இந்தியாவையும் விக்னேஸ்வரனையும் எதற்காகத் தாக்குகிறார் ரணில்?
12 பங்குனி 2015 வியாழன் 08:22 | பார்வைகள் : 9338
சிறிலங்கா கடல் எல்லைக்குள் அத்துமீறி உள்நுழைகின்ற இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படும் என ரணில் கூறியது போல, ராஜபக்சாக்கள் ஒருபோதும் இவ்வாறான ஒரு அச்சுறுத்தலை விடுக்கவில்லை.
சிறிலங்கா கடல் எல்லைக்குள் அத்துமீறி உள்நுழைகின்ற இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படும் என சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்திய ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்த கருத்து, இந்தியாவின் ஆளும் பாரதீய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகியவற்றுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
இந்தியாவின் நெருங்கிய நண்பனாகத் தன்னைச் சித்திரிப்பவரும், சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்களுக்கு 13வது திருத்தச்சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட சாதகமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை ஆதரித்து பிரச்சாரம் செய்பவருமான ரணில் விக்கிரமசிங்கவே இவ்வாறான அதிர்ச்சி தரும் கருத்தை வெளியிட்டுள்ளார்.
சிறிலங்காவில் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் ஆட்சி செய்த காலப்பகுதியில், இந்தியாவின் ஆதரவை வென்றெடுப்பதற்காக கொழும்புத் துறைமுக நகர அபிவிருத்தித் திட்டம் போன்ற சீன நிதியில் மேற்கொள்ளப்படும் திட்டங்களை எதிர்த்துப் பரப்புரை மேற்கொள்வதற்கான தலைமைப் பொறுப்பை ரணில் ஏற்றிருந்தார்.
இந்நிலையில் தற்போது இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க திடீரென அறிவித்துள்ளமை இராஜதந்திர வட்டாரங்கள் மத்தியில் குழப்பத்தைத் தோற்றுவித்துள்ளது.
சிறிலங்காவில் சீன நலன் கருதி மேற்கொள்ளப்படும் திட்டங்களை எதிர்த்து நிற்கும் வேளையில் தான் ஒரு இந்தியாவின் கைக்கூலி என்ற கருத்தை மறுதலிப்பதற்கான ஒரு நாடகமாகவே ரணில் இவ்வாறான ஒரு கருத்தைக் கூறியிருப்பதாக சிலர் கருதுகின்றனர்.
எதுஎவ்வாறிருப்பினும், ரணில் தற்போது இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படும் எனக் கூறியது போல, ராஜபக்சாக்கள் ஒருபோதும் இவ்வாறான ஒரு அச்சுறுத்தலை விடுக்கவில்லை.
ரணிலின் திடீர் மாற்றத்திற்குச் சில காரணங்கள் இருக்கலாம்.
இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி இடம்பெற்ற போது ரணிலுக்கு சரியான அங்கீகாரம் அளிக்கப்பட்டிருந்தது. மகிந்தவுக்கு மாற்றான தலைவராகவே காங்கிரசால் ரணில் நோக்கப்பட்டார்.
மகிந்த மீது அழுத்தத்தைப் பிரயோகித்தோ அல்லது பலவந்தமாகவோ அவரை ஆட்சியிலிருந்து கவிழ்ப்பதற்கு காங்கிரஸ் ஒருபோதும் விரும்பவில்லை.
எனினும், ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதும், மகிந்தவைத் தோற்கடிப்பதற்கான இயலுமையை அவர் கொண்டிருக்கவில்லை என்பதை இந்தியா அவதானித்தது.
இந்தியாவில் பா.ஜ.க ஆட்சியமைத்த போது, சீனாவுடனான மகிந்தவின் தொடர்புகள் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக அமையும் எனக் கருதியது. இதன் காரணமாக சிறிலங்காவில் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் தோற்கடிக்கப்பட வேண்டும் என இந்தியாவின் பா.ஜ.க அரசாங்கம் விரும்பியது.
ரணில் ஒரு எதிர்க்கட்சித் தலைவராக இருந்து கொண்டு பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கான ஆளுமையைக் கொண்டிராதமை இந்தியாவை அதிருப்திப்படுத்தியது. இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற பின்னர், மோடியைச் சந்திப்பதற்காக பல தடவைகள் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்குச் சென்றபோதும் இந்த முயற்சிகள் பயனளிக்கவில்லை.
பா.ஜ.க மற்றும் ஐ.தே.க போன்றன வரலாற்று ரீதியான தொடர்புகளைக் கொண்டிருந்த போதிலும், மோடி, ரணிலைச் சந்திக்கவில்லை. பா.ஜ.க வின் இத்தகைய நிலைப்பாடு ரணிலுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறுதியாக இடம்பெற்ற அதிபர் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுவதை எதிர்த்து நின்றமை ரணிலுக்கு குழப்பத்தைத் தோற்றுவித்தது. மகிந்தவை எதிர்த்து ரணில் தேர்தலில் போட்டியிட்டால் ரணில் தோற்கடிக்கப்படுவார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்தது.
அதிபர் தேர்தலில் ரணில் போட்டியிடுவதற்கு கூட்டமைப்புத் தடையாக இருந்தது. கூட்டமைப்பின் இத்தகைய நிலைப்பாட்டிற்குப் பின்னால் இந்தியா இருப்பதாக ரணில் ஊகித்திருக்கலாம்.
வடக்கு மாகாண சபை தனது சபையில் தமிழினப் படுகொலை தொடர்பான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றிய போது, முதலமைச்சர் விக்னேஸ்வரன் ரணிலையும் அவரது மருமகனுமான பாதுகாப்பு அமைச்சருமான றுவான் விஜேயவர்த்தனவை எதிர்த்துக் கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.
‘தனது மாமாவின் எண்ணங்களுக்கு ஏற்ப இராணுவ முகாம்கள் அகற்றப்படமாட்டாது என யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினருடனான சந்திப்பின் போது ருவான் விஜேவர்த்தன உறுதி வழங்கியிருந்தார்.
இதுமட்டுமல்ல நான் இவரது மாமாவான ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்த போது, புத்ததேரர்களிடம் வடக்கிலுள்ள எந்தவொரு இராணுவ முகாங்களையும் அகற்றமாட்டோம் என உறுதி வழங்கவுள்ளதாக என்னிடம் தெரிவித்திருந்தார்.
இதனை ரணில் என்னிடம் தெரிவித்ததன் பின்னர், அவரது மாமாவான ஜே.ஆர்.ஜெயவர்த்தன போன்று ஒருபோதும் புன்னகை செய்யாத ரணில் விக்கிரமசிங்க அன்று என்னைப் பார்த்துச் சிறிது புன்னகைத்தார்.
‘வருகின்ற பொதுத் தேர்தல்களுக்காக நான் மகாநாயக்க தேரர்களின் மனங்களைக் குளிர்ச்சியடையச் செய்யப் போகிறேன்’ என்ற ரணிலின் மனநிலையை நான் புரிந்துகொண்டேன்.
இதே கருத்தையே அண்மையில் யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரைச் சந்தித்த போது ருவான் விஜேவர்த்தனவும் குறிப்பிட்டிருந்தார். இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 6500 ஏக்கர்களில் குறைந்தது 5000 ஏக்கர் நிலங்களையாவது விடுவிக்குமாறு நாங்கள் கோரியிருந்தோம்.
ஆனால் 6500 ஏக்கரில் இராணுவ முகாம்களை அமைத்து மிகவும் மகிழ்வான வாழ்வை வாழ்ந்து வரும் சிறிலங்கா இராணுவ வீரர்களில் ஒருவரைக் கூட வடக்கிலிருந்து வெளியேற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படமாட்டாது என்பதையே ருவான் விஜேவர்த்தனவின் கூற்று வெளிப்படுத்துகிறது’ என வடக்கு மாகாண சபையில் ஆற்றிய உரையின் போது முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
‘இராணுவத்தின் எண்ணிக்கையைக் குறைக்கப் போவதில்லை என்பதும் இராணுவ முகாம்கள் அகற்றப்படமாட்டாது என்பதும் புதிய அரசாங்கத்தால் சிங்கள மக்களுக்காக வழங்கப்பட்டுள்ள செய்தியாகும்.
வழக்கொழிந்து போன பழைய அரசியல் தந்திரோபாயத்திற்குள் ஏன் மூழ்கிப்போயுள்ளீர்கள்? என ஜனநாயகவாதி எனத் தன்னைத் தானே கூறிக்கொள்ளும் பிரதமரிடம் கேட்க விரும்புகிறேன். இதன்காரணமாகவே நான் தற்போது இனப்படுகொலை தொடர்பான தீர்மானத்தை விரைந்து முன்வைத்துள்ளேன்’ என முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது உரையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கிற்கான தனது பயணத்தை ருவான் மேற்கொண்டதை அடுத்து, விக்னேஸ்வரன், மைத்திரிபாலவைச் சந்திப்பதற்காக கொழும்பு சென்றிருந்தார். இதன்பின்னர் ருவானுக்கான அமைச்சுப் பொறுப்புக்கள் சிலவற்றை மைத்திரிபால சிறிசேன மட்டுப்படுத்தியுள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றுக்கு ரணில் விக்கிரமசிங்க வழங்கிய நேர்காணலில் விக்னேஸ்வரனை விமர்சித்துப் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் தமிழ் மக்களினதும் மீட்பராக ரணில் தன்னைக் காண்பித்துள்ளார்.
எனினும், வடக்கு அரசியல் காரணமாக நான்கு சந்தர்ப்பங்களில் ரணில் தனக்கான அதிபர் பதவியை இழந்திருந்தார். 1999ல், கூட்டம் ஒன்றில் பிரபாகரனால் வெடிக்க வைக்கப்பட்ட குண்டினொல், சந்திரிக்கா கண்ணில் காயமுற்றார். இதனால் சந்திரிக்கா அனுதாப வாக்குகளைப் பெற்று அதிபரானார். இதில் ரணில் விக்கிரமசிங்க தோல்வியுற்றார்.
இதேபோன்று 2005ல் இடம்பெற்ற தேர்தலின் போது வடக்கில் வாழ்ந்த தமிழ் மக்கள் தமது வாக்குகளைப் பதிவுசெய்யக் கூடாது என பிரபாகரன் தடைவிதித்தார். இதனால் ரணில் அதிபராவதற்கான வாய்ப்பை இழந்தார்.
2010ல், விடுதலைப் புலிகளினது ஆதரவாளர் என ரணில் முத்திரை குத்தப்பட்டார். அதேவேளை, பௌத்த சிங்களவர்களின் வாக்குகளை ரணிலால் பெறமுடியாது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் கூறப்பட்டது. இந்திய ஆதரவாளர் எனவும் மேற்குலக நாடுகளின் ஆதரவாளர் எனவும் ரணில் முத்திரை குத்தப்பட்டார்.
தேர்தலில் ஒருபோதும் வெற்றிபெற முடியாத ஒருவராகவோ ரணில் விளங்குவதாக இந்தியாவும் மேற்குலகமும் நோக்கியது. பழிதீர்ப்பதற்காக இந்தியாவையும் விக்னேஸ்வரனையும் ரணில் தாக்குகிறாரா என்பது தெளிவாகவில்லை.
சிறிலங்காவில் பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ளது என்பதை ரணில் நன்கறிவார். இதனால் இத்தேர்தலில் வெற்றிபெறுவதற்காக சிங்களவர்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்கு சிங்கள மக்கள் மத்தியில் கதாநாயகனாக விளங்கவேண்டும் என்பதும் ரணிலுக்கு நன்கு தெரியும்.
தமிழ் மக்களின் வாக்குகள் கூட்டமைப்பையே சென்றடையும். இதன்காரணமாகவே தற்போதைய சிறிலங்காவின் அரசியலில் புதிய அத்தியாயம் ஒன்றைத் திறப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
-புதினபலகை