நந்திக்கடல் - பத்தாண்டுகள்
19 வைகாசி 2019 ஞாயிறு 15:06 | பார்வைகள் : 3474
இறுதிப்போரை தோல்வி என்று நம் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக் கொள்ளக் கூடாது. அடிப்படையில் அது தோல்வியும் அல்ல.
கிரேக்கர்களின் தெர்மாப்பிளையோ அல்லது யூதர்களின் மாசாதவோ தோல்வி என்று பதியப்படவில்லை. அவை மகத்தான வெற்றிகளாகவே பதியப்பட்டுள்ளன. இதுபோன்ற நிகழ்வுகள் காலம் முழுதும் எதிரொலித்து ஒரு இனத்தை காத்து இயக்கும் வல்லமை கொண்டது.
அதனால் நந்திக்கடலின் எதிர்கால விளைவுகளை கருத்தில் கொண்டு அதை ஒரு மகத்தான வெற்றியாகவே பதியப்படவேண்டும். இந்த வெற்றி மனநிலையே நம்மை அடுத்த கட்டத்திற்கு நம்பிக்கையுடன் நகர்த்தும் உந்து சக்தியாக இருக்கும். எவ்வாறு கிரேக்கர்களும் யூதர்களும் மீண்டார்களோ, அதுபோன்ற மீட்சிக்கு வழிவகுக்கும்.
இவ்வுலகில் போரிட்டு அழிந்த இனங்களைவிட, போரிடாமல் அழிந்த இனங்கள்தான் மிக அதிகம். போர்தான் ஒரு தேசத்தின் ஆன்மாவையே உருவாக்குகிறது என்கிறார் புகழ்பெற்ற தத்துவமேதை ஏகல்[3,12].
புலிகள் எவ்வாறு பலவெற்றிகளைப் பெற்றார்கள் என்று பலகாரணிகளை அடுக்கினேன், ஆனால் தலைவர் பிரபாகரன் அவர்களை அவற்றில் உள்ளடக்கவில்லை. ஏனென்றால் இவற்றை உருவாக்கியதே அவர்தான். பிரபாகரன் போன்ற ஒரு ஆளுமை இனி எவ்வளவு காலமானாலும் கிடைக்கப்போவதில்லை. பிரபாகரன் போன்ற தலைமையை எப்படி உருவாக்குவது என்பதை எந்த அறிவியல் தத்துவத்தாலும் கூற முடியாது. இதுபோன்ற நிகழ்வுகளை Blackswan என்கிறார் நசீம் தலீபு [13].
பிரபாகரன் அவர்கள் சித்தாந்தம், பண்பாடு, சட்டம், ராணுவ தந்திரங்கள், படைத்தலைமை, நாட்டின் தலைமைப்பொறுப்பு, உலக அரசியல் எனப் பலதுறைகளை கட்டி ஆண்ட ஆளுமை. மற்ற பெரும் தலைவர்கள் ஏதாவது ஒன்றையாவது வெளியிலிருந்து கடன் வாங்கி இருப்பார்கள். உதாரணமாக லெனின், மாவோ ஆகியோர் மார்க்சிடம் இருந்து சித்தாந்தத்தை, பண்பாட்டை கடன் வாங்கினர். நான் அறிந்தவரையில் பிரபாகரனைப் போல இவ்வாறு அனைத்திலும் ஆளுமை செலுத்தியவர் இருவரே. ஒருவர் சுபார்ட்டாவின் இலைக்கர்கசு[14], இன்னொருவர் முகம்மது நபிகள்.
பிரபாகரன் போன்ற தலைமை நமக்கு இனி கிடைக்கப்போவதில்லை, ஆனால் நாம் மனம் தளரத்தேவையில்லை. நபிகளின் காலத்தில் அரேபியா பொற்காலம் காணவில்லை, மாறாக அவரின் மறைவிற்குப்பின் வந்த தலைமைகளை பொற்காலம் படைத்தனர். சுபார்ட்டவும் அவ்வாறே. நபிகள் போன்ற தலைமைகள் என்ன செய்கிறார்கள் என்றால், நாட்டிற்கு ஒரு பலமான அடித்தளத்தை அமைத்து போகவேண்டிய பாதையையும், வழிமுறைகளையும் உருவாக்கிவிடுகிறார்கள். அவர்களுக்குப் பின்வரும் தலைமைகள் அதை பின்பற்றி பெரும் வெற்றிகளைப் பெறுகிறார்கள். இவ்வாறுதான் நாம் பிரபாகரனைப் பார்க்கவேண்டும். பொதுவாக இதுபோன்ற மாபெரும் ஆளுமைகளைப் பற்றி கூறப்படுவது என்னவென்றால் “அவர்கள் சரியான நேரத்தில் தோன்றுவார்கள், சரியான நேரத்தில் மறைவார்கள்”. நாம் பெரிதாக கலங்கத் தேவையில்லை. நாம் மாபெரும் தேசம் படைக்க என்ன தேவையோ, அதற்கான மிக பலமான அடித்தளத்தை பிரபாகரன் படைத்துவிட்டார். இனி மிச்சம் இருப்பதை கட்டி முடிப்பது மட்டுமே நமது வேளை. இங்கு ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்.
பிரபாகரனின் பாதை என்பது மதங்களைப்போல குருட்டுத்தனமாக பின்பற்றுவது கிடையாது. பகுத்தறிந்த செயல்பாடுகளையும் நம்பிக்கையையும் கலந்த பாதை.
இனி நாம் என்ன செய்யவேண்டும் என்பதை சுருக்கமாகக் கூறினால் “நமது சூழலுக்கேற்ற சிக்கலான அமைப்புகளை கட்டி எழுப்பவேண்டும்”. நாம் பார்த்த அனைத்து உத்திகளும் அடிப்படையில் இதை நோக்கியதே. நாம் எதிரியைத் தோற்கடிக்க அவர்களைவிட சிக்கலான அமைப்பாக நாம் இருக்கவேண்டும். இதைப் பயன்படுத்திதான் புலிகள் வெற்றி கொண்டார்கள், நாம் பயணிக்கவேண்டிய பாதையும் இதுதான். புலிகள் இவ்வுத்திகளை இராணுவ அமைப்பிற்கு பயன்படுத்தினார்கள், நாம் அனைத்து துறைகளிலும் பயன்படுத்தவேண்டும். புலிகள் வகுத்த பாதையைக் கொண்டு நாம் இழந்ததை மட்டும் மீட்கப்போவதில்லை. தமிழ்ச்சமூகத்தின் சாதி பாகுபாடுகளை ஒழித்து, சமூகத்தை மறுசீரமைத்து, சிக்கலான அமைப்புகளை கட்டி எழுப்பி, உலகில் அணைத்து துறைகளிலும் மாபெரும் சாதனைகள் நிகழ்த்துவோம்.
அதற்கான வலிமை புலிகளின் வரலாற்றிற்கு உண்டு. அவ்வரலாறுதான் புலிகள் நமக்கு விட்டுச்சென்ற மாபெரும் கொடை.
நன்றி - சமகளம்