Paristamil Navigation Paristamil advert login

குழப்பத்தில் மக்கள்…..?

குழப்பத்தில் மக்கள்…..?

26 மார்கழி 2017 செவ்வாய் 13:14 | பார்வைகள் : 9449


கடந்த 30 வருடகாலமாக தமிழ் மக்களின் உரிமைக்காக முன்னெடுக்கப்பட்ட ஆயுதவழிப்போராட்டமானது 2009 ஆம் ஆண்டு மே மாதம் முள்ளியவாய்கால் பேரவலத்துடன் மௌனிக்கப்பட்ட பின்னர் அந்த மக்களின் அபிலாசைகளையும், உரிமைக் கோரிக்கைகளையும், அவர்களுக்கான தேவைகளையும் தொடர்ந்தும் முன் கொண்டு சென்று அதனை பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமையின் தோள்களில் சுமத்தப்பட்டிருந்தது. 
 
ஆனால் யுத்தம் முடிவடைந்து கடந்த எட்டரை ஆண்டுகளில் அதன் நகர்வுகள், செயற்பாடுகள் என்பன எவ்வாறு அமைந்திருக்கின்றது என்ற கேள்வி உள்ளது…? அவர்களின் தற்போதைய நகர்வு தமிழ் மக்களுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க வழிவகுக்குமா என்ற கேள்வியும் மக்களிடம் எழுந்திருக்கின்றது. இதன்விளைவே உள்ளூராட்சி மன்ற தேர்தல் அறிவித்த கையுடன் தமிழர் தரப்பு அரசியலில் பிரிவுகளும், புதிய கூட்டுக்களும் ஏற்பட வழிவகுத்திருக்கின்றது.
 
இந்த நாட்டின் தற்போதைய ஜனாதிபதியாகிய மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஆட்சி பீடம் ஏறுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனையற்ற ஆதவை வழங்கியிருந்தது. இன்று ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. 
 
ஆனால் தமிழ் மக்களின் வாக்கு பலத்துடன் ஏற்பட்ட இந்த ஆட்சி மாற்றம் மூலம் கிடைத்த நன்மைகள் என்ன என தேடிப்பார்த்தால் ஒரு சில காணிவிடுவிப்புக்களும், சிறிய ஜனநாயக இடைவெளியுமே கிடைத்திருக்கின்றது. தமிழ் தேசிய இனம் இதற்காக இந்த நாட்டில் போராட வில்லை. 
 
அவர்கள் முன் இனப்பிரச்சனைக்கான நிரந்த தீர்வு முதல் சாதாரண அடிப்படைப் பிரச்சனைகள் வரை ஏராளம் பிரச்சனைகள் உள்ளன. இதனை பாதிக்கப்பட்ட மக்களால் கடந்த 10 மாதங்களாக வீதிகளில் முன்னெடுத்து வரும் தன்னெழுச்சியான தொடர் போராட்டங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. இத்தகைய பிரச்சனைகளை தீர்க்க நல்லாட்சி எனக் கூறப்படும் இந்த அரசாங்கமோ அல்லது அதற்கு ஆதரவு வழங்கி வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்போ காத்திரமாக எந்தவொரு நடவடிக்கையையும் எடுத்தாக தெரியவில்லை.
 
மாறாக ஆட்சி மாற்றத்திற்கு பின்னரான கடந்த மூன்று ஆண்டுகளில் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு எதிராக இருந்த போர்க்குற்றம் மற்றும் மனிதவுரிமை மீறல் உள்ளிட்டு பல்வேறு விடயங்கள் சார்ந்து இருந்த அழுத்தம் குறைவடைந்திருக்கின்றது.
 
அரசாங்கத்தினுடைய இந்த இராஜதந்திர நகர்வுகளுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமையும் துணைபோயிருக்கிறது. இதன் காரணமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீதும் அரசாங்கத்தின் மீதும் தமிழ் மக்களுக்கு அதிருப்தி நிலை தோன்றியிருக்கின்றது. இந்த நிலையே கொள்கை ரீதியில் தமிழ் மக்களது அபிலாசைகளை முன்னகர்த்தக் கூடிய ஒரு மாற்று அணி பற்றிய தேடலை உருவாக்கியிருந்தது.
 
மாற்று அணிக்கான கோரிக்கையை கடந்த 2010 ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னனியினரே முதன் முதலில் வெளிப்படுத்தியிருந்தனர். 
 
அதைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து அண்மையில் வெளியேறிய சுரேஸ் பிறேமச்சந்திரன் தலைமையிலான ஈபிஆர்எல்எப் அணியும், பல்வேறு சமூக செயற்பாட்டாளர்களும், பத்தி எழுத்தாளர்களும், அரசியல் ஆய்வாளர்களும் முன்வைத்திருந்தனர். அதற்கான வேலைகளும் கடந்த ஒரு வருடமாக நடந்த போதும் அவை திருப்திகரமாக இல்லை என்றே கருதவேண்டியுள்ளது.
 
தமிழ் மக்களுக்கு தேவையானது அவர்களது நியாயமான கோரிக்கைகளையும், அபிலாசைகளையும் முன்னகர்த்தக் கூடிய ஒரு மாற்று அணியே என உணரப்பட்டது. அத்தகையதொரு மாற்று அணியை உருவாக்குவதற்காக கஜேந்திரகுமாருக்கும், சுரேஸ் பிறேமச்சந்திரனுக்கும் இடையில் பேச்சுக்கள் நடைபெற்று வந்தன. திரைமறையில் தமிழ் மக்கள் பேரவையும் அதற்கு உடந்தையாக செயற்பட்டது. 
 
இதன் விளைவாக இருவரும் புதிய கூட்டு அமைக்கவுள்ளதாகவும் ஊடகசந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தனர். இருப்பினும் அவர்களது ஒற்றுமை நீடிக்கவில்லை. கூட்டு அறிவிக்கப்பட்டு ஒரு மாத காலத்திற்குள்ளேயே சில நடைமுறைப் பிரச்சனைகளை முன்வைத்து அவர்கள் இருவரும் பிரிந்து இரு வேறு அணிகளாக தற்போது கூட்டு அமைத்திருக்கின்றனர். 
 
ஈபிஆர்எல்எப், ஈரோஸ், ஜனநாயக தமிழரசுக் கட்சி, ஜனநாயக போராளிகளில் ஒரு பகுதியினர், தமிழர் விடுதலைக் கூட்டனி என்பன ஒன்றிணைந்து தமிழர் விடுதலைக் கூட்டமைப்பு என்னும் பெயரில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளனர். தமிழ் தேசிய மக்கள் முன்னனி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழர் சமவுரிமை இயக்கம் இன்னும் சில பொது அமைப்புக்கள் இணைந்து தமிழ் தேசிய பேரவை என்னும் பெயரில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடவுள்ளனர்.
 
அரசியல் கட்சிகள், சட்டத்தரணிகள், புத்திஜீவிகள், கல்வியிலாளர்கள், வைத்தியர்கள், சிவில் சமூக அமைப்புக்கள், மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்கள் எனப் பல்வேறு தரப்புக்களையும் உள்ளடக்கி வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களின் இணைத் தலைமையில் தமிழ் மக்கள் பேரவை என்னும் பெயரில் ஒரு மக்கள் இயக்கம் செயற்பட்டு வரகிறது. அந்த அமைப்பில் ஒருமித்த கொள்கையுடையதாக இருந்த இரு பிரதான கட்சிகளான கஜேந்திரகுமார் தலைமையிலான அணியும், சுரேஸ் பிறேமசந்திரன் தலைமையிலான அணியும் இரு வேறு திசைகளில் கூட்டுக்களை அமைத்தமை அந்த அமைப்பிற்குள்ளும் குழப்பங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. வரும் உள்ளூராட்சி தேர்தலில் எந்த கூட்டை ஆதரிப்பது அல்லது எந்த கூட்டுக்குக்கு மக்களை வழிநடத்துவது என்பது தொடர்பில் பேரவையும் குழப்பி போயுள்ளது. ஏற்கனவே பேரவையில் உள்ள மற்றுமோர் கட்சியான புளொட் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
 
ஆக, இந்த உள்ளூராச்சி தேர்தல் என்பது தென்னிலங்கையை மட்டுமன்றி வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகளையும் ஆட்டம் காண வைத்திருக்கின்றது. தமிழ மக்கள் தமது உரிமைக்காகவும், அபிலாசைகளுக்காகவும் உண்மையாகவும், நேர்மையாகவும் இதயசுத்தியுடனும் பணியாற்றக் கூடிய கட்சி எது..? அல்லது அரசியல் கூட்டு எது..? என தீர்மானிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். இந்த தேர்தலை வெறும் பிரதேச அபிவிருத்திக்கான உள்ளூராட்சி தேர்தலாக மட்டும் கருத முடியாது. 
 
ஏனெனில் இந்த தேர்தல் முடிவடைந்த பின்னர் ஐ.நா மனிதவுரிமை ஆணையகத்தின் கூட்டம் நடைபெறவுள்ளது. 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வழங்கப்பட்ட மேலும் இரண்டு ஆண்டுக்கான கால நீடிப்பின் ஒரு வருடம் நிறைவடையவுள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் எத்தகைய நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பது குறித்து எழுத்து பூர்வமான அறிக்கையை ஐ.நா மனிதவுரிமை ஆணையாளர் இந்தக் கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கவுள்ளார். 
 
ஆகவே, உள்ளூராட்சித் தேர்தலைக் மையப்படுத்தி இலங்கை அரசாங்கம் ஜனநாயகத் தேர்தல் நடைபெற்றுள்ளதாக கூறப்போகிறது. இடைக்கால அறிக்கைளும் வெளியாகியுள்ள நிலையில் அதற்கு ஆணைகோருகின்ற தேர்தலாக இந்த தேர்தலை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் கையாளப் போகிறது. 
 
ஆனால் ஏனைய இரு புதிய கூட்டுக்களும் அந்த இடைகால அறிக்கையில் தமிழ் மக்களது அபிலாசகைள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து மக்கள் ஆணையைக் கோரப்போகிறது. ஆக தமிழ் மக்கள் கொள்கைக்காவும், தமது அபிலாசைகளை அடைவதற்காகவும், தமிழ் மக்களுக்கு நன்மை பயக்காத புதிய அரசியலமைப்பை ஏற்பதா..?, நிராகரிப்பதா என்பதை வெளிப்படுத்த தமது வாக்குரிமையையே பயன்படுத்த வேண்டியுள்ளது. மக்களது வாக்குகளே தமிழ் மக்களின் தேசிய அரசியலை முன்னகர்த்த முயலும் இந்த மூன்று கூட்டுக்களின் இருப்பையும் தீர்மானிக்கப் போகிறது.
 
நன்றி - சமகளம்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்