இன்றியும், ஐயம் இன்றியும் தீர்வு காண்பதற்கான ஒரு வாய்ப்பு தானாகவே நழுவிவந்திருக்கின்றது. இதனை திரு சம்மந்தர் பற்றிப் பிடிப்பாரா…?, அல்லது கைநழுவ விடுவரா…? பொறுத்திருந்து பார்போம்.
நன்றி - சமகளம்