Paristamil Navigation Paristamil advert login

கேள்விக்குறியாக மாறும் சீனாவின் திட்டங்கள்

கேள்விக்குறியாக மாறும் சீனாவின் திட்டங்கள்

2 மாசி 2015 திங்கள் 03:45 | பார்வைகள் : 9492


 சீன ஜனாதிபதியான ஜி ஜின் பிங் கடந்த செப்டெம்பர் மாதம் இலங்கைக்கு வருகை தந்திருந்தபோது, அது நாட்டின் தலையெழுத்தையே மாற்றியமைக்கும் பயணம் என்று அப்போதைய அரசாங்கத்தினால் புகழப்பட்டது.

அவரது பயணம் நாட்டின் அபிவிருத்திக்கும் பொருளாதாரத்துக்கும் பெரும் வாய்ப்புகளை அள்ளித்தரப் போகிறது என்ற தொனியில் தான் அவ்வாறு கூறப்பட்டது.
 
ஆனால், சீன ஜனாதிபதியின் அந்தப் பயணம், இலங்கையின் அரசியல் வரலாற்றையே மாற்றியமைத்து விட்டது என்பதே உண்மை.
 
சீன ஜனாதிபதியின் பயணத்தை அண்டி கொழும்புத் துறைமுகத்துக்கு வந்து சென்ற சீன நீர்மூழ்கி, இந்தியாவினது கோபத்தை கிளறியது. 
 
ஏற்கனவே சீனாவுடன் இருந்த நெருக்கம், நீர்மூழ்கி விவகாரம், எல்லாமே இணைந்து, சீனாவின் செல்லப்பிள்ளையாகவும், இலங்கையின் நிரந்தர ஜனாதிபதியாகவும் வர்ணிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்சவை அதிகாரத்தில் இருந்து தூக்கி வீசிவிட்டது.
 
அதுமட்டுமின்றி, போர் முடிவுக்கு வந்த பின்னர், இலங்கையின் மீது சீனா செலுத்தி வந்த மிகையான செல்வாக்கிற்கும் இப்போது முடிவு கட்டப்படும் நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சீனாவின் மிக முக்கியமான அண்மைக்காலத் திட்டமாக வர்ணிக்கப்படும் கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தின் எதிர்காலம் நிச்சயமற்றதாக மாறியிருந்தது.
 
மஹிந்த ராஜபக்சவின் முதலாவது பதவிக் காலத்தில் ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் பொறுப்பு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
 
அது இந்தியப் பெருங்கடலில், சீனாவின் ஆதிக்கத்தை விரிவுபடுத்தக் கூடும் என்றும், சீனாவின் கடற்படைத் தளமாக அது மாற்றப்படக் கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியது.
 
சீனாவைப் பொறுத்தவரையில், ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட 18 இடங்களில் கடற்படைத் தளங்களை அமைக்கும் திட்டம் ஒன்றைக் கொண்டிருப்பதாக 2013ஆம் ஆண்டு International Herald Leader என்ற சீன அரசின் இணையத்தில் செய்தி ஒன்று கசிந்தது.
 
எனினும் அதனை முற்றிலும் வர்த்தக நோக்கிலான திட்டம் என்று சீனா நியாயப்படுத்தி வந்தாலும், அதனை இந்தியா உள்ளிட்ட நாடுகள் நம்பத் தயாராக இல்லை. 
இந்தநிலையில், கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் இறங்குதுறை ஒன்றை 500 மில்லியன் டொலர் செலவில் கட்டிக் கொடுத்த சீனா, அதன் ஒரு பகுதியை த் தன்வசம் வைத்திருக்கிறது.
 
இங்குதான், சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் தரித்து நின்றுவிட்டுச் சென்றன. அதுவே இந்தியாவுக்கு பெரும் சினத்தை ஏற்படுத்திய நிலையில் தான், கடந்த செப்டெம்பர் மாதம் கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
 
கடலுக்குள் உருவாக்கப்படும் 233 ஹெக்டேயர் பரப்பளவு கொண்ட நிலத்தில், 108 ஹெக்டேயர் நிலத்தை சீனாவை வைத்துக் கொள்ள இடமளிக்கும் வகையில் தான் அந்த உடன்பாடு செய்து கொள்ளப்பட்டது. இந்த 108 ஹெக்டேயர் நிலப்பரப்பில், 88 ஹெக்டேயர் 99 வருட குத்தகை அடிப்படையிலும், எஞ்சிய 20 ஹெக்டேயர் நிலப்பரப்பை அறுதியாக நிரந்தரமாகவே தன்வசம் வைத்து கொள்ளவும் சீனா திட்டமிட்டுள்ளது.
 
1.4 பில்லியன் டொலர் செலவில் சீனாவின் முதலீட்டில் நடைமுறைப்படுத்தப்படும் இந்த திட்டம், புதிய அரசாங்கத்துக்கும் கடுமையான சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது.
 
முதலாவது, இந்த திட்டத்தினால் பெருமளவு நிதி மோசடிகள் இடம்பெற்றுள்ளதா?
 
இரண்டாவது, இந்த திட்டத்தினால் சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படுமா?
 
மூன்றாவது இலங்கையின் இறையாண்மைக்கு ஆபத்தை ஏற்படுத்துமா?
 
நான்காவது, இது பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துமா?
 
இந்த நான்கு சந்தேகங்களின் அடிப்படையில் தான் புதிய அரசாங்கம் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பை வெளியிட்டு வருகிறது.
 
சீனாவின் உதவியுடன் இலங்கையில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் அனைத்திலும் ஊழல் இடம்பெற்றுள்ளதாக, தற்போதைய அரசாங்கம் குற்றம் சாட்டி வருகிறது.
 
திட்டத்தை நிறைவேற்றுவதற்கான அடிப்படைச் செலவை விட, மூன்று தொடக்கம் ஆறு, ஏழு மடங்கு அதிக செலவிலும், கூடிய வட்டிக்கு பெறப்பட்ட கடனிலும் சீனாவின் திட்டங்கள் நிறைவேற்றப்படுவதாக இப்போதைய அரசாங்கம் குற்றம்சாட்டுகிறது.
 
இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளின் உதவியுடன் நிறைவேற்றப்பட்ட திட்டங்களுக்கு ஏற்பட்ட செலவுடன் ஒப்பிடுகையில், சீனாவின் திட்டங்களுக்கு கூடுதல் செலவுகள் ஏற்பட்டுள்ளன.
 
இதற்கு காரணம், முன்னய அரசாங்கத்தின் மோசடியே என்று இப்போதைய அரசாங்கம் கருதுகிறது. இதனடிப்படையில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன.
 
சீனாவின் திட்டங்களை கட்டுப்படுத்துவதன் மூலமே ஊழல் மோசடிகளை களைய முடியும் என்ற நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்தார்.
 
எனவே தான். சீனாவின் எல்லாத் திட்டங்களையும் மீளாய்வு செய்து, அவை சரியான மதிப்பீட்டில் இருந்தால் தொடர்ந்து நடைமுறைப்படுத்த அனுமதிக்கப்படும் என்ற புதிய அரசாங்கம் கூறுகிறது.
 
இதனடிப்படையில் கொழும்பு துறைமுக நகரத் திட்டமும், மீளாய்வு செய்யப்படவுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.
 
அதன் திட்டமதிப்பு 1.4 பில்லியன் டொலர் என்பது சரியாக இருந்தால், தற்போதைய அரசாங்கத்தின் விதிமுறைகளை ஏற்றுக் கொண்டால், மட்டும் இந்த திட்டத்தை தொடர அனுமதிப்போம் என்கிறது அரசாங்கம். ஆனால், திட்ட மீளாய்வின் போது, கூடுதல் செலவில் இந்த திட்டம் அமைக்கப்படுவதாக கண்டறியப்பட்டால், மட்டுமே, இதன் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறும் எனக் கருத முடியாது.
 
ஏனென்றால், இந்த திட்டத்தினால், சுற்றாடலுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புத் தொடர்பாக முன்னையை அரசாங்கம் எந்தக் கவனமும் எடுத்திருக்கவில்லை.
 
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அறிக்கையைக் கூடப் பெற்றுக் கொள்ளாமல் தான் இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், கடல் வளம் பாதிக்கப்படும் என்றும், இயற்கைச் சமநிலை முற்றாக மாற்றமடையும் என்றும் சூழலியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.
 
குறிப்பாக கடல் வளத்தை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான மக்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகும். எனவேதான், இந்த திட்டத்தின் மீது சுற்றாடல் காரணிகளும் தாக்கம் செலுத்தப் போகின்றன. அதைவிட முக்கியமான மற்றொரு பிரச்சினை உள்ளது. அது சர்வதேச கடல் சட்டம் சார்ந்தது.
 
சர்வதேச கடல் சட்டத்தின்படி, இந்த திட்டத்தை சீனா நிறைவேற்றினால், எதிர்காலத்தில் இலங்கையின் நிலப்பரப்பு மீது சீனா பொருளாதார உரிமை கோரும் ஆபத்தும் உள்ளது என்கிறார் அமைச்சர் சம்பிக்க ரணவக்க.
 
கடல் தொடர்பான ஐ.நா. பிரகடனத்தின்படி, அறுதியான தீவு அல்லது நிலத்தைக் கொண்டிருந்தால், அதனைத் தமது சிறப்பு கடல் பொருளாதார வலயமாக உரிமை கோர முடியும்.
 
எனவே தான், கடலை நிரப்பி உருவாக்கப்படும் நிலப்பரப்பை, சீன அரசு நிறுவனத்துக்கு அறுதியாக கொடுத்தால், எதிர்காலத்தில் அதற்கு சீனா உரிமை கோரலாம் என்ற அச்சம் இலங்கைக்கு உள்ளது.
 
அதனை முன்னைய அரசாங்கம் கவனத் தில் கொள்ளவில்லை. ஆனால் இப்போ தைய அரசாங்கம் சீனாவை நம்பத் தயாராக இல்லை. ஏனென்றால், 1974இல், வியட் நாமில் நடந்த உள்நாட்டுப் போரின் போது, தென் வியட்நாமுக்கு உதவுவதாக கூறி பரா செல் தீவுகளை சீனா கைப்பற்றியிருந்தது.
 
அதனை வியட்நாம் அங்கீகரிக்கவில்லை. ஆனால் இப்போது கடல் உரிமை சட்டத்தை வைத்து, அந்த தீவுப் பகுதியில் எண்ணெய் வளத்துக்கு சீனா உரிமை கோருகிறது. அதுபோல எதிர்காலத்தில் கொழும்பு துறைமுக நகரத்துக்கு சீனா உரிமை கோரலாம் என்ற கலக்கம் தற்போதைய அரசுக்கு உள்ளது.
 
அதைவிட உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் ஒரு பகுதி நிலத்தை வெளிநாட்டு நிறுவனத்துக்கு கொடுப்பது ஆபத்தானது என்ற கருத்தும் உள்ளது. இதனால் நாட்டின் இறைமை மற்றும் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சமுள்ளது.
 
இதுமட்டுமன்றி, கொழும்புத் துறைமுகத்தை அண்டிய நிலப்பரப்பை சீனாவுக்கு சொந்தமாக வழங்கினால், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று இந்தியா கருகிறது. 
 
இது பொருளாதாரத் திட்டம் அல்ல, இதனால், இந்தியாவுக்கு பெரும் பாதுகாப்பு விளைவுகள் ஏற்படும் என்று கொழும்புடன் நெருக்கமான உறவுகளை வைத்திருக்கும் புதுடில்லி அதிகாரி ஒருவர் கொல்கத்தா ரெலிகிராப் நாளிதழுக்கு தெரிவித்திருந்தார்.
 
இந்தியாவின் 70 வீதமான கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தைப் பயன்படுத்துகின்றன.
 
எனவே சீனாவின் கையில் ஒரு சிறுதுண்டு நிலம் இருந்தால் கூட அவற்றை முழுமையாக கண்காணிக்க முடியும் என்று அஞ்சுகிறது இந்தியா.
 
இது இந்தியாவினது பாதுகாப்புக்கு மட்டுமன்றி பிராந்தியத்தின் பாதுகாப்புக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று இந்தியா கருதுகிறது. அமெரிக்காவினது நிலைப்பாடும் அதுவாகவே இருக்கிறது.
 
எனவேதான், புதிய அரசாங்கம் இந்த திட்டத்தை இரத்துச் செய்யப் போவதாக முன்னர் அறிவித்தவுடன் இந்தியாவுக்கு தலைகால் புரியாதளவுக்கு சந்தோஷம் ஏற்பட்டது.
 
என்றாலும், இந்த திட்டம் இன்றுவரை இரத்துச் செய்யப்பட்டதாக அறிவிக்கப்படவில்லை. இன்னமும் கடலில் மண்ணை நிரப்பும் பணிகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால், மீளாய்வின் போது இந்த திட்டத்தை கைவிடும் முடிவு எடுக்கப் படலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஆனால் அதைச் செய்தால், இலங்கை மீது சீனா அழுத்தங்களைக் கொடுக்கும். இராஜ தந்திர நெருக்கடிகளை உருவாக்கும்.
 
எனவே, இலங்கை அரசாங்கம் புதிய நிபந்தனைகளை முன்வைத்து சீனாவை மட க்க நினைக்கலாம். ஆனால், புதிய நிபந்தனை களுக்கு அமைய திட்டத்தை நிறைவேற்ற சீனா முன்வராது போகலாம்.
 
ஏனென்றால், அது சீனாவின் நலன்களை நிறைவேற்ற இடமளிப்பதாக இருக்காது.அத்தகையதொரு திட்டத்துக்கு உதவ சீனா முன்வந்தால் அது ஆச்சரியமானது. எவ்வாறாயினும், இப்போதைய அரசாங்கம் சீனா விடயத்தில் சற்று நிதானமாகவே நடந்து கொள்கிறது.
 
என்னதான் இருந்தாலும், விரைவிலேயே முடிவெடுத்தாக வேண்டிய கட்டாயம் புதிய அரசாங்கத்துக்கு உள்ளது. அந்த முடிவு இலங்கை - சீன உறவுகளின் எதிர்காலத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தாது என்று அறுதியிட்டுக் கூற முடியாது.
 
- ஹரிகரன்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்