Paristamil Navigation Paristamil advert login

புலம்பெயர் சமூகமும் பத்தாண்டுகளும்..!!

புலம்பெயர் சமூகமும் பத்தாண்டுகளும்..!!

26 வைகாசி 2019 ஞாயிறு 14:08 | பார்வைகள் : 2977


கடந்த பத்தாண்டுகளில் தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்திருக்கின்றன. கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் ஊடான அழுத்தங்களை கையாளுதல், மேற்குல ராஜதந்திரிகளை சந்தித்ததல் என்றவாறான பல செயற்பாடுகளை புலம்பெயர் அமைப்புக்கள் மேற்கொண்டிருக்கின்றன. தாயகத்தின் மீதான விட்டுவிலக முடியாத பற்றின் விளைவாகவே இவ்வாறான செயற்பாடுகளை புலம்பெயர் அமைப்புக்கள் ஓய்வின்றி முன்னெடுத்திருக்கின்றன. அந்த வகையில் புலம்பெயர் அமப்புக்களின் தாயக பற்று தொடர்பில் குறைகண்டுபிடிக்க ஒன்றுமில்லை. 
 
ஆனால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளின் விளைவுகளை எண்ணிப் பார்க்க வேண்டிய, அவற்றை சுயவிமர்சனக் கண்கொண்டு பார்க்க வேண்டிய கடப்பாடு புலம்பெயர் சமூகத்திற்குண்டு. அவ்வாறில்லாது போனால் புதிய சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றலை தமிழர் சமூகம் பெற முடியாது போகும். எனவே தமிழ் தேசிய அரசியலை பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் புலம்பெயர் சமூக அரசியல் அமைப்புக்கள் அனைத்தும் தங்களது பத்தாண்டுகால செயற்பாடுகளை சுயவிமர்சனத்துடன் அணுக முற்பட வேண்டும். தங்களது தாயகம் நோக்கிய செயற்பாடுகளின் விளைவுகள் என்ன என்பதை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
 
புலம்பெயர் சமூகத்தின் கடந்த பத்தாண்டுகால செயற்பாடுகளை எடுத்து நோக்கினால், அவற்றை இரண்டு விதமாக நோக்கலாம். ஒன்று, தாயகம் நோக்கிய செயற்பாடுகள். இரண்டு, புலம்பெயர் நாடுகளை மையப்படுத்திய செயற்பாடுபாடுகள் அல்லது நாடு கடந்த செயற்பாடுகள். தாயகத்தை நோக்கிய செயற்பாடுகளை உற்றுநோக்கினால் அவற்றை, மனிதாபிமான பணிகள் மற்றும் அரசியல் பணிகள் என்னும் இரண்டு பிரிவுகளில் நோக்கலாம். மனிதாபிமான பணிகளை பொறுத்தவரையில் தனித்தும் அமைப்புக்களாகவும், அங்கும் இங்குமாக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால் இவைகள் தொடர்பில் ஒரு தெளிவான பதிவுகள் இல்லை. 
 
இதனால் நன்மையடைந்தவர்கள் தொடர்பில் தெளிவான விபரங்களும் இல்லை ஏனெனில் இதில் அனேகமானவை தனிப்பட்ட ரீதியில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஒரு நிறுவனமயப்படுத்தப்பட்ட நிகழ்சிநிரலின் கீழ் இவைகள் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் பல்வேறு பணிகள் இடம்பெற்றிருக்கின்றன என்பது உண்மை. ஒரு சில புலம் பெயர் அமைப்புக்களின் திட்டங்களை மதிப்பீடு செய்த அனுபவமும் எனக்குண்டு. ஆனால் யுத்தத்தால் உருக்குலைந்துபோன தேசமொன்றை மீளக் கட்டியெழுப்புதல் என்னும் அடிப்படையில் சிந்தித்தால் புலம்பெயர் சமூகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் குறிப்பிட்டுச் சொல்ல ஒன்றுமில்லை.
 
பொருளாதார அபிவிருத்தி என்னும் இலக்கில் புலம்பெயர் சமூகத்தின் செயற்பாடுகள் எவையும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய நிலையில் இல்லை. பொருளாதார அபிவிருத்திக்கான பாரிய முதலீட்டுத் திட்டங்கள் எவற்றையும் புலம்பெயர் சமூகம் கடந்த பத்தாண்டுகளில் மேற்கொள்ளவில்லை. இது தொடர்பில் புலம்பெயர் சமூகத்தில் ஒரு அபிப்பிராயம் உண்டு. 2015இல் நோர்வேயிற்கு சென்றிருந்த போது அங்குள்ள செயற்பாட்டாளர்கள் இந்த அபிப்பிராயத்தை வெளிப்படுத்தினர். சிறிலங்காவில் தமிழ் மக்கள் அதிகாரமற்றவர்களாக இருக்கின்ற போது, அங்கு எந்த நம்பிக்கையின் அடிபபடையில் பொருளாதார முதலீடுகளை மேற்கொள்வது என்பது அவர்களின் கேள்வியாக இருந்தது. இந்த வாதத்தில் நியாயமுண்டு. சிறிலங்காவின் ஆட்சியாளர்கள் மாறுகின்ற போது, தங்களது முதலீடுகளுக்கு நெருக்கடிகள் ஏற்படும் என்று சிந்திப்பதில் தவறில்லை. 
 
அவ்வாறான அச்சமிருந்தால் புலம்பெயர் முதலீட்டாளர்கள் தாங்கள் வாழும் நாடுகளைச் சேர்ந்த மேற்கத்தையவர்களையையும் இணைக்கும் வகையில் கூட்டு முதலீடுகளை மேற்கொள்ளலாம் என்பது எனது பதிலாக இருந்தது. உதாரணமாக, ஒரு நோர்வேஜியர் இலங்கையில் முதலீடுகளை செய்கின்ற போது அந்த முதலீட்டுக்கு ஒரு சர்வதேச பாதுகாப்புண்டு. ஆனாலும் அவ்வாறான எந்தவொரு முயற்சியிலும் புலம்பெயர் சமூகம் இதுவரை ஈடுபடவில்லை. இது தொடர்பில் கனடாவைச் சேர்ந்த ஒரு சிலரோடு போசுகின்ற போது, தமிழ் கனேடியர்களுக்கு தாயகத்தில் முதலீடுகளை மேற்கொள்வதில் எந்தவொரு ஆர்வமும் இல்லை என்னும் பதிலே கிடைத்தது. அவர்களில் அனேகர் தங்களை கனேடியர்களாகவே உணர்கின்றனர் எனவே அவர்களிடமிருந்து நீங்கள் முதலீடுகளை எதிர்பார்ப்பது சாத்தியமற்ற ஒன்று என்றே அங்குள்ளவர்கள் கூறுகின்றனர். இந்த பின்புலத்தில் நோக்கினால் தமிழ் மக்களின் பொருளாதார அபிவிருத்தி நோக்கிய பயணத்தில் புலம்பெயர் சமூகத்தின் செயற்பாடுகள் இதுவரை திருப்தியளிக்கவில்லை.
 
அடுத்து அரசியல் ரீதியான விடயங்களை பார்ப்போம். கடந்த பத்தாண்டுகளில் தாயகத்தில் இயங்கும் அரசியல் கட்சிகளுக்கு மற்றும் ஒரு சில அமைப்புக்களுக்கு நிதியளிப்பதன் ஊடாக, தாயக அரசியல் பரப்பில் புலம்பெயர் சமூகம் தாக்கம் செலுத்த முற்பட்டது. இதில் ஒரு சிறுபகுதியினர் குறிப்பாக புலம்பெயர் சமூகத்தில் இயங்கிவரும் மொடரேட் டயஸ்போறா பிரிவினர் உதாரணமாக கனடிய தமிழ் காங்கிரஸ் போன்ற அமைப்புக்கள்; தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு பல்வேறு வழிகளிலும் ஆதரவாக செயற்பட்டன. இதன் மூலம் தாயக அரசியலில் தலையீடு செய்தன. இரண்டாவது தரப்பினர் ஒப்பீட்டடிப்படையில் டயஸ்போறாவின் பெரும் பகுதியை பிரதிநிதித்துவம் செய்கின்றனர். அவ்வாறான அமைப்புக்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிக்கு பல உதவிகளை வழங்கியுள்ளனர். அவர்கள் நல்ல நோக்கத்திற்காவே இந்த உதவிகளை வழங்கினர். ஆனால் அந்த நோக்கம் நிறைவேறியதா?
 
கூட்டமைப்பு தவறான பாதையில் செல்கின்றது எனவே அதன் மீது அழுத்தமொன்றை ஏற்படுத்த வேண்டுமாயின், கூட்டமைப்பிற்கு மாற்றான ஒரு தரப்பை பலப்படுத்த வேண்டும் என்னும் அடிப்படையில்தான் கஜேந்திரகுமாரை புலம்பெயர் அமைப்புக்கள் தெரிவுசெய்தன. ஆனால் அந்த இலக்கில் கடந்த பத்தாண்டுகளில் குறிப்பிடத்தகு முன்னேற்றம் எதனையும் காண்பிக்க முடியவில்லை. இப்போதும் தவறான பாதையில் செல்லும் கூட்டமைப்புத்தான் தமிழ் மக்களுக்கு முன்னால் ஒரு தெரிவாக இருக்கிறது. அதே போன்று அண்மைக்காலமாக புலம்பெயர் அமைப்புக்கள் பலவும் ஒரு மாற்றுத் தலைமைக்கான எதிர்பார்ப்பை வெளிப்படுத்திவருகின்ற போதிலும் கூட, அதில் எந்தவொரு முன்னேற்றமும் இதுவரை ஏற்படவில்லை. ஆகக் குறைந்தது தங்களின் நிதியுதவியால் இயங்கிவரும் கட்சிகளை கூட, ஒரு மாற்று நோக்கி தள்ள முடியவில்லை. ஏனெனில் குறித்த புலம்பெயர் அமைப்புக்களின் ஆலோசனைகளை அவர்களிடமிருந்து நிதிபெற்றவர்கள் கூட பொருட்படுத்துவதில்லை.
 
இந்த பின்புலத்தில் விவாதிப்பதாயின், கூட்டமைப்பிற்கு ஆதரவாக செயற்பட்ட மொடரேட் டயஸ்போறாவின் செயற்பாடுகளும் தோல்வியடைந்துவிட்டன. அதே போன்று, கூட்டமைப்புக்கு மாற்றான தரப்பாக தங்களை அடையாளப்படுத்த முற்பட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அல்லது தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவாக செயற்பட்ட புலம்பெயர் அமைப்புக்களின் செயற்பாடுகளும் தோல்வியடைந்துவிட்டன. இந்த பின்புலத்தில் நேக்கினால் கடந்த பத்தாண்டுகளாக தாயகத்தை நோக்கி, புலம்பெயர் அமைப்புக்கள் மேற்கொண்ட அரசியல் முதலீடுகள் எவையும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய வெற்றியை அவர்களுக்குக் கொடு;க்கவில்லை. இந்தப் படிப்பினையிலிருந்து தமிழ் புலம்பெயர் சமூகம் எதனை கற்றுக்கொள்ளப் போகின்றது?
 
அடுத்ததாக, புலம்பெயர் சமூகத்தின் நாடுகடந்த செயற்பாடுகளை நோக்கினால் அவற்றின் இலக்கு ஒன்றுதான், அதாவது, சிறிலங்கா அரசாங்கத்தின் மீதான சர்வதேச அழுத்தங்களை அதிகரித்து, அதன் ஊடாக, தமிழ் மக்களுக்கான நீதியை உறுதிப்படுத்துவது. அதிலாவது குறிப்பிடத்தகு முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றனவா? மகிந்த ராஜபக்ச அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு செவிசாய்க்கவில்லை எனவே சர்வதேச சமூகத்துடன் ஒத்தோடக் கூடிய ஒரு ஆட்சியை ஏற்படுத்தினால், அதன் ஊடாக பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்னும் அடிப்படையில்தான், மொடரேட் டயஸ்போறா ஆட்சிமாற்றமொன்றுக்கு ஆதரவாக செயற்பட்டது. அதற்காக கூட்டமைப்பிற்கு பெருமளவு நிதியையும் வழங்கியது. ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின்னரும் கூட, குறிப்பிடத்தகு எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை. நிலைமைகள் மேலும் மோசமடைந்திருக்கின்றன. 
 
அந்த வகையில் மொடரேட் டயஸ்போறாவின் நாடுகடந்த செயற்பாடுகள் படு தோல்வியடைந்திருக்கின்றன என்றே கூறலாம். மறுபுறமாக மேற்கின் வீதிகளில் இனப்படுகொலை தொடர்பான கவனஈர்ப்பு போராட்டங்களை நடத்திய புலம்பெயர் அமைப்புக்களின் பெரும்பகுதியினரின் நம்பிக்கைகளும் வெற்றியளிக்கவில்லை. சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக மேற்குலக அரசுகள் திரும்பவில்லை மாறாக மேலும் இலங்கையுடனான, இராணுவ பொருளாதார ஒத்துழைப்புக்கள் விரிவுபடுத்தப்பட்டிருக்கின்றன. இந்த அடிப்படையில் நோக்கினால், மொடரேட் டயஸ்போறாவிற்கு எதிரான நிலைப்பாட்டில் இயங்கிய புலம்பெயர் அமைப்புக்களின் நாடுகடந்த செயற்பாடுகளும் வெற்றியளிக்கவில்லை. இதிலிருந்து எவ்வாறான படிப்பினைகளை புலம்பெயர் சமூகம் பெறப்போகிறது?
 
இவை அனைத்திலிருந்தும் புலம்பெயர் சமூகம் பாடங்களை கற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும். தாயகத்தை நோக்கிய அரசியல் முதலீடுகள் தோல்வியடைந்திருக்கின்ற சூழலில், மீண்டும் தோல்வியடைந்த அரசியல் கட்சிகள் மீது முதலீடு செய்வதில் என்ன பயன் என்று சிந்திக்க வேண்டும். அதற்கு மாற்றாக எவ்வாறான அமைப்புக்களை தாயகத்தில் பலப்படுத்தலாம் என்று சிந்திக்க வேண்டும். சுயாதீன சிந்தனைக் கூடங்களையும் ( Think Tanks ) அரசியல் சிவில் சமூக அமைப்புக்களையும் (Political Civil Society) பலப்படுத்த வேண்டும். அவ்வாறான அமைப்புகளுக்கு நிதியுதவிகளை வழங்க வேண்டும். இனிவரப் போகும் பத்துவருடங்களுக்கு இவ்வாறான புதியதொரு பாதையில் பயணிப்பது தொடர்பில் புலம்பெயர் அமைப்புக்கள் ஓருமித்து சிந்திக்க வேண்டும். செயற்பட வேண்டும்.
 
புலம்பெயர் அமைப்புக்கள் ஒரே நேரத்தில் கொடையாளிகளாகவும் ((Donors) அமைப்புருவாக்க ஆற்றுப்படுத்துனர்களாகவும் தொழிற்பட வேண்டும். புலம்பெயர் சமூகம் கொடையாளிகளாக தொழிற்படக் கூடாது என்னும் கருத்தொன்றும் சிலரிடம் உண்டு. அது ஒருசிலரின் தனிப்பட்ட கருத்து. ஆனால் அது தவறான கருத்து. ஏனெனில் புலம்பெயர் சமூகம் தனது கொடைவழங்கல் நிலையிலிருந்து முற்றிலும் விலகுமாக இருந்தால், அந்த இடத்தை கொழும்புமைய தமிழ் தேசிய விரோத என்ஜியோக்கள் (NGOs) முற்றிலுமாககைப்பற்றிவிடும். அது தமிழ் அரசியலை தமிழ் தேசிய நீக்கம் நேக்கி தள்ளும். அவ்வாறான அமைப்புகளுக்கு சேவகம் செய்யும் சில பல தமிழர்கள் வடக்கில் உறைநிலையில் இருக்கின்றனர். அவர்களை உயிர்ப்பிப்பதற்கான முயற்சிகளும் இடம்பெறுகின்றன. புலம்பெயர் சமூகத்தை தள்ளிநி;ற்குமாறு கூறுவோரின் உள்நோக்கமும் இதுதான்.
 
 இதற்கு புலம்பெயர் சமூகம் பலியாகிவி;டக் கூடாது. புலம்பெயர் சமூகம் தனது கொடையாளி முகத்தை முற்றிலுமாக இழந்துவிடக் கூடாது. உண்மையில் புலம்பெயர் சமூகத்தின் கொடையாளி முகம்தான், இன்றும் புலம்பெயர் சமூகம் தாயகப்பரப்பில் ஒரு விடயமாக நோக்கப்படுவதற்கான காரணம். ஆனால் எதற்கு கொடையளிக்க வேண்டும் எதற்கு வழங்கக் கூடாது என்பதில் ஒரு வரையறை இருப்பது அவசியம். எனவே இன்றைய நிலையில், புலம்பெயர் சமூகம் கடந்த பத்து வருடங்களாக தாம் நடந்துவந்த பாதையை திரும்பிப்பார்க்க வேண்டும். அதிலிருந்து பாடங்களை கற்றுக்கொள்ள முற்பட வேண்டும். இ;ல்லாவிட்டால் புலம்பெயர் அமைப்புக்களின் செயற்பாடுகள் இனியும் பெரியளவில் வெற்றிப்பாதையை நோக்கி நகராது. இது தொடர்பில் விரிவான உரையாடல்கள் இடம்பெற வேண்டும். அவ்வாறான உரையாடல்களுக்கான ஒரு அழைப்புத்தான் இந்தக் கட்டுரை.
 
நன்றி - சமகளம்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்