Paristamil Navigation Paristamil advert login

தெற்கின் ஆளுமையும் தமிழ் தலைமையின் கையறு நிலையும்..!

தெற்கின் ஆளுமையும் தமிழ் தலைமையின் கையறு நிலையும்..!

11 தை 2018 வியாழன் 15:07 | பார்வைகள் : 9735


நாட்டு மக்கள் எதிர்பார்த்ததைப் போன்றும் இந்த பத்தி ஏற்கனவே சுட்டிக் காட்டியதைப் போன்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினுடைய முழுமையான கட்டுப்பாட்டை தன்னகத்தே கொண்டு வந்து ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுத் தளத்தை குறைக்கும் வகையிலும் ஜனாதிபதி தன்னுடைய ஆளுமையை வெளிப்படுத்தியுள்ளார். 
 
தேர்தல் அறிவிப்பதற்கு முன்னரே இது நடைபெறும் என்று எதிர்பார்த்த போதிலும் தேர்தல் அறிவிப்பு வெளியாகி, வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் இருவேறு ஆணைக்குழுக்களின் அறிக்கை ஜனாதிபதிடம் கையளிக்கப்பட்டு அந்த அறிக்கைகளின் பேரில் ஜனாதிபதி தனது கருத்துக்களையும், இனி எடுக்கப் போகும் நடவடிக்கை பற்றியும் கடந்த புதனன்று மக்களுக்கு ஒரு நீண்ட உரையாற்றியிருக்கிறார்.
 
ஐக்கிய தேசியக் கட்சி இதுவரையில் தமக்கு எதிரிகள் என்று யாரும் இல்லை என நினைத்துக் கொண்டிருந்த நிலையிலும், பொதுஜன பெரமுன என்ற பெயரில் மஹிந்தா ராஜபக்ஸவின் ஆதரவாளர்களான சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் அந்தக் கட்சியை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு எத்தனித்திருந்த வேளையில் ஜனாதிபதியின் உரையானது அந்த இரண்டு தரப்பினரதும் கனவை தகர்த்திருக்கிறது. 
 
சுருங்கக் கூறின் டிசம்பர் 31 ஆம் திகதியுடன் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி உள்ளூராட்சித் தேர்தலுக்கு பின்னர் தனித்து ஆட்சி அமைக்க முயற்சித்திருந்த ஒரு சூழலில் ஜனாதிபதியின் உரை அந்த முயற்சியை கை விடுவதற்கு வழி செய்துள்ளது. மறுபுறத்தில், மஹிந்தா அணியினர் துள்ளிக் குதிப்பதையும் தடுத்து நிறுத்தியுள்ளது.
 
மேற்சொன்ன நடவடிக்கையின் மூலம் ஜனாதிபதி தனது ஆளுமையை நிரூபித்துள்ளதுடன், தான் எந்தக் கட்சிக்கும் துணைபோபவர் அல்ல என்பதை நிலைநாட்டவும் எத்தனித்துள்ளார். 2008 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் காலப்பகுதியில் பல்வேறு திணைக்களங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடி குறித்த விசாரணை அறிக்கையை பின்னுக்கு தள்ளி நல்லாட்சி அரசாங்கம் என்று சொல்லப்படுகின்ற புதிய அரசாங்கத்தின் திறைசேரி முறிகள் கொடுக்கல் வாங்கல்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் முன்னதாக வெளிப்படுத்தப்பட்டிருந்தும் இங்கு குறிப்பிடத்தக்கது.
 
இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து உருவாக்கப்பட்ட தேசிய அரசாங்கம் அல்லது நல்லாட்சி அரசாங்கம் என்பது குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதையும், கடந்த கால ஆட்சியில் நடைபெற்ற ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரித்து அதனுடன் தொடர்புடையவர்களை தண்டிப்பதையும், இனப்பிரச்சனை விடயத்தில் நீடித்து நிலைத்திருக்கக் கூடிய தீர்வினை எட்டுவதைனையும், அதேவேளை யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது தயவு தாட்சனயமின்றி நடவடிக்கை எடுப்பதையும் நோக்கமாக கொண்டிருந்தது. 
 
பின்னர் படிப்படியாக யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பாக எந்தவொரு இராணுவத்தினரும் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படமாட்டார்கள் என்று ஜனாதிபதியும், பிரதமரும் பகிரங்கமாகவே அறிவித்து வருகின்றனர். கடந்த ஆட்சிக் காலத்தில் நடந்ததாக கூறப்படும் ஊழல் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டால் சிறிலங்கா சுதந்திரக் கட்சி மேலும் பிளவுபடக் கூடிய வாய்ப்பு இருப்பதைக் கருத்தில் கொண்டு அந்த நடவடிக்கைகள் மந்தகதியில் முன்னெடுக்கப்படுவதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தில் 2015 ஆம் ஆண்டு மற்றும் 2016 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் அரசிற்கு பொருளாதார ரீதியில் பாரிய நட்டம் ஏற்பட்டிருப்பது சுட்டிக்காட்டப்பட்டவுடன், அதன் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு 10 மாத காலத்திற்குள் அறிக்கையும் பெற்றுக் கொள்ளப்பட்டு அந்த அறிக்கையின் மீது ஜனாதிபதி தனது கருத்தையும் தெரிவித்துள்ளார்.
 
அரசியல் தீர்வு விடயத்தைப் பொறுத்தவரையில் வழிநடத்தல் குழுவில் அங்கம் வகித்தவர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ஒற்றையாட்சிக்குள்ளேயே தீர்வு, சமஸ்டி என்பதற்கு இடமில்லை, வடக்கு – கிழக்கு இணைப்பு இல்லை, பௌத்திற்கு முன்னுரிமை போன்றவை உள்ளடக்கப்பட்டுள்ளன. 
 
தென்னிலங்கை சமூகத்தை அல்லது பெரும்பான்மை சமூகத்தை மட்டுமே திருப்திப்படுத்தக் கூடிய இந்த விடயங்களை பெரும்பான்மை சமூகத்தினரின் மதகுருமார்கள் உள்ளிட்ட மஹிந்த தரப்பினரும் இதில் ஏதோ சமஸ்டி இருப்பதாகவும், இது நாட்டை பிரிக்கப் போவதாகவும் ஒப்பாரி வைக்கின்றனர். 
 
இதன் மூலம் ‘இதையாவது ஏற்றுக் கொள்ளுங்கள். இதற்கே சிங்களத் தரப்பில் இருந்து பெரும் எதிர்ப்பு வருகின்றது. நாங்கள் இருவரும் சேர்ந்து இதை வழங்குவதற்கு முயற்சித்து இருகிறோம். இதை ஏற்றுக் கொள்ளுங்கள் இல்லையேல் இதுவும் இல்லாமல் போய்விடும்’ என்பதாக ஒரு பூச்சாண்டி காட்டப்படுகிறது.
 
இந்த நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே சிங்கள பௌத்த பேரினவாதம் தோற்றுவிக்கப்பட்டு தமிழ் தேசிய இனம் அந்த தேசிய இனத்திற்கு அடிமையாக இருக்க வேண்டும் என்பதாகவே சிங்கள மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப்பட்டது. பின்கதவால் பிரித்தானியரிடம் இருந்து இறைமையை பெற்றுக் கொண்ட சிங்கள தேசியம் தனது முழு அதிகாரத்தையும் தமிழ் தேசிய இனத்தை ஒடுக்குவதற்கு பயன்படுத்தியதேயன்றி நாட்டை அபிவிருத்தி செய்து உலக நாடுகளுடன் போட்டியிடுவதற்கான நோக்கங்களை கொண்டிருக்கவில்லை. 
 
மாறி மாறி ஆட்சிக் கட்டிலில் ஏறியவர்கள் அனைவரும் தமிழ் தேசிய இனத்தை எந்தளவிற்கு ஒடுக்குகிறமோ அந்தளவிற்கு தனது கட்சி ஆட்சியில் இருக்கும் என்ற நிலையில் செயற்பட்டிருந்ததுடன், அந்த ஆட்சியைப் பயன்படுத்தி ஆட்சியாளர்கள் தமது வருமானததையும், சொத்துக்களையும் அதிகரித்தனர். திட்டமிட்டு சிங்கள தேசியவாதம் உரமூட்டி வளர்க்கப்பட்டன. ஆனால், இனப்பிரச்சனைக்கு இனி ஒருபோதும் இடமில்லை.
 
அடக்கு முறைக்கு இடமில்லை. அனைத்து தேசிய இனங்களும் சமத்துவத்துடனும், சகோதரத்துவத்துடனும், பாதுகாப்புடனும் வாழக் கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்த வேண்டுமானால் இந்த நாட்டில் ஒரு சமஸ்டி அடிப்படையிலான அரசியல் அமைப்பு முறை ஒன்றே பொருத்தமாக இருக்கும். இந்த நாட்டின் பூர்வீக குடிகளில் ஒரு பகுதினராகிய தமிழ் தேசிய இனம் தமக்கென அடையாளப்படுத்தக் கூடிய வடக்கு- கிழக்கு வாழ்விடத்தையும், தனியான ஒரு மொழியையும், தமக்கேவுரிய கலாசாரத்தையும், பண்பாட்டையும் கொண்டிருக்கிறது. 
 
இதன் இடிப்படையிலேயே சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப தன்னை ஒரு தேசிய இனமாக அடையாளப்படுத்தி அந்த தேசிய இனத்திற்கேவுரிய சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து ஐக்கிய இலங்கைக்குள் தமக்கென ஒரு சுயாட்சி அலகை கோருகிறது. இது சர்வதேச சட்டப்படியும், நியமப்படியும் ஒரு தேசிய இனத்திற்கு உரித்தான உரிமை. இதை மறுப்பது சர்வதேச சட்டத்தையும், நியமத்தையும் மீறுவதாகும்.
 
தமிழ் தலைமை என தன்னை வர்ணித்துக் கொள்ளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு குறிப்பாக தமிழரசுக் கட்சி தனது கட்சியிக் பெயரை சமஸ்டிக் கட்சி என்று வைத்துக் கொண்டு இந்த விடயங்களில் விட்டுக் கொடுத்து செயற்படுவதானது அந்தக் கட்சி தமிழ் தேசிய இனத்தின் மீது கொண்டுள்ள பற்றை கேள்விக்குள்ளாகின்றது. அண்மையில் திருகோணமலையில் நடந்த ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் ‘ என்னைப் பொறுத்தவரையில் இந்த அரசியலமைப்பு விடயங்களில் நான் ஒரு வித்தகரல்ல. ஆனால் சுமார் 50 ஆண்டுகள் அளவில் இந்த அரசியலிலும், போராட்டங்களிலும் ஈடுபட்ட ஒருவர். 
 
இந்த அரசியல் கால அனுபவம், சிறைவாசம் மற்றும் எமது மக்கள் இதற்காக சிந்தித்த வியர்வை, சிந்திய இரத்தம் இதன் பின்னனி அனுபவத்தின் அடிப்படையில் இன்று ஏற்பட்டிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடக்கூடாது என நாங்கள் திட்டவட்டமக நம்புகின்றோம்’ என்று கூறியிருக்கிறார்.
 
இன்றைய தமிழரசுக் கட்சி தலைவரின் இந்தக் கூற்றில் இருந்து தமிழரசுக் கட்சி அதன் பின்னரான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னனி ஆகியவற்றின் கொள்கையில் இருந்து வெகுதூரம் விலகிச் சென்றிருப்பது தெரிகிறது. தமது கட்சி எதற்காக தோற்றம் பெற்றது என்பதையும், ஒரு அரசியல் ரீதியான போராட்டத்தை வழிநடத்த வேண்டிய ஒரு கட்சியின் தலைவர், அரசியல் அமைப்பு குறித்து தான் ஒரு வித்தகர் அல்ல என்று கூறியிருப்பதன் மூலமும் அவர் எதற்கு தலைமை தாங்குகின்றார் என்பது புரியாத புதிராக இருக்கிறது. 
 
கட்சித் தலைவர் கொள்கை வகுப்புக்களில் முன்னிலை வகித்து, கட்சியின் உயர்பீடத்துடன் விவாதித்து, அதனை செழுமைப்படுத்தி அதனையே தனது கட்சியின் கொள்கையாக வெளியிட்டு, அந்த கொள்கையை நடைமுறைப்படுத்துவற்கு மக்களை அணிதிரட்ட வேண்டும். இந்தநிலையில், தான் போராடும் மக்களுக்கான தீர்வு எப்படி அமைய வேண்டும் என்பதிலேயே தெளிவில்லாத ஒருவர், ஒரு போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு காத்திரமான பங்களிப்பை வழங்கக் கூடிய ஒரு கட்சிக்கு தலைவராக இருப்பது இலங்கையை தவிர வேறு எங்கும் இருப்பதாக தெரியவில்லை.
 
அரசியல் தீர்வு விவகாரங்கள் ஒருபுறமிருக்க, ஆயுதப் போராட்டத்திற்கு தாங்கள் ஆதரவளித்தவர்கள் அல்ல என்று கூறிக் கொண்டே இப்பொழுது புலிகளின் காலத்தில் இருந்த ஒரு பலமான ஆயுத சக்தியினை நாம் இழந்திருக்கின்றோம் என்றும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மேடைகளில் பிரச்சாரம் செய்து வருவைதை காணமுடிகிறது. 
 
அந்த பலம்மிக்க அணியில் இணைந்து ஆயுதப் போராட்டம் மெளனிக்கச் செய்யப்பட்தன் பின்னர் கையளிக்கப்பட்ட உறவினர்களுக்கு என்ன நடந்தது என்பதை கண்டறிந்து பாதிப்படைந்த மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கு இவர்கள் மேற்கொண்ட நடவடிக்கையும் அதன் பெறுபேறும் என்ன…?, வலிமை மிகுந்த தற்காப்பு அரணாக இருந்த ஆயுதப் போராட்டத்தினை முடிவுக்கு கொண்டு வருவதற்காகவும், அதன் பின்னரும் அரசாங்கம் கைபற்றிய பொது மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு இவர்கள் மேற்கொண்ட நடவடிக்கை என்ன…?, அதே ஆயுதப் போராட்டத்திற்கு எந்தவித தன்னலமும் இன்றி நாளைய விடியலில் உயிருடன் இருப்போமா என்பது கூட தெரியாமல் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு உதவினார்கள் என்ற சந்தேகத்தின் பேரிலும், அந்த போராட்டத்தில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரிலும் கைது செய்யப்பட்டு சிறைகளில் உள்ளவர்களை விடுவிக்க இவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன…?, மக்களின் பொருளாதாரத்தை தீர்மானித்த கடல் வளங்களை இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்க எடுத்த நடவடிக்கை என்ன….?, அரசாங்கத்துடன் இணக்கமான போக்கை கடைப்பிதிருக்கையில் மக்கள் நலன்சார்ந்து முடிவுகள் எடுக்கப்பமட்டிருக்குமாக இருந்தால் மேற்சொன்ன விடயங்களை கையாள்வதில் கடினமாக இருந்திருக்க முடியாது. ஆனால் இணக்க அரசியல் செய்து கொண்டிருக்கையில், மக்கள் தமது கோரிக்கைகளை கையில் எடுத்துக் கொண்டு தாமாகவே வீதிகளில் சுமார் ஒராண்டு காலமாக போடுகிறார்கள். இதில் அந்த தலைமை மக்கள் நலன்சார்ந்து எடுத்த முடிவு என்ன…?
 
கடந்த உள்ளூராட்சி தேர்தல்களில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பெரும்பான்மையான உள்ளூராட்சி மன்றங்களையும் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பே கைப்பற்றியிருந்தது. 
 
அந்த உள்ளூராட்சிகளில் நடைபெற்ற அபிவிருத்திகள் என்று ஒன்றையாவது தமிழரசுக் கட்சியினால் சுட்டிக்காட்ட முடியுமா..?. ஒட்டுமொத்தில் அரசியல் தீர்வு தொடர்பிலும் தெளிவில்லாமல் உள்ளூராட்சி சபைகளை நிர்வகிப்பது எவ்வாறு என்ற நிர்வாக திறமையின்றியும், தனது மக்களின் போராட்டத்திற்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க திராணியற்றும் செயற்படும் ஒரு தலைமை எவ்வாறு தமிழ் தேசிய இனத்தின் விடிவுக்கு உறுதியான தீர்வை பெற்றுத் தரும் என்றும் உள்ளூராட்சி மன்றங்களின் மூலமாக கிராமப்புறங்களை எவ்வாறு அபிவிருத்தி செய்யும் என்றும் பலமான கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் எழுந்திருக்கின்றது.
 
நன்றி - சமகளம்

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்