Paristamil Navigation Paristamil advert login

ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்புபடும்பாடு!

ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்புபடும்பாடு!

25 புரட்டாசி 2019 புதன் 12:27 | பார்வைகள் : 10036


நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கப்போவதாக கூறிக்கொண்டு ஆட்சியதிகாரத்துக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் முடிவடையப்போகிறது. அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துவிட்டது. ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு வாக்குறுதியை அளித்துக்கொண்டு பதவிக்கு வந்த சகல ஜனாதிபதிகளையும் போன்று அவரும் வாக்குறுதியை நிறைவேற்றாமலேயே பதவியில் இருந்து இறங்கப்போகிறார். அவரின் சுமார் ஐந்து வருட பதவிக்காலத்தின் தொடக்கத்துக்கும் முடிவுக்கும் இடையில் ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு குறித்து தென்னிலங்கை பிரதான அரசியல் சமுதாயத்தின் மத்தியில் ஏற்பட்டிருக்கும் சிந்தனை மாற்றம் குறித்து ஆராய வேண்டிய அவசியத்தை தற்போதைய அரசியல் நிலைவரத்துக்கு மத்தியில் மாறிவிட்ட அரசியல் நிகழ்வுப் போக்குகள் ஏற்படுத்தியிருக்கின்றன.
 
அரசியலமைப்புக்கான 19 வது திருத்தத்தின் மூலமாக ஜனாதிபதியின் மட்டுமீறிய அதிகாரங்கள் ஓரளவுக்கு குறைக்கப்பட்டபோது புதிய அரசியலமைப்பின் மூலமாக ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிக்கப்படும் வரையிலான ஒரு இடைக்கால ஏற்பாடாகவே அவ்வாறு  செய்யப்படுவதாகக் கூறப்பட்டது. ஆனால், இரண்டரை வருடங்களுக்கும் கூடுதலான காலமாக அரசியலமைப்பு வரைவுச்செயன்முறைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், நாளடைவில் ஏற்பட்ட அரசியல் கோலமாற்றங்கள் எல்லாவற்றையும் குளறுபடியாக்கிவிட்டன. இறுதியாக கடந்த ஜனவரியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்புச் சபையின் வழிநடத்தல் குழுவின் நிபுணத்துவக்குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அதற்கு பிறகு அதைப்பற்றிய பேச்சே இல்லை. மாறிவிட்ட அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் தங்களால் அரசியலமைப்பு வரைவுச் செயன்முறையை மேற்கொண்டு முன்னெடுக்க முடியாது என்பது அறிக்கையை சமர்பித்த வேளையில் பிரதமருக்கு நன்றாகத் தெரியும்.
 
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை அறிமுகப்படுத்தப்பட்ட  தினத்தில் இருந்து அதற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஜனாதிபதி சிறிசேனவின் தலைமையின் கீழ் ஜனாதிபதி ஆட்சிமுறையை உறுதியாக ஆதரிக்கின்ற கட்சியாக மாறியதைக்காணக்கூடியதாக இருந்தது. அது மாத்திரமல்ல, 19 வது திருத்தத்தின் மூலமாக ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டதை தனது மகத்தான ‘ சாதனை ‘ என்றும் உலகில் வேறு எந்த அரச தலைவரும் தன்னைப் போன்று அதிகாரங்களை குறைப்பதற்கு இணங்கியதில்லை என்றும் பெருமைபாராட்டிய ஜனாதிபதி சிறிசேன, நாளடைவில் அந்த திருத்தத்தை கடுமையாக எதிர்க்கின்ற ஒரு அரசியல் தலைவராக மாறினார். பிரதமர் விக்கிரமசிங்கவும் ஐக்கிய தேசிய கட்சியினருமே 19 வது திருத்தத்தை தொடர்ந்தும் உறுதியாக ஆதரிக்கும் நிலைப்பாட்டை இன்னமும்  கொண்டிருக்கிறர்கள்.
 
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் முகாமைப் பொறுத்தவரை, ஜனாதிபதி ஆட்சிமுறையை மேலும் வலுப்படுத்துவதிலேயே நாட்டம் கொண்டவர்களாக இருந்து வருகிறார்கள். அதை அவர்கள் தங்களது ஆட்சிக்காலத்தில் நடைமுறையிலும் நிரூபித்துக்காட்டினார்கள். இன்றைய ஆட்சிமுறையின் குழப்பத்துக்கெல்லாம் 19 வது திருத்தமே பிரதான காரணம் என்பது அவர்களது நிலைப்பாடு.
 
இத்தகையதொரு பின்புலத்தில், தேர்தலில் களமிறங்கும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் 19 வது திருத்தம் தொடர்பில் தங்களது நிலைப்பாட்டை உறுதியாக வெளிப்படுத்த வேண்டிய அவசியமும் எழுகிறது. அடுத்த ஜனாதிபதியாக வருபவர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதிலோ அல்லது அதில் சீர்திருத்தங்களை செய்வதிலோ அக்கறை காட்டும் சாத்தியமில்லை என்று நினைக்கக்கூடிய அளவுக்கு அண்மைக்காலமாக அந்த ஆட்சிமுறையை தொடரவேண்டும் என்று வலியுறுத்தும்  கருத்துக்கள் தென்னிலங்கை அரசியல் சமுதாயத்தில் வலுப்பெற்று வந்திருக்கின்றன. உறுதியான — பலம்பொருந்திய ஆட்சியாளர் ஒருவரைப் பற்றிய பிரமையைச் சுற்றியவையாக அந்த கருத்துக்கள் அமைந்திருக்கின்றன.
 
இதனிடையே கடந்த வாரம்  திடீரென்று ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு குறித்து பிரதமர் விக்கிரமசிங்கவுக்கு அக்கறை பிறந்தது.ஜனாதிபதி சிறிசேனவும் கூட அதில் ஆர்வம் காட்டியதாக கூறப்பட்ட நிலையில் அந்த நோக்கத்துக்காக  அரசியலமைப்புக்கான 20 வது திருத்தத்தை கொண்டுவரும் சாத்தியம் குறித்து ஆராய விசேட அமைச்சரவைக் கூட்டமும் நடத்தப்பட்டது. ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக வருவதற்காக கட்சியின் தலைமைத்துவத்தையும் மீறிக்கொண்டு ஆதரவைத் திரட்டுவதில் இறங்கியிருக்கும் பிரதி தலைவரும் வீடமைப்பு அமைச்சருமான சஜித் பிரேமதாசவும் அவரை  சூழ்ந்து நிற்கும் பெருவாரியான அமைச்சர்களும் தற்போதைய கட்டத்தில், அதாவது ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு பொருத்தமற்றதும் நடைமுறைச் சாத்தியமற்றதுமாகும்  என்று கடுமையாக எதிர்த்து நிற்கிறார்கள். பிரேமதாச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் போது ஜனாதிபதி ஆட்சி முறை ஒழிப்பு குறித்து வாக்குறுதியை அளிக்கப் போவதில்லை என்று அவரைச் சார்ந்தவர்கள் வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்கள்.
 
இதுவரை காலமும் ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு தொடர்பில் கட்சியின் நிலைப்பாட்டை அமைதியாக ஆதரித்துவந்த சஜித் பிரேமதாச இப்போது ‘ ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிக்கப்படவேண்டுமா அல்லது தொடரவேண்டுமா என்பது குறித்து அறிவியல்ரீதியான ஆய்வு எதுவும் செய்யப்படவில்லை ‘ என்று கூறுகின்ற அளவுக்கு ஜனாதிபதி ஆட்சி முறை பற்றிய அவரது நிலைப்பாடு மாறியிருக்கிறது. தற்போதைய கட்டத்தில் பிரதமருக்கு ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பில்  அக்கறை பிறந்ததற்கு காரணம் தான் ஜனாதிபதி வேட்பாளராகும் சாத்தியத்தை தடுப்பதேயாகும் என்று பிரேமதாச நம்புகிறார். நீண்டகால அரசியல் அனுபவம் கொண்டவரான பிரதமர் விக்கிரமசிங்க ‘ சிறுபிள்ளைத்தனமான ‘ தனது அணுகுமுறையினால் இன்று தனது கட்சியின் பெரும்பான்மையான அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஆதரிப்பவர்களாக மாறும் நிலையை ஏற்படுத்திவிட்டார். இப்போது அவர் அமைச்சரவையை  கூட்டுமாறு ஜனாதிபதி சிறிசேனதான் கேட்டார் என்று கூறுகிறார். அதே போன்று ஜனாதிபதி தரப்பினர் பிரதமர் தான் அந்த கூட்டத்தை கூட்டுமாறும் கேட்டார் என்று குற்றஞ்சாட்டுகின்றனர்.
 
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக வரக்கூடிய தலைவர்களின் வரிசையில் பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியவின் பெயர் நீண்டநாட்களாக அடிபட்டாலும் கூட கடந்தவாரம் அவர் தானாகவே அறிக்கையொன்றை வெளியிட்டு ஜனாதிபதி தேர்தலில் தான் எத்தகைய நிபந்தனைகளின் கீழ் களமிறங்கத் தயாராயிருக்கிறார் என்பதைக் கூறியதன் பின்னணியும்கூட சஜித் பிரேமதாசவின் வாய்ப்புக்களை தடுப்பதற்கான கட்சி தலைமைத்துவத்தின் வியூகத்தின் அடிப்படையிலானதே என்று நம்பப்படுகிறது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்காக குரல்கொடுக்கின்ற அனைத்து அரசியல் சக்திகளும் சிவில் சமூக அமைப்புக்களும் ஒன்றிணைந்து தன்னிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்தால் அதை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டு ஐக்கிய தேசிய கட்சியின் இணக்கத்துடனான வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கத்தயாராயிருப்பதாக சபாநாயகர் கூறியிருந்தார்.
 
ஒட்டுமொத்தமாக நோக்குகையில், இன்று தென்னிலங்கையில் சிவில் சமூக அமைப்புக்களையும் ஜனதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி.) மற்றும் சில இடதுசாரி கட்சிகள், குழுக்களையும் தவிர பிரதான அரசியல் கட்சிகளில் பெரும்பகுதியினர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஆதரிக்கின்றனர் என்றுதான் கூறவேண்டும். கால்நூற்றாண்டு காலத்திற்குள் நடைபெற்ற அனைத்து ஜனாதிபதி தேர்தல்களிலும் பிரதான கட்சிகளின் முக்கியமான வாக்குறுதியாக இருந்துவந்த ஜனாதிபதி ஆட்சிமுறை இத்தடவை தேர்தலில் எந்தளவுக்கு முக்கியத்துவம் பெறக் கூடியதாக இருக்கும் என்ற கேள்வி எழுகிறது.
 
நான்கு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக நடைமுறையில் இருந்துவரும் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கமுடியாமல் இருப்பதற்கான காரணம் என்ன ? அந்த ஆட்சிமுறையை ஒழிப்பதாக வாக்குறுதி அளித்து பதவிக்குவந்த அரசியல் தலைவர்கள் அதை நிறைவேற்றவில்லை என்பதற்காக அவர்களை மக்கள் வெறுத்தொதுக்கினார்கள் என்று கூறவும் முடியாது. ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு இனிமேலும் வெகுஜன ஆதரவைப் பெறக் கூடிய ஒருகோரிக்கையாக இல்லை என்று சில  அரசியல் அவதானிகள் அபிப்பிராயம் தெரிவிப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது.
 
சிவில் சமூக அமைப்புகளும் ஜனநாயக ஆதரவு முற்போக்கு சக்திகளும் மானசீகமாகவே ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்புக்கான இயக்கத்தை  முன்னெடுத்து வந்திருக்கின்றன. ஆனால், அரசியல் கட்சிகளையும் அவற்றின் தலைவர்களையும் பொறுத்தவரை, வெறுமனே அரசியல் சந்தர்ப்பவாத நோக்கில் ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு விவகாரத்தை அணுகியதனாலேயே அதை ஒழிப்பதற்கு உருப்படியான நடவடிக்கைகளை எடுக்க முடியாமல் இருக்கிறது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி மீதான கோட்பாட்டு அடிப்படையிலான  வெறுப்பை விடவும் அதை வகித்தவர்கள் மீதான அரசியல் குரோத உணர்வே இதுவரையில் ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு கோரிக்கைக்கு பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அளித்துவந்திருக்கக்கூடிய ஆதரவுக்கு பெரிதும் காரணமாக இருக்கிறது. அந்த பதவியை அடையமுடியாத அரசியல்வாதிகளுக்கு  எட்டாத பழம் புளிக்கிறது. இத்தகைய சந்தர்ப்பவாத அரசியல் அணுகுமுறையே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறைக்கு நீடித்த ஆயுளைக் கொடுக்கின்றது.
 
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை அறிமுகப்படுத்திய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் 113 வது பிறந்த தின வைபவத்தில்  கடந்தவாரம் உரையாற்றிய சபாநாயகர் ஜெயசூரிய, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவிக்கு வருபவர்கள் அதன் அதிகாரங்களை அனுபவிக்கத்தொடங்கியதும் அப்பதவியை ஒழிப்பதற்கு  விரும்பமாட்டார்கள் என்பதால் ஜனாதிபதி ஆட்சிமுறை ஒருபோதுமே ஒழிக்கப்படப்போவதில்லை என்ற அபிப்பிராயத்தை காலஞ்சென்ற ஜெயவர்தன கொண்டிருந்தார் என்ற போதிலும், அது என்றாவது ஒரு நாள்  ஒழிக்கப்படும்போது அவர் சந்தோசப்படுவார்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
 
உண்மையில் ஜெயவர்தன தன்னால் அறிமுகப்படுத்தப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிக்கப்படுவது குறித்து அல்ல, அதை ஒழிக்கமுடியாமல் இன்றைய அரசியல்வாதிகள் தடுமாறுவது குறித்தே நிச்சயம் சந்தோசப்படுவார்.
 
நன்றி - சமகளம்
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்