தமிழ் கட்சிகளின் ஒற்றுமையை குலைப்பது யார்?
1 மார்கழி 2019 ஞாயிறு 13:15 | பார்வைகள் : 9639
சில தினங்களுக்கு முன்னர் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் நிழல் தலைவருமான மதியாபரனம் ஆபிரகாம் சுமந்திரன் ஒற்றுமையின் அவசியம் பற்றி பேசியிருந்தார்.
இந்தக் கால காலகட்டத்தில் மாற்று அணிகள் உருவாக்கப்படக் கூடாது. நாங்கள் எவரையும் கூட்டமைப்பிலிருந்து வெளியில் போகச் சொல்லவில்லை. அனைவரையும் கூட்டமைப்போடு இணையுமாறு அழைப்பு விடுக்கின்றோம் என்று தனது பேச்சில் அவர் குறிப்பிட்டிருக்கின்றார். எதிர்வரும் மே மாதம் பாராளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில்தான் சுமந்திரனுக்கு திடிரென்று ஒற்றுமையின் ஞாபகம் வந்திருக்கின்றது. கூட்டமைப்பின் கடந்த ஜந்துவருட கால முயற்சிகள் அனைத்தும் படுதோல்வியடைந்திருக்கின்றன. அந்த வகையில் பார்த்தால் கடந்த ஜந்துவருட கால தமிழ் அரசியலை வழிநடத்தியிருந்த சம்பந்தனும் – சுமந்திரனும் மிகவும் மோசமான தோல்வியை சந்தித்திருக்கின்றனர். ஒரு வேளை இந்த முயற்சிகள் வெற்றிபெற்றிருந்தால் அவை அனைத்திற்கும் மேற்படி இருவருமே உரிமை கோரியிருப்பர். சம்பந்தனதும் முக்கியமாக சுமந்திரனது ராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றியாகவே அதனைத் தமிழரசு கட்சியினர் கொண்டாடியிருப்பர். ஆனால் அனைத்துமே படுமோசமான தோல்வியை சந்தித்திருக்கின்றது. இப்போது இந்தத் தோல்விக்கு யார் பொறுப்பேற்பது? இத்தனைக்கும் கூட்டமைப்பு 14 பாராளுமன்ற உறுப்பினர்களை தன்வசம் வைத்திருந்தது. மைத்திரி-ரணில் ஆட்சியில் இரண்டாவது பெரிய கட்சி என்னும் அடிப்படையில் சம்பந்தன் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். இவ்வாறானதொரு அரசியல் பலத்தை வைத்திருந்தும் சம்பந்தன் – சுமந்திரன் தரப்பால் எதனையும் சொல்லக் கூடியநிலையில் சாதிக்க முடியவில்லை. இந்தப் பின்புலத்தில் மீண்டும் அதிக ஆசனங்களை வெற்றிபெறுவதன் மூலம் சுமந்திரனால் எதனைச் சாதித்துவிட முடியும்?
இந்தக் கேள்விக்கான விடையை தேடுவதற்கான வாய்ப்பை அரசியல் தொடர்பில் சிந்திப்பவர்களிடம் விட்டுவிடுகின்றேன். இப்போது சுமந்திரன் கூறும் ஒற்றுமைக்கு வருவோம். தமிழ்ச் சூழலைப் பொறுத்தவரையில் தேர்தல் காலத்தில் ஒற்றுமை என்பது ஒரு கவர்ச்சிகரமான சொல்லாக இருப்பதுண்டு. ஆனால் தேர்தல் முடிந்ததும் அது ஒரு கவனிப்பாரற்ற சொல்லாகிவிடுவதுண்டு. பின்னர் அடுத்த தேர்தலில்தான் அப்படியொரு விடயம் இருப்பது பலருக்கும் நினைவில் வரும். இப்போது சுமந்திரன் பேசும் ஒற்றுமையும் அப்படியான ஒன்றுதான். கோட்டபாய ராஜபக்ச வெற்றிபெற்றிருக்கின்ற சூழலிலும், அண்மைக்காலமாக ஒரு மாற்று அணி தொடர்பில் உரையாடப்பட்டு வருகின்ற சூழலிலும்தான் சுமந்திரன் திடிரென்று, ஒற்றுமையின் மீது காதல் வயப்பட்டிருக்கிறார். அவர் தனது பேச்சில் மாற்று அணியொன்று உரூவாக்கப்படக் கூடாது என்று அழுத்திக் கூறுவதிலிருந்து அவரின் நோக்கத்தை தெளிவாகவே ஒருவர் புரிந்துகொள்ள முடியும். இன்றைய சூழலில் ஒற்றுமையாக பயணிக்க வேண்டும் என்பதில் எவருக்குமே கருத்து முரண்பாடுகள் இருக்கப் போவதில்லை. ஆனால் அந்த ஒற்றுமையின் அடிப்படை எவ்வாறிருக்கும்? எவ்வாறிருக்க வேண்டும்? இந்தக் கேள்விகளுக்கான சரியான பதிலில்லாத போது ஒற்றுமை என்பது வெறும் சொல் மட்டுமே!
2009இற்கு பின்னரான சூழலில் அனைத்து கட்சிகளையும் ஒரணிக்குள் கொண்டுவரக் கூடிய வாய்ப்பு சம்பந்தனுக்கு கிடைத்திருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கான ஒரு சிறந்த களமாக இருந்தது. கூட்டமைப்புக்குள் உள் முரண்பாடுகள் தெரிந்த போது, கூட்டமைப்புக்குள் மேற்கொள்ள வேண்டிய கட்டமைப்புசார் மாற்றங்கள் தொடர்பில் பலரும் சம்பந்தனுக்கு சுட்டிக்காட்டியிருந்தனர். இது தொடர்பில் தமிழ் வெகுசன பரப்பிலும் அதிகம் உரையாடப்பட்டது. ஆனாலும் எதனையுமே சம்பந்தன் பொருட்படுத்தியிருக்கவில்லை. இவ்வாறானதொரு பின்னணியில்தான் கூட்டமைப்புக்குள் உடைவுகள் ஏற்பட்டன. மாற்றுத் தலைமைக்கான உரையாடல்கள் முளைவிட்டன. இதற்கான உண்மையான பொறுப்பாளிகள் யார்? ஒற்றுமையை பேணிப் பாதுகாப்பதற்கு கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பங்களையும் தவறவிட்டவர்கள் யார்? 2013இல் வடக்கு மாகாண சபைத் தேர்தல் இடம்பெற்றது. இதில், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளரும் மூத்த அரசியல் தலைவருமான வீ.ஆனந்தசங்கரி, போட்டியிட்டு தோல்வியடைந்தார். அப்போது கூட்டமைப்பிற்கு கிடைக்கப்பெற்ற மேலதிக ஆசனங்களில் ஒன்றை அவருக்கு வழங்குமாறு சித்தார்த்தன் போன்ற மூத்த தலைவர்கள் வலியுறுத்தினர். ஆனால் சம்பந்தன், சுமந்திரன், மாவை ஆகியோர் அதற்கு இணங்கியிருக்கவில்லை. ஒற்றுமை முக்கியம் என்று உண்மையிலேயே எண்ணியிருந்தால் ஆனந்தசங்கரியை உள்ளுக்குள் வைத்துக்கொள்வது பற்றியல்லவா சிந்தித்திருக்க வேண்டும். வயதிலும் அனுபவத்திலும் சம்பந்தனுக்கு இணையான ஒரு அரசியல்வாதியான ஆனநத்சங்கரி, தனக்குரிய ஆகக்குறைந்த மரியாதைகூட இல்லாத ஒரு இடத்தில் எப்படி இருக்க முடியும்? இதனால் அவர் கூட்டமைப்பைவிட்டு வெளியேறினார். இந்த இடத்தில் ஒற்றுமைக்கு தடையாக இருந்தவர்கள் யார்?
2015 பாராளுமன்ற தேர்தலில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஈ.பி.ஆர்.எல்.எப்இன் தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரன் தேர்தலில் தோல்வியடைந்தார். அப்போது கூட்டமைப்பிற்கு கிடைத்த இரண்டு தேசிய பட்டியல் ஆசனங்களில் ஒன்றை பிறேமச்சந்திரனுக்கு வழங்குமாறு ஈ.பி.ஆர்.எல்.எப் கோரியது. அது நியாயம் என்று பிறிதொரு பங்காளிக் கட்சியான புளொட்டும் கூறியது. ஆனாலும் சம்பந்தனும் சுமந்திரனும் அதனை மறுதலித்தனர். எப்படியாவது சுரேஸ்பிரேமச்சந்திரனை வெளியேற்றியாக வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தனர். இதனால் கூட்டமைப்பு மேலும் பிளவுற்றது. சுரேஸ்பிரேமச்சந்திரனுக்கு மறுக்கப்பட்ட அந்த ஆசனம் அரசியல் ரீதியில் தகுதியற்றவர்களுக்கு வழங்கப்பட்டது. ஒரு வேளை பிரேமச்சந்திரனை விடவும் அரசியல் ரீதியில் தகுதியானவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தால் அதனை ஏற்கலாம். சுரேஸை மறுப்பதற்கு சம்பந்தன் அன்று கூறிய காரணம், தலைவர்கள் என்றால் வெல்ல வேண்டும். ஆனால் அவ்வாறு கூறிய சம்பந்தன், திருகோணமலையில் மூன்று முறை தேர்தலில் தோல்வியடைந்தவர். ஒற்றுமை முக்கியம் என்று கருதியிருந்தால் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு ஒரு தேசிய பட்டியல் ஆசனத்தை வழங்கியிருக்கலாம். இந்த பின்னணியில் நோக்கினால், ஒற்றுமைக்கு தடையாக இருந்தவர்கள் யார்?
2015இல் தேசிய பட்டியல் மூலம் கிடைக்கப்பெற்ற ஆசனங்களில் ஒன்றை, இரண்டரை வருடம் என்னும் அடிப்படையில் தமிழசு கட்சிக்கும் டெலோவிற்குமிடையில் பங்கிடுவதாக உடன்பாடு காணப்பட்டது. இதனடிப்படையில் இரண்டாவது காலப்பகுதியில், டெலோவின் செயலாளர் நாயகமான சிறிகாந்தாவிற்கு அது வழங்கப்படவிருந்தது. ஆனால் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாது சம்பந்தன் டெலோவை ஏமாற்றினார். ஒற்றுமை பற்றி உண்மையிலேயே சம்பந்தனுக்கு அக்கறை இருந்திருந்தால் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியல்லவா இருக்க வேண்டும்! இ;ந்த இடத்தில் ஒற்றுமைக்கு குந்தகமாக நடந்தவர்கள் யார்?
வடக்கு மாகாண சபை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் சம்பந்தன் சுமந்திரனோடு ஒத்துப் போகவில்லை என்பதற்காக அவருக்கு எதிராக இரவோடு இரவாக, நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வந்தவர்கள் யார்? டெலோவிலிருந்து ஒருவரை பிரித்தெடுத்து, தூண்டிவிட்டு விக்கினேஸ்வரனுக்கு எதிராக வழக்குத் தொடர வைத்தவர்கள் யார்? இப்போதும் அந்த வழங்கு தொடர்கிறது. விக்கினேஸ்வரனை தொடர்சியாக அவமானப்படுத்தும் வகையில் தமிழரசு கட்சி செயற்பட்டுவந்த சூழலில்தான் விக்கினேஸ்வரன் தனியான பாதையில் செல்ல முற்பட்டார். அவரது ஆதரவாளர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக ஒரு அரசியல் கட்சியையும் உருவாக்கினார். விக்கினேஸ்வரன் வெளியில் செல்லக் கூடிய சூழலை உருவாக்கியவர்கள் யார்? இவற்றுக்கு அப்பால் பல்வேறு முரண்பாடுகளுக்கு மத்தியிலும், இ;ப்போதும் கூட்டமைப்பின் பங்காளிகளாக இருக்கின்ற புளொட் மற்றும் டெலோவுடன் கலந்தாலோசித்தா சம்பந்தன் – சுமந்திரன் தீர்மானங்களை எடுக்கின்றனர்? கூட்டமைப்பு இறுதிக் காலத்தில் சில அபிவிருத்தி நடவடிக்கைளை மேற்கொண்டதை நாம் அறிவோம். ஆனால் அதில் கூட தமிழரசு கட்சி நேர்மையாக நடக்கவில்லை என்பதை எத்தனைபேர் அறிவார்? ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இருந்த வடக்கு அபிவிருத்தி அமைச்சின் கீழ் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதி வழங்கப்பட்டது. பாடசாலைகள் அபிவிருத்தி, நூலகங்களை நிறுவுதல், வீதி புனரபைப்பு, சனசமூக நிலையங்களை தரமுயர்த்தல் என பல்வேறு விடயங்கள் இந்த நிதியின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இந்த நிதி தமிழரசு கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. இதற்கு என்ன காரணம்? இந்த அமைச்சின் செயலாளராக இருந்தவர் சிவஞானசோதி என்பவர். அடுத்த வடக்கு மாகாண சபை தேர்தலில் இவரை முதன்மை வேட்பாளராக நிறுத்துவதான ஒரு கதை அவருக்கு சொல்லப்பட்டிருக்கின்றது. இதனடிப்படையிலேயே அவர் திட்டமிட்டு தமிழரசு கட்சியல்லாத பாராளுமன்ற உறுப்பினர்களை நிராகரித்திருக்கின்றார். ஒரு நிதியை கையாளுவதில் கூட ஒற்றுமையை பேண முடியவில்லை. இப்படி ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் ஒற்றுமையை சீர்குலைத்தவர்கள், ஒற்றுமையை சிதைத்தவர்கள் இப்போது ஒற்றுமை பற்றி பேசுவது, எப்படி நேர்மையான ஒன்றாக இருக்க முடியும்?
சமந்திரன் உண்மையிலேயே ஒற்றுமையாக பயணிப்பது தொடர்பில் அக்கறையாக இருப்பின், அதற்கு ஆரம்பமாக சில விடயங்களை செய்ய வேண்டியிருக்கின்றது. அதனை செய்வதற்கு தமிழரசு கட்சி தயாராக இருக்கின்றதா? இதுவரை கூட்டமைப்பி;ற்குள் இடம்பெற்ற அனைத்து முரண்பாடுகளுக்கும் அதன் கட்மைப்பை காரணம். ஒரு கட்சி தனித்து செயற்படுவதற்கான சூழல் இருப்;பதே அனைத்து முரண்பாடுகளுக்குமான காரணமாகும். எனவே கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்கள் உள்ளுக்குள் வர வேண்டுமாயின் அவர்கள் வெளியேறியமைக்கான காரணங்கள் இல்லாமலாக்கப்பட வேண்டும். அதாவது, கூட்டமைப்பு ஒரு வலுவான கட்சியாக பதிவு செய்யப்பட வேண்டும். ஒரு கட்சியின் ஆதிக்கத்தை இல்லாமலாக்கும் வகையில் ஒரு பொதுச் சின்னம் தெரிவு செய்யப்பட வேண்டும். அனைத்து கட்சிகளையும் சமநிலையில் கையாளக் கூடியவாறான கூட்டு தலைமைத்துவத்தின் கீழ் கூட்டமைப்பு கொண்டுவரப்பட வேண்டும். தமிழரசு கட்சிக்கு தமிழ் மக்களின் நலன்கள் தொடர்பில் அக்கறை இருப்பது உண்மையாயின் தமிழ் மக்களின் ஒற்றுமையான அரசியல் இருப்பிற்கு தடையாக இருக்கின்ற தமிழரசு கட்சியின் சுயநல அரசியலை கைவிட வேண்டும். தமிழரசு கட்சி சுயநல நோக்கில் பயணிக்கும் வரையில் தமிழ்த் தேசிய கட்சிகள் ஓரணியில் பயணிப்பது சாத்தியமானதல்ல. இப்போதும் தங்களது சுயநல அரசியலுக்காகவே ஒற்றுமை பற்றி பேசுகின்றனர். தங்களது தொடர்ச்சியான தோல்வியை பூசிமெழுகி, மக்களின் ஆதரவை தக்கவைப்பதற்காகவே சுமந்திரன் திடிரென்று ஒன்றுமை பற்றி பேசுகின்றார். இவ்வாறான சூழலில் ஒரு பலமான மாற்று அணிக்கான தேவை நிச்சயம் இருக்கின்றது. தமிழரசு கட்சி அரசியல் ரீதியில் முற்றிலுமாக தோல்வியடைந்திருக்கின்ற சூழலில், தமிழ் மக்கள் தமிழரசு கட்சியுடன் மட்டும் தங்களை அடையாளப்படுத்துவதானது, அரசியல் ரீதியில் ஆபத்தானதாகும். ஓன்றில் நான் மேலே குறிப்பிட்டவாறு கூட்டமைப்பு மறுசீரமைப்பட வேண்டும் அல்லது பலமான மாற்று ஒன்றை நோக்கி மக்கள் செல்ல வேண்டும். கீரைக்கடைக்கும் நிச்சயம் ஒரு எதிர்க்கடை தேவை.