பேரவையின் எழுக தமிழ் எந்த வகையில் முக்கியமானது?
15 புரட்டாசி 2019 ஞாயிறு 15:51 | பார்வைகள் : 9028
தமிழ் மக்கள் பேரவை எழுக தமிழ் தொடர்பிலான அறிவிப்பை வெளியிட்ட நாளிலிருந்து அதன் அரசியல் பெறுமதி தொடர்பில் ஒரு சிலர் மாறுபட்ட அபிப்பிராயங்களை முன்வைத்து வருகின்றனர். இந்த எழுக தமிழ் விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியை பலப்படுத்துவதற்கான ஒரு முயற்சி என்பதே அவ்வாறானவர்களின் வாதமாக இருக்கிறது. விக்கினேஸ்வரன் தொடர்ந்தும் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவராக இருக்கின்ற நிலையில், இவ்வாறானதொரு எழுக தமிழ் அவரை பல்படுத்துவதற்கான ஒரு மறைமுக முயற்சி என்பதே மேற்படி வாதங்களின் சாராம்சமாகும். அது உண்மைதானா?
ஒரு வேளை எழுக தமிழால் விக்கினேஸ்வரனது கட்சி பலமடைவதால் தமிழ் மக்களுக்கு ஏதாவது இடர்கள் ஏநற்படுமா? அல்லது எதாவது ஒரு கட்சியின் தேர்தல் திட்டங்களை மட்டும் பாதிக்கப்படுமா? விக்கினேஸ்வரன் பலமடைவதால் தமிழ் மக்களின் நலன்களுக்கு ஏதும் இடர்கள் ஏற்பட்டால் நிச்சயமாக அது எதிர்க்கப்பட்ட வேண்டிய ஒன்றுதான் ஆனால் அவ்வாறானதொரு நிலைமை இல்லை. ஒரு வேளை விக்கினேஸ்வரனை முன்னிலைப்படுத்தி தங்களின் கட்சிகளை பலப்படுத்திக்கொள்ளலாம் என்று கணக்குப் போட்டவர்களுக்கு அது ஒரு இடராக இருக்கக் கூடும். மேலும் விக்கினேஸ்வரன் ஒரு அரசியல் மையமாக எழுச்சிகொள்ள வேண்டும் அதன் மூலம்தான் ஒரு மாற்றுத் தலைமையை ஏற்படுத்தலாம் என்பதே பலரதும் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் அந்த மாற்றுத் தலைமைக்கு, தலைமை தாங்கப் போகும் கட்சியும் சின்னமும் எது என்பதில்தான் பேரவையின் அங்கத்துவ கட்சிகள் மேதிக்கொள்ள நேர்ந்தது. இதில் முக்கியமாக மேதிக் கொண்டது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்தான்.
மேற்படி முரண்பாடுகளின் போது, பேரவையால் கட்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. அதற்கான வல்லமையை பேரவை கொண்டிருக்கவில்லை. இது விளங்கிக் கொள்ளக் கூடிய ஒன்றே – ஏனெனில் 2009இற்கு பின்னரான தமிழ் அரசியல் பரப்பில், எவர் மீதும் எவரும் அழுத்தங்களை பிரயோகிக்கக் கூடிய நிலைமை இருந்திருக்கவில்லை. இவ்வாறானதொரு சூழலில்தான் ஒரு மக்கள் இயக்கத்தின் தேவை தொடர்பில் உணரப்பட்டது. அதற்கு ஓரளவு வடிவம் கொடுக்கும் ஒரு பணியைத்தான் தமிழ் மக்கள் பேரவை முன்னெடுத்தது. ஆனாலும் அதனால் ஒரு கட்டத்திற்கு மேல், ஒரு மக்கள் இயக்கம் எவ்வாறிருக்க வேண்டும், அதில் கட்சிகளின் இடம் என்ன? கட்சிகளை உள்வாங்கும் போது அதற்கான எல்லைக்கோடு எது? என்பதில் பேரவையாலும் சரி, கொள்கைசார்ந்து பேரவை போன்ற ஒரு அமைப்பின் தேவை தொடர்பில் சிந்தித்தவர்களாலும் சரி அதற்கான சரியானதொரு வரையறையை முன்வைக்க முடியவில்லை. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் பேரவையின்; அங்கத்துவ கட்சிகளுக்கிடையிலான தேர்தல் அரசியல் முரண்பாடுகளால் பேரவை பலவீனமடைந்தது.
பேரவை ஒப்பீட்டளவில் முன்னரை விடவும் பலவீனமடைந்திருந்தாலும் பேரவை முற்றிலுமாக செயலிழிந்துவிடவில்லை. இதற்கு விக்கினேஸ்வரனே காரணம். அவர் தொடர்ந்தும் பேரவையின் பாதுகாவலராக இருந்தார். பேரவையின் அங்கத்துவ கட்சிகளான அகில இலங்கை தமிழ் காங்கிரசுக்கும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) ஆகியவற்றுக்குமிடையிலான அறிக்கை போர்கள், பொது வெளியில் காட்சிப்படுத்தப்பட்ட போது, விக்கினேஸ்வரன்தான் பேரவையை பாதுகாத்தார். அதனை முற்றிலுமாக செயலிழந்து போகாமல் காத்தார். ஒரு வேளை விக்கினேஸ்வரனும் அந்த முரண்பாடுகளால் வெளியேறியிருந்தால் அப்போதே பேரவை செத்திருக்கும். இதன் காரணமாகத்தான், விக்கினேஸ்வரன் தனக்கானதொரு கட்சியை அறிவித்த பின்னரும் கூட அவரை தொடர்ந்தும் பேரவையின் இணைத் தலைவராக இருக்குமாறு அனைவருமே நிர்பந்திருந்தனர். இன்று அவ்வாறானவர்களே பேரவை விக்கினேஸ்வரன் மைய அமைப்பாக இருப்பதாக குற்றம்சாட்டுகின்றனர். பேரவை விக்கினேஸ்வரன் மைய அமைப்பாக இருந்தமைதான் இதுவரை பேரவையின் பலமாக இருந்தது என்பதை, இன்று ஆய்வுகள் செய்யும் பலரும் தங்களின் வசதிக்காக, மறந்திருக்கலாம் அனால் அது உண்மையல்ல என்பது பேரவையுடன் தொடர்புடைய அனைவருமே நன்கறிந்த சங்கதி. இன்றும் கூட அதுதான் நிலைமை.
பேரவையை விக்கினேஸ்வரன் உட்பட சிலர், ஒரு மக்கள் இயக்கமாக கட்டியெழுப்ப விரும்பம் கொண்டிருந்தாலும் கூட, பேரவையால் வடக்கு கிழக்கை இணைத்தவாறு அவ்வாறானதொரு மக்கள் இயக்கமாக மேலெழ முடியவில்லை. அதற்கான உட்கடைப்புக்களையும் விரிவான உரையாடல்களையும் பேரவையால் சரியான வகையில் இதுவரை முன்னெடுக்க முடியவில்லை. இவ்வாறான சில குறைபாடுகள் இருந்தாலும் கூட, பேரவை இன்று முன்னெடுக்கும் எழுக தமிழுக்கான ஆதரவை கொடுக்க வேண்டியது கட்சி நிறங்களை கடந்த ஒரு கடப்பாடாகும். இதில் எவ்வாறு உடன்படலாம் என்னும் ஒரு கேள்வியை சிலர் முன்வைக்கலாம். அது மிகவும் இலகுவானது – பேரவை ஆறு பிரதான கோரிக்கைகளின் அடிப்படையில்தான், இந்த எழுக தமிழுக்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
அதாவது, சிங்கள பௌத்த மயமாக்கலை உடனடியாக நிறுத்து, சர்வதேச போர்க்குற்ற விசாரணையை நடத்து, தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உடனடி விசாரணை நடத்து, வடக்கு – கிழக்கில் இராணுவ மயமாக்கலை நிறுத்து, இடம்பெயர்ந்த அனைவரையும் அவர்களது பாரம்பரிய இடங்களில் மீளக்குடியமர்த்து – அகியவையே மேற்படி அறு கோரிக்கைகளாகும். எனவே எழுக தமிழை ஒருவர் எதிர்க்கிறார் என்றால் அவருக்கு மேற்படி கோரிக்கைகளுடன் உடன்பாடில்லை என்று நாம் எடுத்துக் கொள்ளலாம். மேற்படி கோரிக்கைகளுடன் உடன்படக் கூடிய அனைவரும் பேரவையின் எழுக தமிழ் நிகழ்வில் கலந்துகொள்ளலாம் அல்லது அதற்கு ஆதரவான தங்களின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தலாம். தாங்கள் சார்ந்த அமைப்புக்களின் அங்கத்தவர்களை இதில் பங்குகொள்ளுமாற கோரலாம். பேரவையின் எழுக தமிழக்கான ஆதரவையும் எதிர்ப்பையும் அதன் கோரிக்கைகளின் அடிப்படையில்தான் நோக்க வேண்டுமேன்றி, அதில் பங்குகொள்பவர்கள் யார், அதனால் அவர்களது கட்சிகள் பெறப்போகும் நன்மை என்ன – என்னும் கேள்விகளால் இந்த நிகழ்வை அணுகக் கூடாது. எழுக தமிழ் மட்டுமல்ல – எந்தவொரு அரசியல் நோக்கம் கொண்ட நிகழ்வுகளிலும் கட்சிகள் பங்குகொள்ளும் போது, அதிலிருந்து அந்தக் கட்சிகளும் நன்மை பெறலாம். அதனால் தமிழ் மக்களுக்கு எந்தவொரு தீங்கு ஏற்படப் போவதில்லை. அந்த வகையில் எழுக தமிழால் விக்கினேஸ்வரன் நன்மையடந்தால் அது தமிழ் மக்களுக்கும் நன்மைதான். எனெனில் இறுதி யுத்தத்தில் இடம்பெற்றதாக, கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தொடர்ச்சியாக சமரசமின்றி குரல் கொடுத்துவரும் ஒய்வு பெற்ற ஒரு உச்சநீதிமன்ற நீதிபதியின் கரங்கள் பலமடைகின்றன. அதனால் தமிழ் மக்களுக்கு எப்படி தீங்கு ஏற்படும்?
பேரவை இதற்கு முன்னர் முன்னெடுத்த எழுக தமிழும் சரி, தற்போது முன்னெடுக்கவுள்ள எழுக தமிழும் சரி, வடக்கு கிழக்கு நிலைமைகளில் மட்டும் வைத்து, நோக்க வேண்டிய ஒன்றே அன்றி, அதனை ஏனைய நாட்டு உதாரணங்களுடன் பொருத்தி நோக்க வேண்டியதில்லை. உதாரணமாக கொங்கொங்கில் காணப்படும் அரசியல் நிலைமை வேறு வடக்கு கிழக்கில் காணப்படும் நிலைமை வேறு. அவசரமான ஆய்வுலக கற்பனைகளால் இந்த நிலைமைகளை எடைபோட முடியாது. இதன் காரணமாகத்தான் இந்த பத்தியாளர் கடந்த வாரம் எழுதிய கட்டுரையில் மக்கள் எழுச்சி என்பது வார விடுமறையில் நடைபெறும் மாத கோவில் ஆராதனையல்ல என்று குறிப்பிட்டிருந்தார். தமிழ் மக்களின் மனோநிலை, அவர்களின் அரசாங்க வேலைத்தன மனோபாவம் ஆகிய பல விடயங்களை கருத்தில்கொண்டுதான் மக்கள் பேராட்டங்கள் தொடர்பில் சிந்திக்க வேண்டும். இன்றைய சூழலில் ஆகக் குறைந்தது அவ்வப்போது மக்களை முடிந்தவரையில் அணிதிரட்டி, சில விடயங்களை நாம் மறக்கவில்லை என்பதை கூறினாலே போதுமானது. இந்த எழுக தமிழ் மூலம் அதனைத்தான் நாம் எதிர்பார்க்கலாம். இன்றைய சூழலில் பேரவை போன்றதொரு அமைப்பால் முன்னெடுக்கக் கூடிய ஆக உச்சமானதொரு நிகழ்வுதான் இந்த எழுக தமிழ். அதனை ஆதரிக்க வேண்டிய ஒரு தமிழ் தேசிய நிலைப்பாடாகும்.