Paristamil Navigation Paristamil advert login

தமிழர்கள் பற்றி சஜித்பிரேமதாச?

தமிழர்கள் பற்றி சஜித்பிரேமதாச?

12 ஐப்பசி 2019 சனி 04:42 | பார்வைகள் : 9407


சஜித் பிரேமதாச தனது வெற்றிக்காக பல்வேறு அரசியல் தரப்புக்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்திவருகின்றார். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் அவர், எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை. அதே போன்று கூட்டமைப்பும் அவருடன் எந்தவொரு உத்தியோகபூர்வமான பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவில்லை. 
 
இவ்வாறானதொரு பின்னணியில்தான் கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன், எழுத்து மூல உடன்பாடு தொடர்பில் பேசியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ஆனால் அவ்வாறான எந்தவொரு நிபந்தனைக்கும் தான் கட்டுப்படக் கூடிய நபரல்ல என்று சஜித் பிரேமதாச குறிப்பிட்டிருக்கின்றார். கூட்டமைப்பு நிபந்தனைகளை விதித்திருக்கின்றதா என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு, பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார். தன்னுடைய கொள்கையை ஏற்றுக் கொள்ளும் எவரும் தன்னுடன் இணைந்து செயற்படலாம் ஆனால் எவரும் தனக்கு நிபந்தனைகளை விதிக்க முடியாது என்று அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டிருக்கின்றார்.
 
சஜித்தின் கொள்கை என்ன? இலங்கை ஒரு ஒற்றையாட்சி நாடு. இதற்குட்பட்டுத்தான் அனைவரும் வாழ வேண்டும். இலங்கையின் மீது எந்தவொரு வெளியக தலையீடுகளையும் நான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இந்தக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்கள்தான் தற்போது சஜித் அணியில் நிற்கின்றனர். அந்த அணியில் கூட்டமைப்பும் சேர முடியுமா? இங்கு கவனிக்க வேண்டிய விடயம் கூட்டமைப்பு வலிந்து சேர்வதற்கு சென்றாலும் கூட, சஜித் கூட்டமைப்பை தன்னுடன் சேர்த்துக்கொள்ளும் நிலையில்லை. ஏனெனில் கூட்டமைப்புடன் தன்னை அடையாளம் காட்டுவது தனது சிங்கள – பௌத்த வாக்குகளை குறைத்துவிடும் என்றே சஜித் கருதுவதாக தெரிகிறது. அண்மையில் கூட்டமைப்பின் சிரேஸ்ட தலைவர் ஒருவரை சந்தித்திருந்த பசில்ராஜபக்ச, கூட்டமைப்பின் ஆதரவை தாங்கள் எதர்பார்க்கவில்லை என்று குறிப்பிட்டிருக்கின்றார். 
 
ஏனெனில் ஒரு வேளை கூட்டமைப்பு தங்களை ஆதரித்தால் கூட, அது தங்களுக்கு பாதகமாகவே அமையும் என்றே மகிந்த அணி கருதுகின்றது. எவ்வாறு மகிந்த அணி கூட்டமைப்பின் ஆதரவை பெறவிரும்பவில்லையோ அதே போன்றுதான் சஜித்பிரேமதாசவும் கூட்டமைப்பின் ஆதரவை வெளிப்படையாக விரும்பவில்லை. இரண்டு பிரதான வேட்பாளர்களுமே சிங்கள மக்களின் வாக்குகளையே முதன்மையானதாக கருதுகின்றனர். இதன் காரணமாகவே சஜித், மிகவும் திமிராக பேசுகின்றார். தமிழ் மக்கள் கோட்டபாயவிற்கு வாக்களிக்க மாட்டார்கள் எனவே அவர்களுக்கு எனக்கு வாக்களிப்பதை தவிர வேறு வழியில்லை என்பதுதான் சஜித்தின் கணிப்பு. அதிலிருந்துதான் அவர் விடயங்களை மிகவும் இலகுவாக கையாள முடியுமென்று கருதுகின்றார்.
 
சஜித் பிரேமதாசவின் அரசியல் வாழ்வில் அவர் ஒரு போதுமே தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் ஆதரவாகப் பேசியதில்லை. தேசிய இனப்பிரச்சினை தொடர்பான ஜக்கிய தேசியக்கட்சியின் அணுகுமுறைகள் என்பது பெருமளிவிற்கு ரணிலின் விவகாரமாகவே இருந்தது. ரணில் விக்கிரமசிங்கவே கூட்டமைப்புடன் தொடர்பிலிருந்தார். இந்தப் பின்னணியில், கூட்டமைப்பை கையாள வேண்டியது ரணில் விக்கிரமசிங்கவின் பொறுப்பு என்றவாறே சஜித் கருதுவதாக தெரிகிறது. இதிலிருந்து ஒரு விடயம் தெட்டத்தெளிவு. அதாவது, தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் எந்தவொரு உறுதிமொழியையும் சஜித் வழங்கப் போவதில்லை. அதற்குப்பதிலாக, ரணில் விக்கிரமசிங்கவே தனிப்பட்ட ரீதியில் உறுதிமொழிகளை வழங்கப்போகின்றார். இதே போன்றதொரு நிலைமைதான் 2015 ஜனாதிபதி தேர்தலிலும் இடம்பெற்றது. அதாவது, ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு பதிலாக சந்திரிக்கா குமாரதுங்கவும் ரணில் விக்கிரமசிங்கவுமே கூட்டமைப்பிற்கு உறுதியளித்திருந்தனர். அதனை நம்பியே கூட்டமைப்பும் கடந்த நான்கு வருடங்களாக ரணில் விக்கிரமசிங்கவின் பின்னால் இழுபட்டுச் சென்றது. ஆனால் இறுதியில் என்ன நடந்தது? ரணில் விக்கிரமசிங்கவிற்கும் மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் ஏற்பட்ட அதிகார மோதல்களின் போது, கூட்டமைப்பு ரணிலின் பக்கமாக நின்றதால், மைத்திரியின் பகையை சம்பாதிக்க நேர்ந்தது. 
 
அது அதுவரையான அரசியல் முன்னெடுப்புக்கள் அனைத்தையும் செல்லாக்காசாக்கியது. ஒரு வேளை சஜித் பிரேமதாச ஜனாதிபதியானாலும் மீ;ண்டும் பழைய விடயங்களே நிகழும். ரணில் பிரதமரானால், அது நிச்சயம் ரணிலுக்கும் சஜித்திற்குமிடையிலான அதிகார மோதலுக்கே வழிவகுக்கும் ஏனெனில் ரணிலின் தலைமையை எதிர்த்துத்தான் சஜித் வேட்பாளராகியிருக்கின்றார் அல்லது ரணிலை பிரதமராக நியமிக்க சஜித் மறுத்தாலும் கூட்டமைப்பிற்கு ரணில் வழங்கிய வாக்குறுதிகளுக்கு சஜித் பொறுப்பெடுக்க வேண்டியதில்லை. 2015இன் தேர்தல் வியூகங்களை வகுப்பதில் முன்னணி வகித்த மங்களசமரவீர இப்போது சஜித் பிரேமதாச அணியில் இருக்கிறார். மங்களிவின் இலக்கு அடுத்த பிரதமர் என்றும் ஒரு தகவலுண்டு. இவ்வாறானதொரு அதிகார போட்டியில் கூட்டமைப்பு எவ்வித வாகுறுதிகளை பெற்றாலும் அதற்கு எந்தவொரு பெறுமதியும் இருக்கப் போவதில்லை.
 
தமிழ் மக்களது தலைமையின் எந்தவொரு நிபந்தனையையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன், ஆனால் தமிழ் மக்கள் தனக்கே வாக்களிப்பார்கள் என்று சஜித் எண்ணுவதானது, மிகவும் இழக்காரமான ஒரு பார்வையாகும். இவ்வாறான பார்வை ஏற்படுவதற்கு யார் காரணம்? 2009இற்கு பின்னர் இடம்பெற்ற இரண்டு ஜனாதிபதி தேர்தல்களின் போதும் கூட்டமைப்பின் அணுமுறைகள் மிக மோசமான தந்திரோபாய தவறுகளாகவே அமைந்திருந்தன. 2010இல் மகிந்த ராஜபக்சவை வீழ்த்த வேண்டும் என்னும் ஒரேயொரு இலக்கிற்காக, யுத்த வெற்றியை கூறுபோடும் தேர்தல் வியூகமொன்று வகுக்கப்பட்டது. அதற்கு கூட்டமைப்பு உடன்பட்டிருக்கக் கூடாது. அப்போது சம்பந்தன் மிகவும் திட்டவட்டமாக ஒரு இராணுவத்தளபதிக்கு வாக்களிக்குமாறு எங்களுடைய மக்களை கோர முடியாது என்று கூறியிருக்க வேண்டும். ஆனால் சம்பந்தனோ யுத்த வெற்றியை பங்குபோடும் தேர்தலில் தமிழ் மக்களை ஈடுபடுத்தினார். அதன் பின்னர் எந்தவொரு உடன்பாடுமின்றி, மைத்திரிபாலவிற்கு வாக்களிக்கும் முடிவை கூட்டமைப்பு எடுத்தது. 
 
இந்த இரண்டு தேர்தல்களின் போதும் கூட்டமைப்பு தமிழ் மக்களை நடத்திய விதத்திலிருந்துதான் கொழும்பு கூட்டமைப்பையும் அதனை ஆதரிக்கும் தமிழ் மக்களையும் எடைபோட்டுக் கொண்டது. தமிழ் மக்கள் ஒருவரை காட்டி இன்னொருவருக்கு வாக்களிக்கும் இயல்பு கொண்டவர்கள் என்பதை ஜக்கிய தேசியக் கட்சி தரப்பினர் நன்றாக விளங்கிக்கொண்டனர். இந்த பின்புலத்திலிருந்துதான் சஜித் பிரேமதாசவும் தமிழ் மக்கள் வேறு வழியின்றி தனக்கே வாக்களிப்பார்கள் என்னும் மனோநிலையில் இருக்கின்றார். தமிழ் மக்கள் உரிமைக்காக போராடிய ஒரு இனம் என்னும் வகையில், இது ஒரு மோசமான அரசியல் சூழலாகும். ஒரு இனம் வேறு வழியின்றி தங்களை எந்த வகையிலும் சமமாக நடத்த முடியாதென்று கூறும் ஒருவருக்கே வாக்களிக்க முற்படுவதானது, அந்த இனம் அரசியல் ரீதியில் மிகவும் பலவீனமான நிலையில் இருக்கின்றது என்பதையே காட்டுகின்றது. அந்த இனத்திற்கு தலைமை தாங்கும் அரசியல் தலைமையானது, இவ்வாறானதொரு நெருக்கடியின போது தீர்க்கமான முடிவுகளை எடுத்து, தனது பலமான எதிர்ப்பை வெளிக்காட்ட முடியாமல் இருப்பதானது, அது ஒரு இனத்திற்கான தலைமை என்னும் தகுதியை முற்றிலுமாக இழந்துவிட்டது என்பதையே காண்பிக்கின்றது.
 
இவ்வாறானதொரு சூழலில் தமிழ் மக்களை வழிநடத்தப் போபவர்கள் யார்? ஒன்றில் தமிழ் மக்கள் தங்களை தாங்களே வழிநடத்திக்கொள்ள வேண்டும். அதாவது, கடந்த இரண்டு தேர்தல்களின் போதும் தாங்கள் வாக்களித்ததால் ஏற்பட்ட விளைவுகள் என்ன? முக்கியமாக தாங்கள் பெரும் நம்பிக்கையுடன் வாக்களித்த மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் நடவடிக்கைகள் எதனை உணர்த்துகின்றது? வெறுமனே ஒருவரை இன்னொருவரோடு ஒப்பிட்டு வாக்களிக்கும் முறைமை சரியான ஒன்றுதானா? இப்படியான கேள்விகளுக்கு விடைகளை தேடும் போது, இந்தத் தேர்தலில் பங்குபற்றி ஏமாறத்தான் வேண்டுமா என்னும் பதிலை கண்டடையலாம். அல்ல தமிழ் மக்கள் மத்தியி;ல், இது தொடர்பில் சிந்திக்கும் தரப்பினரான, அரசியல் கருத்துருவாக்கிகள், புத்திஜீவிகள், சிவில் சமூக தரப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, ஒரு தீர்க்கமான முடிவை மக்களுக்கு கூற வேண்டும். மக்களை இந்த விடயத்தில் அறிவூட்டி வழிநடத்த வேண்டும். ஒன்றோடு ஒன்றை ஒப்பிட்டு முடிவெடுப்பதற்கு இது புடைவை வாங்கும் பிரச்சினையில்லை. இது தமிழர் தேசத்தின் பிரச்சினை.
 
நன்றி - சமகளம்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்