இலங்கையில் யுத்த முடிவுக்குப் பின்னர் மற்றொரு பாரிய பிரச்சினை!
7 சித்திரை 2019 ஞாயிறு 14:46 | பார்வைகள் : 9577
இலங்கையில் காலத்துக்குக் காலம் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் உள்ளன. 2009ம் ஆண்டு வரை நாம் முகங்கொடுத்த பாரிய பிரச்சினை வடக்கு,கிழக்கு யுத்தமாகும். யுத்தம் நிறைவடைந்த பின்னர் நாம் முகங்கொடுக்கும் முக்கிய பிரச்சினை வாகன விபத்துக்களாகும்.
நாம் அவ்வாறு கூறுவதற்கான காரணம் யுத்தம் நிறைவடைந்த பின்னர் அதாவது 2009 தொடக்கம் 2018ம் வருட முடிவு வரை பாதை விபத்துக்களால் 27,132 பேர் மரணமடைந்துள்ளார்கள். இன்று வாகன விபத்துக்களால் ஒவ்வொரு நாளும் 7,8 பேர் மரணமடைவது சாதாரண விடயமாக மாறி வருகின்றது.
ஒரு நாளில் ஒவ்வொரு 2 மணித்தியாலம் 50 நிமிடங்களுக்கு இலங்கையில் எங்கோ ஓர் இடத்தில் வாகன விபத்து காரணமாக ஒருவர் மரணமடைவதாகத் தெரியவந்துள்ளது. 2018 ம் ஆண்டில் மாத்திரம் 35,000 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதில் 3,113 பேர் மரணமடைந்துள்ளார்கள்.
பொருளாதார மற்றும் சமூக ரீதியாக நாட்டைப் பாதிக்கும் மோசமான பிரச்சினையான வீதி விபத்துக்களை குறைப்பதற்கான ஆலோசனைகளை முன்வைக்கும் நிகழ்வொன்று கடந்த மாதம் 23ம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இம்மகாநாடு சர்வதேச மாநாடாகும். இதனை ஸ்ரீஜயவர்தனபுர ரோட்டரி கழகம் ஏற்பாடு செய்திருந்தது.
வீதிவிபத்துக்கள் மூலம் 40,000 பேர் அங்கவீனர்களாக உள்ளதாகவும், அவ்வாறு மரணமாவதும், அங்கவீனர்களாவதும் நாட்டின் பொருளாதார, துறைக்கு பங்களிப்பவர்களே எனவும் தெரியவருகின்றது.
பொலிஸ் அறிக்கைகளில் கடந்த வருடம் இடம்பெற்ற வீதிவிபத்துக்களின் எண்ணிக்கை 35,000 ஆக இருந்தாலும் காப்புறுதி நிறுவனங்களின் தகவல்களின்படி 5 இலட்சம் எனக் குறிப்பிடலாம். அதற்குக் காரணம் அவர்களில் அநேகமானோர் பொலிஸிற்குச் செல்லாமல் காப்புறுதி நிறுவனத்தின் மூலம் தீர்வைக் காண்பவர்களாவர். வீதிவிபத்துகள் அதிகமாக இடம்பெறும் இடங்களாக மேல் மற்றும் வட மேல் மாகாணங்களே உள்ளன. வீதிவிபத்துக்களால் வருடமொன்றுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பு அண்ணளவாக ரூபா 50 பில்லியனாகும். அதைத் தவிர மறைமுக பாதிப்பு ரூபா 200 பில்லியன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அது வீதி விபத்துக்களால் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க, வாகன நெரிசல் காரணமாக வீண்விரயமாகும் மக்கள் சக்தி என்பவற்றை கணக்கிட்டே குறிப்பிடப்பட்டுள்ளது.
வீதி விபத்துகள் நடந்தாலும் நடக்கா விட்டாலும் இன்று வாகன நெருக்கடி நேரங்களில் எதனையும் செய்ய முடியாதுள்ளது. அதனால் அனைவரும் பெரும் அழுத்தங்களுக்கு உள்ளாகின்றார்கள். இது நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு பெரும் பாதிப்பாகும். நாட்டின் மனித வளம் வீதி விபத்துகளால் சூறையாடப்படுகின்றது. அல்லது அங்கவீனமாக்கப்படுகின்றது. அதே போல் குடும்பத்தில் வருமானம் தேடுபவரை இழந்தால் அந்தக் குடும்பம் பொருளாதார பாதிப்புக்கு உள்ளாகின்றது.
வாகன விபத்துக்களால் காயமடைந்தவர்களுக்கு சத்திர சிகிச்சை செய்ய மருந்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்காக அரசாங்கம் எவ்வளவு பணத்தை செலவிடுகின்றது? வீதிவிபத்துக்களை குறைத்தால் அந்தப் பணத்தை நாட்டின் அபிவிருத்திக்காகப் பாவிக்கலாம் அல்லவா? உண்மையில் எமது நாட்டில் இடம்பெறும் விபத்துக்களில் 90வீதத்தைத் தடுக்க முடியும். வீதி விபத்துகளுக்கு முக்கிய காரணங்கள் அதிக வேகம், குடிபோதையில் வாகனம் செலுத்துதல், தூக்கக் கலக்கம் என்பனவாகும். வீதிவிபத்துக்கள் பற்றி பேசும் போது சாரதிகளைப் போன்று பாதசாரிகளும் தவறிழைக்கின்றார்கள்.
கவனமின்றி பாதையை கடக்கின்றார்கள். சமிக்ஞை விளக்குகள் உள்ள இடங்களில் மக்கள் பஸ்ஸிலிருந்து இறங்குகின்றார்கள். இந்த தவறுகளையெல்லாம் நாம் திருத்திக் கொண்டால் வீதிவிபத்துக்களை குறைத்துக் கொள்ளலாம் என பேராதனை பல்கலைக்கழக வைத்திய பீடத்தின் சமூக சுகாதார நிபுணரும் மற்றும் இலங்கை வைத்திய சங்க வாகன விபத்துக்களைத் தடுப்பதற்கான நிபுணத்துவ குழுவின் தலைவருமான பேராசிரியர் சமத் டீ. தர்மரத்ன தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், வீதி விபத்துகளைத் தடுப்பது பொலிஸாராலோ வீதி பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடும் தொண்டர் அமைப்புக்களாலோ சுகாதார அமைச்சாலோ போக்குவரத்து அமைச்சாலோ தனியாக முடியாத விடயமாகும். அனைத்துப் பிரிவினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் கூறினார். இந்த மாநாட்டில் 7 யோசனைகள் முன்வைக்கப்பட்டன.
* வாகன விபத்துகளைத் தடுப்பதற்கான ஜனாதிபதி செயலணி ஒன்றை அமைத்தல்.
* தேசிய கொள்கையொன்றை உருவாக்கல்.
*பாதுகாப்பு தொடர்பான தொனிப்பொருளை விடய பரிந்துரைக்கு இணைத்தல்.
* தேசிய வீதிப் பாதுகாப்புக்காக (பாதை விதிகளை மீறாத ஒழுக்கமான சாரதிகள்) பணி புரிபவர்களுக்கிடையே தெரிவு செய்யப்படுபவர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தல்.
*விபத்துக்களை கண்காணிப்பதற்கான தேசிய ஆய்வு தொகுதிகயை உருவாக்குதல்.
* 2020 ம் ஆண்டளவில் வீதி விபத்துக்களால் ஏற்படும் மரணங்களின் எண்ணினக்கையை குறைப்பது தொடர்பாக சமூகத்தை அறிவுறுத்தல்.
* பாதுகா்புபத் தொடர்பான கலாசாரமொன்றை உருவாக்கல்.
பேராசிரயர் சமத் தர்மரத்ன குறிப்பிடுவது மேற்குறிப்பிட்ட விடயங்களில் ஜனாதிபதி செயலணியை அமைப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதாகும். ஏனென்றால் ஜனாதிபதி செயலணியை அமைப்பதன் மூலம் ஏனைய இலக்குகளை விரைவாக நிறைவேற்றிக் கொள்ள முடியும். அதேவேளை அவர் வாகன சாரதி அனுமதிப் பத்திரம் தொடர்பாகவும் சிறந்த யோசனையொன்றை முன்வைத்தார்.
“முன்னர் சாரதி அனுமதிப் பத்திரம் புத்தகமாகவே காணப்பட்டது. தவறுகள் செய்தால் அந்த புத்தகத்தில் குறிப்பிடுவார்கள். நிறைய தவறுகள் செய்திருந்தால் சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பார்த்தவுடன் தெரிந்து விடும். ஆனால் இன்று சாரதி அனுமதிப் பத்திரம் அட்டை போன்றே வழங்கப்படுகின்றது. நாம் அதை தவறெனக் கூற முடியாது. ஆனால் நவீன தொழில்நுட்பத்துடன் முன்னேறிச் செல்லும் இந்த உலகில் இந்த சாரதி அனுமதிப் பத்திரத்திலும் பழைய தவறுகளை உள்ளடக்க வேண்டும். அதனால் நாம் சாரதி அனுமதிப் பத்திரத்தில் 'பார்கோட்' ஒன்றை போடும்படி பரிந்துரை செய்தோம்.
பொலிஸ் அதிகாரிகள் சாரதிகளை கண்டுபிடித்து தங்களிடமுள்ள உபகரணத்தில் அனுமதிப் பத்திரத்தை வைத்து சோதனை செய்தவுடன் சாரதியின் முன்னைய தவறுகளுடன் அனைத்து தகவல்களையும் அறியக் கூடியதாக இருக்கும். ஆனால் இன்னும் அந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
நாம் வீதிப் பாதுகாப்பு தொடர்பாக பல யோசனைகளை முன்வைத்துள்ளோம். அதைப் பற்றி அறிவூட்ட நிகழ்ச்சிகளை நடத்துகின்றோம். பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக எழுதுகின்றோம்.ஊடகங்களில் அறிவுரை கூறுகின்றோம். ஆனால் இவை எவற்றாலும் எதுவித நன்மையுமில்லை. இதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டு இலங்கை பொலிஸ், போக்குவரத்து அமைச்சு, சுகாதார அமைச்சு, கல்வியமைச்சு மற்றும் வாகன விபத்துக்களைத் தடுப்பது தொடர்பாக விழிப்புணர்வூட்டும் தொண்டர் அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டால் பல நன்மைகள் கிடைக்கும் என நம்புகின்றோம்" என்றும் அவர் கூறினார்.
நன்றி - தினகரன்