Paristamil Navigation Paristamil advert login

அவசரகாலச் சட்டமும் கரடிப் பொம்மையும்..!!

அவசரகாலச் சட்டமும் கரடிப் பொம்மையும்..!!

2 ஆனி 2019 ஞாயிறு 13:28 | பார்வைகள் : 2423


கழுத்துறை சிறீ தேவானந்தா வித்தியாலயத்தில் பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளைச் சோதிப்பதற்கு ஒரு புதிய உத்தி கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்படுகிறது. அவ் ஒளிப்படங்களில் கரடியாக வேடமணிந்து ஒரு நபர் குழந்தைகளின் புத்தகப் பைகளை சோதிக்கிறார் இவ்வாறு சோதிப்பதன் மூலம் பாடசாலை வாசலில் தமது புத்தகப் பைகள் சோதிக்கப்படுவதை குறித்து பிள்ளைகளுக்கு எதிர்மறையான ஒரு மனப்பதிவு வரக்கூடாது என்று சிந்திப்பதாக கூறப்படுகிறது.
 
பாடசாலை வாசல்களில் துப்பாக்கிகளோடு படைத்தரப்பு நிற்பதும் பொலிசார் நிற்பதும் அவர்கள் முன்னிலையில் ஆசிரியர்கள் பிள்ளைகளின் புத்தகப் பைகளை சோதிப்பதும் பிள்ளைகள் கொண்டு வரும் சாப்பாட்டு பொதிகளை சோதிப்பதும் நாட்டில் இப்பொழுது வழமையாகிவிட்டது. கிளிநொச்சியில் படைத்தரப்பு உணவு பொருட்களில் கை விட்டு அளைந்து சோதித்ததாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. இன்னொரு சந்தர்ப்பத்தில் குண்டுத் தோசையை கண்டு அதை பிரித்து காட்டக் கேட்டதாக ஒரு செய்தி வெளிவந்தது. இவ்வாறாக பாடசாலை வாசலிலேயே மாணவர்களை சோதிப்பது கல்வி உளவியலைப் பொறுத்தவரை எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும. அது மட்டுமல்ல பாடசாலைகள் தொடங்கும் முடியும் நேரங்களில் பவள் கவச வாகனங்கள் வீதிகளைச் சுற்றி வருவதும் அந்த கவச வாகனங்களில் சில படை வீரர்கள் முகத்தை கருப்புத் துணியால் மூடிக்கொண்டு காட்சியளிப்பதும் யாழ்ப்பாணத்தில் ஒரு வழமையான காட்சியாக மாறி இருக்கிறது. யாரை பயமுறுத்துவதற்காக இப்படி முகத்தை கருப்புத் துணியால் மூடிக்கொண்டு ரோந்து வருகிறார்கள்? இது பள்ளிக்குப் போகும் பிள்ளைகளின் மனதில் எப்படிப்பட்ட நினைவுகளை மீளக் கொண்டு வரும் ?
 
சிறீ தேவானந்தா கல்லூரியின் முன்னுதாரணம் எனப்படுவது பள்ளிகளை பொறுத்தவரை ஒரு நல்ல உத்தியாக தெரியலாம். ஆனால் அதற்குள் நாட்டின் பயங்கரமான ஓர் அரசியல் இயலாமை ஒளிந்து இருக்கிறது. அதாவது சோதனைகள் தொடரும் என்பதே அது. ஆனால் சோதனைகளை வெளிப்படையாக செய்யாமல் அதை விளையாட்டாக செய்ய வேண்டி இருக்கும் என்பதே அதில் மறைந்திருக்கும் செய்தியாகும். அதாவது போர் இன்னமும் முடியவில்லை என்பதே அந்த செய்தியாகும்.
 
மூன்று தசாப்தங்களுக்கும் மேலான ஈழப்போரில் பாடசாலைகள் தாக்கப்பட்டதுண்டு. பாடசாலைகளில் புகலிடம் கோரிய மக்கள் தாக்கப்பட்டதுண்டு. கைது செய்யப்பட்டதுண்டு. காணாமல் ஆக்கப்பட்டதுமுண்டு. ஆனால் பாடசாலை வாசல்களில் படைத்தரப்பு காவலுக்கு நிற்கும் காட்சி வடக்குக் கிழக்கில் இருந்ததில்லை. பாடசாலை வாசலில் மாணவர்களைச் சோதிக்கும் நிலமை என்றைக்கும் இருந்ததில்லை. ஆனால் கடந்த சில வாரங்களாக பாடசாலை வாசல்களில் படைத்தரப்பு காவல் செய்கின்றது. மனித உரிமைச் செயற்பாட்டாளரான ருக்கி பெர்ணான்டோ கேட்டார் “ஆரம்பப் பிரிவு மட்டும் உள்ள பாடசாலை மாணவர்களையும் சோதிக்கின்றார்களா?” என்று. “உயர்தரப் பிரிவு மாணவர்கள் எதையாவது கொண்டு வருவார்கள் என்று சோதிப்பது வேறு. ஆரம்பப் பிரிவு மாணவர்களைச் சோதிப்பது வேறு” என்று அவர் கூறினார். ஆனால் குழந்தைகளை மடியில் வைத்துக் கொண்டு தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு தயாரான ஒரு ஜிதாத் அமைப்பை முறியடிக்க ஆரம்பப் பிரிவு மாணவர்களையும் சோதிக்க வேண்டியிருக்கிறது என்று யாராவது சொல்லக் கூடும்.
 
எவர் எதையும் சொல்லலாம. ஆனால் யுத்தத்தில் நேரடியாகச் சம்பந்தப்படாத தமிழ்ச் சமூகம் இதில் சிக்கிக்கொண்டு விட்டது. தென்னிலங்கையில் இருந்து வடக்கிற்கு வரும் பயணிகள் சோதிக்கப்படுவது வவுனியாவைக் கடந்த பின்னர்தான். அது போலவே வடக்கிலிருந்து கிழக்கிற்கும், யாழ்ப்பாணத்திலிருந்து மன்னாருக்கும், வவுனியாவிலிருந்து மன்னருக்கும் செல்லும் வழிகளில் பயணிகள் சோதனைச் சாவடிகளைக் கடக்க வேண்டும். சிலவற்றில் இறங்கி வரிசையாக நடக்கவும் வேண்டும். இச்சோதனைச் சாவடிகளைத் தமிழ் மக்கள் அச்சமின்றிக் கடந்து விடுகிறார்கள் என்பது வேறு விடயம். தாங்கள் இந்த யுத்தத்தில் சம்பந்தப்படவில்லை என்று நம்புவதால் தமிழ் மக்கள் சோதனைகளையிட்டு பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அதே வேளை கைகளை உயரத் தூக்கியபடி நின்று தம்மைச் சோதிக்கக்கொடுப்பது என்பது தமிழ் மக்களின் வாழ்க்கை முறைக்குப் புதிதுமல்ல. பத்து ஆண்டுகளுக்கு முந்திய அனுபவங்கள் அவர்களுடைய மரபணுக்களில் பதிந்துவிடுமளவுக்கு பயங்கரமானவை. சோதனையும் சுற்றிவளைப்பும் தமிழ் வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக மாறியிருந்த ஒரு காலகட்டம் அது. எனவே சோதனை நடவடிக்கைகளை அதிகம் எதிர்ப்பின்றியும் அச்சமின்றியும் அவர்கள் கடந்து போகிறார்கள்.
 
யாழ்ப்பாணத்தில் வேலைசெய்யும் மருத்துவத்துறையைச் சேர்ந்த ஒரு உயர்நிலை அதிகாரி பின்வருமாறு கூறினார் “சோதனை நடவடிக்கைகளின் பின் இரவுகளில் ஊர்களில் உள்ளுர்ச் சண்டித்தனங்கள் பெருமளவு குறைந்து விட்டன. இரவுகளில் ஆஸ்பத்திரி அவசர சிகிச்சைப் பிரிவுகள், விபத்துப் பிரிவுகளுக்கு வரும் காயக்காரர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது.” என்று.
 
யாழ்ப்பாணத்திலுள்ள சில பாடசாலைகளின் அதிபர்கள் பகிடியாகக் கூறுகிறார்கள்…….முன்னைய காலங்களில் பாடசாலை மதில்களால் ஏறிப் பாய்ந்து பாடசாலையை விட்டு வெளியேறுகின்ற உள்வருகின்ற மாணவர்களின் பிரச்சினை பெரிய வெள்ளிக் குண்டுவெடிப்புகளுக்கு பின் இல்லாமல் போய்விட்டதாம். அதாவது மதில் ஏறிப் பாயும் மாணவர்கள் இப்பொழுது அவ்வாறு செய்வதில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள்.
 
இது படையினரின் பிரசன்னத்தை நியாயப்படுத்த உதவுமா? பாடசாலைகளின் வாசலில் துப்பாக்கிகளுடன் விறைப்பாக நிற்கும் படையினரின் பிரசன்னத்தை நியாயப்படுத்த உதவுமா? பாடசாலை தொடங்கும் அல்லது விடும் நேரங்களில் படையினர் பவள் கவச வாகனங்கிளில் சுற்றித் திரிவதையும் அந்தக் கவச வாகனங்களில் சில படை வீரர்கள் முகத்தை கருப்புத் துணியால் மூடிக்கொண்டு காட்சியளிப்பப்பதையும் இது நியாயப்படுத்த உதவுமா? இது ஒரு சிவில் சமூகமா? அல்லது ராணுவச் சமூகமா?
 
ஒரு நண்பர் கூறியதுபோல ரோலர் மூலம் மீன் பிடிக்கும் பொழுது அந்தப் வலையில் கடலில் வாழும் எல்லா உயிர்களும் அகப்படும். அதைப்போலவே இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் சோதனை சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதும் பிரச்சினைக்குரிய எல்லா தரப்புப்புகளையும் அள்ளிக் கொண்டு போகும் ஒரு உத்தி கடைப்பிடிக்கப்படுகிறது. இது ரோலர் வலை போட்டு மீன் பிடிப்பதற்கு ஒப்பானது. ஜிகாத்துக்குத்துக்கு எதிரானது என்று சொல்லிக்கொண்டு தமிழ் தரப்பில் இருக்கக்கூடிய அரசியல் செயற்பாட்டாளர்களையும் மாணவர்களையும் அச்சுறுத்தும் விதத்தில் முறியடிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
 
சர்ச்சைக்குரிய ஒரு முஸ்லிம் மருத்துவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சாரமும் இத்தகையதே முஸ்லிம் மருத்துவர் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் மருத்துவரீதியாக விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட வேண்டியவை. ஆனால் இனவாதத்தை கக்கும் ஊடகங்கள் இது தொடர்பாக வதந்திகளை பரப்பி வருகின்றன. முகநூல் போன்ற சமூக வலைத்தளங்கள் சமூகங்களுக்கிடையே முரண்பாடுகளை உற்பத்தி செய்கின்றன என்று கூறி அவற்றை அரசாங்கம் சில கிழமைகளுக்கு முன்பு தடை செய்தது. ஆனால் பிரதான நீரோட்ட ஊடகங்கள் சில குறிப்பாகச் சிங்கள ஊடகங்கள் முஸ்லிம் மக்களுக்கு எதிராக விஷம் கக்கும் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றன.
 
ஒரு சிங்கள ஆசிரியர் தனது மாணவர்களிடம் அட்லஸ் கொப்பிகளை கொண்டுவர வேண்டாம் என்று அறிவுறுத்தி இருப்பதாக டுவிட்டரில் ஒருவர் குறிப்பிட்டிருக்கிறார். ஏனெனில் அட்லஸ் அப்பியாசப் புத்தகங்களை தயாரிப்பது ஒரு முஸ்லிம் நிறுவனம் என்று கருதியதே காரணமாகும்.
 
அதுபோலவே பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட ஞானசார தேரர் இலங்கைத் தீவின் முன்னணித் தனியார் கல்வி நிறுவனம் ஆகிய பிகாஸ் மீது நேரடியாக குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார்.
 
ஈஸ்டர் குண்டு வெடிப்புக்குப் பின் முஸ்லிம் தலைவர்களின் மீதும் முஸ்லிம் சமூகத்தின் மீதும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை தொகுத்துப் பார்த்தால் அவற்றில் பல அறிவு பூர்வமற்றவைகளாகவும் புத்திபூர்வமற்றவைகளாகவும் தோன்றும். அவை அதிகம் கற்பனைகளாகவும் ஆதாரமற்றவைகளாகவும் தோன்றும். அவை முஸ்லிம்களை பெருமளவுக்குத் தற்காப்பு நிலைக்குத் தள்ளி விட்டுள்ளன.தங்களுடைய பள்ளிவாசல்களை தாங்களே இடிக்கும் ஒரு நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
 
இவ்வாறு ஆதாரமற்ற கற்பனை குற்றச்சாட்டுகளை ஒரு சமூகத்தின் மீது சுமத்தும் ஓர் அரசியல் சூழல் எனப்படுவது முஸ்லிம்களுக்கு மட்டும் எதிரானது அல்ல. அது தமிழ்ச் சமூகத்துக்கும் எதிரானதுதான். அது மட்டுமல்ல அது மனித உரிமைகளை பாதுகாக்க விளையும் எல்லாருக்கும் எதிரானது. இலங்கைத்தீவின் மிஞ்சியிருக்கும் சிறிய பலவீனமான ஜனநாயக வெளிக்கும் எதிரானது.
 
இது ஐ.நா வில் 2015 இல் இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்ட பொறுப்புக்களுக்கு மாறானது. அதாவது நிலைமாறு கால நீதிக்கு எதிரானது. நிலைமாறு கால நீதியின்படி படைமய நீக்கம் செய்யப்பட வேண்டும். ஆனால் ஈஸ்டர் தாக்குதலோடு படைமயமாதல் நிகழ்கிறது. தமிழ்ப்பகுதிகள் தமது சிவில்த் தனத்தை மெல்ல இழக்கத் தொடங்கி விட்டன. அதாவது நிலைமாறு கால நீதியும் அவசரகாலச் சட்டமும் மோதும் ஒரு களம் இது.
 
அது மட்டுமல்ல நிலைமாறுகால நீதி எனப்படுவது அதன் முழுமையான பொருளில் அமுல்படுத்தப்படவில்லை. 2015 இலிருந்து அது ஒரு கண்துடைப்பாகத்தான் முன்னெடுக்கப்பட்டு வந்தது. ஐ.நா வுக்கு பொய்க்குச் செய்து காட்டப்படும் வீட்டு வேலைகளாகத்தான் நிலைமாறுகால நீதி இருந்தது. படையினைர் தொடர்ந்தும் தமிழ்ப்பகுதிகளில் செறிவாக நிலைகொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களுடைய பிரசன்னம் திரைமறைவில் இருந்தது. உயர் பாதுகாப்பு வலையங்கள் பெரியளவில் அகற்றப்படவில்லை நிலைமாறுகால நிதியெனப்படுவது. படைத் தரப்பைப் பொறுத்தவரை திரைக்குப் பின் மறைவிலிருக்கும் ஒரு செய்முறைதான். இடையில் வாள்வெட்டுக் குழுக்களின் அட்டகாசத்தோடு சோதனை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. ஆனால் அச்சோதனைகளை மேற்கொண்டது பொலிஸ்தான். சந்திக்குச் சந்தி நின்று பொலிஸ் வாகன ஓட்டிகளை மறித்தது. ஆனால் வாள்வெட்டுக்காரர்கள் உள்ளொழுங்கைகளுக்க ஊடாக வந்து அட்டகாசம் செய்து விட்டுப் போனார்கள். இதனால் ஒரு விமர்சனம் எழுந்தது. பொலிசாரின் பிரசன்னத்தை அதிகரிப்பதற்க்காகத்தான் வாள்வெட்டுக் குழுக்கள் ஊக்குவிக்கப்படுகின்றன என்பதே அது. இப்படிப்பட்டதோர் சூழலில்தான் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்கள் நடந்தன. அதைச் சாட்டாக வைத்து பொலிசுடன் ராணுவமும் சந்திக்கு வந்து விட்டது.
 
இப்பொழுது தமிழ்ப்பகுதிகள் ஏறக்குறைய பழைய யுத்தச் சூழலுக்குள் வந்துவிட்டதாக ஒரு தோற்றம் ஏற்பட்டுவிட்டது. ஆனால் இங்கு ஆயுத மோதல்கள் எதுவும் நடக்கவில்லை. படைத்தரப்புக்கு அந்சுறுத்தலான எதுவும் இல்லை. எனினும் ஒரு யுத்த காலத்தைப் போல படைப்பிரசன்னம் காணப்படுகின்றது. தமிழ் மக்களைப் பாதுகாக்கத்தான் இவையெல்லாம் என்று விளக்கமும் கூறப்படுகிறது. ஆனால் தமிழ் பகுதிகளில் சிவில் சமூகச்சூழல் ஆபத்துக்குள்ளாகியிருக்கிறது.
 
ஒரு சோதனை அல்லது சுற்றிவளைப்பின் போது அப்பகுதி கிராம அலுவலரும் வர வேண்டும். ஆனால் இப்பொழுது நடக்கும் எல்லாச் சோதனை மற்றும் சுற்றிவளைப்புக்களின் போது கிராம அலுவலரும் அழைத்து வரப்படுவதில்லை. ஒரு கிராம அலுவலர் கூறினார் தம்முடன் எல்லாப் படைத்தரப்பும் நேரடியாக தொடர்பு கொண்டு தகவல்களைத் திரட்டி வருவதாக.ஆனால் முறைப்படி அவர்கள் பிரதேச செயலகத்துக்கூடாகத்தான் அதைச் செய்ய வேண்டும் ஆனால் நிலைமை அப்படியல்ல
 
அதுமட்டுமல்ல இப்பொழுது தமிழப் பகுதிகளில் உள்ளுராட்சி மன்றங்கள் இயங்குகின்றன. இவற்றில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் உண்டு. சோதனை மற்றும் சுற்றி வளைப்பு நடவடிக்கைகளில் மேற்படி மக்கள் பிரதிநிதிகளை ஏன் அழைத்து வருவதில்லை? அப்படியென்றால் மக்கள் பிரதிநிதிதித்துவத்துக்கு என்ன பொருள்? இது ஜனநாயகக் கட்டமைப்பின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது. கடந்த பத்தாண்டுகால வளர்ச்சி என்று அரசாங்கமும், ஐ.நா வும் மேற்கு நாடுகளும் தமிழ் மக்களுக்கு எடுத்துக் காட்டிய அனைத்தும் தலைகீழாக்கப்பட்டு விட்டன. ஒரு ஜனநாயகச் சமூகத்துக்குரிய அடிப்படைப் பண்புகள் எவற்றையும் பொருட்படுத்தத் தேவையில்லாத ஒரு சூழலை அவசரகாலச் சட்டம் ஏற்படுத்தியிருக்கிறது.
 
அதே சமயம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பயன்படுத்தி யாரையும் எந்தக் குற்றச்சாட்டிலும் சிறைப் பிடிக்கலாம், தடுத்து வைக்கலாம் என்று முன்பு காணப்பட்ட ஒரு நிலை மறுபடியும் தோன்றி விட்டது. ஆனால் நிலைமாறுகால நீதியின் கீழ் இப்போதுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அகற்ற வேண்டும்.
 
இப்படிப்பார்த்தால் ஈஸ்டர் குண்டு வெடிப்புக்களின் பின்னணியில் நிலைமாறுகால நீதி என்ற மாயத்தோற்றம் முற்றாகக் கிழிந்து போய்விட்டது. ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் என்பது நாட்டின் அரசியற் தலைமை இரண்டாகப் பிளவுபட்டிருந்ததன் விளைவுதான். அவ்வாறு இரண்டாகப் பிளவுபட்டதற்குக் காரணம் கடந்த ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட ஆட்சிக்குழப்பம்தான். அவ்வாட்சிக்குழப்பத்தோடு அரசாங்கத்துக்கு மக்கள் வழங்கிய ஆணை காலாவதியாகிவிட்டது. எனவே அவ்வரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலைமாறுகால நீதியும் காலாவாதியாகிவிட்டது. இப்பொழுது ஈஸ்டர் குண்டு வெடிப்பு காலாவதியான நிலைமாறுகால நீதியை குண்டு வெடிப்பின் சிதைவுகளோடு சேர்ந்து குப்பை மேட்டுக்குள் தூக்கிப் போட்டு விட்டது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்