புதிய அரசின் மீது அதிகரிக்கும் தமிழ்மக்களின் அதிருப்தி
25 பங்குனி 2015 புதன் 20:01 | பார்வைகள் : 9445
தமிழ் மக்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்துள்ள புதிய அரசாங்கமானது தான் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதால் தமிழ் மக்கள் மத்தியிலும் இது தொடர்பில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
தான் ஆட்சி அமைத்தபின்னர் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்களை விடுவிப்பேன் எனவும், வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவத்தால் சுவீகரிக்கப்பட்டுள்ள நிலங்களை அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிப்பேன் எனவும் வாக்குறுதி வழங்கிய திரு.மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்கள் கடந்துவிட்டன.
இவ்வாறான பல வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதிலும் இன்னமும் அவை நிறைவேற்றப்படவில்லை. புதிய அரசாங்கத்தின் இத்தகைய போக்கால் நாட்டு மக்கள் தமது பொறுமையை இழந்துள்ளனர். அத்துடன் ஆத்திரமும் அடைந்துள்ளனர்.
போருக்குப் பின்னான மீளிணக்கப்பாட்டு நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்படக் கூடியதோ அல்லது இலகுவானதோ அல்ல என்பது அனைவருக்கும் தெரியும்.
சிறிலங்காவின் 30 ஆண்டுகால உள்நாட்டுப் போரின் போது அமைக்கப்பட்ட பெரும்பாலான இராணுவ சோதனைச்சாவடிகள் அகற்றப்பட்டுள்ளன. ஆனால் இப்போரின் போது காணாமற்போன பல பத்தாயிரக்கணக்கான மக்கள் மற்றும் அபகரிக்கப்பட்ட நிலங்கள் போன்றன இன்னமும் கையளிக்கப்படவில்லை.
சிறிலங்காவின் முன்னைய அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட பல்வேறு பாரிய கண்காணிப்பு கட்டுமாணங்கள் தற்போதும் செயற்படுத்தப்படுகின்றன. இதேபோன்று இராணுவப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தற்போதும் வடக்கில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வடக்கில் இடம்பெறும் சிறுவர்களின் பிறந்தநாள் வைபவங்கள் உட்பட அனைத்து நிகழ்வுகளும் மேற்கொள்ளப்படுவதற்கு முன்னர் உத்தியோகபூர்வமாக அனுமதி பெறப்பட வேண்டும்.
இதேபோன்று பொதுமக்களின் பொருளாதாரச் செயற்பாடுகளில் இராணுவத்தினர் தலையீடு செய்தல் இன்னமும் தொடர்கின்றது. இராணுவத்தினரால் நடத்தப்படும் களஞ்சியங்கள், விடுதிகள், தொழிற்சாலைகள், நீச்சல்தடாகங்கள் போன்றன மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்திலும் தொடர்ந்தும் செயற்படுகின்றன.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிறிலங்கா இராணுவத் தலைமைத்துவத்தில் சில மாற்றங்களைச் செய்த போதிலும் இராணுவத்துடனான இவரது உறவுநிலை சுமூகமாகக் காணப்படவில்லை என்ற சந்தேகம் நிலவுகிறது.
அபகரிக்கப்பட்ட நிலங்களில் இராணுவத்தினரால் உருவாக்கப்பட்டுள்ள வர்த்தக செயற்பாடுகள் அதிகாரிகளுக்கு அழகான வீடுகள் மற்றும் தங்குமிடங்களை மட்டும் வழங்கவில்லை. இதற்கும் மேலாக தனிப்பட்ட வசதி வாய்ப்புக்களையும் வழங்குகிறது.
இவரது முயற்சிகளை இராணுவத் தலைவர்கள் எதிர்க்கின்றனரா என திரு.விக்கிரமசிங்கவுடன் மேற்கொண்ட நேர்காணலில் கேட்டபோது அதற்கு அவர் நேரிடையாகப் பதிலளிக்கவில்லை.
‘தற்போது புதிய இராணுவத் தளபதி பதவியேற்றுள்ளார். இவ்வாறான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான காலஅவகாசம் அவருக்குத் தேவை’ என ரணில் பதிலளித்திருந்தார்.
தமிழ் மக்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்துள்ள புதிய அரசாங்கமானது தான் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதால் தமிழ் மக்கள் மத்தியிலும் இது தொடர்பில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
‘அனைத்து உயர் தமிழ்த் தலைவர்களும் முட்டாள்கள்’ என நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை ரணில் நிறைவேற்றமாட்டார் எனவும் இவர் ‘பாம்பு’ போன்றவர் எனவும் நேர்காணல் ஒன்றில் சரவணபவன் தெரிவித்துள்ளார்.
சில தமிழ்த் தலைவர்களின் உந்துதலின் மூலம் சில குடும்பத்தினர் தேர்தல் நடந்து முடிந்ததற்கு அடுத்த நாள் அதாவது ஜனவரி 09 அன்று திருகோணமலைக்கு அருகிலுள்ள தமது சொந்த நிலங்களில் குடியேற்றப்பட்டனர்.
இவர்கள் தமது நிலங்களில் கிடுகுகளால் வேயப்பட்ட சிறிய குடிசைகளை அமைத்தனர். இங்கு மின்சாரம் இல்லை. குடிப்பதற்கான நீரில்லை. உணவு தயாரிப்பதற்கான வளம் இல்லை.
ஆனால் முட்கம்பி வேலிகளால் சூழப்பட்ட முகாங்களில் சிறிய பொதிகளுடன் வாழ்ந்ததை விட இது திருப்தியளிப்பதாக இவர்கள் கூறுகின்றனர்.
இடம்பெயர்ந்தோர் முகாமை விட எமது நிலங்களில் நாங்கள் வீடமைத்து வாழ்வது மிகவும் சுதந்திரமானது என 60 வயதான திருமதி மங்களாதேவி இராசமாணிக்கம் தெரிவித்தார்.
வீடுகள் மற்றும் மரங்கள் இராணுவத்தால் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. தமிழர்களின் வாழிடங்களை அழித்தமை தொடர்பில் பாரிய ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என சில தமிழ்த் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
சொத்துடமை தொடர்பான பிரச்சினையை மீள்குடியேற்றப்பட்ட மக்கள் அவர்களாகவே தீர்த்துவைப்பார்கள் என சிலர் கூறுகின்றனர். வீடுகள், மலசலகூடங்கள், வீதிகள், பாடசாலைகள் போன்றன அரசாங்கத்தால் மீளக்கட்டியெழுப்பப்பட வேண்டும் என இடம்பெயர்ந்த மக்கள் கருதுகின்றனர்.
இந்தியாவில் வாழும் 100,000 வரையான அகதிகள் மிகவிரைவில் சிறிலங்காவுக்கு திருப்பியனுப்பப்படுவர். இதன்பின்னர் இவர்கள் தமது நிலங்கள் மற்றும் சொத்துக்களை உரிமைகோர வேண்டும்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களின் பிரச்சினையும் மிக முக்கியமானது. எவ்வித குற்றங்களும் முன்வைக்கப்படாது ஒரு ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்ட திருமதி.ஜெயக்குமாரி பாலேந்திரன் இம்மாத ஆரம்பத்தில் விடுவிக்கப்பட்டுள்ளதானது மீளிணக்கப்பாட்டை நோக்கிய சிறிலங்கா அரசாங்கத்தின் மிகமுக்கிய நகர்வாகும்.
ஆனால் 1991லிருந்து எவ்வித குற்றங்களும் முன்வைக்காது தடுத்து வைக்கப்பட்ட திரு.வைரவநாதன் கடந்த ஆண்டு இறுதியிலேயே விடுவிக்கப்பட்டதானது மக்கள் மத்தியில் அவநம்பிக்கையைத் தோற்றுவித்துள்ளது.
தற்போது உள மற்றும் உடலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட திரு.வைரவநாதன் தடுத்து வைக்கப்பட்ட காலத்தில் மிகவும் மோசமாகச் சித்திரவதைப்படுத்தப்பட்டதாகவும், கடுமையான வேலைகளைச் செய்வதற்கு பலவந்தப்படுத்தப்பட்டதாகவும் கூறுகிறார்.
தடுப்பிலுள்ளவர்களை விடுவித்தால் அவர்கள் தொடர்பான சம்பவங்கள் வெளியுலகிற்குத் தெரிந்து விடும் என்பதாலேயே இவர்களை விடுவிப்பதற்கு இராணுவம் மறுத்து வருவதாக தமிழ்த் தலைவர்கள் கூறுகின்றனர்.
‘சிறிலங்கா அரசாங்கம் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்கத் தொடங்கினால் இவர்கள் தொடர்பான உண்மைகள் வெளியே தெரியவரும்’ என தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பங்களுக்கான சட்டவாளர் திருமதி பவானி பொன்சேகா கூறுகிறார்.
’25 ஆண்டுகளாகத் தாங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் என தடுத்து வைக்கப்பட்டவர்கள் கூறுவதைத் தடுக்கமுடியாது. இவர்கள் சித்திரவதைகளுக்கு உள்ளாகியுள்ளனர். தம்முடன் இருந்தவர்கள் சித்திரவதைகளின் போது இறந்ததையும் இவர்கள் நேரில் பார்த்துள்ளனர். இவ்வாறான உண்மைச் சம்பவங்கள் வெளியுலகிற்குத் தெரியவரும் போது தற்போதைய அரசாங்கத்தின் உயர் பதவிகளில் உள்ளவர்களுடன் இக்கதைகள் தொடர்புபட்டிருக்கலாம்.
இதன்பிறகு இந்த விடயத்தில் என்ன செய்வது?’ என பவானி கூறுகிறார்.
- புதினபலகை