Paristamil Navigation Paristamil advert login

மகிந்த ராஜபக்சவின் புதல்வர் கைது! நாடகத்தின் ஓர் அங்கமே

மகிந்த ராஜபக்சவின் புதல்வர் கைது! நாடகத்தின் ஓர் அங்கமே

4 மாசி 2016 வியாழன் 23:31 | பார்வைகள் : 9532


 பரபரப்புக்கு பஞ்சமில்லாத இன்றைய செய்தியுலகில், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் புதல்வரதும், பொதுபல சேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரதும் கைதுகள் பரப்பாகவே இருக்கின்றன.

 
தமிழர்களை மையப்படுத்திய இணைய ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும், புதல்வரது கைதினைத் தொடர்ந்து கண்ணீருடன் மகிந்த ராஜபக்ச தோற்றமளிக்கின்ற ஒளிப்படம் அதிகம் அவதானிப்பினைப் பெற்றிருந்தது.
 
இலங்கைத்தீவினை மையப்படுத்திய அனைத்துலகத்தின் பார்வைகளிலும், தமிழர்களின் பார்வையிலும் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச வெவ்வேறு வகையாக காணப்படுகின்றார்.
 
தமிழினத்தின் மீது இனவழிப்பினை மேற்கொண்ட சிங்கள ஆட்சியாளர்களில் பெருந்துயரினை தந்த இனப்படுகொலையாளிகளில் முதன்மையானவராக மகிந்த ராஜபக்சவினை தமிழர்கள் காண்கின்றனர்.
 
மகிந்த ராஜபக்ச கண்ணீருடன் தோற்றமளித்த காட்சியினை, தமிழினம் வடித்த கண்ணீரோடு ஒப்பிட்டு அடைந்த மகிழ்ச்சியின் பின்னால் உள்ள உளவியலாக இதனைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
 
மறுபுறத்தே கைதுக்கு காரணமாக அமைந்துள்ள சிறிலங்காவின் புதிய ஆட்சியாளர்களை கொண்டாடுகின்ற மனப்போக்கும் இந்த உளவியலின் மறுபக்கமாக இருக்கின்றது.
 
சிறிலங்காவின் அரசுத் தலைவருக்கான கடந்த தேர்தலில் மகிந்த ராஜபக்ச மீதான தங்களின் கோபத்தினை, சிறிலங்காவின் தற்போதைய ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்து வெளிப்படுத்தியிருந்தனர்.
 
இது மைத்திரிபால சிறிசேன மீதான தமிழர்களின் விருப்பு வாக்குகள் அல்ல. மாறாக மகிந்த ராஜபக்ச மீதான எதிர்ப்பு வாக்குகள் ஆகும்.
 
ஆனால் இந்த எதிர்ப்பு வாக்குகளை சிறிலங்காவின் தற்போதைய ஆட்சியாளர்கள் தங்களது அரசியல் இருப்புக்கு ஏற்றாற்போல் தமக்கான விருப்பு வாக்குகளாக அவற்றினை வியாக்கியானம் செய்து வருகின்றனர்.
 
இந்த வியாக்கியானங்களுக்கு ஒத்தாற்போல், மகிந்த ராஜபக்சவின் புதல்வரது கைதுக்கு காரணமாக அமைந்துள்ள சிறிலங்காவின் புதிய ஆட்சியாளர்களை கொண்டாடுகின்ற மனப்போக்கு மகிந்தவுக்கு எதிரான மனவியலின் மறுபக்கமாக இருக்கின்றது.
 
ஒரு கட்டத்தில் 'நல்லாட்சி அரசாங்கத்தினால்'......என சர்வ சாதாரணமாக செய்திகளை பதிவிடுகின்ற அளவுக்கு இந்த பரபரப்பு வந்தாகி விட்டது.
 
மகிந்த எதிர்ப்பு வாக்குகளை தனது விருப்பு வாக்குகளாக வியாக்கியானம் செய்கின்ற சிறிலங்காவின் புதிய ஆட்சியாளர்களுக்கு இது ஒருவிதத்தில் நற்சான்றுதழ் வழங்குவது போல் உள்ளது.
 
உண்மையில் பரபரப்பாக யாவற்றினையும் கடந்து செல்கின்ற இந்த செய்தியுலகில் இக்கைதுகளுக்கு பின்னால் சிறிலங்காவின் புதிய ஆட்சியாளர்கள் அடைய நினைத்த அல்ல நினைக்கின்ற நலன்கள் எவை என்பதனை விரிவாக செய்தியிடத் தவறிவிட்டனர் என்றே சொல்லலாம்.
 
கைதுகளின் பரபரப்புச் செய்திகளுக்கு அப்பால் இவ்விடயத்தில் பல்வேறு விடயங்கள் உறைந்துள்ளன. சிறிலங்காவின் தற்போதைய அரசியலின் தட்பவெப்ப நிலை என்பது மிக முக்கியமானதாகவுள்ளது.
 
குறிப்பாக அரசியலமைப்பு மாற்றம், ஐ.நா மனித உரிமைச் சபைத் தீர்மானத்தினை மையப்படுத்திய அனைத்துலக நீதிபதிகளின் பிரசன்னம் ஆகியன முக்கியமானதாகவுள்ளது.
 
இவ்விரு விடயங்களையும் தமிழர் தரப்பும், சிங்கள தரப்பும் வெவ்வேறாக காண்கின்றன மட்டுமல்ல வெவ்வேறாக கையாள நினைக்கின்றன.
 
மேற்குறித்த இவ்விரு விடயங்களும் சிறிலங்காவின் புதிய ஆட்சியாளர்களுக்கு, தமிழர் பிரச்சனையோடு மட்டும் தொடர்புபட்டது மட்டுமல்ல, அனைத்துலக சமூகத்தோடும் தொடர்புபட்டதாக இருக்கின்றது.
 
வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க மாட்டோம், சமஸ்டிக்கு இடமே இல்லை என்று புதிய ஆட்சியாளர்கள் வெளிப்படையாக கூறி வருகின்ற நிலை ஒருபுறமிருக்க, இவ்விவகாரங்களில் அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்களை சமாளிக்க வேண்டிய தேவை புதிய ஆட்சியாளர்களுக்கு உள்ளது.
 
இந்த அழுத்தங்களை தணிப்பதற்கும், தப்பித்துக் கொள்வதற்கும் ஓர் வலுவான காரணத்தினை கட்டியெழுப்ப வேண்டிய தேவை சிறிலங்காவின் புதிய ஆட்சியாளர்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது என்றே தெரிகின்றது.
 
தமிழர்களை போரில் வென்ற நாயகனாக சிங்கள தேசத்தினால் கொண்டாடப்படுகின்ற மகிந்த ராஜபக்ச தரப்பினை, செல்லமாக குட்டுவதன் ஊடாக, சிங்கள இனவாதத்தினை உயிர்பெற வைத்து, அனைத்துலகத்திற்கும் தமிழர்களுக்கும் இதனை ஒரு காரணக்கதையாக சொல்ல சிங்களம் விளைகின்றது.
 
இனப்பிரச்சனைக்கான ஒவ்வொரு விவகாரத்திலும் கண்டியினை நோக்கி இரண்டு பிரதான கட்சிகளது யாத்திரைகள், கடந்த கால சிறிலங்காவின் ஆட்சியாளர்களது இனவாத உயிர்ப்பித்தல் யுத்தியாகவே இருந்திருக்கின்றது.
 
அவ்வாறே புதிய அரசியலமைப்பு திருத்தத்தில் இனப்பிரச்சினைக்கான குறைந்தபட்ச தீர்விவையோ, வெளிநாட்டு நீதிபதிகளது பிரசன்னத்தையோ அனைத்துலக சமூகம் தன் கழுத்தின் மீது இறுக்க அழுத்தி விடக்கூடாது என்பதில் சிறிலங்கா விழிப்பாக உள்ளதாகவே தோன்றுகின்றது.
 
இதன் பின்னணியிலேயே சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் புதல்வரதும், பொதுபல சேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரரதும் கைதுகளையும் கவனிக்க வேண்டியுள்ளது.
 
'நல்லாட்சி' என்ற பெயரில் அனைத்துலக சமூகத்தினையும், தமிழர்களையும் ஏமாற்றுகின்ற நாடகத்தின் ஓர் அங்கமாகவே இக் கைதுகள் இருக்கின்ற என்பது தெரிகின்றது.
 
ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல், மகிந்த ராஜபக்ச தரப்பினை பலவீனப்படுத்தி தனது அரசியல் இருப்பினை பலப்படுத்துகின்ற ரணிலும் யுத்திகளில ஒன்றாக இது இருப்பது மட்டுமல்ல, இதன் ஊடாக சிறிலங்கா சுதந்திர கட்சிக்குள் ஏற்படுகின்ற உட்பிளவுகள் ஐக்கிய தேசிய கட்சியினை மறுவளத்தில் பலப்படுத்தும் நம்பிக்கையும் ரணிலுக்கு உள்ளது போலவே தோன்றுகின்றது.
 
மகிந்த ராஜபக்சவின் கண்ணீர் மல்கும் ஒளிப்படத்த்தினை வெறும் பரபரப்பாக கடந்து செல்லாமல், இக் கைதுகள் ஊடாக சிறிலங்காவின் புதிய ஆட்சியாளர்கள் கட்டமைக்க நினைக்கின்ற நாடகத்தினை அனைத்துலக அரங்கில் அம்பலப்படுத்துவதே தமிழர் தரப்பின் செயற்பாடாக இருக்க வேண்டும்.
 
- சுதன்ராஜ்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்