Paristamil Navigation Paristamil advert login

சிறிலங்காவுக்கு அனைத்து வகையான அழுத்தங்களையும் கொடுப்போம் - அமெரிக்கா

சிறிலங்காவுக்கு அனைத்து வகையான அழுத்தங்களையும் கொடுப்போம் - அமெரிக்கா

3 பங்குனி 2016 வியாழன் 23:40 | பார்வைகள் : 9886


 ஜெனிவா தீர்மானத்தின் பரிந்துரைகளை சிறிலங்கா நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து வகையான அழுத்தங்களையும் மேற்கொள்வோம் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச்செயலர் நிஷா பிஸ்வால் தெரிவித்துள்ளார்.

 
கடந்த மாதம் 26ஆம் நாள், அமெரிக்கா –சிறிலங்காவிற்கு இடையிலான முதலாவது கூட்டு கலந்துரையாடல் நடந்த பின்னர், இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகள், தொடர்பான அமெரிக்க நிலைப்பாடுகளை விளக்கும் வகையில் இந்தியாவின் India Abroad  வாரஇதழுக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
 
கேள்வி: கடந்த சில மாதங்களில், குறிப்பாக செயலர் கெரி சிறிலங்காவிற்கான பயணத்தை மேற்கொண்ட பின்னர், நீங்கள் அனைவரும் சிறிலங்கா மீது தங்களது கவனத்தைக் குவித்துள்ளனர். சிறிலங்கா தொடர்பான அமெரிக்காவின் கோட்பாடு மாற்றமடைந்துள்ளது. உங்களது மாற்றமானது நிலைத்திருக்கும் என நீங்கள் நம்புகிறீர்களா? சிறிலங்காவின் மீளிணக்கப்பாட்டு முயற்சிகள் தொடர்பில் நீங்கள் நம்பிக்கை கொண்டுள்ளீர்களா?
 
பதில்: முதலாவதாக, சிறிலங்கா அரசாங்கத்தால் தற்போது முன்னெடுக்கப்படும் முயற்சிகள் தொடர்பில் அமெரிக்கா நம்பிக்கை கொண்டுள்ளது. தற்போதைய சூழலானது இலங்கையர்கள் தமது கடந்த காலத்தை விடுத்து, எதிர்காலத்தில் தமது வாழ்வானது சிறந்ததாகவும் செழுமை மிக்கதாகவும், நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்குமான வாய்ப்பாக அமைந்துள்ளது என்பதை உணர்வதற்குத் தலைப்பட்டுள்ளனர் என்பதை நாம் கண்டறிந்தோம்.
 
அமெரிக்கர்களாகிய நாங்கள் சிறிலங்காவின் சமாதானம், மீளிணக்கப்பாடு மற்றும் நிலையான செழுமையை நோக்கிய பயணத்தில் முழுமையானதொரு பங்காளியாக இருக்க விரும்புகிறோம்.
 
கேள்வி: சிறிலங்காவின் மீளிணக்கப்பாட்டு முயற்சிகள் தொடர்பில் அமெரிக்கா எத்தகைய உதவிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது?
 
பதில்:நாங்கள் ஏற்கனவே சிறிலங்காவிற்கு எமது உதவிகளை வழங்கி வருகிறோம். குறிப்பாக எமது தொழினுட்ப உதவிகள் மூலம் சிறிலங்கா ஆட்சியைப் பலப்படுத்தவும் பொறுப்புக்கூறல் பொறிமுறை மற்றும் வெளிப்படைத்தன்மை பொறிமுறைகள் போன்றவற்றை சிறிலங்கா பலப்படுத்துவதற்குமான ஆதரவுகளை நாம் வழங்கிவருகிறோம். சிறிலங்கா தனது நாட்டில் நிலவும் ஊழல்களைக் களைவதற்கான பல்வேறு ஆணைக்குழுக்களை உருவாக்குவதற்குத் தேவையான நீதிச் சேவையை பலப்படுத்துவதற்கு நாங்கள் எமது உதவிகளை வழங்கியுள்ளோம்.
 
இதற்கப்பால், இலங்கையர்களின் பொருளாதார அவாக்களை முதன்மைப்படுத்த வேண்டியது மிகவும் முக்கியமானது என்பதை நாம் புரிந்து கொண்டுள்ளோம். கடந்த ஆண்டு அமெரிக்காவின் புத்தாயிர சவால்களுக்கான அமைப்பானது சிறிலங்காவில் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதற்குப் பரிந்துரைத்துள்ளது. இத்திட்டம் சிறப்பாக இடம்பெறும் போது இலங்கையர்களின் பொருளாதாரமும் மேம்படுவதற்கான வாய்ப்புக் காணப்படும்.
 
இது தவிர, சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து வர்த்தக மற்றும் முதலீட்டுத் திட்டங்களை மேம்படுத்துவதற்கான பல்வேறு நிகழ்ச்சி நிரல்களையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். இதன்மூலம் சிறிலங்காவின் வடக்கு மற்றும் தெற்கிலுள்ள மக்கள் அனைவரும்  அதிகம் பயனடைவார்கள்.
 
ஜனவரி 08 அன்று சிறிலங்காவில் இடம்பெற்ற அதிபர் தேர்தலின் பின்னர், முதன் முதலாக சிறிலங்காவிற்கான தனது பயணத்தை மேற்கொண்ட அனைத்துலக நாடுகளின் தலைவராக இந்தியப் பிரதமர் மோடி விளங்குகிறார். இவர் சிறிலங்காவிற்கான தனது பயணத்தின் போது சிறிலங்காவின் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதாக வாக்களித்திருந்தார். இதேபோன்று எமது ஐரோப்பிய நண்பர்கள், பிரித்தானியா, யப்பானிய நண்பர்கள் மற்றும் பலர் சிறிலங்காவுடன் இணைந்து பணியாற்றுவதில் ஆர்வமாக உள்ளனர். ஒட்டுமொத்தத்தில் சிறிலங்காவுடன் இணைந்து பணியாற்றுவதில் அனைத்துலக சமூகம் முழுவதுமே ஆர்வமாக உள்ளது.
 
கேள்வி: சிறிலங்காவின் வெளிப்படைத்தன்மை மற்றும் நீதிச்சேவை சீர்திருத்தம் போன்ற விடயங்களில் அமெரிக்க மற்றும் ஏனைய சட்டவாளர்கள் சிறிலங்காவிடம் ஆலோசனை வழங்குவதற்குத் தயாராக உள்ளனரா? சிறிலங்காவின் நிலையான அபிவிருத்தியில் அனைத்துலக அபிவிருத்திக்கான அமெரிக்க அமைப்பானது (USAID)  தனது செயற்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளதா?
 
பதில்: ஆம். சிறிலங்காவின் நீதிச் சேவை மற்றும் ஏனைய விடயங்களில் மாற்றத்தைக் கொண்டுவருவது தொடர்பில் நாங்கள் எமது தொழினுட்ப வல்லுனர்களை சிறிலங்காவிற்கு அனுப்புவதற்கு தயாராக உள்ளோம்.  அனைத்துலக அபிவிருத்திக்கான அமெரிக்க அமைப்பானது தனது நிகழ்ச்சி நிரலை விரிவுபடுத்தியுள்ளது. ஆசியாவிற்கான உதவிச் செயலர் ஜோன் ஸ்ரிவேர்ஸ் அண்மையில் சிறிலங்காவிற்கான தனது பயணத்தை மேற்கொண்டிருந்தார். இதன்மூலம் சிறிலங்காவின் பல்வேறு பகுதிகளிலும் எவ்வாறு அபிவிருத்திகளை முன்னெடுக்க முடியும் என்பதை அவர் கண்டறிந்திருப்பார் என நான் நம்புகிறேன். நான் உட்பட அமெரிக்காவின் கீழ்நிலைச் செயலர் ரொம் சனோன், ஐ.நாவுக்கான அமெரிக்காவின் வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர் மற்றும் செயலர் ஜோன் கெரி போன்றவர்கள் சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளோம்.
 
கேள்வி: மீளிணக்கப்பாட்டு முயற்சிகள் தொடர்பில்,  தான் சுயாதீனமாக இயங்கவுள்ளதாக சிறிலங்கா அறிவித்துள்ளது. அதாவது தனது செயற்பாடுகளில் அனைத்துலகின் பங்களிப்போ அல்லது தலையீடோ தேவையில்லை எனத் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன?
 
பதில்: முதலாவதாக, ஜெனீவாவில் கடந்த ஆண்டு முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு சிறிலங்கா முதன் முதலாக இணை அனுசரணை வழங்கியிருந்தது. இதற்காக நாங்கள் சிறிலங்காவுடன் இணைந்து பணியாற்றினோம். நாங்கள் இந்தத்தீர்மானத்தின் பரிந்துரைகளை சிறிலங்கா அமுல்படுத்துவதற்கான அனைத்து வகையான அழுத்தங்களையும் மேற்கொள்வோம் என்பதில் உறுதியாக உள்ளோம். சிறிலங்காவின் தற்போதைய அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோர் ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவார்கள் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.
 
சிறிலங்கா அரசாங்கமானது தனது மீளிணக்கப்பாட்டுச் செயற்பாடுகளை வெளிப்படையாகவும், பாதிக்கப்பட்ட மற்றும் ஏனைய அனைத்துத் தரப்பினர்களையும் உள்வாங்கி காத்திரமானதொரு நகர்வை முன்னெடுக்க வேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். நம்பகமான மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையைத் தரக்கூடிய அதேவேளையில் அனைத்துலக சமூகத்தின் நம்பகத்தன்மையையும் உறுதிப்படுத்துவதற்கான பொறுப்புக்கூறல் பொறிமுறையை சிறிலங்கா உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.
 
கேள்வி: சிறிலங்காவிற்கான தனது வரலாற்றுச் சிறப்பு மிக்க பயணத்தை பிரதமர் மோடி மேற்கொண்டிருந்தார். இதேபோன்று சிறிலங்கா அதிபர் சிறிசேன பதவியேற்ற பின்னர் முதன் முதலாக இந்தியாவிற்கான பயணத்தையும் இதேபோன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இந்தியாவிற்கு முதலாவது உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் கடந்த காலத்தில் சிதைவுற்றிருந்த சிறிலங்கா-இந்தியா உறவானது சீர்செய்யப்பட்டுள்ளது என்பதில் அமெரிக்கா திருப்தியடைந்துள்ளதா? ஏனெனில் ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் சீனாவை மையப்படுத்தியே சிறிலங்கா செயற்பட்டிருந்தது. இதனால் இந்தியா அதிகம் அதிருப்தியடைந்திருந்தது.
 
பதில்: பன்முகப்படுத்தப்பட்ட வெளியுறவுக் கோட்பாட்டையே சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் பின்பற்றுவதானது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். குறிப்பாக தனியொரு நாட்டின் மீது மட்டும் தங்கியிராது அனைத்து நாடுகளுடனும் உறவைப் பாராட்டுவதன் மூலம் சிறிலங்கா தனது நலன்களை அடைந்து கொள்வதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. இதுவே பல்வேறு மாற்றத்தை உருவாக்கியுள்ளது. குறிப்பாக இந்தியாவும் சிறிலங்காவும் பல்வேறு நலன்களைத் தமக்கிடையில் பகிர்ந்து கொள்வதற்கான வெளியுறவுக் கோட்பாடு உருவாக்கப்பட்டுள்ளது. இது உண்மையில் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
 
தனியொரு நாட்டின் நலன் சார்ந்த மறைமுக நிகழ்ச்சி நிரலானது இவ்விரு நாடுகளினதும் தற்போதைய உறவில் இருக்காது என அமெரிக்கா நம்புகிறது. ஆனால் சிறிலங்கா தனது அயல்நாடுகளுடன் நல்லுறவைப் பேணுவதற்கு முயற்சிக்கிறது. இதற்கு நாம் உந்துசக்தியாக இருக்கிறோம்.
 
கேள்வி: நீங்களும் தங்களது மூத்த நிர்வாக அதிகாரிகளும் இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் இந்தியா அதிகாரத்துவ நாடாக விளங்குகிறது என்பதை ஏற்றுக்கொண்டுள்ளீர்கள். இந்நிலையில் சிறிலங்காவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியிலும் இது தொடர்பில் இந்தியாவுடன் அமெரிக்கா ஆலோசனை மேற்கொள்வது வழமையானதாகும். இதே நிலைப்பாடு தற்போதும் தொடர்கிறதா? எடுத்துக்காட்டாக, அமெரிக்கா-சிறிலங்கா புதிய மூலோபாயக் கலந்துரையாடல் தொடர்பாக இந்தியாவுடன் அமெரிக்காவால் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதா?
 
பதில்: அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கிடையில் மிகவும் ஆழமானதொரு உறவு காணப்படுகிறது. ஆசிய – பசுபிக் பிராந்தியத்தில், இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் நாங்கள் எமது அனைத்து நலன்கள் சார்ந்த விடயங்களையும் இந்தியாவுடன் கலந்துரையாடுவோம். இந்தியாவுடன் அமெரிக்கர்களாகிய நாங்கள் மத்திய கிழக்கு நிலைப்பாடு தொடர்பாகவும் ஆலோசிப்போம். இதுமட்டுமல்லாது, கிழக்காசியக் கோட்பாடு, ஆபிரிக்கக் கோட்பாடு, தென்னாசிய மற்றும் மத்திய ஆசியக் கோட்பாடு போன்ற அனைத்து நிலைப்பாடுகளையும் இந்தியாவுடன் அமெரிக்கா கலந்துரையாடும்.
 
நாங்கள் இந்திய தரப்பு அதிகாரிகளுடன் பல்வேறு ஆரோக்கியமான கலந்துரையாடல்களை மேற்கொள்கிறோம். எமது நிலைப்பாடுகள் மற்றும் நாங்கள் இந்த உலகத்தை எவ்வாறு உற்றுநோக்குகிறோம், எமது வேறுபட்ட நிலைப்பாடுகள் போன்ற அனைத்து விடயங்களையும் நாங்கள் இந்தியாவுடன் கலந்துரையாடுவோம்.
 
கேள்வி: இவ்வாறானதொரு நிலைப்பாட்டில், அமெரிக்க – சிறிலங்கா மூலோபாயக் கூட்டு தொடர்பாகத் தாங்கள் இந்தியாவுடன் கலந்துரையாடினீர்களா?
 
பதில்: இந்திய – சிறிலங்கா உறவுநிலையின் நோக்கங்கள் என்ன என்பதை நாங்கள் புரிந்துகொண்டது போன்று, சிறிலங்காவுடனான எமது உறவுநிலை தொடர்பாக இந்தியாவுடன் அமெரிக்கா உரையாடல்களை மேற்கொண்டிருந்தது. குறிப்பாக மூலோபாயக் கூட்டு தொடர்பாக நாங்கள் கலந்துரையாடியுள்ளோமா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இது சிறிலங்காவுடனான எமது முதலாவது கலந்துரையாடலாகக் காணப்படுகிறது  என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆகவே இந்த முயற்சி எவ்வளவு தூரம் வெற்றி நடைபோடும் என்பதை அறிவதில் நான் ஆவலாக உள்ளேன். இது தொடர்ந்தும் செயற்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது விருப்பாகும்.
 
கேள்வி: அமெரிக்க – சிறிலங்காவின் தற்போதைய புதிய மூலோபாயக் கலந்துரையாடலில் இராணுவத் துறையும் ஒரு அங்கமாக உள்ளதா? சிறிலங்கா அனைத்துலக இராணுவப் பயிற்சிகள், பயிற்சி நிதிகள் போன்றவற்றை முன்னர் பெற்றுள்ளது. இது தவிர, தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் சிறிலங்காவிற்கு அமெரிக்கா இராணுவ மற்றும் பாதுகாப்பு உதவிகளை அதிகளவில் வழங்கியிருந்தது. அமெரிக்கா மட்டுமல்லாது பல்வேறு நாடுகளும் சிறிலங்காவுக்கு உதவின. இந்நிலையில் அமெரிக்கா-சிறிலங்கா மூலோபாயக் கூட்டுக் கலந்துரையாடலில் இராணுவத்துறையும் ஒரு அங்கமாகக் காணப்படுகிறதா?
 
பதில்: நிச்சயமாக, பாதுகாப்புத் தொடர்பாகவும் இதில் கலந்துரையாடப்பட்டுள்ளது. சிறிலங்கா பொறுப்புக் கூறல் மற்றும் நீதி போன்றவற்றை முதன்மைப்படுத்தி தற்போது பணியாற்றுகின்றது. இதனால் அமெரிக்கா மற்றும் சிறிலங்காவிற்கிடையில் ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்பை உருவாக்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் மற்றும் அதன் இராணுவத்துடன் இணைந்து அமெரிக்கா பணியாற்ற விரும்புகிறது.
 
எமது இரு நாட்டுப் பாதுகாப்புப் படையினர் மத்தியிலும் எப்போதும் தொடர்பு பேணப்படுகிறது. இதேபோன்று சிறிலங்கா அரசாங்கத்துடனும் இணைந்து பணியாற்றுகிறது. மனிதாபிமான சேவைகளாக மேற்கொள்ளப்படும் நிலக்கண்ணி வெடியகற்றல் மற்றும் கடல்சார் ஒத்துழைப்பு போன்றவற்றில் அமெரிக்காவானது சிறிலங்காவுடன் இணைந்து பணியாற்றுகிறது.
 
சிறிலங்கா இராணுவத்துடன் நாங்கள் அண்மைய ஆண்டுகளில் மட்டுமல்லாது தொடர்ச்சியாக நாங்கள் காத்திரமானதொரு பங்களிப்பையும் ஒத்துழைப்பையும் பகிர்ந்து வருகிறோம். மீண்டும், சிறிலங்கா தன் மீது சுமத்தப்பட்ட போர்க்கால மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் பொறிமுறையை நோக்கி நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் இந்நிலையில், அமெரிக்கா மற்றும் சிறிலங்கா இராணுவத்தினருக்கு இடையில் ஒத்துழைப்பை மேலும் வலுவாக்குவதற்கு அமெரிக்கா தயாராக உள்ளது.
 
- புதினபலகை

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்