13அம்ச கோரிக்கையும் சம்பந்தனும்!
31 ஐப்பசி 2019 வியாழன் 09:06 | பார்வைகள் : 9886
பிரதான இரு வேட்பாளர்களை சந்திப்பதற்கான முயற்சிகளில் இதுவரை எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. பிரதான வேட்பாளர்களில் ஒருவரான கோட்டபாய ராஜபக்ச ஏற்கனவே இந்த நிபந்தனைகளை நிராகரித்துவிட்;டார். எனவே குறித்த ஆவணத்துடன் கோட்டபாயவை சந்திப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை. கோட்பாய ராஜபக்சவின் நிலைப்பாடு ஜந்து கட்சிகளைப் பொறுத்தவரையில் எதிர்பாராத ஒன்றுமல்ல. உண்மையில் ஜந்து கட்சிகள் பொதுவாக பிரதான வேட்பாளர்களுடன் சந்திப்பதென்று முடிவெடுத்திருந்தாலும் கூட, கோட்டபாயவை ஆதரிக்கக் கூடிய நிலையில் எந்தவொரு தமிழ்த் தேசிய கட்சிகளும் இல்லை. ஒரு வேளை கோட்;டபாய பல விடயங்களை செய்வதாக உடன்பட்டாலும் கூட, கூட்டமைப்பாலோ அல்லது ஏனைய கட்சிகளாலோ கோட்பாயவிற்கு வாக்களிக்குமாறு கூற முடியாது. ஏனெனில் வடக்கு கிழக்கில் பெரும்பாண்மையான தமிழ் மக்கள் சஜித்பிரேமதாசவிற்கு வாக்களிக்கக் கூடிய நிலைமையிருப்பதாகவே இந்தக் கட்சிகள் கணிக்கின்றன. எனவே இந்த விடயத்தில் மக்களின் பொது ஓட்டத்தித்தோடு சேர்ந்து ஓடுவதையே கட்சிகள் விரும்புகின்றன.
இது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் ஒருவரோடு பேசுகின்ற போது அவர் இதனை வெளிப்படையாகவே குறிப்பிட்டார். தமிழரசு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சிவஞானம், இந்தப் பத்தியாளருடன் ஒரு கலந்துரையாடலில் பங்குகொண்ட சந்தர்ப்பத்தில் இதனை மிகவும் வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டார். அதவாது, 2015 ஜனாதிபதி தேர்தலின் போது கூட்டமைப்பு தகால் மூல வாக்கெடுப்புவரையில் காத்திருந்தது மக்களின் மனவோட்டத்தை கணிப்பதற்காகவே. மக்கள் மகிந்த ராஜபக்சவிற்கு எதிராகத்தான் நிற்கின்றனர் என்பதை கணித்த பின்னர்தான் நாங்கள் எங்கள் முடிவை வெளிளிட்டோம். ஒரு அரசியல் தலைமையின் அழகு – மக்களை வழிநடத்துவதா அல்லது மக்களுக்கு பின்னால் இழுபட்டுச் செல்வதா? இந்தக் கேள்விக்கு சிவஞானத்திடம் பதிலிருந்திருக்கவில்லை. அவரிடம் மட்டுமல்ல கூட்டமைப்பின் தலைவர்கள் எவரிடமும் இதற்கான பதிலில்லை.
இப்போது ஜந்து கட்சிகளும் சஜித்பிரேமதாசவிற்க்காக காத்திருக்கின்றன. ஆனால் இதுவரை சஜித்பிரேமதாச ஜந்து கட்சிகளை சந்திப்பதற்கான கரிசனையை காண்பிக்கவில்லை. கிடைக்கும் தகவல்களின்படி சஜித் 13 அம்ச கோரிக்கையின் அடிப்படையில் தமிழ் கட்சிகளை சந்திப்பதற்கான வாய்ப்பில்லை. இதனை சம்பந்தன் தரப்பும் நன்கறியும். இதன் காரணமாகவே ஆவணத்தின் அடிப்படையில் தாம் சஜித்தை சந்திக்கப் போவதில்லை என்று சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார். சஜித்தை பொறுத்தவரையில் இந்த விடயங்கள் ரணிலுக்குரிவை. அவற்றை ரணில் பார்த்துக்கொள்ளட்;டும் என்றவாறான மனநிலையிலேயே இருக்கின்றார். ஆனால் சஜித் ஜனாதிபதி வேட்பாளரானதிலிருந்து சஜித்தின் நிகழ்சிநிரலிலேயே இல்லை. எனவே ரணிலுடன் 13அம்ச கோரிக்கைகள் தொடர்பில் பேசுவது என்பது வெறும் நேரவிரயம் மட்டுமே. ரணிலின் வாக்குறுதிகள் எதற்கும் தற்போதுள்ள சூழலில் எந்தவொரு பெறுமதியும் இல்லை. இதனை கூட்டமைப்பினரும் நன்கறிவர். ஆனாலும் அவர்கள் சஜித்திற்காக காத்திருக்கின்றனர். ஒரு வேளை சஜித் சந்திக்காமலே விட்டாலும் கூட, சஜித்திற்கே எங்களின் ஆதரவு என்று அறிவிக்கும் நிலையிலேயே கூட்டமைப்பினர் இருக்கின்றனர். உண்மையில் இது ஒரு அரசியல் கையறுநிலையாகும்.
சும்பந்தனை பொறுத்தவரையில் தன்னைச் சுற்றியிருக்கும் அனைவரையும் இயலாவாளிகளாக கருதும் ஒருவர். இறுதி நேரத்தில் தான் ஒரு முடிவை அறிவித்தால் அதனை எதிர்த்து செயற்படும் நிலையில் எவருமே தங்களை வலுவாக ஒழுங்கமைத்திருக்கவில்லை என்பதையும் அவர் தெளிவாகவே புரிந்துவைத்திருக்கின்றார். இதன் காரணமாகவே தன்னைச் சுற்றி இம்பெறும் விடயங்களை பொருட்படுத்ததாமல் எப்போதும் தன்னிஸ்டப்படியே தீர்மானங்களை எடுத்துவருகின்றார். யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஜந்து கட்சிகளின் இணக்கப்பாட்டை சம்பந்தன் ஒரு பொருட்டாகவே மதிக்கப்போவதில்லை. தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்னர் சஜித்பிரேமதாசவை ஆதரிக்கும் முடிவையே சம்பந்தன் அறிவிப்பார். அதற்கான வாய்ப்புக்களே அதிகம் தெரிகின்றது.
மக்களின் அரசியல் தலைமைகளோடு பேசுவதற்கே விரும்பம் காட்டாத வோட்பாளர் ஒருவரை ஆதரிக்குமாறு கூட்டமைப்பு கூறுமானால், அதனையும்விட ஒரு அரசியல் கையறுநிலை இருக்க முடியாது. இந்த இடத்தில் இரண்டு தரப்பினர் நெருக்கடிகளை சந்திப்பர். ஒன்று, ஜந்து தமிழ்த் தேசிய கட்சிகளை ஒரு ஆவணத்தில் கையெழுத்திடும் நிலைமையை ஏற்படுத்திய யாழ்-பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினர். அடுத்த தரப்பினர், கடந்த சில வருடங்களாக கூட்டமைப்பின் அரசியல் போக்கு தவறானது என்னும் அடிப்படையில் தொடர்ச்சியாக விமர்சனங்களை செய்துவந்த, அதன் விளைவாக ஒரு மாற்றுத்தலைமையை உருவாக்க வேண்டும் என்னும் முயற்சியில் ஈடுபட்ட தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் விக்கினேஸ்வரன் மற்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரன் ஆகியோர். ஆனைத்து கட்சிகளையும் இந்த விடயத்தில் ஒன்றுபடுத்தும் முயற்சிகள் இடம்பெற்ற போது, அது தொடர்பில் முகநூல்களின் ஒரு சந்தேகம் எட்டிப்பார்த்தது. இதற்கு பின்னால் சுமந்திரன் இருப்பதாக பேசப்பட்டது. அது உண்மையில்லை என்பதை பல்கலைகழக மாணவர்கள் நிரூபிக்க வேண்டியிருக்கின்றது. ஒரு வேளை கூட்டமைப்பு இறுதியில் சஜித்பிரேமதாசவை எவ்வித நிபந்தனைகளுமின்றி ஆதரிக்குமானால், அது தொடர்பில் பல்கலைக்கழக மாணவர் குழுவின் எதிர்வினை எவ்வாறாக இருக்கும் என்பதை அவர்கள் இப்போதே வெளிக்காட்ட வேண்டும். ஒரு வேளை யாழ் – பல்கலைக்கழக மாணவர்கள் இதில் அமைதியாக இருப்பார்களானால், அவர்கள் தொடர்பான சந்தேகத்தை அவர்களே உறுதிசெய்வதாக அமையும். அதே வேளை, ஒருவிதமான உறுதிமொழியுமின்றி, சஜித்பிரேமதாசவை ஆதரிக்கும் முடிவை சம்பந்தன் இறுதி நேரத்தில் அறிவித்தால், அதனை விக்கினேஸ்வரனும் சுரேஸ்பிரேமச்சந்திரனும் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றனர்? கூட்டமைப்பை ஆமோதிக்கப் போகின்றனரா அல்லது மறுத்து தங்களின் நிலைப்பாட்டை அறிவிப்பார்களா?
உண்மையில் தற்போதுள்ள சூழலில் இருவருமே இதுவரை சுமந்திரனின் நிகழ்சிநிரலுக்குள்தான் இருக்கின்றனர். அவர்கள் ஒரு வேளை இல்லையென்று வாதிடலாம். ஆனால் அதுதான் உண்மை. கூட்டமைப்பும் சஜித்திற்காக காத்துக் கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக விக்கினேஸ்வரனும் சுரேசும் கூட்டமைப்புக்காகவும் கூடவே, சஜித்திற்காகவும் காத்துக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறாயின் இதன் பொருள் என்ன? விடயங்களை ஆழமாக பார்த்தால் யாழ்-பல்கலைக்கழக மாணவர்களின் ஒரு விடயத்திற்கு முயன்று, அதன் அடுத்த கட்டத்தை கூட்டமைப்பிடம் ஒப்படைத்திருக்கின்றனர். இப்போது அனைவருமாக கூட்டமைப்பின் முடிவுக்காக காத்திருக்கின்றனர். இந்த இடத்தில்தான் சுமந்திரனின் தந்திரோபாயத்தை மெச்சவேண்டியிருக்கிறது. இப்போது இந்தப் பொறியிலிருந்து விக்கினேஸ்வரனும் சுரேஸ்பிரேமச்சந்திரனும் வெளியில்வர வேண்டுமானால், அதற்கு ஒரு வழிதான் உண்டு. அதாவது, சுமந்திரனும் சம்பந்தனும் செல்ல முடியாத வழியொன்றுக்குள், அவர்களை இழுக்க வேண்டும். அவ்வாறு இழுத்தால் அவர்களாகவே 13அம்ச கோரிக்கைகளை கைவிட்டுவிட்டு, அவர்களின் வழியில் சென்றுவிடுவார்கள்.