யார் இந்த சாவகன் ?
18 கார்த்திகை 2019 திங்கள் 14:54 | பார்வைகள் : 9664
யாழ்ப்பாண அரசு தோன்ற முன்னரே வட இலங்கையில் தமிழர் சார்பான அரசு ஒன்று ‘சாவகன்‘ தலைமையில் இருந்ததால் அவனது ஆதிக்கம் ஏற்பட்டதன் அடையாளமே தென்மராட்சியில் ‘சாவகச்சேரி‘, ‘சாவகன்கோட்டை‘ முதலான இடப் பெயர்கள் தோன்றக் காரணம்” என பேராசிரியர் பத்மநாதன் கருதுவதாக யாழ் பல்கலைக்கழகத்தின் வரலாறுத்துறை பேராசிரியரும் வரலாற்று ஆய்வாளருமான புஷ்பரட்ணம் “தென்மராட்சியின் தொன்மையும் பெருமையும்” என்ற கட்டுரையில் குறிப்பிடுகின்றார்.
சாவகன் மைந்தன் (கி.பி. 1255 – 1263) என்பவன் தாய்லாந்து நாட்டு தாமிரலிங்க இளவரசன் ஆவான். இவனது தந்தையான சந்திரபானு தாய்லாந்து நாட்டு தாமிரலிங்க அரசனாயிருந்து பின் 1250களில் பாண்டியர் ஆட்சியின் கீழிருந்த இலங்கையின் மீது படை எடுத்தான்.
அப்படை எடுப்புக் காலத்தில் தாமிரலிங்கத்தை ஆண்ட சாவகன் தன் தந்தைக்கு உதவுவதற்கு இலங்கை வந்துபொழுது இரண்டாம் பராக்கிரம பாகு என்ற சிங்கள அரசனால் தோற்கடிக்கப்படான். பின் பாண்டியர் பேரரசனான முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் என்பவனிடம் இவனும் இவனது தந்தையான சந்திரபானுவும் 1258ல் பணிந்து அவனின் கீழ் வடவிலங்கையை ஆண்டனர். அந்த காலத்தில் பாண்டியனுக்கு வரியாக ஆபரணங்களும் யானைகளும் அனுப்பப்பட்டன.
இலங்கையின் செல்வ வளத்தை அறிந்த தாமிரலிங்கத்தினர் அதை அடைய எண்ணி பாண்டியப் பேரரசை எதிர்த்து போர்த்தொடுத்தனர். முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் தம்பியான இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் இவர்களை 1262-1264களில் எதிர்கொண்டு சாவகநின் தந்தையான சந்திரபானுவை கொன்று தனது வெற்றியினை திரிகோணமலையில் பொறித்தும் வைத்தான்.
அதனால் சாவகன் தன் சேனையுடன் பின்வாங்கி மீண்டும் பாண்டியப் பேரரசை எதிர்க்க தருணம் பார்த்திருந்தான்.1270களில் தன் படைவலிமையை அதிகரித்து மீண்டும் பாண்டியர் சேனையுடன் போர் புரிந்து பாண்டியப் பேரரசனான முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் என்பவனால் தோற்கடிக்கப்பட்ததாக வரலாறு கூறுகின்றது.
சாவகர் பாண்டிய அரசின் உதவி பெற்று வடவிலங்கையை ஆண்டு பின் அவர்களின் மேலேயே போர் தொடுத்தது, சாவகர் மீது நம்பிக்கை இழந்த பாண்டிய அரசு தன் அமைச்சனான குலசேகர சிங்கையாரியன் கீழ் ஆரியச் சக்கரவர்த்திகள் என்ற புதிய யாழ்ப்பாண அரச வம்சத்தை தொடங்கி வடவிலங்கையை ஆள வைத்தது. அதன் பின் சாவகனின் தாய்லாந்து நாட்டு தாமிரலிங்க அரசு மற்ற பக்கத்து அரசுகளால் துண்டாடப்பட்டன.
தமிழில் தென்கிழக்காசியாவைச்ச சேர்ந்தவர்கள் சாவகர்கள் அல்லது யாவகர்கள் என அழைக்கக்கப்படுவதால் சாவகச்சேரி என்ற பெயர் வரக்காரணம் சந்திரபானுமன்னனின் காலத்தில் வந்து இருந்தவர்கள் குடியேறிய இடமாகாக கருதலாம்.
மேலும் “தென்மராட்சியின் தொன்மையும் பெருமையும்” என்ற கட்டுரையில் பேராசிரியர்பேராசிரியர் புஷ்பரட்ணம் அவர்கள் இலங்கையில் 15ஆம் நூற்றாண்டில் எழுந்த “கோகிலசந்தேஸய‘ என்ற சிங்கள இலக்கியம் சாவகச்சேரிப் பிராந்தியத்தை “சாவக்கோட்டை‘ என தென்மராட்சியை யாழ்ப்பாண அரசுடன் தொடர்பு படுத்துகிறது. இதே பிராந்தியத்தை 15ஆம், 16ஆம் நூற்றாண்டில் எழுந்த ‘திரிஸிங்கள கடயிம் ஸஹ வித்தி’ என்னும் நூல் ‘சாவகிரி‘ எனவும் குறிப்பிடுகின்றது. ஆதலால் சாவகச்சேரியானது 12ஆம் நூற்றாண்டுமுதல் 15ம் நூற்றாண்டுவரை இலங்கையின் வரலாற்றில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருந்திருக்கின்றது என்பதில் ஐயமில்லை.
நன்றி - சமகளம்