ஆட்சியைக் கவிழ்க்க சீனா செல்கிறாரா மஹிந்த?
8 தை 2016 வெள்ளி 15:48 | பார்வைகள் : 9326
சீனா தனது அரசியல் கருத்தியல்களைத் தளமாகக் கொண்டே தனது வெளியுறவுக் கோட்பாட்டைத் திட்டமிட்டது. பின்னர், இக்கோட்பாடானது சீனாவின் பொருளாதார நலன்களை மையப்படுத்தி வரையறுக்கப்பட்டது.
இவ்வாறு சிலோன் ருடே நாளிதழில் உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
2014 இல் இடம்பெற்ற மாகாணசபைத் தேர்தலில் தோல்வியுற்ற பின்னர், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்கவும், விரிவுரை ஆற்றவும் சென்றிருந்தார்.
ரணில் விக்கிரமசிங்க அமெரிக்காவிற்கான தனது பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் கொழும்பில் நடத்திய ஊடாக மாநாடு ஒன்றில், அரசாங்கங்களைக் கவிழ்ப்பதற்கான மூலோபாயங்கள் தொடர்பாகக் கற்பதற்காகவே தான் அமெரிக்கா செல்லவுள்ளதாக தெரிவித்திருந்தார்.
அமெரிக்காவின் Massachusetts தொழினுட்ப நிறுவகத்தில் ஒரு மாதம் கற்ற பின்னர் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பினார். காலத்தை விரயமாக்காது, சஜித் பிறேமதாசவுடன் ஒன்றிணைவதற்கான பேச்சுக்களை அவர் மேற்கொண்டார். இதன் பின்னர் இடம்பெற்ற ஊவா மாகாண சபை தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவின் கட்சி சிறியளவு வேறுபாட்டில் தோல்வியுற்றது.
அதிபர் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கான அறிவிப்பை மகிந்த ராஜபக்ச விடுத்த போது, அவரை எதிர்த்து மைத்திரி தேர்தலில் களமிறங்கினார்.
தற்போது மகிந்த சீனாவிற்கான இரண்டு வார காலப் பயணத்தை மேற்கொள்வதற்குத் தயாராகிறார். ஒரு மாத காலம் சீனாவில் தங்கவுள்ளதாக மகிந்த ராஜபக்ச முன்னர் அறிவித்த போதிலும் தற்போது இதை இரண்டு வாரங்களாகக் குறைத்துள்ளார்.
மகிந்தவின் சீனா நோக்கிய பயணத்தின் இரகசியம் இன்னமும் வெளியிடப்படவில்லை. மகிந்த விடுமுறையைக் கழிப்பதற்காகவே சீனா செல்வதாக சிலர் கூறுகின்றனர்.
ஆனாலும் மைத்திரி-ரணில் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காகத் தான் சீனாவிற்கான பயணத்தை மகிந்த முன்னெடுக்கிறாரா என்பதில் சந்தேகம் நிலவுகிறது.
அண்மையில் முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து சிறிலங்காவிற்கான ரஸ்யத் தூதுவரைச் சந்தித்திருந்தார். இந்தச் சந்திப்பில் நிதி மோசடிப் பிரிவைச் சேர்ந்த புலனாய்வாளர்களால் தான் எவ்வாறு மோசமாக நடாத்தப்பட்டேன் என்பதை பீரிஸ், ரஸ்யத் தூதுவரிடம் விவரித்திருந்தார்.
சிறிலங்கா அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு பேராசிரியர் பீரிசும் ரஸ்ய உதவியை நாடியிருந்தாரா என சந்தேகிக்கப்படுகிறது.
எனினும், மகிந்தவும் ஜி.எல்.பீரிசும் இது தொடர்பில் விழிப்பற்றவர்களாகவே உள்ளனர் என்பதே உண்மை. தமது பிராந்தியத்தில் ஆட்சியிலுள்ள அரசாங்கங்களைக் கவிழ்ப்பதற்கு சீனாவும் ரஸ்யாவும் ஒருபோதும் நிதியை அள்ளிவீசமாட்டார்கள் என்பது நடைமுறை உண்மையாகும்.
இவ்விரு நாடுகளும் எப்போதும் ஆட்சியிலுள்ள அரசாங்கங்களுக்கே ஆதரவு அளித்து வருகின்றன. ‘காற்றுள்ள போதே தூற்றிக் கொள்’ என்கின்ற பழமொழி போன்றே சீனாவும் ரஸ்யாவும் தருணங்கள் வாய்க்கும் போது அவற்றைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் இயல்புடைய நாடுகளாகும்.
அமெரிக்காவும் ஐரோப்பாவும் ஜனநாயகத்தைப் பலப்படுத்த முயற்சிக்கும் அதிகாரத்துவ ஆட்சியை நடத்தும் நாடுகளுடன் நட்பைப் பேண விரும்பும் இயல்பை சீனாவும் ரஸ்யாவும் கொண்டுள்ளன. இவ்வாறான நாடுகளை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு எதிராகக் கிளர்ந்தெழ வைப்பதற்கு சீனாவும் ரஸ்யாவும் தமது ஆதரவை வழங்குகின்றன.
அதிகாரத்துவ நாடுகளுக்கு ரஸ்யா ஆயுதங்களை விற்கின்றது. இது போன்று எக்சிம் வங்கி போன்ற தனது வங்கிகளின் ஊடாக அதிக வட்டியுடன் சீனா கடன்களை வழங்குகின்றது. ஆகவே, சீனா மற்றும் ரஸ்யா போன்ற நாடுகளுக்கு பயணம் செய்வதன் மூலம் மகிந்தவும் அவரது சகாக்களும் ஒருபோதும் சிறிலங்கா அரசாங்கத்தைக் கவிழ்க்க முடியாது.
மறுபுறத்தே, இந்தியாவுடன் ஆலோசிக்காது சிறிலங்காவின் உள்விவகாரங்களில் ரஸ்யா ஒருபோதும் தலையீடு செய்யாது. பல பத்தாண்டுகளாக ரஸ்யாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் வரலாற்று சார் தொடர்புகள் பேணப்படுகின்றன.
இதற்கும் அப்பால் ராஜபக்சாக்களை இந்தியா அடியோடு வெறுக்கிறது. இதுவே அப்பட்டமான உண்மையாகும்.
மைத்திரி-ரணில் அரசாங்கத்துடன் சீனா சில முரண்பாடுகளைக் கொண்டுள்ளது. தற்போதைய சிறிலங்கா அரசாங்கமானது சீன அதிபரால் அடிக்கல் நாட்டப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை இடைநிறுத்தியதானது சீனா சந்தித்த மிகப்பாரிய பிரச்சினையாகும்.
எனினும், இத்திட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதற்கான அனுமதியை மைத்திரி-ரணில் அரசாங்கம் வழங்கியுள்ளது. இத்திட்டம் இடைநிறுத்தப்பட்ட போது மைத்திரியை சீனாவிற்கு வருமாறு சீன அரசாங்கம் அழைப்பு விடுத்திருந்தது. தற்போது இத்திட்டத்தைத் தொடர்வதற்கு பச்சைக் கொடி காண்பிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, மகிந்தவின் பெறுமதி மற்றும் முக்கியத்துவம் என்பது சீனாவைப் பொறுத்தளவில் குறைவானதாகவே உள்ளது. இவ்வாறான முன்னேற்றங்களை நோக்கும் போது, மகிந்தவால் திட்டமிடப்பட்டுள்ள சீனாவிற்கான பயணமானது தனித்துவமான ஒன்றல்ல.
மகிந்தவின் ஆட்சிக்காலத்தில், சீனாவிற்கு வருமாறு ரணிலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. சீனாவின் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட ரணில் நீண்ட விடுமுறையை சீனாவில் கழித்தார்.
மகிந்த அரசாங்கத்தின் பிரச்சினைகளை ரணில், சீனாவிடம் தெரிவிக்கவில்லை. ஏனெனில் இவை சீனாவின் நலன்களுக்குப் பொருத்தமற்றவையாகக் காணப்பட்டன.
மகிந்தவின் மீதான பிடியை சீனா அவ்வளவு இலகுவில் கைவிடமாட்டாது. சிறிலங்காவில் பல சீனத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. மைத்திரியும் ரணிலும் இத்திட்டங்களைக் குழப்ப முயற்சித்தால், சீனா ‘மகிந்த அட்டையைப்’ பயன்படுத்தத் தொடங்கலாம்.
இந்தியா, அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவைப் போல, சிறிலங்காவின் அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், இராணுவ வீரர்கள் மற்றும் காவற்துறை போன்றவற்றுடன் சீனா நெருக்கமான உறவைப் பேணவில்லை.
இலங்கையர்களுக்கு சீனா தனது நாட்டில் புலமைப்பரிசில்களை வழங்கி உயர் கல்வி கற்பதற்கான அனுமதியை மட்டும் வழங்கியுள்ளது. இவ்வாறான புலமைப்பரிசில்களை இலங்கையர்களுக்கு வழங்கும் போது அவர்கள் சீன ஆதரவாளர்களாக மாறிவிடுவார்கள் என சீனா கருதுகிறது.
எனினும், சிறிலங்கா அரசாங்கங்களைக் கவிழ்ப்பதற்கு முன்னர் உதவிய நாடுகளுள் சீனாவும் ஒன்றாகும்.
1960 தொடக்கம் 1965 வரையான காலப்பகுதியில் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் அரசாங்கத்தைக் காப்பாற்ற சீனா உதவியது. அந்தவேளையில், சிறிலங்காவின் அனைத்துலக அரசியல் விவகாரங்களில் தலையீடு செய்வதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியது.
1965ல், சிறிமாவோ அரசாங்கத்தை ஐ.தே.க ஆட்சிக் கவிழ்ப்புச் செய்தது. சிறிலங்கா அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக சீனா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த புத்தபிக்குவான வணக்கத்திற்குரிய கென்பிற்றகெதர ஞானசீச தேரர் என்பவருடன் தொடர்பைப் பேணியதாக 1965ல் பதவியேற்ற டட்லி சேனநாயக்கவின் அரசாங்கத்தால் குற்றம் சுமத்தப்பட்டது.
1970ல் சீனாவுடன் சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கம் நெருக்கமான உறவைப் பேணியது. ஆனால் 1971ல் தனது அரசாங்கத்திற்கு எதிராக ஜே.வி.பி கிளர்ச்சி இடம்பெறுவதற்கு சீனா துணைபோனதாக குற்றம் சுமத்திய சிறிமாவோ அரசாங்கம் சீனாவை இடைநிறுத்தியது.
ஜே.வி.பி கிளர்ச்சிக்கு ஆதரவாக சீனாவால் கொழும்பிற்கு கப்பல்களில் ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்பட்டது என சிறிமாவோ அரசாங்கத்தால் உறுதிப்படுத்தப்பட்டது.
சீனா தனது அரசியல் கருத்தியல்களைத் தளமாகக் கொண்டே தனது வெளியுறவுக் கோட்பாட்டைத் திட்டமிட்டது. பின்னர், இக்கோட்பாடானது சீனாவின் பொருளாதார நலன்களை மையப்படுத்தி வரையறுக்கப்பட்டது.
இருப்பினும் சீனா தனது பொருளாதார இலக்குகளை அடைந்து கொள்வதற்குத் தேவையான அரசாங்கங்களுடனேயே நெருக்கமான உறவைப் பேணுகின்ற கோட்பாட்டைக் கொண்டுள்ளதே தவிர அரசாங்கங்களைக் கவிழ்ப்பதற்குத் தனது ஆதரவை வழங்கவில்லை.
சீனாவின் உண்மையான நலனை மகிந்த அறியாமற் செய்யப்படுகிறார் போல் தோன்றுகின்றது.
- புதினப்பலகை