கோட்டாபய ஐநாவுக்குப் பொறுப்பு கூறுவாரா?
15 மார்கழி 2019 ஞாயிறு 13:20 | பார்வைகள் : 9879
கோட்டாபய ராஜபக்ச அரசுத் தலைவராக தெரிவு செய்யப்பட முன்னரே தெளிவாக சொல்லிவிட்டார் தான் தேசத்துக்குதான் பொறுப்பு கூறுவேன் என்று. மிக அழகாக வடிவமைக்கப்பட்ட ஒரு இலத்திரனியல் தேர்தல் விளம்பரத்தில் அது வருகிறது. தேசத்துக்கு பொறுப்புப் கூறும் தலைவர் என்று. அப்படி என்றால் என்ன? அவர் தமிழ் மக்களுக்கு பொறுப்புக் கூறமாட்டார். முஸ்லிம்களுக்கு பொறுப்புக்கூற மாட்டார். அனைத்துலக சமூகத்துக்கு பொறுப்புக்கூற மாட்டார். ஐநாவுக்கு பொறுப்புக்கூற மாட்டார்.
பொறுப்புக் கூறுவது என்றால் அது முதலில் இறந்த காலத்துக்குப் பொறுப்பு கூறுவதுதான். இறந்த காலத்துக்கு பொறுப்புக்கூறத் தயாரான ஒருவர்தான் நிகழ் காலத்துக்கும் வருங் காலத்துக்கும் பொறுப்பு கூறலாம். ஆனால் கோட்டாபய இறந்த காலத்துக்கு பொறுப்புக் கூற மாட்டேன் என்று கூறுகிறார்.
தேர்தல் காலத்தில் அவர் தனது பரிவாரங்களோடு தோன்றிய முதலாவது பெரிய ஊடக மகாநாட்டில் அவரை நோக்கிக் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதில் கூறும்போது ஐநாவின் பொறுப்புக் கூறலுக்கான தீர்மானத்தை நான் ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறியிருந்தார். அந்த மாநாட்டில் அவருக்கு அருகே இருந்த பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் கோட்டாபய கூறிய பதிலை மேலும் விரித்துக் கூறினார். பொறுப்புக்கூறலுக்கான ஐநாவின் தீர்மானம் இலங்கை தீவின் இறையாண்மைக்கு எதிரானது என்ற தொனிப்பட அவருடைய பதில் அமைந்திருந்தது.
புதிய வெளியுறவுத் துறை அமைச்சரும் அதைத்தான் கூறுகிறார். ஐநாவின் பொறுப்புக்கூறலுக்கான தீர்மானத்தை மாற்றி அமைக்கப் போவதாக அல்லது கைவிடப் போவதாக.
இலங்கைத்தீவின் பொறுப்புக் கூறலுக்கான தீர்மானம் எனப்படுவது ஐநாவில் 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்டது. அதில் முன்னைய அரசாங்கம் ஓர் இணை அனுசரணையாளராகக் கையெழுத்து வைத்தது. முப்பத்தின் கீழ் ஒன்று தீர்மானம் என்று அழைக்கப்படும் அத்தீர்மானம் இலங்கைத்தீவில் நிலைமாறுகால நீதியை ஸ்தாபிப்பதற்கான ஏற்பாடுகளை கொண்டிருக்கிறது. நிலைமாறுகால நீதி எனப்படுவது சாராம்சத்தில் பொறுப்புக்கூறல் தான். ஆனால் கோட்டாபய தான் பொறுப்புக்கூற போவதில்லை என்று கூறுகிறார்.
அப்படி என்றால் தீர்மானத்தை திருத்தி எழுதுவதற்கான அல்லது கைவிடுவதற்கான ஒரு பிரேரணையை மனித உரிமைகள் பேரவையில் இலங்கைத்தீவு முன்வைக்க வேண்டியிருக்கும். அவ்வாறு ஒரு வேண்டுகோளை விடுப்பதென்றால் அதனை வரும் ஜனவரி 18ம் திகதிக்குள் செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட நிபுணர்கள் கூறுகிறார்கள். அவ்வாறு குறிப்பிட்ட திகதிக்குள் வேண்டுகோள் விடுக்கப்பட்டால்தான் வரும் மார்ச் மாதம் தொடங்கவிருக்கும் அடுத்த ஜெனிவா கூட்டத் தொடருக்கு முன் நிகழ்ச்சி நிரலை மாற்றுவதா இல்லையா என்பதை தீர்மானிக்கலாம்.
ஒரு நாடு ஐநாவின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்துக்கு எதிராக இவ்வாறு கோரிக்கை விடுப்பது என்பது மிக அரிதான ஓர் அரசியல் தோற்றப்பாடு ஆகும். அதிலும் குறிப்பாக ஐநாவிடம் இரண்டு முறை கால அவகாசத்தை பெற்றுவிட்டு இப்பொழுது அந்த தீர்மானமே வேண்டாம் என்று கூறுவது உலக அரங்கில் எப்படிப் பார்க்கப்படும்?
அவ்வாறு ஐநாவின் மற்றொரு உறுப்பான பாதுகாப்புச் சபையில் தீர்மானங்களை மாற்றுவதற்கான புதிய நிகழ்ச்சி நிரல்களை முன் கொண்டு வந்த பல சந்தர்ப்பங்களில் சக்திமிக்க நாடுகளின் வீற்றோ அதிகாரங்களே இறுதி முடிவை தீர்மானித்துள்ளன. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகால நடைமுறைகளின் படி அவ்வாறு ஐநா பாதுகாப்பு சபையில் தீர்மானங்களை மறுபரிசீலனை செய்யும் நிகழ்ச்சி நிரல்கள் தொடர்பில் சக்தி மிக்க நாடுகள் தமது வீற்றோ அதிகாரத்தை பயன்படுத்துவதில் சவால்கள் அதிகரித்து வருவதாக நிபுணர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இவ்வாறு பாதுகாப்புச் சபையில் தீர்மானங்களை மாற்றும் விடயத்தில் சக்திமிக்க நாடுகள் வீற்றோ அதிகாரத்தை பிரயோகித்த போதிலும் எதிர்பார்த்த விளைவுகளைப் பெற முடியவில்லை என்பது சுட்டிக் காட்டப்படுகிறது. இந்த நடைமுறைகளின் வளர்ச்சிப் போக்கால் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் அவ்வாறு தீர்மானங்களை மாற்றும் நிகழ்ச்சி நிரல்களின் மீது வீற்றோ அதிகாரங்களை பயன்படுத்தக் கூடாது என்ற ஒரு முடிவு எட்டப்பட்டிருக்கிறது. இது ஒரு முக்கியமான முடிவு
இவ்வாறு ஐநாவின் சக்திமிக்க ஒரு சபையில் எடுக்கப்பட்ட முடிவு அதன் ஏனைய உறுப்புகளுக்கும் பொருந்தக் கூடியதே என்று நிபுணர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். இந்த வழமைக் கூடாகச் சிந்தித்தால் இலங்கை அரசாங்கம் ஐநாவின் முப்பதின் கீழ் ஒன்று தீர்மானத்தை நினைத்த மாத்திரத்தில் மாற்றிவிட முடியாது என்று சுட்டிக் காட்டப்படுகிறது.
அதிலும் குறிப்பாக புதிய ஜனாதிபதி பதவிக்கு வந்த உடனேயே மேற்கு நாடுகளோடு முட்டுப்படத் தொடங்கி விட்டார். அவர் ஆசிய மைய வெளியுறவுக் கொள்கையை கடைபிடிக்கப் போவதாக சில சமிக்ஞைகளை வெளிக் காட்டி இருந்தாலும் கூட அவரை மேற்கு நாடுகள் விலகி நின்றே பார்க்கின்றன.
அவர் பதவி ஏற்றதும் அமெரிக்க ராஜாங்கச் செயலர் பொம்பியோ அனுப்பிய செய்தியில்… பொறுப்புக் கூறல் நல்லிணக்கம் என்பவற்றை உறுதிப்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது அதைப்போலவே கடந்த வியாழக்கிழமை பிரித்தானியாவில் தேர்தல் நடந்த போது பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தனது ருவிற்றர் குறிப்பில் “இலங்கைத்தீவில் பொறுப்புக் கூறலும் நல்லிணக்கமும் நிலவும் என்று என்று நம்புவதாக” எழுதியிருந்தார். பிரித்தானியாவில் உள்ள தமிழ் வாக்குகளை கவரும் ஓர் உத்தி அதுவென்று தென்னிலங்கை ஊடகம் ஒன்று எழுதியுள்ளது. எனினும் மேற்கத்திய பிரதானிகள் புதிய அரசுத்தலைவர் தொடர்பில் பொறுப்புக்கூறலை அழுத்தி கூறுவது தெரிகிறது.
இவ்வாறானதொரு பின்னணிற்குள் வரும் மார்ச் மாதம் நாடாளுமன்ற கலைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உண்டு. அப்படி என்றால் அடுத்த ஜெனிவா கூட்டத் தொடரின் விளைவுகளை முன்வைத்து நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சார உத்திகளை புதுப்பித்துக் கொள்ளலாம். அப்பிரச்சார உத்திகளில் நாட்டின் இறைமைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ஒரு முக்கிய பேசுபொருளாக மாற்றலாம். ஆனால் மறுவளமாக அது மேற்கு நாடுகளுடனான உறவுகளை மேலும் பாதிப்புறச் செய்யும்.
ஏற்கனவே சில மேற்கு நாடுகள் சில படைத்துறை பிரதானிகளுக்கு விசா வழங்க மறுத்துள்ளன. அந்நாடுகளில் கல்வி பயிலும் மேற்படி பிரதானிகளின் பிள்ளைகளை அவர்கள் சென்று பார்ப்பதற்கு விசா வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அண்மையில் பிரித்தானியாவின் நீதிமன்றமொன்று பிரித்தானியாவுக்கான இலங்கை தூதரகத்தில் வேலை பார்த்த ராணுவ அதிகாரியை குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதேசமயம் சுவிற்சர்லாந்தின் நீதிமன்றமும் ஐரோப்பிய உயர் நீதிமன்றமும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குச் சாதகமான தீர்ப்புகளை வழங்கி உள்ளன. இவ்வாறானதொரு பின்னணியில் சுவிஸ் தூதரகத்தில் வேலை செய்யும் இலங்கைப் பெண் ஊழியர் தொடர்பான விவகாரம் ஐரோப்பிய நாடுகளோடு அரசாங்கத்தின் உறவுகளை சேதமடையச் செய்துள்ளது.
எனவே ஐநாவின் முப்பத்தின் கீழ் ஒன்று தீர்மானம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் எடுக்கப்போகும் முடிவு எனப்படுவது மேற்கு நாடுகளுடனான அதன் ராஜீய உறவுகளைத் தீர்மானிக்க கூடியது.
இந்த அடிப்படையில் சிந்தித்தால் புதிய அரசுத்தலைவர் அத்தீர்மானம் தொடர்பில் நெளிவு சுளிவோடு கூடிய அணுகுமுறையொன்றைக் கடைப்பிடிக்க கூடுமா? இந்த அணுகுமுறை புதியதும் அல்ல. ஏற்கனவே ரணில் விக்கிரமசிங்க அதைத்தான் கடைப்பிடித்தார்.
அதன்படி ரணில் விக்கிரமசிங்க நிலைமாறுகால நீதியின் இதயமான பகுதியாக உள்ள குற்ற விசாரணைகள் என்ற பரப்புக்குள் அவர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக அரசாங்கத்துக்கு பாதகமில்லாத ஏனைய விடயங்களில் மேம்போக்காக சில முன்னேற்றங்களை காட்டினார். ஐ.நாவிடம் அவர் ஒப்புக்கொண்ட வீட்டு வேலைகளை அவர் விசுவாசமாகச் செய்யவில்லை. மாறாக அவற்றைக் ஒப்புக்குச் செய்துவிட்டு கால அவகாசம் கேட்டார். அவருக்கு ஐ.நா இரண்டு தடவைகள் கால அவகாசம் வழங்கியது.
எனவே ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே உருவாக்கி கொடுத்திருக்கும் ஒரு பாதையில் பயணிப்பதென்று தீர்மானித்தால் புதிய அரசுத் தலைவரும் மேற்கு நாடுகளோடு ஓரளவுக்கு உறவுகளை சுதாகரித்துக் கொள்ளலாம். ஐநாவின் தீர்மானத்தில் இருக்கக்கூடிய தனக்குப் பிரச்சினையாக இல்லாத விடயப் பரப்புக்களில் அவர் ஓரளவுக்கு விட்டுக் கொடுக்கக் கூடும்.
உதாரணமாக நிலைமாறு கால நீதியின் ஒரு பகுதியாகிய இழப்பீட்டு நீதிக்குள் வரும் நினைவு கூருதல் என்ற விடயத்தில் அவர் எப்படி நடந்து கொண்டார் என்பதற்கு நடந்து முடிந்த மாவீரர் நாள் ஒரு சான்று ஆகும். முன்னைய ஆண்டுகளை விட ஒப்பீட்டளவில் இம்முறை உளவியல் நெருக்கடிகள் அதிகமாக இருந்தன. சில மாவீரர் துயிலுமில்லங்களில் அது காரணமாக ஆட்களின் வரவு குறைவாக இருந்தது.எனினும் அரசாங்கம் உத்தியோகபூர்வமாக நினைவு கூர்தலைத் தடைசெய்யவில்லை.
அவ்வாறு தடை செய்யாமல் விட்டதற்கு வேறு பொருத்தமான காரணங்களும் இருக்கக்கூடும். நினைவு கூர்தல் எனப்படுவது ஒருவிதத்தில் குணப்படுத்தற் செய்முறையும் ஆகும். கூட்டுக் காயத்தையும் கூட்டுத் துக்கத்தையும் சுகப்படுத்துவதற்கு அது மிக அவசியம். வெளிவழிய விடப்படாத கூட்டுத் துக்கமும் கூட்டுக் காயமும் அடக்கப்பட அடக்கப்பட ஒரு கட்டத்தில் கூட்டுக் கோபமாக உருத்திரளக்கூடும். அதை தவிர்ப்பதற்கு அதை வெளி வழிய விடவேண்டும். இந்த உளவியல் உத்தியைக் கவனத்தில் எடுத்து கோட்டாபய மாவீரர் நாளை கண்டும் காணாமலும் விட்டிருக்கலாம். இதுபோலவே பொறுப்புக் கூறல் தொடர்பிலும் தனக்குப் பிரச்சினை இல்லாத விவகாரங்களில் அவர் விட்டுக்கொடுப்போடும் நெகிழ்வாகவும் நடக்கக் கூடும். ஆனால் குற்ற விசாரணைகள் என்ற விடயத்தில் அதாவது போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் அவர் விட்டுக்கொடுக்க மாட்டார்.
இவ்வாறு நிலைமாறுகால நீதியில் தனக்கு ஆபத்தில்லாத பகுதிகளை நடைமுறைப்படுத்த அவர் சில சமயம் ஒப்புக் கொள்வாரா? இதன் மூலம் மேற்கு நாடுகளுடனான உறவுகளை சேதமடையாமல் பாதுகாக்கலாம். ஆனால் இதில் உள்ள அடிப்படை வேறுபாடு என்னவென்றால் தனது செல்லப் பிள்ளையாகிய ரணில் விக்ரமசிங்க ஐக்கிய நாடுகள் சபையின் முப்பத்தின் கீழ் ஒன்று தீர்மானத்தை ஒப்புக்கொண்டபடி நிறைவேற்றாமல் கால அவகாசம் கேட்ட போது மேற்கு நாடுகள் அதை முழு விருப்பத்தோடு வழங்கின. ஆனால் அதையே சீனாவின் செல்லப் பிள்ளையாகிய புதிய அரசுத் தலைவர் கேட்டால் அவர்கள் எப்படிப் பார்ப்பார்கள்?
நன்றி - சமகளம்