மகிந்த வெற்றி பெற்றிருந்தால் அவரை சர்வதேசம் தண்டிக்குமா?
28 மாசி 2015 சனி 11:14 | பார்வைகள் : 9334
பகுத்தறிவின் தந்தை ஈ.வே.ரா. பெரியார் பொதுக் கூட்டங்களில் உரையாற்றி முடிந்ததும் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வெள்ளைத்தாளில் கேள்விகளை எழுதி பெரியாரிடம் அனுப்பிவைப்பர். அந்தக் கேள்விகளுக்கு பெரியார் பதிலளிப்பார்.
ஒருமுறை பொதுக் கூட்டம் ஒன்றில் பெரியார் கலந்து கொண்டார். பெரியார் மீது ஆத்திரம் கொண்ட ஒருவர் அவரைத் திட்டித் தீர்க்கும் பொருட்டு ஒரு வெள்ளைத்தாளில் “முட்டாள்” என்று எழுதி அனுப்பி விட்டார். காகிதத்தை விரித்துப் பார்த்த பெரியாருக்கு தன்னை எவனோ முட்டாள் என்று கூறியிருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டார்.
எனினும் அதைப்பற்றி அவர் இம்மியும் கலக்கம் கொள்ளாமல் ஒலிபெருக்கியில், ஓர் அன்பர் முட்டாள் என்று தனது பெயரை எழுதி விட்டு கேள்வி எழுத மறந்து விட்டார். அந்த அன்பர் தயவுசெய்து தனது கேள்வியை எழுதி அனுப்பவும் என்றார்.
இதுதான் பெரியாரின் சமயோசித அறிவு. ஆக சமயோசித அறிவு என்பது மிகவும் முக்கியமானது. அதற்காக சமயோசித அறிவு என்பது குதர்க்கமான விவாதம் ஆகாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழர்கள் வாக்களித்து மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கியதன் காரணமாக சர்வதேச போர்க்குற்ற விசாரணையில் இருந்து மகிந்த ராஜபக்ச தப்பி விட்டார் என்று தமிழ்த் தரப்பில் ஒரு பகுதியினர் கருத்துரைக்கின்றனர்.
இவ்வாறு கருத்து உரைப்பவர்களில் மகிந்த ராஜபக்சவுக்கு சார்பானவர்களும் எதிரானவர்களும் உளர்.
மகிந்தவுக்கு சார்பானவர்கள் மேற்கண்டவாறு கூறும் போது, அவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோற்றுப் போனதன் கவலையால் இப்படி ஒரு கருத்தை முன்வைக்கின்றனர்.
இவ்வாறு கூறுபவர்கள் தொடர்பில் நாம் அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. தங்களுக்கு ஏற்பட்ட கவலையின் ஒரு பகுதியை மற்றவர்களுக்கு மாற்றீடு செய்கின்ற நரித்தனம் இது.
ஆனால் மறுபுறத்தில் மகிந்த ராஜபக்ச தண்டனையைப் பெறவேண்டும் என்று உளப்பூர்வமாக விரும்புகின்றவர்களில் ஒரு பகுதியினரும், மகிந்த தேர்தலில் தோற்காமல் வெற்றி பெற்றிருந்தால், போர்க்குற்ற விசாரணைக்கு அவர் ஆளாகி தண்டனை பெற்றிருப்பார் என்ற கருத்தை முன்வைக்கின்றனர்.
இவர்கள் இவ்வாறு கருதுவதில் பிழையில்லை. சர்வதேச போர்க்குற்ற விசாரணை மீது அதீத நம்பிக்கை கொண்டதன் காரணமாக அத்தகையதொரு கருத்துரைப்பை அவர்கள் முன்வைக்கின்றனர்.
ஆனால் சர்வதேச போர்க்குற்ற விசாரணை தொடர்பில் நிலைத்ததன்மை எப்படி இருக்கும்? என்பதை எவரும் உறுதிப்படுத்த முடியாது
அதேநேரம் தமிழ் இனம் சர்வதேசத்தை கடுமையாக நம்பி இருந்ததால் பேரழிவைச் சந்தித்தது என்பதையும் நாம் மறந்துவிடலாகாது.
அதாவது வன்னிப் போர் உச்சம் அடைந்த போது சர்வதேசம் எங்களைக் காப்பாற்றும் என்று நம்பியிருந்தோம்.
ஆனால் போரின் உச்சக் கட்டத்தில் சர்வதேசம் எங்களை தள்ளி விழுத்திவிட்டு வன்னியில் இருந்து வெளியேறியது என்பதே உண்மை.
ஆக, சர்வதேசம் எல்லாம் செய்யும் என்ற நம்பிக்கை அதீதமாக இருப்பதும் ஆபத்துக்குரியது என்பதால், மகிந்த தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் தண்டனை பெற்றிருப்பார் என்ற நினைப்பை மாற்றிப் பார்ப்பது அவசியம்.
மகிந்த வென்றிருந்தால் சர்வதேசம் தண்டனை வழங்குமோ! இல்லையோ? தமிழ் இனத்தின் தாயகம் சிங்கள மயமாகும் என்பது மறுக்க முடியாத உண்மை.
-வலம்புரி