ஒரு தமிழ் பொது வேட்பாளர் ஏன் வேண்டும்?
6 ஐப்பசி 2019 ஞாயிறு 14:23 | பார்வைகள் : 9476
சில மாதங்களுக்கு முன்பு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள திண்ணை உல்லாச விடுதியில் தமிழ் கருத்துருவாக்கிகள் சிலரை சந்தித்தார். வெவ்வேறு அரசியல் நம்பிக்கைகளைக் கொண்ட மேற்படி கருத்துருவாக்கிகளுடனான இச்சந்திப்பில் தமிழ் மக்கள் மத்தியில் கோத்தபாயவுக்கு ஏவ்வாறான ஆதரவு தளம் உள்ளது என்பது குறித்து அறிவது அவருடைய நோக்கங்களில் ஒன்றாக இருந்தது.
அவரைச் சந்தித்துச் சில வாரங்களின் பின் மற்றொரு அமெரிக்கத் தூதரக அதிகாரியும் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தைச் சேர்ந்த ஓர் உயர்நிலை அதிகாரியும் யாழ் நகரப்பகுதியில் அமைந்துள்ள ஜெற்விங் உல்லாச விடுதியில் தமிழ் கருத்துருவாக்கிகள் சிலரை சந்தித்தார்கள். வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்களின் நிலைப்பாட்டை நாடி பிடித்து அறிவதும் இச்சந்திப்பின் நோக்கங்களில் ஒன்றுதான்.
அமெரிக்க அரசாங்கம் இவ்வாறு தமிழ் மக்களின் கருத்துக்களை நாடி பிடித்து அறிய முற்பட்டது சில மாதங்களுக்கு முன்பு. ஆனால் அதற்கும் சில வருடங்களுக்கு முன்னரே ராஜபக்ச குடும்பம் அடுத்த ஜனாதிபதி தேர்தலை குறிவைத்து உழைக்கத் தொடங்கி விட்டது. இவ்வாறு ராஜபக்ச குடும்பம் மறுபடியும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றக் கூடாது என்று சிந்தித்து ரணில் விக்கிரமசிங்க கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே 19ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி விட்டார்.
இவ்வாறெல்லாம் வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலை குறித்து தென்னிலங்கைத் தரப்புகளும் பிராந்தியத் தரப்புகளும் அனைத்துலகத் தரப்புக்களும் சில மாதங்களுக்கு முன்னரோ அல்லது ஆண்டுகளுக்கு முன்னரோ சிந்திக்கத் தொடங்கி விட்டார்கள்.
ஆனால் அத்தேர்தலில் தீர்மானிக்கும் தரப்பாக வரக்கூடிய வாய்ப்புகளைக் கொண்டுள்ள தமிழ் மக்கள் மத்தியில் அவ்வாறான தயாரிப்புக்கள் ஏதும் அதுவும் நீண்டகாலத்துக்கு முன்னிருந்தே சிந்தித்து முன்னெடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
எழுக தமிழ் முடிந்த கையோடு தமிழ் மக்கள் பேரவையானது ஜனாதிபதி தேர்தல் குறித்து சிந்திப்பதற்காக ஒரு குழுவை நியமித்தது. இக்குழுவானது சுயாதீனமாக செயற்படும் என்றும் அறிவித்தது. மிகவும் பிந்தி எடுக்கப்பட்ட முடிவு இது. இக்குழு அனைத்து தமிழ் தரப்புகளையும் சந்தித்து ஒருமித்த முடிவை எடுக்க முயற்சித்து வருகிறது. எல்லாத் தமிழ்தேசிய கட்சிகளையும் சம்மதிக்க வைத்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவது இக் குழுவின் நோக்கமாக காணப்படுகிறது.
ஒரு பொது வேட்பாளரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்த வேண்டும் என்பது ஒரு புதிய கோரிக்கை அல்ல. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக மு.திருநாவுக்கரசு அதை பற்றி எழுதியும் பேசியும் வருகிறார். அவர் முதன்முதலாக 2010 ஆம் ஆண்டு பொங்கு தமிழ் இணையதளத்தில் ஒரு புனைபெயரில் அதைக் கட்டுரையாக எழுதினார். பின்னர் 2015 இல் அதை வேறொரு புனைபெயரில் அதே இணையத்தளத்தில் எழுதினார். ஏன் அதே கட்டுரையை சிறு மாற்றங்களோடு அதே இணையத்தளத்தில் எழுதவேண்டும் என்று ஒரு நண்பர் கேட்டபோது “என்ன செய்வது கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழ் அரசியலில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை. எனவே ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னரும் அதே கருத்தை திரும்பத் திரும்ப கூற வேண்டி இருக்கிறது” என்று அவர் கூறியிருக்கிறார். இம்முறையும் அவர் அதைத்தான் கூறி வருகிறார்.
ஒரு தமிழ் பொது வேட்பாளர் ஏன் தேவை?
ஏனெனில் இந்தோ பசுபிக் பாதுகாப்பு வலைப் பின்னலைப் பொறுத்தவரை இப்பிராந்தியத்தில் தமிழ் மக்களின் பாத்திரம் மிகவும் நிர்ணயகரமானது. தமிழ் மக்களின் வகிபாகம் கேந்திர முக்கியத்துவம் மிக்கது. அதாவது கேந்திர முக்கியத்துவம் மிக்க வாக்குகளைப் பெற்ற ஒரு மக்கள் கூட்டமே தமிழர்கள். ஆனால் தமது வாக்குகளின் கேந்திர முக்கியத்துவத்தை அவர்கள் போதிய அளவுக்கு விளங்கியிருப்பதாகத் தெரியவில்லை. அவர்களுடைய தலைவர்களில் பலருக்கும் அந்த முக்கியத்துவம் விளங்கியிருப்பதாக தெரியவில்லை.
ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது ஏனென்றால் சிங்கள வேட்பாளர்களை தமிழ் மக்கள் நம்பவில்லை என்று காட்டுவதற்குத்தான். இதன் மூலம் தமிழ் மக்கள் ஒரு தேசமாகச் சிந்திக்கிறார்கள் என்பதனை வெளி உலகத்துக்கும் தென்னிலங்கைக்கு அறிவிக்கலாம். இத்தேர்தலை ஒரு மறைமுக வெகுஜன வாக்கெடுப்பு பயன்படுத்தலாம். தமிழ் மக்கள் கேட்கும் வெகுஜன வாக்கெடுப்பை இலங்கை அரசாங்கம் இப்போதைக்கு நடத்தப் போவதில்லை. இலங்கை அரசாங்கத்தை ஆதரிக்கும் வெளித் தரப்புகளும் அப்படி ஒரு வெகுசன வாக்கெடுப்பை ஒழுங்கு செய்யப்போவதில்லை.
ஜனாதிபதி தேர்தல் எனப்படுவது நாடு முழுவதுக்கும் உரியது. அதனை தமிழ் கட்சிகள் நினைத்தால், ஒரு மறைமுக வெகுசன வாக்கெடுப்பாக மாற்றலாம். அதன்மூலம் தமிழ் மக்களின் ஆணை எதுவென்பதை மிகக் கூர்மையாகவும் ஒற்றுமையாகவும் வெளியுலகத்திற்கு காட்டலாம். இது முதலாவது காரணம்.
இரண்டாவது காரணம்- கடந்த 10 ஆண்டுகளாக தமிழ் வாக்குகள் எனப்படுபவை மகிந்தவுக்கு எதிரான வாக்குகளாகவே போடப்பட்டு வருகின்றன. மஹிந்த எதிர் வாக்குகளை யு.என்.பி. தனக்கு சாதகமாக அறுவடை செய்து வருகிறது. இதை இன்னொரு விதமாக சொன்னால் மகிந்தவுக்கு எதிரான தமிழ் வாக்குகள் தனக்குத்தான் கிடைக்கும் என்று அக்கட்சி கருதுகிறது. அதாவது ஒரு நண்பரின் வார்த்தைகளிற் கூறினால் ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ் வாக்குகளை கையெழுத்திடப்பட்ட ஆனால் காசுத்தொகை எழுதப்படாத ஒரு காசோலையாக தென்னிலங்கை கட்சிகள் கருதுகின்றன. தமிழ் மக்களுக்கு வேறு தெரிவில்லை அவர்கள் தங்களுக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று யு.என்.பி யைச் சேர்ந்தவர்கள் நம்புகிறார்கள். இம்முறை ஜனாதிபதி தேர்தலில் அக்கட்சியின் சார்பாக போட்டியிடும் சஜித் பிரேமதாசவும் அப்படித்தான் நம்புவதாக தெரிகிறது.
தமிழ் மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளை ஏற்று உடன்படிக்கையை எழுதும் சிங்கள வேட்பாளர் தென்னிலங்கையில் தோற்கடிக்கப்பட்டு விடுவார் என்ற ஒரு கொடுமையான யதார்த்தத்தை சாட்டாகக் காட்டி சஜித் பிரேமதாச வெளிப்படையாக தமிழ் மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்க தயார் இல்லை.
அதேசமயம் ராஜபக்ச சகோதரர்கள் தனிச் சிங்கள வாக்குகளால் வெல்வது என்று முடிவெடுத்து விட்டார்கள். எனினும் சில லட்சம் தமிழ் வாக்குகளும் கிடைத்தால் அதை வெளி உலகத்துக்கு காட்டி தமது வெற்றியானது தமிழ் வாக்குகளாலும் கிடைத்த ஒன்றுதான் என்று கூறி ஒரு அங்கீகாரத்தைப் பெறுவதற்கு அவர்கள் திட்டமிடுகிறார்கள். அதாவது தமது வெற்றிக்குரிய சரிகை வேலைப்பாடாக தமிழ் வாக்குகளை அவர்கள் கருதுகிறார்கள்.
அப்படித்தான் ஜே.வி.பியும் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வைக் கொடுப்பதன் மூலம் சிங்கள பௌத்த வாக்குகளை இழக்க அவர்கள் தயாரில்லை.
இப்படிப் பார்த்தால் மூன்று பிரதான வேட்பாளர்களும் தமிழ் மக்களோடு உடன்பாடு எதற்கும் தயாரில்லை.
இந்நிலையில் யு.என்.பி.யானது தமிழ் வாக்குகள் எப்படியும் தனக்குக் கிடைத்து விடும் என்று நம்புவதாகத் தெரிகிறது.
எனவே தமிழ் வாக்குகளை இம்முறையும் தமிழ் தலைவர்கள் காசுத் தொகை எழுதப்படாத வெற்றுக் காசோலையாக வாங்கிக் கொடுக்கக் கூடாது என்று சிந்தித்தால் ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும்.
அப்பொது வேட்பாளர் தேர்தலில் வெல்ல போவது இல்லை. ஆனால் இரண்டு பிரதான வேட்பாளர்களின் வெற்றியையும் அவர் தோற்கடிப்பார். ஏற்கனவே அனுரகுமார 5 லட்சத்துக்கும் குறையாத வாக்குகளை உடைப்பார். தமிழ் பொது வேட்பாளரும் அவ்வாறு வாக்குகளை உடைத்தால் இரண்டு பிரதான வேட்பாளர்களும் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெறுவது கடினமாகிவிடும். எனவே முதலாவது சுற்று வாக்குக் கணக்கெடுப்பில் இரண்டு பிரதான வேட்பாளர்களையும் நெருக்கடிக்குள் தள்ளலாம். தனிச் சிங்கள வாக்குகளால் வெல்ல முடியும் என்று திட்டமிடும் ராஜபக்சகளையும் தமிழ் மக்களுக்கு வேறு தெரிவில்லை நமக்குத் தான் வாக்களிக்க வேண்டும் என்று நம்பும் யு.என்.பிக்கும் இதனால் நெருக்கடி ஏற்படும். ராஜபக்ஷக்களுக்கு எதிராக யு.என்.பியை முன்னிறுத்தும் வெளித் தரப்புகளுக்கும் இதனால் நெருக்கடி ஏற்படும். இது இரண்டாவது காரணம்.
மூன்றாவது காரணம். இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கும் 50 வீதத்துக்கும் கூடுதலான வாக்குகள் கிடைக்காத போது வாக்காளர்களின் இரண்டாவது விருப்பத் தெரிவு எண்ணப்படும். இதில் தமிழ் மக்கள் யாருக்குத் தமது இரண்டாவது விருப்பத் தெரிவு வாக்கை அளிப்பார்களோ அவரே வெற்றி பெறுவார். அதாவது இரண்டாவது சுற்று வாக்கு கணக்கெடுப்பில் தமிழ் மக்களால் தீர்மானிக்கப்படும் ஒரு ஜனாதிபதியே தெரிவு செய்யப்படுவார். இது மூன்றாவது காரணம்.
ஒரு தமிழ் பொதுத் வேட்பாளரை கேட்பது இதற்குத்தான். ஆனால் அது குறித்து தமிழ்த் தரப்புக்கள் சிந்திப்பது மிகவும் பிந்தித்தான். பேரவையின் முன்முயற்சிகள் மிகவும் பிந்தி விட்டன. யாழ் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் முயற்சிகளும் காலத்தால் பிந்தி விட்டன.
கடைசி நேரத்தில் அப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் இருக்கக்கூடிய நடைமுறைச் சிக்கல்கள் எல்லாவற்றையும் கடந்து ஒரு தமிழ் பொது வேட்பாளரை உலகத்தின் முன் நிறுத்தினால் அது முதன்முதலாக தமிழ் மக்கள் மிகத் துலக்கமான ஆணித்தரமான புத்திசாலித்தனமான ஓரு பேரம் பேசும் அரசியலை முன்னெடுக்கத் தயாராகிவிட்டார்கள் என்று ஒரு செய்தியை முழு உலகத்துக்கும் கொடுக்கும். அப்படி ஒரு செய்தியைக் கொடுப்பதற்கு தமிழ் கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் சிவில் அமைப்புக்களும் மத நிறுவனங்களும் கருத்துருவாக்கிகளும் ஊடகங்களும் படைப்பாளிகளும் தயாரா? அல்லது இம்முறையும் தமிழ் வாக்குகள் வெற்றுக் காசோலையா?