ஈஸ்டர் தின தாக்குதலுக்கு பின்னரான தமிழர் அரசியல்?
12 வைகாசி 2019 ஞாயிறு 16:35 | பார்வைகள் : 2419
ஒரு சில நிமிடங்களுக்குள் நிகழ்ந்து முடிந்த, ISIS இன் தற்கொலை தாக்குதல்கள், ஒரே நாளில் இலங்கையை உலகின் பார்வைக்குள் கொண்டுசென்றிருக்கிறது. இலங்கை முன்னரைவிடவும் அதிகம் உலகத்தோடு பிணைக்கப்பட்டிருக்கிறது. விடுதலைப் புலகளின் முப்பது வருடங்களுக்கும் மேலான ஆயுதப் போராட்டத்தினால் ஏற்படாத உலக அவதானம் இந்தத் ஒரு சில நிமிடத் தாக்குதல்களால் ஏற்பட்டிருக்கிறது. இது பற்றி ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் ஒருவர் – இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். எட்டுத் தற்கொலை குண்டுதாரிகளின் தாக்குதல்களை விசாரணை செய்வதற்கு ஒன்பது நாடுகளின் புலனாய்வுத் துறைகள் கொழும்பில் முகாமிட்டிருக்கின்றன. இதிலிருந்து இலங்கை எவ்வாறானதொரு சர்வதேசநிகழ்சிநிரலுக்குள் சென்றிருக்கிறது என்பது தெளிவாகிறது.
மீண்டும் இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதலொன்று தமிழர் அரசியலில் குறுக்கிட்டிருக்கிறது. மீண்டும் என்று கூறும் போது இதற்கு முன்னர் என்ன நிகழ்ந்தது என்னும் கேள்வி எழலாம். தமிழர்களில் அனேகர் – ஏன் கருத்துருவாக்கிகள் என்போரும் அதனை மறந்திருக்கலாம். 2001 செப்டம்பர் 11இல் அல்ஹய்டா என்னும் உலகளாவிய இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு அமெரிக்காவின் மீது தாக்குதலை மேற்கொண்டது. இதில் 2977 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து பயங்கரவாதத்தின் மீதான யுத்தத்தை அமெரிக்கா பிரகடணம் செய்தது. இதனைத் தொடர்ந்து அதுவரையான உலக அரசியல் ஒழுங்கு மாறியது.
இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் விடுதலைப் புலிகளுக்கும் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கும் இடையில் சமாதான உடன்பாடு கைச்சாத்தானது. ஆனால் மீண்டும் யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட போது, அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான பிரகடணத்தால் ஏற்பட்டிருந்த புதிய உலக நிலைமை, விடுதலைப் புலிகளை இல்லாமலாக்குவதற்கான வாய்ப்பை மகிந்த அரசாங்கத்திற்கு வழங்கியது. ஏனெனில் உலகளாவிய பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தமானது அரசல்லாத ஆயுத அமைப்புக்கள் அனைத்தையும் ஒரு இலக்கிற்குள் கொண்டுவந்தது. உண்மையில் அமெரிக்காவின் இலக்கு இஸ்லாமிய பின்னணி கொண்ட அமைப்புக்கள்தான் ஆனாலும் இந்தச் சூழல் தாங்கள் அழத்தொழிக்க நினைக்கும் அமைப்புக்கள் ஒவ்வொன்றையும் இலக்கு வைப்பதற்கான வாய்ப்புக்களை ஒவ்வொரு நாடுகளுக்கம் வழங்கியது. மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அதனை கெட்டியாக பிடித்துக்கொண்டது. இந்த பின்புலத்தில் பார்த்தால் அல்ஹய்டாவால் அதிக நன்மை பெற்ற நாடென்றால் அது இலங்கைதான்.
விடுதலைப் புலிகள் அரசியல் அரங்கில் இல்லாமல் போய், பத்து வருடங்களாகின்றன. அந்த பத்து வருடங்களை நினைவு கூர்வதற்கான தயார்ப்படுத்தல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதுதான், மீண்டுமொரு இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதல் தமிழர் அரசியலில் குறுக்கிட்டிருக்கிறது. இது என்னவகையான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்? ஒவ்வொரு சந்தர்ப்பங்களையும் கச்சிதமாக பயன்படுத்திக்கொள்வதில் மிகுந்த ஆற்றல் கொண்ட கொழும்பின் அதிகார தரப்பினர் இதனையும் கச்சிதமாக பயன்படுத்திக் கொள்வர். இந்த புதிய நிலைமை இதுவரையில் தமிழர் தரப்பு கூறிவந்த பல விடயங்களை வலுவிழக்கச் செய்யும். வடக்கில் இராணுவம் தேவைக்கதிகமாக இருக்கிறது – அதனை வெளியேற்ற வேண்டும் என்னும் வாதம் முற்றிலும் வலுவிழக்கும். ஏனெனில் இப்போது இராணுவம் நிற்பதை நியாயப்படுத்துவதற்கான புறச் சூழலொன்று ஏற்பட்டிருக்கிறது. இராணுவத்திற்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுக்கள் இனி சர்வதேச அரங்குகளில் பெரிய கவனிப்பை பெறாது. வேண்டுமானால் உதட்டசைவு அழுத்தங்களை கொடுக்கலாம் ஆனால் அது தொடர்பில் உண்மையான ஈடுபாடு எவரிடமும் இருக்காது.
இலங்கை அரசாங்கத்தை பொறுத்தவரையில் இராணுவத்தை குற்றவாளியாக்கும் எந்தவொரு விசாரணையையும் அவர்கள் இதுவரை ஏற்றுக் கொண்டதில்லை. இந்த நிலையில்தான் இவ்வாறானதொரு புதிய நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டிருக்கிறது. பாதுகாப்பு தரப்பில் காணப்பட்ட பலவீனங்களே இதற்கு முக்கிய காரணம் என்னும் விமர்சனம் பொதுவாக முன்வைக்கப்படுகிறது. முக்கியமாக புலனாய்வு கட்டமைப்புக்களில் காணப்பட்ட பலவீனமே இவ்வாறானதொரு இஸ்லாமிய வலையமைப்பு நாடு தழுவிய ரீதியில் இயங்குவதற்கான வாய்ப்பாக அமைந்திருக்கிறது என்னும் குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.
இந்த பின்புலத்தில்தான், இலங்கையின் இராணுவத்தையும் புலனாய்வு கட்டமைப்புக்களையும் பலப்படுத்த வேண்டும் என்னும் வாதம் மேலெழுந்திருக்கிறது. இவ்வாறானதொரு சூழலில் இலங்கை இராணுவத்தை குற்றவாளியாக்கும் எந்தவொரு வாதத்திற்கும் சர்வதேச அரங்கில் பெரிய வரவேற்புக்கள் இருக்காது. ஏனெனில் இலங்கையின் படைக்கட்டமைப்புக்களை பலமான நிலையில் வைத்திருப்பது என்பது இப்போது இலங்கையின் தேவை மட்டுமல்ல அது ஒரு உலகளாவிய தேவையாகவும் மாறிவிட்டது. அதே வேளை, பல்வேறு வெளிநாட்டு புலனாய்வு அமைப்புக்களும் இலங்கையின் புலனாய்வுத் துறையோடு முன்னர் எப்போதுமில்லாதளவிற்கு நெருங்கிச் செயற்படுவதற்கான சூழலும் உருவாக்கியிருக்கிறது. இந்த நிலையில், தமிழர் தரப்பின் இனப்படுகொலை இராணுவம் என்னும் பிரச்சாரம் முற்றிலுமாகவே பலவீனமடையும். இராணுவத்திற்கு அதிக அதிகாரம் கொடுக்கக் கூடியவாறான ஒரு சூழலும் பேணப்படும். இராணுவத்திற்கு அதிகாரம் இல்லாவிட்டால் இந்த நிலைமையை இராணுவம் எவ்வாறு எதிர்கொள்வது என்னும் கேள்வி முன்வைக்கப்படும். அது நியாயமான ஒன்றாகவே நோக்கப்படும். இராணுவத்தை குற்றவாளிக் கூண்டில் ஏற்றினால் இலங்கையின் தேசிய பாதுகாப்பு பலவீனமடையும் – அவ்வாறானதொரு நிலைமையை ஒரு போதும் அனுமதிக்க முடியாதென்று கொழும்பு வாதிடுமானால் அந்த வாதத்தை மறுதலிக்க எவரும் முயற்சிக்க மாட்டார்கள்.
அரசியல் தீர்வு முயற்சிகள் மற்றும் பொறுப்புக் கூறலை எடுத்து நோக்கினால் – அங்கும் முன்னைய கரிசனைகள் இருக்காது. சாதகமான அரசாங்கம் என்று புகழாரம் சூட்டப்பட்ட அரசாங்கமே எதனையும் செய்யாத நிலையில் 2020இல் எவ்வாறானதொரு அரசாங்கம் இருந்தாலும் இந்த விடயங்களை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு கிடப்பில் போடுவதற்கான வாய்ப்புக்களே அதிகம். என்னதான் முயற்சிகள் மேற்கொண்டாலும் கூட, 2020இல் ஒரு ஸ்திரமான அரசாங்கமே அனைவரதும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. கொழும்பு ஸ்திரமாக இருக்க வேண்டியதும், இப்போது வெறுமனே ஒரு உள்நாட்டு தேவையல்ல. அதுவும் ஒரு சர்வதேசத் தேவைதான். இந்த பின்புலத்தில் பார்த்தால், ஜெனிவா வாக்குறுதிகளை அவசரமில்லாமல் அணுகுவதற்கான போதுமான கால அவகாசத்தை அரசாங்கம் பெற்றுக்கொள்ளும்.
அனைத்தையும் தொகுத்து நோக்கினால் ஈஸ்டர் தின தாக்குதலின் விளைவுகள் தமிழ் தேசிய அரசியலை பெருமளவில் பாதிப்பதற்கான வாய்புக்களே தென்படுகின்றன. இவ்வாறானதொரு சூழலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றது? அதனால் எதிர்கொள்ள முடியுமா? கடந்த பத்து வருடகால தமிழர் அரசியலை எடுத்து நோக்கினால் இந்தக் காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தமிழ் முயற்சிகள் எதுவும் வெற்றிபெறவில்லை. அந்த வகையில் நோக்கினால் களத்திலும் புலத்திலும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில்தான் முடிந்திருக்கிறது. கூட்டமைப்பின் பாதை தவறானது என்பதை நிரூபித்து, அதற்கு மாற்றான தலைமை ஒன்றை கட்டியெழுப்ப வேண்டும் என்னும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் எதுவும் வெற்றியளிக்கவில்லை. மாற்றுத் தலைமை ஒன்றிற்கான நம்பிக்கையாக பார்க்கப்பட்டவர்கள் எவரும் இப்போது நம்பிக்கை தரத்தக்கவர்களாக இல்லை. மாற்றுத் தலைமை ஒன்றை முன்னிறுத்தி மேற்கொள்ளப்பட்ட கருத்துருவாக்கங்களும் தோற்றுவிட்டன. இவ்வாறானதொரு சூழலில்தான், தற்போது ஐளுஐளு இன் தாக்குதலைத் தொடர்ந்து இலங்கை முற்றிலும் ஒரு உலகளாவிய நிகழ்சிநிரலுக்குள் சென்றிருக்கிறது. இனி அது தொடர்ந்தும் அவ்வாறானதொரு நிகழ்சிநிரலுக்குள்தான் இருக்கும்.
இவ்வாறானதொரு சூழலில், தமிழரின் நியாயங்களை எப்படி சர்வதேச அரசங்குகளில் விற்பனை செய்வது என்பது பெரும் சவாலான ஒன்றாகவே இருக்கும். இதனை எதிர்கொள்வதற்கு அதிகம் அறிவுமயப்பட்ட அரசியல் இயங்குதளம் ஒன்று தமிழர்களுக்கு தேவை. அதற்கான ஆற்றலுள்ள அணி ஒன்று தேவை. தமிழ் அரசியல் பரப்பை அதிகம் உடைக்காமல் ஒட்டவைக்க வேண்டிய தேவையும் எழலாம். எவ்வாறு உலக அரசியல் அரங்கில் செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பின்னரான அரசியல் போக்கொன்று உருவாகியிருந்ததோ – அவ்வாறானதொரு அரசியல் போக்குத்தான் தற்போது இலங்கையிலும் ஏற்பட்டிருக்கிறது. ஏப்பிரல் 21 ஈஸ்டருக்கு பின்னரான அரசியல் என்னும் அடிப்படையில்தான் இனிவரப் போகும் இலங்கையின் அரசியல் உரையாடல்கள் இடம்பெறவுள்ளன. முதலில் இது தொடர்பில் தமிழ் அரசியல் பரப்பில் விரிவான உரையாடல்கள் அவசியம். அதற்கான மனப்பக்குவம் அவசியம். இதுவரையில் ஏற்பட்ட உரையாடல் போன்று யாழ்வீரசிங்கம் மண்டபத்திற்குள் முடங்கிப் போகும் உரையாடல்கள் அதற்கு போதுமனதல்ல. விரிவாகவும் பரந்த தளங்களிலும் உரையாட வேண்டியிருக்கிறது. அவ்வாறில்லாது அதிகம் சூத்திரங்களில் சுகம் காண முற்பட்டால் தமிழர் அரசியல் அதிகம் தனிமைப்பட்டு, இறுதியில் கவனிப்பாரற்ற நிலைக்கு செல்லநேரிடும்.
நன்றி - சமகளம்