தீர்ப்பு வந்த வேளை...! கடக்க வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது!
17 ஐப்பசி 2014 வெள்ளி 17:30 | பார்வைகள் : 9664
எல்லாவிதமான பாதைகளும் கதவுகளும் அடைபட்டாலும் ஏதோ ஒரு கதவு திறந்தே தீரும். அதுவும் தானாக திறக்காது என்பதுதான் கவனிக்க வேண்டிய உண்மையாகும்.
அப்படியான ஒரு சிறிய பாதை ஒன்றை இரண்டு சட்ட மாணவர்களும் (லதன், ரஜீவ்) அவர்களின் பின்பாக நின்ற ஒருசில தகைமையாளர்களும் திறந்து வைத்திருக்கிறார்கள்.
ஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்பு வியாழக்கிழமை வெளியான போது அதற்கு பின்பாக இருந்த இவர்களின் மூன்று வருட கடின உழைப்பும் தேசியத்தின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையுமே வென்றதாக தோன்றியது.
அதிலும் அவர்கள் ஒவ்வொரு சிறு சட்ட நகர்வுக்காகவும்,சட்ட ஆதாரத்துக்காகவும் செலவழித்த நேரங்களும் முயற்சிகளும் தலைவணங்கத்தக்கவை. அவர்களை தவிர வேறுயாருக்குமே அவர்கள் வெல்வார்கள் என்ற நம்பிக்கை இல்லாத ஒரு சூழலே நிலவி இருந்தது.
அதிலும் ஒரு ஆதாரம் ஒன்றுக்காக இரண்டு கையொப்பங்களுக்காக அவர்கள் கேட்டதாக சொல்லியபோதும் எவருமே அதனை அத்தனை பெரிய அவசரமாக கருதியாக தெரியவில்லை அப்போது.
ஆனால் அவர்களிடம் இருந்தது தேசியத்தின் மீதான அளவற்ற நம்பிக்கை. அதற்கான போராட்டத்தை முன்னெடுப்பதில் சளைக்காத முயற்சி என்பனவே. அது வென்று இருக்கிறது இப்போது..
தீர்ப்பு வெளிவந்துவிட்டது. அது ஏற்படுத்தி இருக்கும் தாக்கங்கள் பற்றி மேலோட்டமாக பார்ப்பதே இந்த ஆக்கத்தின் நோக்கம்.
எமது மக்கள் எப்படி பார்க்கிறார்கள்...எமது எதிரி சிங்கள பேரிவனவாதம் இதனை எப்படி பார்க்கிறது...இந்த தீர்ப்பின் அடுத்த தரப்பான ஐரோப்பிய ஒன்றியம் எப்படி பார்க்கும், என்ன இனி செய்யும் என்பதை பார்ப்போம்.
இந்த தீர்ப்பு வெளிவந்ததும் ஏதோ தமிழீழமே நெருங்கிவந்து விட்டதுபோல எமது மக்கள் மத்தியில் ஒரு பேரலை, ஒரு எழுச்சி மனமெங்கும் தோன்றி இருக்கிறது. தெருவில் யாரை பார்த்தாலும் இதனை பற்றியதாகவே பேச்சும் சந்தோசமும் தெறிக்கிறது.
ஒன்றை புரிந்துகொள்ள முடிகிறது தெளிவாக..இந்த விடுதலை அமைப்பு எமது மக்கள் மத்தியில் எவ்வளவுதூரம் ஆழ உள்நுழைந்து அவர்களின் மனமெங்கும் படர்ந்து வேர் ஊன்றி நிற்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது.
இது அவர்களின் அமைப்பு என்ற எண்ணமே அவர்களின் நினைவெங்கும் கலந்து இருக்கிறது.. விடுதலைப் புலிகளை தடைசெய்து பூச்சாண்டி காட்டிய காலங்களிலேயே தேசியக் கொடியுடன் தொடர்ச்சியாக நின்றிருந்த இந்த மக்களுக்கு தமது அமைப்பின்மீதான தடையை நிறுத்தி ஐரோப்பிய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பானது ஒரு மனோ ரீதியான எழுச்சி என்பதில் ஐயமே இல்லை..
தமிழகத்திலும் இந்தியாவின் பலபகுதிகளிலும் இருந்து எமது விடுதலைக்கான குரலாக ஒலிக்கும் எமது உறவுகளுக்கு இந்த தீர்ப்பு செய்தி ஒரு ஊக்கியாக நிச்சயம் இருக்கும்.அவர்களின் குரல் இன்னும் செறிவாக இன்னும் பலத்து,உரமாக எழும்பவேண்டும் இந்த தீர்ப்பின் பின் என்று எதிர்பார்கலாம்.
இரண்டாவது, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பின்பான ஒரு காலத்தை உருவாக்கி அதற்குள்ளாக தமது தீர்வு எலும்பு துண்டுகளை புகுத்தி அரசியல் செய்ய நினைத்த அனைத்து பெரிய-சிறிய சக்திகளுக்கும் இந்த தீர்ப்பினை கேட்டதும் எமது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பேரெழுச்சி, மனோபலம் என்பன பெருத்த ஏமாற்றத்தை தந்திருக்கும்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பின்பான ஒரு காலம் என்பது ஒருபோதும் இல்லை..இனிவரும் எந்தவொரு போராட்டமும் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தின் நீட்சியே..தொடர்ச்சியேதான் என்பதை இநத தீர்ப்பின் மகிழ்வு துல்லியமாய் காட்டி நிற்கிறது.
எம்மை அழித்தொழித்து இனஅழிப்பு செய்து அதன்பின்பாக எமது மக்களை அடக்கி வைத்து ஒரு ஆட்சியை நிரந்தரமாக செய்யலாம் என்று நினைத்திருக்கும் சிங்களபேரினவாதம் இந்த தீர்ப்பை ஒரு பலத்த அத்ர்ச்சியுடனேயே நோக்குகின்றது..
அதனை அழித்துவிட்டதாக சிங்கள மக்களிடம் சொல்லி சொல்லி வாக்கு பெற்று அரசியல் செய்கிறார்களோ அது பொய் என்ற எண்ணம் சிங்கள மக்களிடம் வந்துவிடுமோ என்ற அச்சம் இப்போது சிங்கள ஆட்சியாளர்க்கு தோன்றி இருக்கிறது.
சர்வதேச ராஜதந்திர அரங்கில் பல சறுக்கல்களை சந்தித்துவரும் சிங்கள பேரினவாதத்துக்கு இப்போது சர்வதேச சட்ட அரங்கிலும் ஏற்பட்டு இருக்கும் இந்த சறுக்கல் ஏராளம் மனோ ரீதியான பின்னடைவுகளை கொடுக்கும் என்பது திண்ணம். நிச்சயமாகவே.
ஆனாலும் இதிலிருந்து மீள்வதற்கான அனைத்து குத்துகரணங்களையும், விண்ணாணங்களையும் நிச்சயமாக சிங்களம் செய்ய எத்தiனிக்கும் என்பதை எதிர்பார்த்தே இருக்கவேண்டும்.
எதிரி எந்த முனைவரைக்குமே செல்லக்கூடியவன் என்பதை புரிந்து தயாராக இருத்தலே விடுதலைக்கான ஒரு மக்கள் என்ற முறையில் நம் கடமையாகும்.
மூன்றாவதாக,இதனை இந்த தீர்ப்பின் இன்னொரு தரப்பான ஐரோப்பியஒன்றியம் எப்படி பார்க்கும்,அல்லது இனி என்ன செய்யபோகும் என்று பார்க்கலாம்.
அதற்கு முன்பாக ஒருமுறை தீர்ப்பை நன்கு....கவனிக்க.மிக நன்றாக ஊன்றி கவனித்தால் இந்த தீர்ப்பு என்பது ஒரு தற்காலிக தளர்வு என்பதே தெரியவரும்
அதாவது தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை இது கவனிக்கவில்லை.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை ஆரம்பித்ததை இந்த தீர்ப்பு ஆராயவில்லை. 2009க்கு பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை ஏற்படுத்துவதற்கு காட்டிய காரணங்களையே இந்த தீர்ப்பு கேள்விக்குரியவை ஆக்கி அதனாலேயே அது சரியாக ஏற்படுத்த படவில்லை என்று தீர்ப்பளித்து இருக்கிறது.
எமது தேசிய விடுதலை அமைப்பின் மீதான பயங்கரவாத முத்திரையையோ, அதன்மூலம் ஏற்படுத்தப்பட்ட அநியாயமான தடையையோ இது கேள்விக்குரியதாக்கவில்லை..
அந்த வகையில் நாம் நினைத்தது நடக்காது போனாலும்கூட ஒருவகையில் இது ஒரு முகவுரை என்றே எடுக்கலாம். இனிவரும் காலங்களில் இந்த தீர்ப்பை மேற்கோள்காட்டியே அடுத்த தளைகளும் அகற்றலாம் என்ற நம்பிக்கையை இது கொடுத்திருக்கிறது.
ஆனால் இப்போது அது முக்கியம் அல்ல..இன்னும் மூன்று மாதத்துக்குள் இந்த தீர்ப்புக்கு அமைய மீண்டும் காத்திரமான காரணங்களை முன்வைத்து மீண்டும் தடையை ஐரோப்பிய ஒன்றியத்தின் சில நாடுகள் கோரும் என்றே நூறுவீதம் எதிர்பார்க்கலாம்.
சரி, இரண்டு சட்டமாணவர்களும், அவர்களுக்கு பினபுலமாக நின்ற ஓரிரு தகமையாளர்களும் தமது விடா முயற்சியால் ஏற்படுத்தி இருக்கும் இந்த சிறு இடைவெளியை, சிறு ஒளியை எப்படி நாம் தக்கவைக்க போகின்றோம்.
எப்படி இதனிலிருந்து மேலெழும்ப போகின்றோம் என்பதில்தான் எமது தேசியத்தின் இருப்புக்கான போராட்ட உயிர்ப்பு தங்கி இருக்கிறது.
வெறுமனே நாங்கள்தான் இதனை செய்தோம் நாங்கள்தான் இதனை செய்தோம் என்று அமைப்புகள் போட்டிபோட்டுக் கொண்டு குறுஞ்செய்திகளை விதைப்பதில் கவனம் செலுத்துவதை விடுத்து ஆணித்தரமான செயற்பாடுகளுள் இனிமேல் தன்னும் இறங்காது விட்டால் இந்த வெற்றியும் நிச்சயமாக காக்கா பறித்த வடையாக பறிபோய்விடும்.
உடனடி வேலைத்திட்டமாக இந்த தடையை மீண்டும் ஏற்படுத்தும் முயற்சிகளை நிறுத்தும்படி அந்த அந்த நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இந்த தடையை நீக்கும் மனுவுக்கு எதிராக நின்ற நாடுகளே மீண்டும் இந்த தடையை ஏற்படுத்த புதிய ஆதாரங்கள், காரணங்களை கொண்டு வருவார்கள். இங்கிலாந்து, அயர்லாந்து, நெதர்லாந்து நாடுகளே அவை.
இதிலும் குறிப்பாக இங்கிலாந்தின் ஆளும்-எதிர் கட்சிகளில் நீக்கமற நிறைந்து ஏராளம் தமிழர்கள் அரசியல் செய்கிறார்கள். தமிழ் வாக்கு வங்கி என்ற ஒரு பெரும் தேவை இருப்பதால் இந்த தமிழர்களையும் தமக்குள் உள்வாங்கி இங்கிலாந்தின் ஆளும்கட்சி, எதிர்கட்சி என்பன இருக்கின்றன.
அதுபோக,ஏராளம் தமிழர்கள் தமது தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஒரு கௌரவநிலை கருதியோ வேறு தேவைகள் கருதியோ நெருங்கிய தொடர்பில் இருக்கிறார்கள்.
இப்போது இவர்கள் எல்லோர் மீதும் வரலாறு ஒரு பெரும் கடமையை சுமத்தி நிற்கிறது.
மீண்டும் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றுக்கு இங்கிலாந்து இந்த தடைநீக்க தீர்ப்பு எதிராக செல்ல கூடாது என்ற அழுத்தத்தை இவர்கள் பிரயோகிக்க வேண்டும்.
இங்கிலாந்து இதிலிருந்து விடுபட்டால் மற்றைய நாடுகள் இதில் பெரய அக்கறை காட்டமாட்டாது. அது மட்டுமல்லாமல் இதன் கூடியதாக இங்கிலாந்தின் தமிழ் அமைப்புகள் இன்னுமொரு கோரிக்கையையும் வைக்க வேண்டும்.
இந்த மாதம் 13ம் திகதி பிரித்தானிய பராளுமன்றில் பாலஸ்தீனத்தை ஒரு தேசமாக கருதி வாக்களித்த கட்சிகளிடம் தமிழர்களின் மீதான சிங்கள பேரினவாத இனப்படுகொலையை தீர்மானமாக நிறைவேற்றும்படி கோரவேண்டும்.
வெற்றிபெறுவது எவ்வளவு முக்கியமோ அந்த வெற்றியை தக்கவைப்பது அதனைவிட மிகமிக முக்கியம்.
ஒரு தவம்போல இதனை செய்து முடித்து இந்த வெற்றியை நம் எல்லோர் கைகளிலும் தந்து இருக்கிறார்கள்.
என்ன செய்யபோகின்றோம்..வெறும் சந்தோசத்துடனும், உரிமை கோரல்களுடனும் முடித்துவிட்டு சும்மா கிடக்க போகின்றோமா..இல்லை..இந்த வெற்றியை தக்க வைக்க உழைத்து இதனூடாக பல கதவுகளை திறக்க வைக்க போகின்றோமா..
எல்லாமே நம் கைகளில்தான்.
ச.முத்து