8 புரட்டாசி 2019 ஞாயிறு 14:14 | பார்வைகள் : 9148
இலங்கைத் தீவு மீண்டுமொரு தீர்க்கமான தேர்தல் ஒன்றை எதிர்கொண்டிருக்கின்ற சூழலில் விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவை மீண்டுமொரு எழுக தமிழ் நிகழ்விற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுவருகிறது. இதன் வெற்றி தோல்வி எவ்வாறு அமையும் என்பது தொடர்பில் பலவாறான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. இது வெற்றியளிக்குமாக? ஒரு வேளை வெற்றியளிக்காவிட்டால் அது விக்கினேஸ்வரனை பலவீனப்படுத்திவிடாதா? இவ்வாறானதொரு சூழலில் தமிழ் மக்கள் பேரவையால் இதனை திறம்பட முன்கொண்டு செல்ல முடியுமா ? இப்படியான கேள்விகளை ஆங்காங்கே காண முடிகிறது. முதலில் இவ்வாறான கேள்விகள் ஏன் வெளிவருகின்றன என்று பார்ப்போம்! 2016இல் இடம்பெற்ற எழுக தமிழ் நிகழ்வானது, முள்ளிவாய்க்கால் அழிவுகளுக்கு பின்னர் பெரும்திரளான மக்களை ஓரு நோக்கத்தின் அடிப்படையில் ஓரிடத்திற்கு கொண்டுவருவதில் தனித்துவமான இடத்தை பெற்றிருந்தது.
2016இல் பேரவை எழுக தமிழை முன்னெடுத்த போது இன்று முன்வைக்கப்படும் சந்தேகக் கேள்விகளை அப்போது எவரும் முன்வைத்திருக்கவில்லை. இத்தனைக்கும் வடக்கு கிழக்கில் பெரும்பாண்மையான மக்கள் ஆதரவை கொண்டிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எழுக தமிழை ஆதரித்திருக்கவில்லை. அவ்வாறான சூழலிலும் கூட அப்போது எழுக தமிழின் வெற்றி தொடர்பில் எவரும் சந்தேகங்களை எழுப்பவில்லை. அன்று வராத சந்தேகங்கள் – அன்று தெரியாத சவால்கள் ஏன் இப்போது மட்டும் தெரிகிறது? இதற்கான ஒரு வரி பதில் – அப்போது எழுக தமிழுக்கு ஆதரவாக இருந்த பேரவையின் அங்கத்துவ கட்சிகளில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மட்டுமே தற்போதும் பேரவையுடன் நிற்கின்றது. முக்கிமாக, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இப்போது முன்னெடுக்கப்படும் எழுக தமிழழுக்கு ஆதரவாக இல்லை என்னும் அப்பிராயம் இருக்கிறது. காங்கிரஸை பொறுத்தவரையில், இந்த எழுக தமிழ் என்பது விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணிக்கான மக்கள் ஆதரவை கூட்டுவதற்கான ஒரு முயற்சி மட்டுமே! எனெனில் பேரவை 2016இல் எழுக தமிழை முன்னெடுத்த போது, விக்கினேஸ்வரன் தனக்கான கட்சியை கொண்டிருக்கவில்லை. அப்போது அவர் ஒரு பொதுச் சொத்தாக இருந்தார். அவரை தங்களின் பக்கமாக இழுத்துக் கொள்ள முடியும் என்னும் நம்பிக்கை தமிழ் காங்கிரசிடம் இருந்தது. இதன் காரணமாகவே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எழுக தமிழ் மேடையில் வைத்து, விக்கினேஸ்வரனை ‘தமிழனத்தின் தலைவரே’ என்று குறிப்பிட்டிருந்தார். விக்கினேஸ்வரன் தமிழினத்தின் தலைவர் என்பது உண்மையானால், அவரது கட்சி எழு தமிழின் மூலம் நன்மையடைவதில் எவரும் கவலைப்படவேண்டியதில்லை. ஆனாலும் கவலைகள் இருக்கின்றன. எனவே இங்கு பிரச்சினை தமிழினம் அல்ல மாறாக, கட்சி நலன்கள்தான். விக்கினேஸ்வரனின் கட்சி மக்கள் மத்தியில் பலமாக வேரூன்றுவதை சிலர் விரும்பவில்லை. இதன் காரணமாகவே அவர்கள் பேரவையின் 2019 எழுக தமிழை எதிர்க்கின்றார். இது மிகவும் இலகுவான தர்க்கம். இதற்கு அரசியல் ஆய்வு என்னும் பெயரில் அதிகம் கற்பனை செய்ய வேண்டியதில்லை.
கடந்த இரு வருடங்களாக தனது எழுத்துக்களில் அவ்வப்போது ஜக்கிய முன்னணி தொடர்பில் வலியுறுத்திவரும் மூத்த அரசியல் ஆய்வாளர் திருநாவுக்கரசு, இந்த எழுக தமிழ் தொடர்பிலும் தனது ஆர்வத்தை பதிவு செய்திருக்கிறார். அதாவது, எதிரிக்கு எதிரான குரலை எவர் எழுப்பினாலும், அதற்கான போராட்டங்களை எவர் முன்னெடுத்தாலும் அதனை ஆதரியுங்கள் என்பதே வரலாற்றின் ஆணையாகும் என்பது திருவின் கருத்து. ஆனாலும் திருவின் வாதங்களை எந்தவொரு அரசியல் கட்சியும் பொருட்படுத்தியதற்கு சான்றில்லை. உண்மையில் இங்கு விடயங்கள் கட்சி நலனிலிருந்துதான் நோக்கப்படுகின்றனவே தவிர வரலாறு தொடர்பான புரிதலிலிருந்து அல்ல. தவிர, இவ்வாறு பொதுப்படையாக பேசும் ஆய்வுகளால் எந்தவொரு பயனுமில்லை. எவர் பிரச்சினைக்குரியவர்களோ அவர்களை முன்னிறுத்தி விமர்சனங்களை முன்வைப்பதும் அவர்களை மக்கள் முன் அம்பலப்படுத்துவதும்தான் இப்போது தேவையானது. எல்லோருக்கும் நல்லவராக இருக்க நினைப்பவர்கள் ஆய்வாளர்களாக இருக்க முடியாது. அவர்கள் வேண்டுமானால் நல்ல சமையல் காரர்களாக இருக்க முடியும்.
ஒரு மக்கள் எழுச்சியென்பது ஞாயிறு தினங்களில் நடைபெறும் மாதா கோவில் ஆராதனையல்ல, அதே போன்று விடுமுறை தினங்களில் இடம்பெறும் கேளிக்கைகளும் அல்ல. மக்கள் உணர்வுபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் ஒரு விடயத்தின் தேவையை முற்றிலுமாக உள்வாங்கி ஒன்றுபடும், ஒருங்கிணையும் ஒரு நிகழ்வே மக்கள் எழுச்சியாகும். எனவே பேரவை ஒரு மக்கள் எழுச்சிக்கான நாளை விடுமுறை தினங்களில் வைக்க வேண்டும் என்பதெல்லாம் மக்கள் எழுச்சி தொடர்பில் உள்ள அவநம்பிக்கையின் வெளிப்பாடாகும். 2009இற்கு பின்னர் மக்கள் அரசியல் ரீதியில் பெருமளவு அன்னியமானதொரு நிலையில்தான் இருக்கின்றனர். போராட்ட காலத்திலும் அந்த அன்னியமான நிலைமையே இருந்தது. ஆனாலும் யுத்தம் மக்களின் விரும்பு வெறுப்புக்களுக்கு அப்பால் அவர்களின் வாழ்வை தீர்மானித்திருந்தது. எனவே ஏதோவொரு வகையில் அவர்கள் அனைவரும் அது குறித்த உணர்வுடன் வாழ வேண்டியிருந்தது. அந்த உணர்வு நிலை அரசியலிலிருந்து அன்னியப்பட முடியாதவொரு நிர்ப்பந்தத்தையும் அவர்கள் மீது வலிந்து திணித்துக் கொண்டிருந்தது. ஆனால் 2009இற்கு பின்னரான யுத்தமற்ற நிலைமையானது யுத்தத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட மக்களைத் தவிர, பெரும்பாலான ஏனைய மக்களை ஒரு புதிய வாழ்க்கைக்கு கொண்டுசென்றது.
சோதனைச் சாவடிகள்ள அற்ற, அடையாள அட்டைகள் தேவையற்ற வாழ்வை அனைவருமே வரவேற்றனர் –அனுபவித்தனர். முப்பது வருட யுத்தத்திற்கு பழக்கப்பட்ட மக்களுக்கு, அது ஒரு ஆறுதலை கொடுத்தது. இஸ்லாமிய பயங்கரவாதத்தின் ஈஸ்டர் தின, தாக்குதலைத் தொடர்ந்து மீண்டும் சோதனைச் சாவடிகளும் பேருந்துகளிலிருந்து இறங்கி ஏற நேர்ந்தபோது அதனை ஒவ்வொரு தமிழரும் வெறுத்தனர். இந்த நாசமாய்ப் போன சோனகங்களால் திரும்பவும் ஏறி இறங்க வேண்டியிருக்கிறதே என்று ஆதங்கப்பட்ட பலரை இப்பத்தியாளர் சந்திக்கநேர்ந்தது. எனவே மக்கள் எழுச்சி தொடர்பில் ஆய்வுகள் செய்வோர் இவ்வாறான யதார்த்த நிலைமையை கருத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் மக்கள் எழுச்சி என்பது ஒரு சில யாழ் பத்தியாளர்களின் வாராந்த கற்பனையல்ல. இதுதான் எழுக தமிழ் – 2009 இன்போது, பேரவை எதிர்கொள்ளப் போகும் முதன்மைச் சவாலாகும். மக்களை தயார்படுத்துவதும், ஒருங்கிணைப்பதிலும், ஏன் இதில் பங்குகொள்ள வேண்டும் என்னும் விழிப்புணர்வை அவர்களுக்குள் பற்ற வைப்பதிலும்தான் எழுக தமிழின் வெற்றி தங்கியிருக்கின்றது. ஈஸ்டர் தாக்குதலின் பின்னரான சூழலில் இவ்வாறானதொரு நிகழ்வு இடம்பெறுவதும் கூட, ஒரு வகை சவால்தான். அதே வேளை பேரவை முன்னெடுக்கும் எழுக தமிழ் நிகழ்விற்கு முன்னர் இல்லாத ஒரு சாதகமான வாய்ப்பும் உண்டு. இம்முறை முன்னரைப் போல கூட்டமைப்பு இதனை வெளிப்படையாக எதிர்த்து செயற்படாது. ஏனெனில் கூட்டமைப்பு எதிர்பார்த்தது போன்று அரசியல் தீர்வு நோக்கிய விடயங்கள் எதுவும் சாத்தியப்படாத நிலையில், மக்கள் போராட்டங்களை கூட்டமைப்பால் எதிர்க்க முடியாது.
அவ்வாறு எதிர்த்தால் அது கூட்டமைப்பிற்கு பாதகமான நிலைமையையே ஏற்படுத்தும். இந்தப் பின்னணியில் சிந்தித்தால், இம்முறை பேரவையின் எழுக தமிழை பகிரங்கமாக எதிர்க்கக் கூடியவர்கள் எவராவது இருக்கிறார் என்றால் அது நிச்சயமாக ஆரம்பத்தில் பேரவையில் அங்கத்துவம் வகித்த கட்சிகளில் ஒன்றாகவே இருக்கும். ஏனெனில் விக்கினேஸ்வரன் பலமடைவது தங்களின் இருப்பை பாதிக்கும் என்று சிலர் அஞ்சுகின்றனர். எனவே இந்த எழுக தமிழ் நிகழ்வு பெருமளவில் வெற்றிபெறாத போது, அதனை முன்வைத்து தங்களின் பலத்தை நிரூபிக்கலாம் என்றும் அவர்கள் எண்ணக் கூடும். அதே வேளை தாங்கள் இல்லாத பேரவை ஒரு செல்லாக் காசு என்பதை நிரூபிக்க வேண்டும் என்னும் எண்ணமும் அவர்களுக்கு இருக்கலாம். அவ்வாறு நிரூபிக்க வேண்டுமாயின் இந்த எழுக தமிழ் நிகழ்வு தோல்வியடை வேண்டுமென்றே அவர்கள் விரும்புவர். இதுவும் மிகவும் இலகுவான அரசியல் தர்க்கமாகும். இதிலுள்ள ஆச்சரியமான பக்கம் என்னவென்றால் தமிழ் தேசியத்தின் காவலர்கள் தாங்களே என்பவர்கள்தான் பேரவையின் தேசிய செயற்பாடுகளை எதிர்க்கப் போகின்றனர். அந்த வகையில் பேரவையின் எதிரிகள் பேரவைக்கு வெளியில் இல்லை. அவர்கள் ஒன்றில் பேரவையின் அங்கத்துபவர்களாக இருக்கப் போகின்றனர் அல்லது பேரவையின் அங்கத்துவ கட்சிகளாக இருக்கப் போகின்றனர். இதுதான் பேரவைக்கு முன்னாலுள்ள உண்மையான சவால். அதே வேளை பேரவையின் மேடையில் கொள்கை அடிப்படையில் கைகோர்க்கப் போகும் கட்சிகளே, விக்கினேஸ்வரன் தலைமையிலான மாற்றுத் தலைமைக்கான அடையாளத்தையும் பெற நேரிடும்.
நன்றி - சமகளம்