புதிய தலைமையின் கீழ் வலுவடையும் உறவுகள்!
7 மார்கழி 2019 சனி 15:01 | பார்வைகள் : 9589
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்து நாடு திரும்பியுள்ளார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கடந்த 29ஆம் திகதி அயல் நாடான இந்தியாவுக்குச் சென்றிருந்த அவர், அந்நாட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரைச் சந்தித்து விரிவான கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்.
ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் வெளிநாட்டுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொண்ட முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாக இது அமைந்திருந்தது. இதேசமயம் அவர் பதவியேற்று சில மணி நேரத்துக்குள் இலங்கைக்கு வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்புச் செய்தியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கினார். இந்த அழைப்பையேற்றே ஜனாதிபதி இந்தியாவுக்குச் சென்றிருந்தார்.
எமது நாட்டுக்கு மிகவும் அயலில் உள்ள இந்தியா, இலங்கையின் நீண்ட கால நண்பன் மாத்திரமன்றி, பல்வேறு வகையில் இலங்கைக்கு உதவி வரும் நாடாகவும் காணப்படுகிறது. அன்றைய ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில் சிறிய விரிசல்கள் ஏற்பட்டிருந்தன. இலங்கை சீனாவின் பக்கம் அதிகம் நாட்டம் காண்பித்தது என்ற அர்த்தப்படுத்தல்கள் வழங்கப்பட்டன.
இவ்வாறான நிலையில், மீண்டும் இலங்கையுடனான உறவுகளை சீர்செய்வதற்கு இந்தியா முனைப்புக் காட்டியிருப்பதை இந்த விஜயம் பறைசாற்றியுள்ளது எனலாம்.
கடந்த ஆட்சிக் காலத்தில் இந்தியா இலங்கையுடன் சுமுக உறவுகளைப் பேணி வந்த அதேசமயம், ராஜபக்ஷ குடும்பத்தினருடன் மோடி தனிப்பட்ட உறவுகளைப் பேணி வந்தார் என்றே கூற வேண்டும்.
பா.ஜ.க முக்கியஸ்தரும் ராஜபக்ஷ குடும்பத்தின் நண்பருமான சுப்ரமணியன் சுவாமி இதில் முக்கிய பங்காற்றியிருந்தார் என்றே கூற வேண்டும். இவருடைய ஏற்பாட்டில் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவருடைய புதல்வர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் இந்தியாவுக்கு அழைக்கப்பட்டு மோடியுடன் சந்திப்புக்களை நடத்தியிருந்தனர். இவ்வாறு தொடர்ந்து வந்த நட்பு, புதிய ஆட்சிமாற்றத்தின் பின்னர் மேலும் மலர்ந்துள்ளது என்றே கூற வேண்டும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தின் போது இலங்கைக்கு 400மில்லியன் டொலர் கடன் வழங்கவும், பயங்கரவாத அச்சுறுத்தலை ஒழிக்க நிதியுதவி வழங்கவும் பிரதமர் நரேந்திர மோடி முன்வந்திருந்தார். இரு நாட்டுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில் இந்த உதவிகள் அமைந்திருப்பதை நாம் காணக் கூடியதாகவுள்ளது.
இதற்கும் அப்பால் இரு தலைவர்களுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பில் பல்வேறு விடயங்கள் பேசப்பட்டிருந்தன. தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது ஜனாதிபதி இந்திய ஊடகங்களுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் கூறியிருந்த விடயங்கள் முக்கியமானவையாகப் பார்க்கப்படுகின்றன. இலங்கையில் தமிழர்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது தொடர்பில் இந்தியத் தலைவர்கள் வலியுறுத்தியிருந்ததுடன், இதுபற்றி செவ்வியிலும் கேட்கப்பட்டிருந்தது. வடக்கு, கிழக்கில் உள்ள மக்களின் அரசியல் பிரச்சினை என்பது பல தசாப்தங்களாக பேசப்பட்டு வருகின்ற விடயமாகும். குறிப்பாக அதிகாரப் பகிர்வுகுறித்து கூறப்பட்டு வருகிறது. பெரும்பான்மை மக்களின் விருப்பம் இன்றி எதனையும் வழங்க முடியாது.
இருந்த போதும் வடக்கு, கிழக்கில் நான் அபிவிருத்திகளை மேற்கொள்வேன். அவர்களுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்குவேன். அதிகாரப் பகிர்வு என்பது அவர்களின் அபிவிருத்திக்கு எவ்வித பயனையும் வழங்காது. அப்பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்கு பெரும்பான்மை மக்கள் எவரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லையென ஜனாதிபதி தனது செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.
அவருடைய இந்தக் கருத்து பல்வேறு விடயங்களை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. குறிப்பாக யதார்த்தமானதொரு விடயத்தைக் கூறியிருப்பதாகவே பார்க்க முடிகிறது. பல தசாப்தங்களாக அதிகாரப் பகிர்வு, இனப்பிரச்சினைத் தீர்வு எனப் பேசப்பட்டு வந்தாலும் எந்தவொரு தலைவரும் இதனைத் தீர்க்க முன்வரவில்லை. இவ்வாறான நிலையில் வடக்கு, கிழக்கில் உள்ள மக்களுக்கு அரசியல் பிரச்சினைக்கு அப்பால் பல அன்றாடப் பிரச்சினைகள் காணப்படுகின்றன.
அரசியல் பிரச்சினை என்பது தம்மைத் தாமே தமிழர்களின் பிரதிநிதிகள் எனக் கூறிக் கொள்ளும் ஒருசில அரசியல்வாதிகளால் முன்வைக்கப்படும் ஒரு விடயமாகும்.
பிச்சைக்காரனின் கால்களில் உள்ள புண் போல தமக்குத் தேவையான நேரத்தில் அவற்றை சொறிந்து விடுவதையே அவர்கள் செய்கின்றனர். எனினும், யதார்த்தம் அவ்வாறானதாக இல்லை. நீண்ட கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் அன்றாடம் தமது வாழ்க்கையை கொண்டு செல்வதில் பல பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இவற்றை நிவர்த்தி செய்வதா அல்லது அரசியல் தீர்வு வழங்குவதா முக்கியமானது என்பதை சற்றுச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அவ்வாறான பின்னணியில் நோக்கும் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்திய ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியில் யதார்த்தமான விடயத்தையே பேசியிருக்கின்றார்.
வடக்கு, கிழக்கு மக்கள் பொருளாதார ரீதியில் முன்னேறுவதற்குத் தேவையான வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் ஊடாக அவர்களின் பல பிரச்சினைகளுக்குத் தீர்வைக் கண்டு விட முடியும் என்பது அவருடைய நம்பிக்கையாகவுள்ளது.
இது போன்று மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் ஜனாதிபதி காண்பித்து வரும் ஈடுபாடு நாளக்கு நாள் அதிகரித்து வருகின்றது என்றே கூற வேண்டும். நிர்வாக ரீதியில் அவர் முன்னெடுக்கும் செயற்பாடுகள் பாராட்டுதல்களுக்கு உள்ளாகி வரும் நிலையில் வடக்கு, கிழக்கு மக்கள் மத்தியில் புதிய ஜனாதிபதி தொடர்பான நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாகவே தெரியவருகிறது.