முஸ்லிம் அரசியல் தலைவர்களிடமிருந்து தமிழ் அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்?
9 ஆனி 2019 ஞாயிறு 14:51 | பார்வைகள் : 2278
சில நாட்களாக நீடித்த அரசியல் நெருக்கடி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. அத்துரலிய ரத்தின தேரரின் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தால் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிளை தொடர்ந்து, சர்ச்சைக்குரிய முஸ்லிம் அரசியல் வாதிகளான, ரிஷாத்பதியூதீன், ஹிஸ்புல்லா மற்றும் ஆசாத்சாலி ஆகியோர் தங்களது பதிவிகளை ராஜினாமா செய்திருக்கின்றனர். அவர்களை பதவி விலக்க வேண்டுமென்னும் கோரிவந்தவர்கள் வெற்றியடைந்திருக்கின்றனர். அத்துரலிய ரத்தின தேரரின் உணவுத்தவிர்ப்பு போராட்டம் சிங்கள மக்கள் மத்தியில் பெருமளவு கவனிப்பை பெறத் தொடங்கிய பின்புலத்திலேயே இவர்கள் மூவரும்; தங்கள் பதவிகளை ராஜினாமா செய்திருக்கின்றனர். ஏனெனில் அதுவரை தாங்கள் ஏன் பதவி விலக வேண்டும் என்றவாறே மேற்படி மூவரும் பதலளித்து வந்தனர்.
ஒரு வேளை இவர்கள் பதவி விலகாது விட்டிருந்தால் அத்துரலிய தேரரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கலாம். அவ்வாறு ஒரு வேளை நிகழ்ந்திருந்தால் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தலைதூக்கியிருக்கும். இவ்வாறானதொரு சூழலில்தான் இவர்களது பதவி விலகல் நிகழ்ந்திருக்கிறது. ஆனால் இங்கு எவரும் எதிர்பாராத ஒரு விடயம் நிகழ்ந்திருக்கிறது. அதாவது, அரசாங்கத்தில் அங்கம் வகித்த அனைத்து முஸ்லிம் அரசியல்வாதிகளும் தங்களின் பதவிகளை துறந்திருக்கின்றனர். இது தொடர்பில் கருத்து தெரிவித்திருக்கும் முஸ்லிம் காங்கிரசின் தலைவர் றவூப் ஹக்கீம், தங்களது சமூகம் நெருக்கடியிலிருக்கின்ற போது, தாங்கள் பதவிகளில் இருக்க முடியாது என்று தெரிவித்திருக்கின்றார்.
நேற்றுவரை கட்சிகளாக பிளவுற்றிருந்த, கருத்து முரண்பாடுகள் கொண்டிருந்த அனைத்து முஸ்லிம் அரசியல்வாதிகளும் தங்களின் கட்சிகள், நிலைப்பாடுகள் அனைத்தையும் புறம்தள்ளி நாம் முஸ்லிம்கள் என்னும் அடிப்படையில் சிந்தித்திருக்கின்றனர். உண்மையில் கட்சி பேதங்களுக்கும், அந்த கட்சி பேதங்களால் கிடைக்கும் நலன்களுக்கும் முன்னுரிமை வழங்கியிருந்தால், ரிஷாத், ஹிஸ்புல்லா மற்றும் ஆசாத்சாலி ஆகியோர் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் கரிசனை காண்பித்திருக்காது. ஜக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த முஸ்லிம் அரசியல் வாதிகள் இதில் அக்கறை செலுத்தியிருக்க வேண்டியதில்லை. ஆனால் அவர்கள் எவரும் அவ்வாறு சிந்திக்கவில்லை மாறாக ஒரு சமூகமாக சிந்தித்திருக்கின்றனர். முஸ்லிம் அரசியல் தலைவர்களால் எவ்வாறு இவ்வாறு சிந்திக்க முடிகிறது? முஸ்லிம்களை பொறுத்தவரையில் அவர்கள் எவரும் அரசியலில் சாதி பார்ப்பதில்லை. தமது சமூகத்தின் இருப்பு மற்றும் நலன்கள் என்னும் இரண்டு அடிப்படையில்தான் அரசியலை கையாளுகின்றனர். தமது சமூகத்தின் இருப்பிற்கும் நலன்களுக்கும் அவசியம் எனின் பிரிந்தும், இணைந்தும் செயற்படுகின்றனர். இவ்வாறு பிரிந்தும் இணைந்தும் செயற்படுவதை ஒரு அரசியல் தந்திரோபாயமாகவே முஸ்லிம்கள் கையாண்டுவருகின்றனர். இதுவே அவர்களது பிரதான தந்திரோபாயமாகவும் இருக்கிறது. ஆனால் ஈஸ்டர் தற்கொலை தாக்குதல்களுக்கு பின்னர் அந்த தந்திரோபாயம் நெருக்கடிகுள்ளாகியிருக்கிறது. இவ்வாறானதொரு சூழலில்தான் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இணைந்து நிற்கின்றனர்.
இந்த இடம்தான் தமிழ் அரசியல் தரப்பினர் அவதானிக்க வேண்டிய இடம். தமிழ் அரசியல் தரப்பினரிடம் பிரிந்தும் இணைந்தும் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் எப்போதுமே ஒரு தெளிவான புரிதல் இருந்ததில்லை. இதன் காரணமாகவே ஒவ்வொருவம் மற்றவர்களை எதிரிகளாக கருத்திக் கொள்ளும் போக்கும் தொடர்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தவறுகளை கண்டவர்களால் இன்றுவரை தங்களுக்குள் ஒன்றுபட முடிவில்லை. விக்கினேஸ்வரன் தலைமையில் ஒரு மாற்றுத் தலைமை தொடர்பில் பேசியவர்களால் இன்றுவரை முன்நோக்கி பணிக்க முடியவில்லை. ஒவ்வொருவரும் மற்றவர்களுடன் ஏன் இணைந்து பயணிக்க முடியாது என்பதற்கான பட்டியலை போடுகின்றனர். ஆனால் இணைந்து பயணிப்பதற்கான வாய்ப்புக்கள் தொடர்பில் எவருமே சிந்திக்கவில்லை. இதன் காரணமாகவே, இன்றுவரை மாற்றுத் தலைமை என்னும் இலக்கில் முன்நோக்கி பயணிக்க முடியாமல் இருக்கிறது. யுத்தம் நிறைவுற்று பத்துவருடங்களுக்கு பின்னரும் கூட தங்களுக்குள் உடன்பாடு காணக் கூடியவர்களால் இணைந்து பயணிக்க முடியவில்லை. முற்றிலுமான உடன்பாடு என்பது எப்போதுமே சாத்தியமான ஒன்றல்ல ஆனால் பெரும்பாலான விடயங்களில் உடன்பாடு காணக் கூடியவர்கள் ஒரு ஜக்கிய முன்னணியாக இயங்க முடியும். ஆனால் அதற்கு சில விட்டுக் கொடுப்புக்கள் கட்டாயமானது. தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்னும் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பவர்களால் எப்போதுமே கூட்டாக பயணிக்க முடியாது. மேலும் அவர்கள் சமுதாய நோக்கில் மோசமான அரசியல் தரப்பினராவர். தமிழ்ச் சூழலில் மேற்கொள்ளப்பட்ட மாற்றுத் தலைமைக்கான முயற்சிகள் புஸ்வானமானதன் பின்னணி இதுதான்.
இது ஒரு நிலைமாறுகாலம். பத்து வருடங்கள் என்பது பெரியதொரு காலப்பகுதியல்ல என்றவாறு கதைகள் சொல்லிக் கொண்டிருப்பதில் பயனில்லை. பத்து வருடங்கள் என்பது மனித வாழ்வில் பெரியதொரு காலம்தான். முப்பது வயதில் இருந்த ஒருவர் நாற்பது வயதில் இருப்பார். நாற்பதில் இருப்பவர் ஜம்பதில் இருப்பார். ஒருவரை ஒரு தசாப்தம் நோக்கி தூக்கியெறியும் காலம் எவ்வாறு சாதாரணமானதொரு காலமாக இருக்க முடியும்? 2009இற்கு பின்னரான ஒரு தசாப்த காலப்பகுதி என்பது அரசியல் ரீதியில் எந்தவொரு முன்னேற்றத்தையும் காண்பிக்காமல் கழிந்திருக்கிறது என்றால் அதனை சாதாரணமான ஒன்றாக எடுக்க முடியுமா? இதனை வெறுமனே கூட்டமைப்பின் தவறுகள் என்று கூறி கடந்து செல்ல முடியாது. கூட்டமைப்பின் தவறு மட்டும் இந்த பத்து வருடங்களை வீணாக்கவில்லை மாறாக கூட்டமைப்பை தவறு என்று நீரூபிக்க முடியாதவர்களும் இணைந்துதான் இந்த பத்துவருடங்களை வீணாக்கியிருக்கின்றனர்.
இத்தனை அனுபவங்களுக்கு பின்னரும் கூட, மக்களின் நலனை முன்னிறுத்தி ஒன்றுபட்டு செயற்பட முடியாமல் இருக்கிறதென்றால், இவர்கள் முன்னிலைப்படுத்தும் கட்சிகளின் பயன் என்ன? ஒரு அரசியல் கட்சி என்பது அந்தக் கட்சி பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகத்திற்கான அரசியல் ஸ்தாபனமாகும். அந்த ஸ்தாபனத்தால் அந்த மக்களுக்கு எந்தவொரு பயனும் இல்லையென்றால் அவ்வாறான ஸ்தாபனங்களை தொடர்ந்தும் பாதுகாப்பதன் பயன் என்ன?
தமிழர் நலனை பேணிப்பாதுகாப்பது தொடர்பில் மாறுபட்ட நிலைப்பாடுகள் இருப்பது பிரச்சினைக்குரிய ஒன்றல்ல ஆனால் அந்த நிலைப்பாடுகளை ஒரு தீண்டாமை வாதமாக அணுக முற்படுவதுதான் தவறானது. தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி சம்பந்தன், சுரேஸ், விக்கினேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், டக்களஸ் தேவானந்தா மற்றும் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் அனைவரும் ஓரணியில் நிற்கும் ஒரு அரசியல் காட்சியை நம்மால் கற்பனை செய்ய முடியுமா? தமிழ்த் தேசிய அரசியலானது அரசியல் தீண்டாமை வாதத்திற்குள் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறது.
இதன் காரணமாகவே இன்றுவரை ஒரு மாற்றுத் தலைமை சாத்தியப்படவில்லை. அரசியலில் தனித்தும் இணைந்தும் செயலாற்றும் பொறிமுறை ஒன்றை தமிழர் தரப்புக்கள் கண்டடையவில்லை என்றால், தமிழ் அரசியல் கட்சிகளால் தமிழ் மக்கள் எப்போதுமே நன்மையடையப் போவதில்லை. மாறாக, தொடர்ந்தும் சமுதாயம் மோசமான பின்னடைவுகளையே சந்திக்கும். இறுதியில் தமிழர்கள் தங்களின் அரசியல் அடையாளங்களை வெறுமனே மாவட்டம், பிரதேசம் என்றவாறு சுருக்கி;க்கொள்ள நேரிடும். கிட்டத்தட்ட இப்போதே அந்த நிலைமை ஆங்காங்கே தெரிகிறது. அனைத்து தமிழ் மக்களையும் ஒன்றிணைக்கும் அரசியலை முன்னெடுக்க முடியாமல் போகும் போது, மக்கள் தங்களுக்குள் சிதறிப்போவர். அந்த இடைவெளியை தெற்கின் சிங்கள கட்சிகள் பயன்படுத்திக்கொள்ளும். இது தொடர்பில் அக்கறை உள்ள ஒவ்வொருவரும் தனியாகவும் கூட்டாகவும் செயலாற்ற வேண்டும். எங்கு நாம் தொடர்ந்தும் சறுக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை கண்டடைந்து, அதிலிருந்து மீண்டெழுவதற்கான பொறிமுறைகளை கண்டடைய வேண்டும். இதற்கான பொறுப்பு தமிழ் அரசியல் பரப்பில் இயங்கும் அனைவருக்கும் உரியது. இதில் மற்றவர்களை நோக்கி விரல் நீட்டும் அரசியல் பயனற்றது.
நன்றி - சமகளம்