Paristamil Navigation Paristamil advert login

பிரதமர் ரணிலின் அரசியல் எதிர்காலம்...!!

பிரதமர் ரணிலின் அரசியல் எதிர்காலம்...!!

23 ஆனி 2019 ஞாயிறு 08:04 | பார்வைகள் : 2419


இலங்கையின் அண்மைக்கால அரசியல் வரலாற்றில் கட்சியொன்றின் தலைவராக மிகவும் நீண்டகாலம் தொடர்ச்சியாக இருந்துவருபவர் என்றால் அது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக அவர் சுமார் கால்நூற்றாண்டாக பதவி வகித்துவருகிறார். அதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்களாக இருந்தவர்களில் எவரும்  பிரதமர் விக்கிரமசிங்கவைப்போன்று  தலைமைத்துவத்துக்கு எதிரான உள்கட்சி கிளர்ச்சிகளுக்கு அடிக்கடி  முகங்கொடுத்ததில்லை.ஆனால், அந்த கிளர்ச்சிகளை முறியடித்து தலைவர் பதவியை அவரால் காப்பாற்றக்கூடியதாக இருந்துவந்திருக்கிறது.
 
இலங்கையின் அரசியல்வாதிகளில் கூடுதலான காலமாக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும் அவரே இருந்திருக்கிறார்.
 
 பாராளுமன்றத்தில் தொடர்ச்சியாக 42 வருடங்களாக உறுப்பினராக இருந்துவரும் பிரதமர் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் ஐக்கிய தேசிய கட்சி வந்த பிறகு அதன் வேட்பாளர் ஜனாதிபதி தேர்தலில்  ஒருபோதுமே வெற்றிபெற்றதில்லை. இறுதியாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவியில் இருந்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணசிங்க பிரேமதாசவே.
 
1994 நவம்பர் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட காமினி திசாநாயக்க கொழும்பில்  தேர்தல் பிரசாரக்கூட்டமொன்றில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டதை யடுத்து  பதில் வேட்பாளராக விக்கிரமசிங்க களமிறங்க முன்வரவில்லை. திசாநாயக்கவின் விதவை மனைவி சிறிமாவே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையிலான மக்கள் முன்னணியின் வேட்பாளரான அன்றைய பிரதமர் திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை எதிர்த்து போட்டியிட்டார்.  ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப்பொறுப்பை அதற்குப் பிறகு ஏற்றுக்கொண்ட விக்கிரமசிங்க 1999 டிசம்பர் ஜனாதிபதி தேர்தலிலேயே முதன் முதலில் போட்டியிட்டார்.அதில் அவரால் வெற்றி பெறமுடியவில்லை.
 
ஆனால், ஜனாதிபதி திருமதி குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் 2001 டிசம்பரில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி வெற்றிபெற்றதையடுத்து விக்கிரமசிங்க பிரதமராக இரண்டாவது தடவையாக பதவியேற்றார்.ஜனாதிபதி  பிரேமதாச கொழும்பில் 1993 மே தினத்தன்று தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டதையடுத்து அப்போது பிரதமராக இருந்த டி.பி.விஜேதுங்க ஜனாதிபதியாகப் பதவியேற்க விக்கிரமசிங்க முதல் தடவையாக பிரதமரானார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 2005 நவம்பர் ஜனாதிபதி தேர்தலில் விக்கிரமசிங்க இரண்டாவது தடவையாக போட்டியிட்டார். அதிலும் அவரால் வெற்றி பெறமுடியாமல் போய்விட்டது.சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் முன்னணியின் வேட்பாளரான அன்றைய பிரதமர் மகிந்த ராஜபக்சவே அந்த தேர்தலில் வெற்றிபெற்றார்.விடுதலை புலிகள் தமிழ்ப்பகுதிகளில் தேர்தலை பகிஷ்கரிக்க வாக்காளர்களை நிர்ப்பந்திக்கவில்லையென்றால், விக்கிரமசிங்க அந்த தேர்தலில் சுலபமாக வெற்றிபெற்றிருக்கமுடியும் என்று நம்பப்பட்டது. அடுத்தடுத்து இரண்டு தடவைகள் ஜனாதிபதி தேர்தல்களில் தோல்விகண்டதற்கு பிறகு ‘ சூடுகண்ட பூனை அடுப்பங்கரையை நாடாது ‘ என்பது போல ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்த்துக்கொண்டார்.
 
உள்நாட்டுப் போரில் பாதுகாப்பு படைகள் விடுதலை புலிகளை தோற்கடித்த பின்புலத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மக்கள் செல்வாக்கு  தென்னிலங்கையில் உச்சநிலையில் இருந்தது. தனக்கு வாய்ப்பான அந்த சூழ்நிலையில் உரிய காலத்துக்கு முன்கூட்டியே  2010 ஜனவரியில் ஜனாதிபதி தேர்தலை நடத்தினார். இரண்டாவது பதவிக்காலத்துக்கு மக்களின் ஆணையைப் பெறுவதே அவரின் திட்டம். போரின் முடிவுக்குப் பின்னரான நாட்களில் ராஜபக்ச சகோதரர்களுடன் முரண்பட்டுக்கொண்ட முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவையே எதிரணியின் பொதுவேட்பாளராக  ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக களமிறக்க விக்கிரமசிங்க இணங்கிக்கொண்டார். அந்த தேர்தலில் சிங்கள மக்கள் என்ன காரணத்துக்காக ராஜபக்சவை அமோகமாக ஆதரித்தார்களோ அதற்கு எதிரீடான காரணத்துக்காக வடக்கு, கிழக்கில் மாத்திரமல்ல, மலையகத்திலும் தமிழர்கள் பொன்சேகாவுக்கு பெருமளவில் வாக்களித்தார்கள்.ராஜபக்சவினால் முன்னாள் இராணுவத் தளபதியை சுலபமாகத் தோற்கடிக்கக்கூடியதாக இருந்தது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருக்கு தேவைப்பட்டது பொன்சேகாவின் வெற்றியல்ல, ஜனாதிபதி ராஜபக்சவுக்கு கிடைக்கக்கூடிய தேர்தல் வெற்றியினால் அரசியல்ரீதியில் பின்னடைவைச் சந்திப்பது தானாக இருக்கக்கூடாது என்பதேயாகும்.
 
 மீண்டும் அதே ‘ தந்திரோபாயத்தின் ‘ அடிப்படையில் 2015 ஜனவரி ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக தான் களமிறங்காமல் எதிரணியின் பொதுவேட்பாளர் என்ற போர்வையில் வேறு ஒருவரை நிறுத்துவதற்கு விக்கிரமசிங்க உடன்பட்டார். ஜனாதிபதியின்  இரு பதவிக்கால வரையறையை இல்லாதொழித்து ஜனாதிபதியாகப் பதவி வகிக்கும் ஒருவர் எத்தனை தடவைகளும் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு வசதியாக தனது இரண்டாவது பதவிக்காலத்தின் ஆரம்பக்கட்டத்தில் அரசியலமைப்பில் திருத்தத்தை கொண்டுவந்த மகிந்த ராஜபக்ச மூன்றாவது பதவிக்காலத்துக்கு மக்களின் ஆணையைப் பெறுவதற்காக அந்த தேர்தலையும் உரிய காலத்துக்கு முனகூட்டியே நடத்தினார். அதில் அவரின் அரசாங்கத்தில்  மூத்த அமைச்சர்களில் ஒருவராகவும் சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருந்த மைத்திரிபால சிறிசேன எதிரணியின் பொதுவேட்பாளராக களமிறக்கப்பட்டதும்  அவர் ராஜபக்சவைத் தோற்கடித்து ஜனாதிபதியாகியதும்  பிறகு விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து அவர்  அமைத்த ‘ நல்லாட்சி ‘ யின் இலட்சணங்கள் எல்லாம் அண்மைக்கால வரலாறு.
 
 இப்போது எழுகின்ற முக்கியமான கேள்வி மீண்டும் ஒரு தடவை பிரதமர் விக்கிமசிங்கவினால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து நழுவ முடியுமா?
 
 எதிர்வரும் டிசம்பர் இரண்டாவது வாரத்துக்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படவேண்டியதாக இருக்கிறது. அதற்கு இன்னும் ஐந்து மாதங்களே இருக்கின்றன. அந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான முன்னணியின் வேட்பாளராக களமிறக்கப்படக்கூடியவர்கள் பற்றி பிரதமர் விக்கிரமசிங்கவைத் தவிர அவரின் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் பகிரங்கமாக  பேசுவதைக்காணக்கூடியதாக இருக்கிறது.
 
 ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த ஒருவரே நிச்சயம் வேட்பாளராக இருப்பார் என்று சிலரும் பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய அல்லது வீடமைப்பு அமைச்சரும் கட்சியின் பிரதி தலைவருமான சஜித் பிரேமதாச வேட்பாளராக நியமிக்கப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக வேறுசிலரும் கட்சியின் தலைவரே போட்டியிடவேண்டும் என்று இன்னொரு பிரிவினரும் கூறுகிறார்கள். பிரபல தொழிலதிபர் ஒருவரை  ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளராக களமிறக்குவது குறித்தும் பரிசீலிக்கப்படுவதாக சில வாரங்களுக்கு முன்னர் செய்திகள் பெரிதாக அடிபட்டன. ஆனால், பிரதமர் அவை பற்றி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்.
 
 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் செய்யப்படவேண்டும் என்று நேற்று முன்தினம் சனிக்கிழமை பிரதமரின் நெருக்கமான விசுவாசிகளில் ஒருவர் என்று பரவலாக நம்பப்படும் அமைச்சர் அஜித் பி. பெரேரா கூறியிருப்பதே விக்கிரமசிங்கவின் அரசியல் குறித்து இன்று அலசப்படுவதற்கான உடனடிக் காரணமாகும். ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறக்கூடிய ஆற்றல்கொண்ட ஒரு சில தலைவர்கள் கட்சியில் இருப்பதாகவும் அவர்களில் ஒருவரிடம் தலைமைத்துவத்தை கையளிக்கவேண்டும் என்றும் கட்சிக்குள் இதே கருத்தைக் கொண்ட பலர் இருப்பதாகவும் பெரேரா குறிப்பிட்டிருக்கிறார்.
 
 ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை மாற்றவேண்டும் என்ற  கோரிக்கை பிரதமர் விக்கிரமசிங்கவுக்கு பதிலாக வேறு ஒருவரைத் தலைவராக்கவேண்டும் என்பதைத் தவிர வேறு எதுவாக அர்த்தப்படும்?
 
அதுவும் அந்த மாற்றத்தை ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் செய்யவேண்டும் என்று கேட்பது விக்கிரமசிங்கவை வேட்பாளராக நிறுத்தினால் தோல்விதான் கிடைக்கும் என்று அஞ்சுவதாகத்தானே அர்த்தப்படும்!
 
 ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பிரதமர் விக்கிரமசிங்க எடுக்கப்போகும் முடிவு  அவரது அரசியல் எதிர்காலத்தை நிச்சயம் தீர்மானிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
 
நன்றி - சமகளம்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்