தடுமாறிய கோத்தபாய!
20 ஐப்பசி 2019 ஞாயிறு 14:12 | பார்வைகள் : 9615
ஊடகங்களிடம் பேசுவதற்கு பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச தயங்குகிறார் என்ற குற்றச்சாட்டு பல வாரங்களாக இருந்து வந்த நிலையில், அதனைச் சமாளிப்பதற்காக, கடந்த வாரம் ஷங்ரிலா விடுதியில் ஒரு செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மகிந்த ராஜபக்ச, ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்ட அந்தக் கட்சியின் தலைவர்கள், பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் என்று, பெரியதொரு பட்டாளத்துடனேயே அந்த செய்தியாளர் சந்திப்புக்கு முகம் கொடுத்திருந்தார் கோத்தாபய ராஜபக்ச.
இந்தச் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க கோத்தாபய ராஜபக்ச பல சமயங்களில் தடுமாறினார்.
குறிப்பாக, ஜெனிவா தீர்மான விவகாரம், போருடன் தொடர்புடைய விவகாரங்களில் அவர் பதிலளிக்க சிரமப்பட்டார். அல்லது குழம்பினார்.
இதனால் மகிந்த ராஜபக்ச, ஜி.எல்.பீரிஸ், விமல் வீரவன்ச போன்றவர்கள் அவரை, அடிக்கடி பிணையெடுத்துக் காப்பாற்ற வேண்டியிருந்தது.
இந்தச் செய்தியாளர் சந்திப்பில் கோத்தாபய ராஜபக்ச வெளியிட்ட சில கருத்துக்களும், தகவல்களும், அவருக்கு எதிரான பிரசாரத்துக்கு தீவிரமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
முதலாவது ஜெனிவா தீர்மானம் பற்றிய அவரது நிலைப்பாடு.
தாம் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால், ஜெனிவா தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளமாட்டோம், அதனை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று கூறியிருக்கிறார் கோத்தாபய ராஜபக்ச.
ஐ.நாவுடன் இணைந்து செயற்படுவோம் என்று அவர் கூறியிருந்தாலும், ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தை செயற்படுத்தப் போவதில்லை என்று அவர் திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.
அதற்கு அவர் கூறியிருக்கின்ற இரண்டு முக்கியமான காரணங்கள்.
ஐ.நா தீர்மானத்துக்கு இணங்கி கையெழுத்திட்டது தற்போதைய அரசாங்கம் என்பதால், அதனை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என்பது முதலாவது காரணம்.
ஐ.நா தீர்மானத்துக்கு இணங்கி கையெழுத்திட்டது சட்டவிரோதம் என்பது இரண்டாவது காரணம்.
தற்போதைய அரசாங்கம் கையெழுத்திட்ட உடன்பாட்டை தாம் பின்பற்ற முடியாது என்று கோத்தாபய ராஜபக்ச கூறியிருப்பது, தனியே ஜெனிவாவுக்கு மட்டுமான கொள்கையா அல்லது ஏனைய விடயங்களுக்குமான கொள்கையா என்று தெரியவில்லை.
ஆனால், தற்போதைய அரசாங்கம் செய்து கொண்ட உடன்பாடுகளை அடுத்த அரசாங்கம் பின்பற்ற வேண்டும், தொடர வேண்டும் என்று அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் அண்மையில் சில செவ்விகளில் கூறியிருந்தார்.
சர்வதேச சமூகமும் கூட, இலங்கை அரசாங்கம் ஜெனிவா தீர்மான வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றே எதிர்பார்க்கிறது.
அவ்வாறான நிலையில், முன்னைய அரசாங்கம் கையெழுத்திட்ட உடன்பாட்டை ஏற்க முடியாது என்று கோத்தாபய ராஜபக்ச நிராகரிக்க முடிவு செய்தால், அதனை சர்வதேச சமூகம் எவ்வாறு எடுத்துக் கொள்ளும் என்ற கேள்வி இருக்கிறது.
ஜெனிவா தீர்மானம் சட்டவிரோதமானது, அரசியலமைப்புக்கு எதிரானது என்று மாத்திரம் கோத்தாபய ராஜபக்ச கூறியிருந்த நிலையில், ஜெனிவா தீர்மானத்தின் சில வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்றும் அது அரசியலமைப்புக்கு முரணானது என்று தற்போதைய அரசாங்கமே கூறியிருக்கிறது. எனவே அது சட்டரீதியானதல்ல என்று பீரிஸ் விளக்கம் கொடுத்திருந்தார்.
மகிந்த ராஜபக்ச அரசாங்கம் ஜெனிவா நெருக்கடியின் உச்சத்தில் இருந்த போது தான், பதவியில் இருந்து விலகியிருந்தது. தற்போதைய அரசாங்கமே பல வாக்குறுதிகளைக் கொடுத்து அந்த நெருக்கடியில் இருந்து தப்பியது.
ஜெனிவா நெருக்கடி தணிந்து விட்ட போதும், அந்த வாக்குறுதியை தற்போதைய அரசாங்கம் இன்னமும் நிறைவேற்றவில்லை.
இந்த நிலையில், அந்த தீர்மானம் சட்டவிரோதம் அதனை செயற்படுத்த முடியாது என்று கோத்தாபய ராஜபக்ச கூறியிருப்பது, சர்வதேச சமூகத்தை மீண்டும் பின்நோக்கி திரும்ப வைக்கும்.
2015இல், இலங்கைக்கு எதிராக சர்வதேச சமூகம் எந்த நிலைப்பாட்டை எடுத்ததோ – அதே நிலைப்பாட்டை நோக்கி திரும்பும் சூழலைத் தான் கோத்தாபய ராஜபக்ச உருவாக்க எத்தனிக்கிறார்.
அதேவேளை, போரின் இறுதியில் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான கேள்விக்கு கோத்தாபய ராஜபக்ச அளித்திருந்த பதிலும், கடுமையான சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பான கேள்விக்கு கோத்தாபய ராஜபக்ச, போரில் தான் இராணுவத்தை வழி நடத்தவில்லை என்று கூறியிருக்கிறார். இராணுவத் தளபதியே போருக்குத் தலைமை தாங்கினார் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் கருத்தின் மூலம் அவர் பொல்லைக் கொடுத்து அடிவாங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
கோத்தாபய ராஜபக்சவே போருக்குத் தலைமை தாங்கி வழிநடத்தினார் என்றே தெற்கில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அவ்வாறே பெரும்பாலும் சிங்கள மக்கள் நம்பிக் கொண்டிருந்தார்கள்.
சிங்கள ஊடகவியலாளர் சந்திரபிரேம, ‘கோத்தாவின் போர்’ என்ற தலைப்பிலேயே நூல் ஒன்றை எழுதியிருந்தார்.
அது கோத்தாபய ராஜபக்ச முன்னெடுத்த போர், அவர் வென்றெடுத்த வெற்றி என்பதை அறுதியிட்டுக் கூறுவதற்காக தயாரிக்கப்பட்ட எழுத்து மூல ஆவணம்.
ஆனால் இப்போது, காணாமல் போனவர்கள் விவகாரம் பற்றிய கேள்வி வந்தவுடன், கோத்தாபய ராஜபக்ச போரை தான் நடத்தவில்லை என்றும், இராணுவத் தளபதியே நடத்தினார் என்றும், தெரிந்தோ தெரியாமலோ கூறி விட்டார்.
தானே போருக்கான உத்திகளையும், திட்டங்களையும் தயாரித்து நடைமுறைப்படுத்தியதாகவும், அடுத்த நாள் எங்கு எப்படிப்பட்ட நகர்வு மேற்கொள்ளப்படும் என்பது கூட யாருக்கும் தெரியாமல் இருந்தது என்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா முன்னர் கூறியிருந்தார்.
அது உண்மை தான் என்பதை கோத்தாபய ராஜபக்சவின் கருத்து உறுதிப்படுத்தியிருக்கிறது.
அதேவேளை, பாதுகாப்புச் செயலராக இருந்த கோத்தாபய ராஜபக்ச, சில இராணுவ அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்புகளை வைத்திருந்து உத்தரவுகளை பிறப்பித்தார் என்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறியிருந்தார்.
அதன் அடிப்படையிலேயே மீறல் சம்பவங்கள் சில இடம்பெற்றன என்றும், அதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் அந்தக் குற்றச்சாட்டை கோத்தாபய ராஜபக்ச மறுத்திருந்தார்.
இப்போது, சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான பொறுப்புக்கூறுவதில் இருந்து தப்பிக் கொள்வதற்காக, இராணுவத்தை தான் வழிநடத்தவில்லை என்று கோத்தாபய ராஜபக்ச கூறியிருந்தாலும், பாதுகாப்புச் செயலராக பொறுப்புக்கூற வேண்டியவர் அவரேயாவார்.
தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் பற்றிய கேள்வி ஒன்றுக்கு இராணுவத் தலைமையகம் அளித்திருந்த பதிலில், போரின் முடிவில் இராணுவத்தினரிடம் எவரும் சரணடையவில்லை என்றும், அரசாங்கத்திடமே சரணடைந்தனர் என்றும் கூறப்பட்டிருந்தது.
அரசாங்கத்திடம் சரணடைந்தனர் என்றால், அதற்கு அப்போது பாதுகாப்புச் செயலராக இருந்த கோத்தாபய ராஜபக்சவும், பாதுகாப்பு அமைச்சராகவும், ஜனாதிபதியாகவும் இருந்த மகிந்த ராஜபக்சவும் தான் பொறுப்புக்கூற வேண்டியவர்கள்.
ஆனால், இப்போது கோத்தாபய ராஜபக்ச, இராணுவத் தளபதி தான் போரை நடத்தினார் என்று கூறி நழுவுகிறார்.
இந்தக் கூற்றை வைத்து, கோத்தாபய ராஜபக்சவைத் திருப்பி அடிக்கத் தொடங்கியிருக்கிறார் சஜித் பிரேமதாச.
10 ஆண்டுகளால் மறைக்கப்பட்டு வந்த உண்மை, கோத்தாபய ராஜபக்சவின் வாயாலே வெளிவந்து விட்டது என்றும், போரை நடத்திய இராணுவத் தளபதியான சரத் பொன்சேகாவையே தான் பாதுகாப்பு அமைச்சராக்குவேன் என்றும் பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார்.
செய்தியாளர் சந்திப்பில் கோத்தாபய ராஜபக்ச தடுமாறியதால் தான் இந்தச் சிக்கலை எதிர்கொள்கிறார்.
அதைவிட, சரணடைந்தவர் அனைவருக்கும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விட்டதாகவும், உயிரிழந்தவர்களில் சடலங்கள் அடையாளம் காணப்படாதவர்களை அவர்களின் உறவினர்கள், காணாமல் போயிருப்பதாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கோத்தாபய ராஜபக்ச குறிப்பிட்டிருக்கிறார்.
எனினும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பலரும், தாம் தமது பிள்ளைகளையும் உறவுகளையும், போர் முடிந்த பிறகே, ஓமந்தையில் வைத்து கையளித்தோம், அவர்களின் நிலை என்ன என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
ஆனால் அதற்கு அவரிடத்தில் இருந்து எந்தப் பதிலும் இல்லை.
அதுமாத்திரமன்றி, சரணடைந்த 13,784 பேர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டு விட்டனர் என்றொரு புள்ளிவிபரத்தையும் கோத்தாபவய ராஜபக்ச கூறியிருந்தார்.
ஆனால், புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் அளித்துள்ள ஒரு பதிலில், 2009 மே 19ஆஆம் திகதி, 10,790 புலிகள் சரணடைந்தனர் என்றும், அவர்கள் அனைவருக்கும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டது என்றும் கூறியிருக்கிறார்.
கோத்தாபய ராஜபக்சவோ, 13,784 புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாக கூறியிருக்கிறார்.
இந்தநிலையில், 2,994 பேர் எவ்வாறு, யாரால், எங்கு வைத்து புனர்வாழ்வு அளிக்கப்பட்டனர்- அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது என்று கோத்தாபய ராஜபக்ச தான் பதிலளிக்க வேண்டியிருக்கிறது.
-சுபத்ரா
வழிமூலம் – வீரகேசரி வாரவெளியீடு